15 டிசம்பர் 2012

கணிதமேதை அத்தியாயம் 10


------------------------------------------------------------------------------------
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தால், தேர்வு எழுத வேண்டியிருக்குமா? தேர்விற்கும் எனக்கும் தூரம் அதிகம். நான் ஏற்கனவே இருமுறை கல்லூரித் தேர்வுகளில் தோல்விகளை மட்டுமே சந்தித்தவனாயிற்றே - இராமானுஜன்
-------------------------------------------------------------------------------------
     முதல் முறை அழைத்தபோது, ஜாதீயக் காரணங்களைக் காட்டி, கடல் தாண்டிச் செல்லச் சம்மதிக்காத இராமானுஜன், இம்முறை இலண்டனுக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று கூறி நெவிலை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார.

கனவில் நாமகிரித் தாயார்

நாமக்கல் மலை
     ஹார்டியிடமிருந்து முதல் கடிதம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்தே இராமசுவாமி அய்யர், இராமச்சந்திர ராவ், சேசு அய்யர், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் முதலிய அனைவரும் இராமானுஜனை இலண்டன் பயணத்திற்குத் தயாராகுமாறு வற்புறுத்தி வந்தனர்.

     இந்தியாவில் இருக்கும் வரை, உன் திறமை வெளிப்படவே வாய்ப்பில்லை, இலண்டன் சென்றால்தான் உன் திறமையை இவ்வுலகு அறியும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

     இராமானுஜனின் குடும்ப நண்பரான சே.நரசிம்ம அய்யங்கார், சேசு அய்யர் போன்றோர் கோமளத்தம்மாளிடம் இதே கோரிக்கையினை முன் வைத்து, இராமானுஜன் இலண்டன் செல்வதால், விளையும் பயன்களைப் பட்டியலிட்டனர். இந்தியக் கணிதவியல் கழக இதழின் அசிரியர், பெங்களுர் எம்.டி. நாராயண அய்யங்கார் அவர்களும் இதையே வலியுறுத்தினார்.

     1913 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் இராமானுஜன், இராமானுஜனின் தாயார் கோமளத்தம்மாள், நாராயண அய்ர், நாராயண அய்யரின் மகன் முதலானோர் சென்னையிலிருந்து நாமக்கல்லுக்குப் புறப்பட்டனர். புகைவண்டி மூலம் சேலம் வந்தடைந்து, அனைவரும் சேலம் மாவட்ட உதவி ஆட்சியரும், இந்தியக் கணிதவியல் கழகத் தலைவருமாகிய இராமசுவாமி அய்யர் வீட்டில் த்ங்கினர்.

     சேலத்தில் இருந்து முப்பது மைல் தொலைவிலுள்ள நாமக்கல்லுக்கு, இராமானுஜனும் நாராயண அய்யரும் மாட்டு வண்டியில் புறப்பட்டனர். நாமக்கல் சென்ற இருவரும், நாமக்கல் நாமகிரித் தாயார் சந்நிதியிலேயே மூன்று இரவுகள் தங்கினர்.

(இராமானுஜன் மூன்று நாட்கள் தங்கிய நாமகிரித் தாயார் கோவில் மண்டபம்)
     முதல் இரண்டு இரவுகள் கடந்த நிலையில், மூன்றாம் நாள் இரவு, நள்ளிரவில் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்த இராமானுஜன், ஒரு விதப் பதட்டத்துடன், நாராயண அய்யரை எழுப்பி, தன் கனவில் ஒரு ஜோதி மயமான உருவம் தோன்றித் தடைகளைப் பொருட்படுத்தாது கடல் கடந்து செல் எனக் கட்டளையிட்டதாகக் கூறினார்.

     இச்செய்தியையே வேறு விதமாகக் கூறுவாரும் உளர். கோமளத்தம்மாள் தன் கனவில், இராமானுஜனை மேல் நாட்டு அறிஞர்கள் சூழ்ந்திருப்பது போன்ற காட்சியைக் காண்கிறார். இக்காட்சியின் பின்னனியில், இராமானுஜனின் ஆர்வத்திற்கும், அவன் இப்பூமியில் பிறந்த நோக்கம் நிறைவேறவும் குறுக்கே நிற்காதே என நாமகிரித் தாயார் உத்தரவிட்டதாகவும் ஒரு செய்தியை பேராசிரியர் நெவில் கூறுகிறார்.

     இராமானுஜன் கனவில் நாமகிரித் தாயார் தோன்றியது உண்மையா? அல்லது இராமானுஜனின் தாயார் கனவில் நாமகிரித் தாயார்  தோன்றியது உண்மையா? அல்லது இரண்டும் உண்மையா? அல்லது இரண்டும் தவறான தகவல்களா? என்பது குறித்து பலவிதமான செய்திகள் உலாவரினும், ஒன்று மட்டும் உண்மை. இராமானுஜன் எப்படியாவது இலண்டன் சென்றுவிடுவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். எனவே தன் பயணத்தை தனது சமூகம் ஏற்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

பயண ஏற்பாடுகள்

     இராமானுஜன் இலண்டனுக்குச் செல்வது என்று தீர்மானித்துவிட்ட போதிலும், அவர் மனதில் அடுக்கடுக்காய்ப் பலவித சந்தேகங்கள் தோன்ற, ஒவ்வொன்றையும் நெவில் தீர்த்து வைத்தார்.

