23 மார்ச் 2013

கரந்தைத் தமிழ்ச் சங்கம்


          வாழி  பகலோன்  வளரொளிசேர்  ஞாலமெலாம்
          ஆழி  செலுத்துதமிழ்  அன்னையே  வாழியரோ
          நங்கள்  கரந்தைத்  தமிழ்ச்சங்கம்  நாள்நாளும்
          அங்கம்  தழைக்க அமைந்து
-          கரந்தைக் கவியரசு

    
      தமிழர்கள் அனைவரும் போற்றி வணங்கத் தக்க, தமிழ் வழிபாட்டுத் தலமாகவே விளங்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், ஓர் அங்கமாய்த் திகழும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், கடந்த இருபது ஆண்டுகளாக, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான்.

    நான் இப் பள்ளியின் ஆசிரியர் மட்டுமல்ல, இப் பள்ளியின் முன்னாள் மாணவன். என் வாழ்வின் முப்பதாண்டுகளை, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே கழித்திருக்கின்றேன். இனியும் சுவாசம் என்று ஒன்றிருக்கும் வரையில், நேசமாய் என்றென்றும் என் பணியினைச் செவ்வனே தொடர்வேன்.

செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன்
     1925 ஆம் ஆண்டு, சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்று, இன்று வரை, தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரும், தமிழ்ப் பொழில என்னும் தமிழாராய்ச்சித் திங்களிதழின், அச்சுப் பணியினை மட்டுமன்றி, தமிழ்ப் பொழில பதிப்பாசிரியர் குழுவில் ஓர் இடத்தினையும், இன்றைய சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள், எனக்கு வழங்கினார்.
        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சில கட்டுரைகளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்டபோது, அக்கட்டுரைகளை தனியொரு நூல் வடிவில், வெளியிட்டு மகிழ்ந்ததும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிரி திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான, செய்திகளைத் திரட்டி வாருஙகள் என்று கூறி, செலவிற்குப் பணம் கொடுத்து, என்னையும், எனது நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களையும், சென்னை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பியவரும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைத் தொகுத்து எழுதுங்கள் என, என்னை உற்சாகப் படுத்தியவரும், ஊக்கப் படுத்தியவரும் சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினை எழுதுவது என்பது சாத்தியமா? ஒரு தமிழ் மாமலையின் வரலாற்றினை, ஒரு சிறு மடு, ஏட்டில் எழுத முயலலாமா? மெத்தத் தமிழ் கற்ற, தமிழ்ச் சான்றோர்களால் போற்றி வளர்க்கப் பெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றை வரைய, ஒரு கணக்காசிரியன் பேராசைப் படலாமா? என்று எண்ணி எண்ணித் தயங்கியே, ஆண்டுகள் இரண்டினைக் கழித்தேன்.

      நான் பயின்ற சங்கம், என்னை வளர்த்த சங்கம், எனக்கு வாழ்வளித்த சங்கம். இத்தகு சங்கத்திற்கு, இதுநாள் வரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னால் என்ன செய்ய இயலும்? எண்ணிப் பார்த்தேன். சங்கம் பற்றி எழுதுவதை விட, சங்கத்தின் புகழினைப் பறைசாற்றுவதை விட, வேறு என்ன, என்னால் செய்ய இயலும்?

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் வரலாற்றினை, தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்த சங்கத்தின் வீர மிகு வரலாற்றினை, அன்னைத் தமிழைக் காக்க மொழிப் போராட்டத்தினை முதன் முதலில் தொடங்கிய, சங்கத்தின் தீரமிகு வரலற்றினை, தமிழ் மொழியைச் செம்மொழிச் சிம்மாசனத்தில் அமர வைத்திட்ட, சங்கத்தின் செம்மொழி வெற்றி வரலாற்றினை, என்னால் இயன்றவரை ஏட்டில் எழுத முற்படுகின்றேன்.

நண்பர் திரு வெ.சரவணன்
      பிழையிருப்பின், கனிவோடு கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன். செய்திகள் ஏதேனும் விடுபட்டிருப்பின், எடுத்துக் கூறுங்கள், சேர்த்துக் கொள்கிறேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் இத்தொடருக்கு வித்திட்ட, சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களுக்கும், அருமை நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுக்கும், எந்நாளும், என் நெஞ்சில், நன்றியுணர்வு, நீங்காது நிலைத்திருக்கும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றிய, தொடக்க காலச் செய்திகளை, வாரி வழங்கிய,

      கரந்தைத் தமிழ்ச் சங்க பெத்தாச்சி புகழ் நிலையம்
      தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம்
      சென்னை, ஆவணக் காப்பகம்
      சென்னை, கன்னிமாரா நூல் நிலையம்
      சென்னை, மறைமலை அடிகள் நூலகம்
      சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
      சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம்

முதலிய நூலகங்களுக்கும், அவற்றின் நூலகர்களுக்கும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

     எனது நான்காண்டு கால தொடர் முயற்சிக்குப் பின், இதோ, சங்க வரலாற்றின் முதல் அத்தியாயம், தங்களின் கனிவான பார்வைக்குப் படைக்கப் படுகிறது.

     தமிழர்களின் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், சீர்மிகு வரலாறு, இதோ கதிரொளி பட்ட, தமிழ்த் தாமரையாய் மலர்கின்றது.

