05 செப்டம்பர் 2013

தியாகம் போற்றுவோம், கல்வி போற்றுவோம்

     நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 30.8.2013 வெள்ளிக் கிழமை, எனது பத்தாம் வகுப்பு மாணவியரை நோக்கிக் கேட்டேன்.

அடுத்த மாதம் செப்டம்பர் 5 என்ன நாள் தெரியுமா?

ஆசிரியர் தினம்
டாக்டர் இராதாகிருட்டிணன் பிறந்த நாள்
என பல குரல்கள் எழுந்தன.


       1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

       பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

     மாணவியரைப் பார்த்து மீண்டும் கேட்டேன். இதே செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, வேறொரு சிறப்பும் உண்டு தெரியுமா? மௌனமே பதிலாய் கிடைத்தது.

     நண்பர்களே, மாணவியர் மட்டுமல்ல நாமும் கூட மறந்து போன ஒரு சிறப்பு இந்நாளுக்கு உண்டு.

     1908 ஆம் ஆண்டு ஜுலை ஏழாம் நாள். திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிமன்றம். நீதிபதி ஏ.எஃப். பின்ஹே தீர்ப்பு வழங்குகிறார். சுப்பிரமணிய சிவாவிற்கு அடைக்கலம் கொடுத்த உதவியதற்காக ஆயுள் தண்டனையும், நாடு கடத்தல் தண்டனையும், மேலும் திருநெல்வேலியில் மார்ச் ஒன்பதாம் நாள் ஆற்றிய சொற்பொழிவிற்காக மற்றொரு ஆயுள் தண்டமையினையும், மற்றொரு நாடுகடத்தல் தண்டனையினையும் விதிக்கின்றேன். குற்றவாளி இவ்விரு ஆயுள் தண்டனைகளையும், இரு நாடு கடத்தல் தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்.
     பேசியதற்காகவும், நண்பருக்கு உதவியதற்காகவும் இப்படியொரு தண்டனை நண்பர்களே. இந்தத் தண்டனைகளைப் பெற்றவர் யார் தெரியுமா?

       கைநோவக்  கல் நோவக் கல்லுடைத்துச்  செக்கிழுத்து
       மெய்  சோர்ந்தும் ஊக்கம்  விடாத நின்ற – ஐயன்
       சிதம்பரம் அன்றுசிறை  சென்றிலனேல்  இன்று
       சுதந்திரம்  காண்போமோ  சொல்
என்று பாடினாரே கவிமணி, அவ்வீர்ர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.


     ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கப்பல் விட்டாரே, அந்தக் கப்பல் ஓட்டியத் தமிழனின் பிறந்தநாள்தான், செப்டம்பர் 5

       வந்த  கவிஞர்க்கெல்லாம்  மாரியெனப்  பல்பொருளும்
       தந்த  சிதம்பரமவன்  தாம்தின்று  - சந்தமில்  வெண்
       பாச்  சொல்லைப்  பிச்சைக்கு  பாரெல்லாம்  ஓடுகிறான்
       நாச்  சொல்லும்  தோலும்  நலிந்து
என்று தன் சொத்து முழுவதையும் நாட்டிற்காக இழந்த பிறகு, தன் வறுமை நிலையத் தானே பாட்டில் பாடினானே, அந்தத் தியாகத் திருஉருவம் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள்தான் செப்டம்பர் 5.
 
வ.உ.சி இருந்த சிறை அறை
     
வ.உ.சி. இழுத்த செக்கு
சிறை உடையில் வ.உ.சி
             சுவாமியே  தந்தையே  தூயுற்ற  பெரியோய்

      அவாவியே  வந்தென்னை  ஆண்டருள்  ஈசா,
      மூன்றிர  திங்கள்  முரண்சிறை  இருந்தேன்
      இந்தவாரம்  எடுத்த நிலுவையில்
      ஐந்தி  லொன்றாக அருகிய  தென்னுடல்
      அரிசி  உணவுக்கு அளித்தனர்  அனுமதி
      பெரியவன்,  மற்றவன்  பேசான்  என்னோடு
      சீரிய  நின்னடி  சிறமேற்கொண்டு  யான்
      பாரிய  என்னுளப் பாரத்த்  தாய்க்கும்
      உரிமையோடு  பெற்றெனை  உவம்யொடு  வளர்த்த
      பெருமை  சேர்  அன்னைக்கும்  பிறர்க்கும்  எனது
      மெய்  மன  வாக்கால்  விரும்பிஇன்  றளித்தேன்
      தெய்வ  வணக்கமும்  சீர்தரும்  வாழ்த்துமே
எனச் சிறையிலிருந்தவாறு, தந்தைக்குக் கவிதையாய் கடிதம் எழுதினாரே, அந்த வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்தான் செப்டம்பர் 5.
 
வ.உ.சி அவர்களின் இறுதி ஊர்வலம்
மாணவியர் அனைவரும் ஆழ்ந்த அமைதியில், வியப்புடன் செய்தியைக் கேட்டனர். ஆம் மாணவிகளே, செப்டம்பர் 5, இராதாகிருட்டிணன் அவர்களின் பிறந்தநாள் மட்டுமல்ல, செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளுமாகும். இந்நன்னாளில் நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் ஓவியப் போட்டி ஒன்றினையும் நடத்துவோமா? என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம், போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்
     போட்டிக்கானத் தலைப்பைக் கூறுங்கள் என்றனர். பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர் இராதாகிருட்டினன் அல்லது செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி என்றேன்.

     கட்டுரைப் போட்டிக்கானத் தலைப்பு எனது ஆசிரியர்கள்,

     மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று, தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில், உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள் என்றேன்.

     5.9.2013 வியாழக்கிழமை. ஆசிரியர் தினம். செக்கிழுத்தச் செம்மலின் பிறந்த தினம். காலை பேச்சுப் போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும், ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.

     நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியரும் நண்பருமான திரு டி.கோபால் அவர்களும், பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றியாளர்கள் மூவரையும், ஓவியப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் வெற்றியாளர்கள் மூவரையும் தேர்வு செய்து கொடுத்தனர்..

     கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

     எனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, தாங்களாகவே, சுயமாக எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில்,  7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.
    
      அனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.
பேச்சுப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
ஓவியப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
கட்டுரைப் போட்டியில் வென்ற பத்தாம் வகுப்பு மாணவியர்
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு எஃப் பிரிவு மாணவர்கள்
கட்டுரைப் போட்டியில் வென்ற ஒன்பதாம் வகுப்பு டி பிரிவு மாணவியர்
பரிசில்களை வென்ற பத்தாம் வகுப்பு மாணவியருடன் ஒரு குழுப் படம்

     மாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா. பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் வெற்றியாளர்களுக்கானப் பரிசில்களை வழங்கிப் பாராட்டினார். பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களும், உடற்கல்வி ஆசிரியரும் நண்பருமான திரு துரை.நடராசன் அவர்களும், ஓவிய ஆசிரியர் நண்பர் திரு எஸ்.கோவிந்தராசன் அவர்களும், நெசவு ஆசிரியர் நண்பர் திரு டி.கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு,  சிறப்பித்தனர்.
      ஒரு சிறிய வகுப்பறையில் நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி    டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்
நினைவினைப் போற்றுவோம்