இலண்டன் செல்வதற்கும், அங்கே வருடக் கணக்கில் தங்குவதற்கும் உரிய பணத்திற்கு என்ன செய்வது?
இதுவே இராமானுஜனின் முதல் கேள்வி.

பணம் குறித்துத் தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் நெவில்.

எனக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராதே என்றார்.

இலண்டனில் வசிப்பதற்குத் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலமே போதுமானது என்றார் நெவில்.

நான் சுத்த சைவமாயிற்றே என்றார்

சைவ உணவிற்கு ஏற்பாடு செய்கிறோம், கவலை வேண்டாம் என்றார்.

கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தால், தேர்வு எழுத வேண்டியிருக்குமா? தேர்விற்கும் எனக்கும் தூரம் அதிகம். நான் ஏற்கனவே இருமுறை கல்லூரித் தேர்வுகளில் தோல்விகளை மட்டுமே சந்தித்தவனாயிற்றே என்றார்.

தாங்கள் ஆய்வு மட்டும் மேற்கொண்டால் போதும், தேர்வு எழுதத் தேவையில்லை
என இராமானுஜனின் ஒவ்வொரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார் பேராசிரியர் நெவில்.

      பேராசிரியர் நெவில் அடுத்த பணியாக ஹார்டிக்கு ஒரு கடிதம் எழுதினார். இராமானுஜன் இலண்டனுக்கு வரச் சம்மதித்து விட்டார். இலண்டன் வந்து செல்வதற்கும், தங்குவதற்கும் உரிய செலவினங்களுக்குத் தேவையானப் பணத்தினை, நான் சென்னையில் திரட்ட முயற்சி செய்கிறேன். தாங்களும் இலண்டனில் பணத்திற்கு ஏற்பாடு செய்யவும் என்று எழுதினார்.

     ஹார்டி இலண்ட்னில் உள்ள இந்திய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். ஆனால் இந்திய அலுவலகத்திலிருந்து பணம் பெறும் முயற்சியானது தோல்வியில் முடிந்தது. மேலும் ட்ரினிட்டி கல்லூரியோ அல்லது கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகமோ உதவுமா என்பதும் உறுதியாகத் தெரியாத நிலையே நீடித்தது.

     ஹார்டி உடனே சென்னையிலிருக்கும் நெவில் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை இன்றே அஞ்சலில் சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் எழுதுகிறேன். தாங்கள் மிகவும் கவனமாக இருக்கவும். இராமானுஜன் இலண்டன் வந்து செல்வதற்கும், தங்குவதற்கும் உரிய தொகையினை சென்னையில்தான் திரட்டியாக வேண்டும். நானும் பேராசிரியர் லிட்டில்வுட் அவர்களும் ஆண்டொன்றுக்கு 50 பவுண்டு வரை செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் இதை இராமானுஜனிடம் கூற வேண்டாம் என்று எழுதினார்.

     சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில், இராமானுஜனுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படுவதை எதிர்த்து வாதிட்ட ரிச்சர்ட் லிட்டில் ஹெயில்ஸ், இராமானுஜனின் கணிதத் திறமையால் மனம் மாறி, உதவுவதற்கு முன்வந்து, பல்கலைக் கழக அளவிலும், அரசுத் துறையிலும் உயர் பதவிகளில் உள்ள செல்வாக்கு மிககவர்க்ளை பேராசிரியர் நெவிலுக்கு அறிமுகப் படுத்தினார். ஒவ்வொருவரிடமும் இராமானுஜனுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை நெவில் எடுத்துரைத்தார்.

நெவில் கடிதம்
     1914 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 28 ஆம் நாள் பேராசிரியர் நெவில், சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பிரான்சிஸ் டௌபரி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், இராமானுஜன் என்னும் கணித மாமேதை சென்னையில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்த நிகழ்வானது, கணித உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய செய்தியாகும். கணித உலகில் இராமானுஜன் சிறந்த சாதனைகளைப் படைப்பார் என்பதில், எனக்கு எவ்வித ஐயமுமில்லை.

     உலக வரலாற்றில் இராமானுஜன் பெயர் உன்னத இடதினைப்ப் பெறும் அதே நேரத்தில், இராமானுஜன் இலண்டன் சென்று வர அவருக்கு உதவிய வகையில் சென்னையும், சென்னைப் பல்க்லைக் கழகமும் பெருமைப்படலாம் என்று எழுதி உதவி கோரினார்.

     சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளரை நேரில் சந்தித்த ரிச்சர்ட் லிட்டில் ஹெயில்ஸ், இராமானுஜனுக்கு ஆண்டொன்றுக்கு 250 பவுண்ட் உதவித் தொகையினையும், துணிகள் வாங்கிய மேலும் 100 பவுண்ட் உதவித் தொகையினையும் வழங்கி உதவுமாறு வற்புறுத்தினார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.