16 ஜனவரி 2014

பாரதிதாசனைச் சந்தித்தோம்


செந்தமிழ் நாட்டினிற் பற்றும் – அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ – எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை – கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய வாழி – நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்
-          பாரதிதாசன்


     நண்பர்களே, சில நாட்களுக்கு முன், ஆசிரியர்கள் ஓய்வறையில் பேசிக்கொண்டு இருந்தபொழுது, முதுகலை ஆசிரியர் நண்பர் ஜி.விஜயக்குமார் அவர்கள், பொங்கலை முன்னிட்டு ஆறு நாட்கள் விடுமுறை வரப்போகிறது. அதில் இரண்டு நாட்கள் பாண்டிச்சேரிக்கு சென்று வருவோமா என்றார். சென்று வருவோமே என்றேன். கலந்து பேசினோம்.

     12.1.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 11.30 மணியளவில் புறப்பட்டோம். நான், உடற்கல்வி ஆசிரியர் துரைபிள்ளை நடராசன், முதுகலை ஆசிரியர்களான ஜி.விஜயக்குமார், ஜி.குமார், கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் யோகேஷ், இரும்புத் தலை நண்பர் வே.கார்த்திக் முதலிய அறுவரும் புறப்பட்டோம்.

     நண்பர் யோகேஷ் அவர்கள் திருச்சியில் இருந்து, தனது காரில் வந்துவிட, நாங்கள் ஐவரும், அவரது காரில் பயணித்தோம்.

     மாலை பாண்டிச்சேரி சென்றோம். கடற்கரையில் காலார நடந்தோம். பொங்கலை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. கண்டு களித்தோம்.

    
மறுநாள் காலை மணக்குள விநாயகர் ஆலயம் சென்றோம்.

     பாண்டிச்சேரி சென்றவுடன் எனக்கு ஓர் ஆசை. பாரதியார், பாரதிதாசன் நினைவிடங்களைப் பார்க்க வேண்டும். புரட்சிக் கவி, பாவேந்தர் பாரதிதாசனின் திருமகனார் மன்னர் மன்னன் அவர்களைக் காண வேண்டும், உரையாடி மகிழ வேண்டும் என்று ஓர் ஆசை.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், சுமார் இரண்டு மணிநேரம், பாண்டிச்சேரியின் வீதிகளில் வலம் வந்தோம். பலரையும் கேட்டோம். குறைந்தது ஐம்பது பேரிடமாவது விசாரித்திருப்போம். பாரதியார், பாரதிதாசன் நினைவு இல்லங்கள் எங்கிருக்கின்றன என்று யாருக்குமே தெரியவில்லை. சிலர் அவர்கள் விரும்பிய திசையில் கைகாட்டிவிட்டு சென்றனர், அலைந்ததுதான் மிச்சம்.

     நண்பர்கள் ஒவ்வொருவரும் கொதித்துப் போனார்கள். வேதனையில் துடித்துப் போனார்கள். என்ன உலகம் இது? தங்களது கவிதைகளின் மூலம், தமிழனின் உடலில், உள்ளத்தில், புது இரத்தம் பாய்ச்சி, நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேறச் செய்து, சுதந்திர உணர்வினை ஊட்டிய பாரதியையும், பாரதிதாசனையும் இவ்வுலகம் மறந்து விட்டதா? எனப் பதறிப் போனார்கள்.

     என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு வழியாய் விசாரித்துக் கொண்டு, புதுவைத் தமிழ்ச் சங்கத்தைச் சென்றடைந்தோம். சங்கத்திற்கு அருகிலேயே, தமிழ்ச் சங்கத் தலைவர் திருமிகு முத்து அவர்களின் இல்லம்.


    



புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு முத்து அவர்கள் முகமும், அகமும் மலர எங்களை வரவேற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருகிறோம் என்றவுடன், அவரின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

     சில நிமிடங்கள் உரையாடி மகிழ்ந்தோம். பின்னர் பாரதியார், பாரதிதாசன் நினைவு இல்லங்களின் முகவரிகளையும், பாரதிதாசன் அவர்களின் திருமகனார் மன்னர் மன்னன் அவர்களின் இல்ல முகவரியினையும் பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.

     புதுவை, பெருமாள் கோயில் தெருவிற்குச் சென்றோம். இந்தத் தெருவில்தான் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு இல்லம் உள்ளது. நீண்ட நெடிய தெரு.

     பெருமாள் கோயில் தெருவில், ஒரு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம், பாரதிதாசன் நினைவில்லம் இத்தெருவில் எங்கிருக்கிறது என்று கேட்டோம். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அவருக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு புதிய பெயரை முதன் முதலாய் கேட்பவர் போலத்தான் தெரிந்தார்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்
என்று கூறிக் கூறி, வந்தவர்களை எல்லாம் வாழ வைத்தோமே தவிர, நம்மவர்களை மறந்தே போய்விட்டோம். நம்மையே நமக்கு அறிமுகப்படுத்த, மீண்டுமொரு முறை பெரியார் பிறந்து வந்தால்தான் உண்டு.

