20 மே 2012

நாகத்தி





       தமிழகப் பள்ளிக் கூடங்கள் கோடை வெயிலில் சற்று இளைப்பாறுகின்ற தருணம் இது. மாணவர்கள், கோடை விடுமுறையினைப் பயனுள்ள வகையில் செலவிட, வெளியூர்களில் வசிக்கும் தங்களது உறவினர்களின் இல்லங்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிக்கும் இன்பம் மிகு காலம் இது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம வகுப்பு மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளையும், பெறப்போகும் மதிப்பெண்களை அறிந்து கொள்ளவும், எதிர்கால இலட்சியங்களைத் திட்டமிடவும், இலட்சியங்களை நடைமுறைப் படுத்தவும், ஆவலுடனும், ஒருவிதப் பதட்டத்துடனும் காத்திருக்கும் திக், திக் நேரமிது.
     உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியர்களான எங்களுக்கோ, அடுத்தக் கல்வியாண்டிற்கானப் பணிகளைத் திட்டமிட வேண்டிய காலமே இக்கோடை காலம்தான். மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகப் படுத்துவது என்றும். சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று, கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளிக்குச் செல்லாத மாணவர்களையும், பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்தோம்.
     கடந்த இருபது நாட்களாக, ஆசிரியர்கள் பத்து அல்லது பதினைந்து பேர் ஒன்றிணைந்து, நாளொன்றுக்கு ஒரு கிராமம் என, தஞ்சையின் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று வருகின்றோம். ஒவ்வொரு கிராமத்திலும், தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து, படிக்கின்ற மாணவர்கள் யார், யார், படிப்பினைப் பாதியில் விட்ட மாணவர்கள் யார் யார் என விசாரித்துக் கண்டறிந்து, பள்ளியில் சேர்த்துப் படித்திட ஊக்கப் படுத்தி வருகின்றோம்.
     கடந்த 18.5.2012 வெள்ளிக் கிழமை காலை 6.30  மணிக்குப் புறப்பட்டு, பள்ளியக்கிரகாரம், காந்தி நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் போன்ற பகுதிகளுக்குச் சென்று பெற்றோர்களையும், மாணவர்களையும் சந்தித்தோம்.  இப்பகுதியில் அன்றைய பணி நினைவுற்றவுடன், பள்ளியக்கிரகாரம் செல்வம் தேநீர் விடுதியில், நண்பர் பள்ளியக்கிரகாரம் அரசு அவர்களுடன் இணைந்து தேநீர் அருந்தியவாரே, அடுத்த நாள் செல்ல வேண்டிய கிராமம் குறித்துப் பேசினோம்.
    உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு அ.சதாசிவம் அவர்கள், நாளைக்கு நாகத்திக்குச் செல்வோம் என்றார். நாகத்தி என்ற பெயரினைக் கேட்டவுடன் என்னையுமறியாமல், என்னுடலில் ஓர் சிலிர்ப்பு.
   நாகத்தி. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் குல தெய்வமான அய்யனார் அருள் பாலிக்கும் புண்ணிய பூமி. இலங்கைக்கு அனுமன் கட்டிய பாலத்தைப் பற்றிப் படித்திருக்கின்றோம், பார்த்ததில்லை. ஆனால் நாகத்தி சென்றால தமிழவேள் கட்டிய பாலத்தைப் பார்க்கலாமே என மனம் பரபரக்கத் தொடங்கியது.
     19.5.2012 சனிக் கிழமை காலை 6.30 மணியளவில், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து  ஒரு குழுவாய்ப் புறப்பட்டோம். திருவாளர்கள் அ.சதாசிவம்,  வெ.சரவணன், மு.பத்மநாபன், த.இளங்கோவன், கோ.விஜயக்குமார், க.ஹரிசங்கர் பாபு, டி.பாபு, மு,சுகுமாறன், எஸ்.செந்தில்குமார், எம்.மணியரசு, ஆர்.கோபாலகிருட்டினன் முதலான பன்னிரெண்டு பேருடன் நானும் இணைந்து பதிமூன்று பேர் அடங்கிய குழுவாக நாகத்தி நோக்கிப் புறப்பட்டோம்.
