26 அக்டோபர் 2013

இவருக்கு எப்பொழுதும் மனிதம் என்றே பெயர்


இல்லாமை என்னும் பிணி
இல்லாமல்  கல்வி நலம்
எல்லார்க்கும் என்று சொல்லி
கொட்டு முரசே
என்று முரசறைவார் பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்கள், பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப, ஜீவனுள்ள கல்வி முறையை உருவாக்குவதிலும், கல்வி கற்க வரும் இளம் மாணவர்களை, அன்பின் மொழி பேசி, நன் மக்களாய் உருவாக்குவதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருபவர்.
 
தோழர் இரா.எட்வின்
     தான் பணியாற்றும் பள்ளியிலாகட்டும், தான் வசிக்கும் இடத்திலாகட்டும், பூமிப் பந்தின் எந்தவொரு மூலையிலாகட்டும், எங்கெல்லாம் மனிதம் காயமடைகிறதோ, எங்கெல்லாம் மனிதம் சேதமடைகிறதோ, அதைக் காணும் பொழுதெல்லாம், கேட்கும் பொழுதெல்லாம், சீறியெழுந்து, நாவன்மை மிக்கப் பேச்சாலும், உள்ளங்களைக் கிளர்ந்தெழச் செய்யும் எழுத்தாலும் எதிர்வினை புரிபவர் இவர்.

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
என்று விழிப்பூட்டுவாரே பாரதிதாசன், அதுமட்டுமா

கொலைவாளினை எட்டா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா
என்றுக் கொதித்தெழுந்து கொலை வாளினை எட்டா என்று வீர முழக்கமிடுவாரே புரட்சிக் கவி, அப்புரட்சிக் கவியின் ஆணைக்கு இணங்க, கொலை வாளினை அல்ல, அதனினும் வலிமை மிக்க எழுது கோலினை ஏந்தி, நெஞ்சம் நிமிர்த்திப், போர்க் களத்தின் முன்னனியில் நின்று போரிடுபவர்தான் தோழர் இரா.எட்வின்.
கவிஞர் முத்து நிலவன்
     நண்பர்களே, கடந்த 6.10.2013 அன்று, கவிஞர் முத்து நிலவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த, புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக்கில் நடைபெற்ற, கணினி பயிலரங்கில்தான், தோழர் இரா.எட்வின் அவர்களை முதன் முதலில் நேரில் சந்தித்தேன்.

    நேசத்துடன் பேசினார். மிகவும் மென்மையான மனிதராகத்தான் தோன்றினார். ஆனால், அவர் எழுந்து, ஒலிப் பெருக்கியின் முன் நின்ற சில நொடிகளிலேயே, அவ்விடம், பெய்லின் புயல், மையம் கொண்ட புள்ளியாக மாறியது.

விடைபெற்றுச் செல்லும் பொழுது,
இவனுக்கு அப்போது மனு என்று பேர்
என்னும் தன்னுடைய நூலை அன்பளிப்பாய் வழங்கிச் சென்றார்.


     நண்பர்களே, நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை என்பது இவரது வலைப் பூவின் பெயர். மிகச் சரியாகத்தான் பெயரிட்டுள்ளார். நோக்குமிடங்களில் எல்லாம் காணும், சமூக அவலங்களைக் கண்டு எழும், தனது உள்ளக் குமுறல்களை சின்னச் சின்ன வாக்கியங்களில் வடித்துத் தருகிறார்.

     தனது வலைப் பூ கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். இந்நூலின் முகப்பு அட்டையே நமக்குச் சொல்கிறது, இது மேலோட்டமான வாசிப்பிற்கு உரிய, சராசரி நூல் அல்ல என்பதை.

     மகப்பேறுவிற்காக மருத்துவரிடம் ஒரு பெண் வருகிறார். குழந்தை பிறந்தவுடன், அப் புத்தம் புது குழந்தையைப் போர்த்திக் கொடுக்க, ஒரு புதுத் துணியைக் கேட்கிறார் மருத்துவர். அப் புதுக் குழந்தையின் தகப்பன் தருவதோ, கிழிந்த பனியன் துணி. ஏழ்மை.