    


பாரதிதாசன் நினைவு இல்லம் பூட்டி இருந்தது. விடுமுறை நாளாம். பதினொன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதிவரை பொங்கல் விடுமுறையாம்.

     


ஈஸ்வரன் கோயில் தெருவில் இருந்த மகாகவி பாரதியின் நினைவு இல்லத்திற்குச் சென்றோம். அதுவும் பூட்டியிருந்தது. பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். அதற்காகப் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே பூட்டிவிட்டார்கள்.

     ஆனால் அரவிந்தர் ஆசிரமம் திறந்து இருந்தது. கூட்டம் பொங்கி வழிந்தது.

     நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம். இது போன்ற தமிழறிஞர்களின் நினைவு இல்லங்களுக்கு, அரசு அலுவலகங்கள் போன்று, வார விடுமுறை விடுவதென்பது சரிதானா. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும், நினைவில்லங்களைப் பார்க்க வருபவர்கள், ஏமாந்து போவார்கள் அல்லவா? நீண்ட தொலைவில் இருந்து வருகிறவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா? புதுவை அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே, எங்களின் கனிவான, பணிவான வேண்டுகோளாகும்.

        பாரதியார், பாரதிதாசன் நினைவு இல்லங்களைக் காண இயலவில்லை, பாவேந்தர் பாரதிதாசனின் மகனையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில், காந்தி நகர் நோக்கிப் பயணமானோம்.

     


     காரில் செல்லும்பொழுதே, தோழர் இரா.எட்வின் அவர்களின் இவனுக்கு அப்போது மனு என்று பேர் என்னும் நூல் நினைவிற்கு வந்தது. அந்நூலில் உச்சங்களின் முதல் சந்திப்பு என்னும் தலைப்பில், மகாகவி பாரதியும், பாவேந்தர் பாரதிதாசனும் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்ட நிகழ்வினை நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டுவார்.

    

பாரதிதாசன் புதுச்சேரியில் வாத்தியார் என்று வெகு மக்களால் அறியப் பட்டார். அவர் தமிழாசிரியர் என்பதால் யாரும் அப்படி அழைக்கவில்லை. அவர் சிலம்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்பதாலேயே, அவ்வாறு அழைக்கப்பட்டார். மாலை நேரங்களில் அவரும், அவரொத்த இளைஞர்களும் தெருவில் கம்பு சுற்றி விளையாடுவதுண்டு. அதுமாதிரி சமயங்களில், பாரதி அந்த வழியே போவதும் உண்டு. அப்படி அவ்வழிப் போனவர்தான், தாம் பெரிதும் நேசிக்கும் பாரதி, என்பதை அறியாத பாரதிதாசன், பாரதியின் நகைப்புக்குரிய தோற்றத்தைக் கண்டு, அவருக்கு ரவி வர்மா பரமசிவம் என்று பெயர் வைத்து, நண்பர்களோடு சேர்ந்து நக்கல் செய்வதும் உண்டு.

    
வேணு நாயக்கர்
கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கர் இல்லத் திருமணத்திற்கு பாரதிதாசன் சென்றிருந்தார். அனைவரும் அவரைப் பாடச் சொல்லி வற்புறுத்தவே, அவர் பாடத் தொடங்கினார். பாரதிதாசன் நல்ல பாடகர் என்பதும் பலருக்குத் தெரியாத சங்கதிதான்.

     அந்தத் திருமணத்திற்கு பாரதியாரும் வந்திருந்தார். அவரை மிகுந்த பணிவோடும், பவ்யத்தோடும் வேணு நாயக்கர் தொடர்ந்து உபசரித்துக் கொண்டே இருந்தார்.

     இந்த ரவி வர்மாவைப் போய் வேணு நாயக்கர் இப்படி விழுந்து விழுந்து ஏன் உபசரிக்கிறார் என்பது பாரதிதாசனுக்கு அப்போது விளங்கவே இல்லை.

    பாடுவதை முடித்துக் கொள்ள இருந்த பாரதிதாசனைப் பார்த்து வேணு நாயக்கர்,
கனகு, இன்னுமொரு பாடலைப் பாடுங்கள் என்றார்

     தொன்று நிகழ்ந்தது அனைத்தும் என்ற பாரதியின் பாடலைப் பாடுகிறார். எல்லோரும் ரவிவர்மாவையே பார்க்கிறார்கள்.  இது இன்னும் ஆச்சரியப் படுத்துகிறது பாரதிதாசனை.

     பாடுவது நாம். பாடல் பாரதியுடையது. இவர்கள் ஏன் ரவி வர்மாவைத் திரும்பிப் பார்க்கிறார்கள்? குழம்பித்தான் போனார் பாரதிதாசன். அவர் இறங்கி வரும் போது அவரை நோக்கி, பாரதியாரை அழைத்து வந்தார் வேணு நாயக்கர்.

     முனைவர் ச.சு.இளங்கோ எழுதிய பாரதிதாசன் பார்வையில் பாரதி என்ற நூலை வாசிக்கிற வரைக்கும், சிறு பிள்ளை மாதிரி ஒரு ஆசை எனக்கு இருந்தது. பாரதியும், பாரதிதாசனும் சந்தித்துக் கொண்டபோது யார் முதலில் பேசியிருப்பார்கள்? விடை இந்த நூலில்தான் கிடைத்தது.