     கரந்தையிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் சென்று, அம்மன் பேட்டை அருள்நெறி உயர்நிலைப் பள்ளியினைக் கடந்தவுடன், இடது புறம் திரும்பி, வெட்டாற்றின் வட கரையில் பயணித்தோம். சுமார் ஐந்து கி.மீ கடந்ததும், இடது புறமாகத் திரும்பினோம். இதோ நாகத்தி பாலம்.

     நாகத்திப் பாலத்தினைக் கண்டவுடன் எனது நினைவலைகள் பின்னோக்கிப் பறக்கத் தொடங்கின. உமாமகேசுரனார் பற்றி ஏட்டில் படித்த எழுத்துக்கள், ஒவ்வொன்றும் உயிர்பெற்று கண்முன்னே வலம் வரத் தொடங்கின. தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள், பொதுவாக கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் என்ற நிலையிலேயே, இன்றைய மக்களால் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் உமாமகேசுவரனார் அவர்கள் சங்கத் தலைவராக மட்டுமல்ல, தஞ்சாவூர் தாலுக்கா போர்டு தலைவராகவும் பன்னிரெண்டாண்டுகள் திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர்.
       உமாமகேசுவரனார் காலத்திலேதான் திருவையாற்று ஏழூர் திருவிழா ஏற்றம் கண்டது. தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 40 இல் இருந்து 170 ஆக உயர்ந்தது.
     தஞ்சை வட்டத்தில் இரண்டு தீவுச் சிற்றூர்கள் உண்டு. ஒன்று நாகத்தி, மற்றொன்று தொண்டரையன் பாடி. இவை நாற்புறமும் ஆறுகள் சூழ, ஆறுகளின் இடையினில் தீவாக அமைந்த ஊர்களாகும். நாகத் தீவு என்பதே பின்னாளில் நாகத்தி என்று மருவிற்று. இவ்வூர்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, ஊரின் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றாலும், கோடைக் காலங்களில் பொசுக்கும் ஆற்று மணலில் நடக்க வேண்டும்,ஆற்றில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில் நீந்தித் தான் கடக்க வேண்டும். உமாமகேசுவரனாரின் குல தெய்வமும் இவ்வூரில் இருப்பதால், சிறு வயது முதலே, இப்பகுதி மக்களின் நிலையினை நன்கு உணர்ந்தேயிருந்தார்.
    எனவே, வட்டக் கழகத் தலைவராய் பொறுப்பேற்றவுடன், நாகத்தி மற்றும் தொண்டரையன் பாடி என்ற இவ்விரண்டு ஊர்களுக்கும் தனித் தனியே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். நாகத்திப் பாலமானது உமாமகேசுவரனார் காலத்திலேயே கட்டி முடிக்கப் பெற்றுவிட்டது. தொண்டரையன் பாடி பாலம், உமாமகேசுவரனார் காலத்தில் தொடங்கப் பட்டு, பின்னர் மாவட்டக் கழகத்தால் கட்டி முடிக்கப் பட்டது.
பாலத்தில் பழைய படம்
     நாகத்திப் பாலத்தைக் கண்டவுடன் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி அனைவரும் கிழே இறங்குகிறோம். பலவாறு சுழன்ற நினைவலைகளிலிருந்து மீண்டு, நிகழ் காலத்திற்கு வந்து பாலத்தைப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு சிறு நினைவு. சுமார் பதினேழு வருடங்களுக்கு முன் இப்பாலத்திற்கு வந்திருக்கிறேன். உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு நூலாகத் தொகுத்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலம் அது.ஆசிரியர்கள் திரு சிவ.திருஞானசம்பந்தம், திரு ஆ.இராமகிருட்டினன், திரு துரை.பன்னீர்செல்வம் அகியோருடன் இப்பாலத்திற்கு வந்துள்ளேன். பூதலுர் பகுதி முழுக்க தொண்டரையன் பாடி பாலத்தைத் தேடி அலைந்திருக்கிறோம். ஆனால் அப்பாலத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.அங்கிருந்த பல ஊர்களைச் சார்ந்த பெரியவர்களுக்கும் தெரியவில்லை.மறதி என்னும் கொடிய நோயின் தாக்கத்தினால், கால ஓட்டத்தில் அப்பாலம் கரைந்தே போய்விட்டது.