     மீண்டும் சொல்கிறேன், தமிழ்ச் சிங்கத்தின் சிற்றமிகு கர்ஜனையினை, மொழிபெயர்க்க முயற்பட்ட, சின்னஞ்சிறு முயலின் முயற்சி இது. பொறுத்தருள்வீர்.

     தங்குபுகழ்  செந்தமிழ்க்கோர்  அன்பராகில் அவர்கண்டீர்
     யாம் வணங்குங்  கடவுளாரே

என வாழ்ந்து காட்டிய, சங்கத்தின் முதற்றலைவர், செந்தமிழ்ப் புரவலர், ராவ் சாகிப், தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் அவர்களின் மலர் பாதம் பணிந்து, வணங்கி, என் பணியினைத் தொடர்கின்றேன்.

வாருங்கள் கரந்தைக்கு. சேர்ந்து பயணிப்போம்.


     தமிழ்ச் சங்கங்கள்

           சிங்கத்திற்  சீர்த்தது  வல்  நாரசிங்கம்,  திகழ்மதமா
           தங்கத்திற்  சீர்த்தது  ஐராவதமா  தங்கம்,  விண்சேர்
           சங்கத்திற்  சீர்த்தது  இராசாளி  யப்பெயர்க்  காவலனாற்
           சங்கத்திற்  சீர்த்தது  தஞ்சைக்  கரந்தைத்  தமிழ்ச்சங்கமே


     கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் தொன்மையினைச் சான்றோர் பறைசாற்றுவர். உலகின் முதன் மொழியாகத் தோன்றிய தமிழ் மொழியினைக் காக்கவும், வளர்க்கவும், போற்றவும் தோன்றிய அமைப்புகளே தமிழ்ச் சங்கங்களாகும்.

     தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே, தமிழ்ச் சங்கங்களும் தோன்றி, தமிழ்ப் பணியாற்றி வந்துள்ளன.ஆனால் முதல், இடை, கடை என மூன்று சங்கங்களே தமிழ் வளர்த்ததாக, ஒரு மாயை இன்றைய தமிழுலவில் நிலவி வருகின்றது. உண்மையில் முச் சங்கங்களுக்கு  முந்தியும், பிந்தியும் தமிழ் நாட்டில், தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்துள்ளன.

     கி.மு. 30,000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, தமிழ் வளர்த்து, பின்னர் இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

     அவையாவன,

பகுறுளியாற்றுத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம்  பகுறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரை
காலம் கி.மு.30,000 முதல் கி.மு.16,500 வரை

மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் - குமரிக் கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின்
மகேந்திர மலை
காலம் கி.மு. 16,000 முதல் கி.மு. 14,550 வரை
 
பொதிய மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் -  பொதிய மலை, பாவநாசம்
காலம் - கி.மு. 16,000 முதல்

மணிமலைத் தமிழ்ச் சங்கம்
இடம்- மணிமலை,இது மேருமலைத் தொடரின் 49
கொடு முடிகளில் ஒன்று, ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்கும் தெற்கில் இருந்தது
காலம் கி.மு.14,550 முதல் கி.மு.14,490 வரை

குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்
இடம் - திருச்செந்தூர், இந்நகருக்கு திருச் சீரலைவாய்
என்றும் அலை நகர் என்றும் பெயருண்டு
காலம் - கி.மு.14,058 முதல் கி.மு.14,004 வரை

தலைச் சங்கம்
இடம் - குமரி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு.14,004 முதல் கி.மு. 9,564 வரை

முது குடுமித் தமிழ்ச் சங்கம்
இடம் - கொற்கை
காலம் - கி.மு.7,500 முதல் கி.மு. 6,900 வரை

இடைச் சங்கம்
இடம் - தாம்பிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாட புரம் 
காலம் - கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை

திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றம் பக்கம் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு. 1,915 முதல் கி.மு. 1,715 வரை

கடைச் சங்கம்
இடம் - நான்மாடக் கூடல், மதுரை ஆலவாய் எனப்படும் உத்தர மதுரை
காலம் - கி.மு. 1,715 முதல் கி.பி.235 வரை

வச்சிர நந்தி தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றத்து தென் மதுரை
காலம் - கி.பி. 470 முதல் கி.டிப.520 வரை

      கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண மதத் தலைவரால், சமண மததை வளர்க்கும் பொருட்டு, ஒரு தமிழ்ச் சங்கம் திருப்பரங்குன்றத்துத் தென் மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச் சங்கம் கி.பி.520 வரை செயலாற்றியது.

     வச்சிர நந்தித் தமிழ்ச் சங்கத்திற்குப் பின் தமிழ் மொழியில், வட மொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. தனித் தமிழின் வளர்ச்சி குன்றியது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும். புதிது புதிதாக வட மொழிப் புராணங்கள் தோன்றத் தொடங்கின.

      கி.பி. 520 இல் தொடங்கி, அடுத்த 1381 ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது.

                                              
.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமோ.
----------


இத்தொடருக்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தந்த நண்பர்,

திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை காமராஜ்
அவர்களுக்கு மனமார்ந்த
நன்றியினைத்
தெரிவித்து மகிழ்கின்றேன்