16 பிப்ரவரி 2013

கணிதமேதை அத்தியாயம் 19


-------------
 நோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.  
-------------
   வந்தவுடன் ஜானகியைப் பற்றித்தான் விசாரிக்க வேண்டுமா? எனக் கோமளத்தம்மாள் முணுமுணுத்தாள். குடும்பப் பிரச்சினை காரணமாக இலண்டனில் நிம்மதியின்றித் தவித்த இராமானுஜனை, அதே பிரச்சினை, இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததும் விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டது.

     கோமளத்தம்மாள் குடும்பத்தை விட்டு, ஜானகி விலகிச் சென்று ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அவர் எங்கிருக்கிறார் என்பது கூட கோமளத்தம்மாளிற்குத் தெரியாது. இராஜேந்திரத்தில் இருக்கலாம் அல்லது தனது சகோதரியுடன் சென்னையில் இருக்கலாம் என்று இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், இராமானுஜனின் வருகையைத் தெரிவித்து, சென்னைக்கு வந்து இராமானுஜனை சந்திக்குமாறு, இரு முகவரிகளுக்கும் கடிதங்கள் எழுதியிருந்தார்.

     ஜானகி இராஜேந்திரத்தில் இருந்தார். லட்சுமி நரசிம்மனின் கடிதம் கிடைக்கும் முன்னரே, இராமானுஜனின் வருகையைச் செய்தித் தாள்கள் வழியாக, ஜானகியின் குடும்பத்தினர் தெரிந்து வைத்திருந்தனர். ஜானகியின் சகோதரர் சீனிவாச அய்யங்கார், ஜானகி மீண்டும் கோமளத்தம்மாளின் பிடியில் சிக்கித் துன்பப்பட வேண்டுமா? என்று வினவ, ஜானகி இராஜேந்திரத்திலேயே இருக்க முடிவு செய்தார்.

     கோமளத்தம்மாள், இராமானுஜனை பம்பாயிலிருந்து நேரடியாக, இராமேசுவரம் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தார். தங்கள் சமூக மரபுகளை மீறி, இராமானுஜன் கடல் கடந்து சென்று விட்டு வந்துள்ளதால், அப் பாவத்தைப் போக்க இராமேசுவரம் கடற்கரையில் நீராட வைத்து, பரிகாரம் செய்யத் தீர்மானித்திருந்தார். ஆனால் இராமானுஜன் உடல் நிலை மிகவும் தளர்வுற்றிருந்ததால், சில நாட்கள் பம்பாயிலேயே தங்கி ஓய்வெடுத்துவிட்டு, ரயில் மூலம் சென்னை கிளம்பினார்.

சென்னையில் இராமானுஜன்

     ஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை ரயில் நிலையத்தில் இராமானுஜனை வரவேற்கக் காத்திருந்த ராமச்சந்திர ராவ், ரயிலில் இருந்து இறங்கி வந்த இராமானுஜனின் தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டார்.

     சென்னை ரயில் நிலையத்திலும் தன்னை வரவேற்க ஜானகி வராததைக் கண்ட இராமானுஜன், மீண்டும்  தன் தாயிடம் ஜானகி எங்கே? என்று கேட்க, கோமளத்தம்மாளோ, ஜானகியின் தந்தைக்கு உடல் நலமில்லை, அவரைப் பார்த்துவிட்ட வரச் சென்றிருக்கிறாள் என்றார்.

     இராமானுஜன் வழக்கறிஞர் ஒருவருக்குச் சொந்தமான, எட்வர்டு இல்லியட் சாலையில் அமைந்துள்ள ஒரு அழகிய மாளிகையில் தங்க வைக்கப் பட்டார். விஸ்வநாத சாஸ்திரி இம் மாளிகைக்குச் சென்றபோது, இராமானுஜன் சாமபார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். விஸ்வநாத சாஸ்திரியைக் கண்ட இராமானுஜன், இந்த உணவு மட்டும் இலண்டனில் கிடைத்திருக்குமானால், என் உடல் நிலை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்று கூறினார்.

     இராமானுஜனின் சென்னை வருகையினைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில், இராமானுஜனைப் பற்றிய ஒரு கட்டுரை செய்தித் தாள்களில் வெளியிடப் பட்டது. இக்கட்டுரையினைக் கண்ட சென்னைத் துறைமுகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்கள், இராமானுஜனைப் பற்றிய, முழுமையான செய்திகள், சாதனைகள் அடங்கிய கட்டுரையினைத் தயார் செய்து செய்தித் தாள்களில் வெளியிட்டார். இக்கட்டுரை ஏப்ரல் 6 ஆம் தேதி நாளிதழ்களில் வெளியாகியது.

     சென்னை திரும்பிய இராமானுஜனைக் காண சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் போன்றவர்கள் வந்த வண்ணமிருந்தனர்.

     இராமானுஜனின் சகோதரர் லட்சுமி நரசிம்மன், மீண்டும் இராஜேந்திரத்திற்குக் கடிதம் எழுதி, ஜானகியை இராமானுஜன் பார்க்க விரும்புகிறார் எனத் தெரிவிக்க, ஜானகியும் அவர் சகோதரரும் உடன் புறப்பட்டு சென்னை வந்தனர்.