    இதோ, நாகத்திப் பாலத்தின் கரையில் நிற்கின்றோம். என்னுடன் பயணித்த ஆசிரியர்கள் பலரும், உமாமகேசுவரனார் கட்டிய பாலம் இது என்பதை அறிந்தவுடன்,வியப்பு மேலிட பாலத்தைப் பார்க்கின்றார்கள்.தயங்கித் தயங்கிப் பாலத்தில் காலடி எடுத்து வைக்கிறோம். இது வெறும் பாலமாகப் படவில்லை. வரலாற்றின் பக்கங்களில் கரையான் அரித்துவிடாமல், எஞ்சி நிற்கும்,ஓர் உன்னத வரலாற்றின் நினைவுச் சின்னமாக, கோவிலின் கருவறை போல, புனிதத்துவம் வாய்ந்த தலமாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. பாலத்தின் இருபுறமும், இரும்புப் பட்டையால் ஆன, வீட்டுச் சன்னலைப் போன்ற கைப்பிடிச் சுவர்கள். கைப் பிடிச் சுவற்றைப் பற்றி நிற்கின்றோம்.. உமாமகேசுவரனாரும், இந்த சுவற்றைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பாரல்லவா? எத்துனை முறை,இப்பாலத்தில் குறுக்கும் நெடுக்குமாக மகிழ்வுடன் நடந்திருப்பார். நாங்களும் பாலத்தில் நடக்கிறோம். உமாமகேசுவரனார் எங்களின் தோள்களில் கைபோட்டு, பாலத்தில் எங்களுடன் நடப்பதைப் போன்ற ஓர் உணர்வு, உடல் சிலிர்க்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. அமைதியாய் நடக்கின்றோம்.
     சிறிது நேரத்த்தை பாலத்தில் செலவிட்டபின் அனைவரும் வண்டிகளிலேறி புறப்பட்டோம். இப்பாலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் நாகத்தி கிராமம் உள்ளது.
     உமாமகேசுவரனாரின் குல தெய்வமான அய்யனரைத் தரிசிக்க மனம் பரபரக்கவே, நாகத்தி கிராமத்தைக் கடந்து, ஒரு கி.மீ. வயல்வெளிகளுக்கிடையில் பயணித்து அய்யனார் கோவிலை அடைந்தோம். நாற்புறமும் வயல் வெளிகள் மற்றும் ஒன்றிரண்டு மரங்களைத் தவிர வேறொன்றுமில்லாத வெற்றிடத்தில், அய்யனார் கோவில் கம்பீரமாகக் காட்சியளித்தது. கோவிலுக்குள் சென்று ஆசிரியர்கள் அனைவரும் அய்யனாரை வணங்கினோம்.
     உமாமகேசுவரனார் எத்தனை முறை இக்கோவிலுக்கு வந்திருப்பார் என நினைத்துப் பார்க்கின்றேன். உடனே உமாமகேசுவரனார் அய்யனாரிடத்து என்ன வேண்டியிருப்பார் என்ற கேள்வி, முன் வந்து நின்றது. ஒன்று மட்டும் நிச்சயம், உமாமகேசுவரனார் தனக்காக, தனது குடும்பத்திற்காக எதையுமே இறைவனிடம் யாசித்திருக்க மாட்டார் என்ற உணர்வு உறுதியாக எழுந்தது.
     ஆம். தமிழ் வாழ வேண்டும், தமிழர்தம் வாழ்வு உயர வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, வேறு சிந்தனையே இல்லாதவரல்லவா உமாமகேசுவரனார். தமிழ்ர்தம் வாழ்வு மலரவே மனமுருகி வேண்டியிருப்பார்.
     உமாமகேசுரனார் வணங்கிய அய்யனாரை நாங்களும் வணங்குகிறோம். உமாமகேசுவரனாரின் திருப்பெயர் தாங்கி நிற்கும் பள்ளியில் பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எங்களது பிறவிப் பயனாகும். உமாமகேசுவரனார் மேனிலைப் பள்ளி வளர்ந்து செழிக்க வேண்டும், பள்ளியின் புகழ் திக்கெட்டும் பரவ வேண்டும். இராமனுக்கு உதவிய அணில் போல, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும், ஒரு சிறிதேனும் நாங்களும் காரணமாக விளங்க வேண்டும்.அய்யனாரே அருள் புரிவாயாக என வணங்கி விடைபெற்றோம்.

உமாமகேசுவரனாரும், அய்யனாரும் அருள் புரிவார்களாக