       அக்கிழிந்த பனியன் துணியை, அம் மருத்துவரின் முகநூலில் காண்கிறார் தோழர் எட்வின்.

      பிறந்த தனது குழந்தையை, கிழிந்த பனியன் துணியால்தான் போர்த்திப் பெற முடியும் என்றால், இந்த மண்ணில் என்ன இழவுக்கு உயிரோடு இருக்கிறோம்? எனப் பொங்கி எழுகிறார்.

     ஒரு மழை நாளில், மதுராந்தகம், வீராணம், செம்பரம் பாக்கம் முதலான ஏரிகள் நிரம்பி வழிவதையும், எந்நேரத்திலும், ஏரிகளின் கரைகள் உடையலாம் என்பதையும், தொலைக் காட்சியில் காட்டுகிறார்கள்.

     எட்வின் அவர்களுடன் சேர்ந்து, அவரது அன்பு மகள் கீர்த்தனாவும் தொலைக் காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறார். கீர்த்தனாவிற்கு, அடுத்த நாள் பள்ளி உண்டா? அல்லது விடுமுறையா? என்பதை அறிந்து கொள்ளும் ஆவல்.

      வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நூற்றுக் கணக்கான குடிசைகள், ஆயிரக் கணக்கான குடும்பங்கள் சின்னா பின்னமாய், சிதறுண்டு கிடக்கும் காட்சி தெரிகிறது. உயிர் சேதத்திற்கு, கால் நடைகள் சேதத்திற்கு என நிவாரணங்கள் அறிவிக்கப்படுகின்றன.

      கீர்த்தனாவிற்கு ஒரு சந்தேகம்.

      ஏம்பா, இப்ப இந்த தண்ணி எல்லாம் எங்கே போகும்?

      கடலுக்கு.

      வருஷா வருஷம் இப்படித்தானா?

      ஆமாம்.

       ஏம்பா, அப்ப இப்படிக் கொடுக்குற காசுல புதுசா ஒரு ஏரி வெட்டி விட முடியாதா?

       எதுக்குக் கேக்கற? வெட்டப் போறியா?

       லூசு மாறி உளறாம, கேட்டதுக்கு பதில் சொல்லுப்பா.

       வெட்டலாம்தான்

       அப்ப ஏன் அரசாங்கம் வெட்ட மாட்டேங்குறாங்க?

      கன்னத்தில் ஓங்கி அறைந்தாற் போன்று இருக்கிறதல்லவா நண்பர்களே? நதி பயணப்படும் பாதை என்னும் கட்டுரையில் நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.

     ஒரு முறை இவரது மகள் படிக்கும் பள்ளியில் பேச்சுப் போட்டி. கீர்த்தனா பேச வேண்டிய பேச்சை எழுதிக் கொடுத்து விட்டு, மகள் படித்துப் பார்க்கும் முன், பள்ளிக்கு புறப்பட்டு விட்டார். மாலை விடு திரும்பியவுடன், மகளைப் பார்த்துக் கேட்கிறார்.

       பேச்சு நல்லா இருந்துச்சா?

       சரியான லூசாப்பா நீ?

       ஏன்டி பாப்பா?

       பின்ன என்னப்பா. அவருக்கு, இவருக்கு, நிக்கிறவருக்கு, ஒக்காந்து இருக்கறவருக்கு, போறவருக்கு,  வரவருக்குன்ற ஒரு பாரா முழுக்க வணக்கத்துக்கே வேஸ்டாக்கிட்டியே.

       வேற எப்படி செல்றது?

        எல்லோருக்கும் வணக்கம்னு ஒத்த வரியில சொன்னாப் போதாதா?

       இடையில் நுழைகின்றான், அப்பொழுது யூ.கே.ஜி படித்துக் கொண்டிருந்த, எட்வின் அவர்களின் செல்ல மகன் கிஷோர்.

        எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டா போதாதா?

     கற்றுக் கொள்வதற்குப் பிள்ளைகளிடம் ஏராளம் இருக்கிறது என்கிறார், தக்காளி என் அசான் என்னும் ஓர் கட்டுரையில்.

     நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால், எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து, சந்தோஷமா படிப்பேன். ஆனா, தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா.