     ஏப்ரல் 6 ஆம் தேதி, லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ள இல்லத்திற்கு ஜானகி வந்து சேர்ந்தார். தொடர்ந்து இராமானுஜனின் தந்தையார், பாட்டி, சகோதரர் ஆகியோர் வந்தனர்.

      மூன்று மாதங்கள் இவ்வீட்டில் இராமானுஜன் தங்கினார். ஜானகிக்கு பதினெட்டு வயது நிறைவடைந்திருந்தது. இராமானுஜனும் ஜானகியும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். தான் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னர், தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளையும், ஜானகியின் கடிதங்கள் தடுக்கப் பட்ட செய்திகளையும் இராமானுஜன் அறிந்து கொண்டார்.

     சென்னையில் கோடை காலம் நெருங்கவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொடுமுடிக்குச் செல்வது என முடிவு செய்தனர்.

     சென்னைப் பல்கலைக் கழகம் செய்திருந்த ஏற்பாட்டின் படி, கொடுமுடியில் கிழக்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள வீட்டில் தங்கினர். இங்குதான் இராமானுஜன் முதன் முதலாகத் தன் தாயிடம் எதிர்த்துப் பேசினார்.
கொடுமுடி காவிரி 

     இலண்டனில் இருந்து வந்த தினத்தில் இருந்தே, இராமானுஜனுக்கும் அவரது தாயாருக்கும் இடையில் மனக் கசப்பு வளர்ந்து கொண்டேயிருந்தது. இராமானுஜன் பெறுகிற உதவித் தொகை முழுவதும் தனக்கே வந்து சேர வேண்டும் என கோமளத்தம்மாள் எதிர்பார்த்தார். ஆனால் இராமானுஜன் பதிவாளருக்குக் கடிதம் எழுதி, தனது பணத்தில் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என விரும்பியதில் கோமளத்தம்மாளுக்கு உடன்பாடில்லை.

     சென்னையில் இருந்த கொடுமுடிக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய இராமானுஜன் விரும்பினார். ஆனால் கோமளத்தம்மாளோ, எதற்காக வீன் செலவு செய்ய வேண்டும், இரண்டாம் வகுப்பு அல்லது மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தால் போதும் எனக் கூறிவிட்டார்.


கொடுமுடியில் இராமானுஜனைப் பரிசோதித்த மருத்துவரின் அறிக்கை
     கொடுமுடியில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சிறப்பு மிகு, பூணூல் மாற்று விழாவினை முன்னிட்டு, காவிரிக்குச் சென்று, பூணூல் மாற்றி வர இராமானுஜன கிளம்பினார். ஜானகியும் இராமானுஜனுடன், காவிரிக்கு வரு விரும்புவதாகக் கூற, கோமளத்தம்மாள் குறுக்கிட்டு செல்லக் கூடாது என்று தடுத்தார்.

     தன் தாயின் வார்த்தைக்கு இதுநாள் வரை எதிர் வார்த்தை பேசி அறியாத இராமானுஜன், இம்முறை வாய் திறந்து, ஜானகியும் வரட்டும் என அமைதியாக, ஆனால் உறுதியாகக் கூறினார். ஜானகியையும் காவிரிக்கு உடன் அழைத்துச் சென்றார்.

     அன்றிலிருந்து இராமானுஜனிடம் கோமளத்தம்மாள் ஆக்கிரமித்திருந்த இடத்தை ஜானகி கைப்பற்றினார். ஜானகி இராமானுஜனுக்கு வேண்டிய பணிவிடைகளை உடனிருந்து இருபத்து நான்கு மணி நேரமும் செய்யத் தொடங்கினார்.

    இரு மாதங்கள் இராமானுஜன் கொடுமுடியில் தங்கினார். ஒவ்வொரு ஞாயிறும் மருத்துவர் வந்து, இராமானுஜனைப் பரிசோதிப்பார். கொடுமுடியில் இருந்து புறப்பட்டு, செப்டம்பர் மூன்றாம் நாள் இராமானுஜன் கும்பகோணம் வந்தடைந்தார். இராமானுஜனுக்கு முன்பே கிளம்பிய கோமளத்தம்மாள், சாரங்கபாணித் தெருவில் இருக்கும் தங்கள் பழைய வீடு, தற்போதுள்ள நிலையில், இராமானுஜனுக்கு சரிவராது என்பதால், வேறு வீடு பார்த்துத் தயாராக இருந்தார். கும்பகோணம் பக்தபுரித் தெருவில் இராமானுஜன் குடிபுகுந்தார்.

     இலண்டனில் இருந்து சென்னைக்கு, ஹார்டி எழுதிய கடிதத்தின் விளைவாக, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியினைச் சேர்ந்த காச நோய் மருத்துவர் நிபுணரான டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர் என்பவர் இராமானுஜனின் புதிய மருத்துவராக நியமிக்கப் பட்டார்.

     ஒரு மணி நேரத்திற்கும் மேல் இராமானுஜனைப் பரிசோதித்த டாக்டர் பி.எஸ்.சந்திரசேகர், இராமானுஜன் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கீழ்க்கண்டவாறு கூறினார்.

     நோயானது மிகவும் மோசமான நிலையினை அடைந்து விட்டது. இராமானுஜனின் முடிவு மருந்தின் வசமில்லை. கடவுளின் கையில்தான் உள்ளது.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.