       நண்பரின் மகனின் பேச்சைக் கேட்டு, அம் மாணவனை, கண்ணில் கண்ணீர் மழ்க, இறுக்கமாக அணைத்துக் கொண்ட நிகழ்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் குழந்தைகள் எப்போதும் தவறாய் பேச மாட்டார்கள் என்னும் கட்டுரையில்.

     மதிய உணவுத் திட்டத்தையும், சீருடையினையும் கொண்டு வந்து, கல்விக் கண் திறந்த கர்ம வீர்ர் காமராசரை இவர் நினைவு கூறும் விதம், நம்மைக் கண் கலங்க வைக்கும்.

     ஒரு கையெழுத்தில் எங்கள் வாழ்க்கையை வெளிச்சப் படுத்திய உங்களைக் கை எடுத்துக் கும்பிடா விட்டால் நான் மனிதனல்ல.

     நான் மனிதன்.

     இரண்டு சொட்டுக் கண்ணீரும், வணக்கமும் தலைவரே.


     உச்சங்களின் முதல் சந்திப்பு என்னும் ஓர் கட்டுரையில், மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்ட சந்திப்பைக் கண் முன் நிறுத்துகிறார்.

     தமிழ் வாசிச்சிருக்கீங்களா?  இது பாரதி.

     கொஞ்சம்.

      அடக்கமாய் பதில் கூறுகிறார் பாரதிதாசன். நண்பர்களே, நீங்களும் இந்நூலை வாசித்துப் பாருங்கள். உச்சங்களின் சந்திப்பில் உங்களையே மறப்பீர்கள்.

      பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்த உடன், தேர்ச்சி பெற்றவன் இனிப்பு வாங்கவும், தேர்ச்சி பெறாதவன் விஷம் வாங்கவும் ஓடுகிறானே. குறைந்த பட்சம் இது சரிதானா என்கிற பரிசீலனையையேனும், தொடங்குவதற்கு நமக்கு இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?

     ஆசிரியர் சங்க மண்டல மாநாடு ஒன்றில், கல்வித் துறையின் இணை இயக்குநர் திரு கார்மேகம் அவர்கள் எழுப்பிய இந்தக் கேள்வி, ஒரு வாரத்திற்குத் தூங்க விடாமல் துரத்தியதை எது செய்யக் கல்வி? என்னும் தலைப்பில் பதிவு செய்து,

01.   பத்தாம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகளே வேண்டாம்
02.   பதினொன்று மற்றும் பன்னிரெண்டம் வகுப்புகளில், இப்போது உள்ள முறையை மாற்றி, செமஸ்டர் முறையினை அறிமுகப் படுத்தலாம்
என்ன, ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கலாமா? என நம்மையும் விவாதத்திற்கு அழைக்கிறார் தோழர் இரா.எட்வின்.

     பிரம்படிச் சத்தம் கேட்காதப் பள்ளிக் கூடங்களையே விரும்பும் தோழர் எட்வின், திறந்து வைக்கும் சாரளங்கள் வழியே பார்த்தால், ஒரு உன்னத உலகு தென்படுகிறது.

      நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்களது இந்நூல், யதார்த்த சமூகப் பிரச்சனைகளை நம் கண் முன்னே, கதைபோல் காகிதத்தில் ஓட விடுகிறது.

      வாருங்கள் நண்பர்களே யோசிப்போம். வாருங்கள் விவாதிப்போம். வாருங்கள் ஒரு முடிவெடுப்போம் என நம்மையும், ஒவ்வொரு பக்கத்திற்கும், ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு எழுத்திற்கும், கை பிடித்து உடன் அழைத்துச் செல்கிறார்  தோழர்.

     சமூக அக்கறையுடனும், கொண்ட கொள்கையில் உறுதியுடனும், தொடர்ந்து இயங்கி வருபவர் எட்வின் என்பதையும், பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாதவர் எட்வின் என்பதையும், பாசாங்கு இல்லாத அவருடைய எழுத்துக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

      வாருங்கள் நண்பர்களே, தோழர் இரா.எட்வின் அவர்களை வாசிப்போம். வாசித்தால் நிச்சயம் நேசிப்பீர்கள்.
இவர்
மனிதரல்ல
மனிதம்
என்றே
போற்றுவீர்கள்.