     வேணு நாயக்கர், பாரதி, பாரதிதாசன் மூவரும் அருகருகே நிற்கிறார்கள். வேணு கேட்கிறார்,

கனகு, இவங்க யாருன்னு தெரியுதா?

இல்லையே?

தமிழ் வாசிச்சிருக்கீங்களா?

    ஆஹா, பாரதி தான் அவரது சிஷ்யனிடம் முதலில் பேசியிருக்கிறார்.

கொஞ்சம் பாரதிதாசனிடமிருந்து அடக்கமாக பதில் வருகிறது.

     நம்மில் பலர் படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் போது, பாரதிதாசனிடமிருந்து கொஞ்சம் கற்றுக் கொண்டிருப்பதாய் வந்த பதிலில், நமக்குக் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.

உணர்ந்து பாடுகிறீர்கள்

     பாரதிதாசன் இவர் யார் என்பதான ஒரு பார்வையை வேணு நாயக்கர் மீது வீசுகிறார்.

இவங்களத் தெரியலையா. இவங்கதான் நீங்க பாடுன பாட்டை எல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதின்னு பேரு.

    அப்படியே உறைந்து போகிறார் பாரதிதாசன்.

வேணு இவரை ஏன் இது வரைக்கும வீட்டுக்கு அழைத்து வரல?

பாரதிதாசன் சொல்கிறார்,

     அந்த வார்த்தையைக் அவர் வெளியிட்டவுடன், அது என் நினைவில் தங்காது என்னை ஏமாற்றி விடுமோ என்றெண்ணி அதன் முதுகில் ஏறி அமர்ந்து அழுத்திக் கொண்டேன்.

     உச்சங்களின் முதல் சந்திப்பு, நம்மை நெகிழ்ந்து போக வைக்கின்றதல்லவா?

      உச்சங்களின் நினைவலைகளில் மூழ்கி இருந்த நான் சுயநினைவிற்கு வருகிறேன். இதோ காந்தி நகர்.

    

காந்தி நகர், முதல் தெருவில், 4ஆம் எண் இல்லம். மிகச் சிறிய வீடு. அழைப்பு மணியினை அழுத்தினோம். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

     கதவைத் திறந்து கொண்டு பாரதிதாசன் வெளியே வந்தார். நாங்கள் காண்பது கனவா அல்லது நினைவா என்பது புரியவில்லை. திகைத்துப் போய் நிற்கிறோம். அதே முகம், அதே மீசை, அதே கண்ணாடி. அதே போன்ற தலைசீவல்.

     வாருங்கள், வாருங்கள் என மலர்ந்த முகத்துடன், முகத்தில் சிரிப்புடன் எங்களை வரவேற்றார். நாங்கள் சுயநினைவிற்கு வந்தோம். இவர் பாரதிதாசன் அல்ல. புரட்சிக் கவிதான் நம்மை விட்டு, 1964 ஆம் ஆண்டிலேயே இயற்கையுடன் இரண்டறக் கலந்து விட்டாரே. இவர், இவர்தான் பாவேந்தரின் அருமைப் புதல்வர் மன்னர் மன்னன். வயது  எழுபது இருக்கும்.

     அனைவரையும் அமரச் சொல்லி, எங்களுடன் தானும் அமர்ந்து கொண்டார். தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்து வருகிறோம், நாங்களெல்லாம் ஆசிரியர்கள் என்று அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

   


தஞ்சை என்ற பெயரினையும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரினையும் கேட்டவுடன், அவரின் முகம் மேலும் மலர்ந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பலமுறை என் தந்தையுடன் வந்திருக்கிறேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில், பேராசிரியராகப் பணியாற்றிய, பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள், எனது தந்தையின் மிக நெருங்கிய நண்பர்.

     என்று கூறி, இராமநாதனின் நினைவலைகளில் மூழ்கிப் போனார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன்
(முதல் வரிசையில் வலது ஓரத்தில் அமர்ந்திருப்பர் பேரா இராமநாதன்)
எனது தந்தையின் மறைவிற்குப் பிறகு, என்னை எனது தந்தையின் அடிச்சுவட்டில் பயணிக்கத் தயார் படுத்திய, நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர் பேராசிரியர் இராமநாதன் அவர்கள்தான்

     1964 ஆம் ஆண்டு எனது தந்தையார் உடல் நலம் குன்றிய போது, இல்லத்தில் இருந்து, தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தவர் பேராசிரியர் இராமநாதன். எந்தையார் இறுதியாய் சந்தித்த தமிழறிஞரும் இராமநாதன்தான்.

     எந்தையாரின் மறைவிற்குப் பின், என்னைத் தஞ்சைக்கு அழைத்து, ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து பாவேந்தர் பற்றிப் பேசச் சொன்னார். நான் வானொலி நிலையத்தில் பணியாற்றியவன். மேடைகளில் பேசிப் பழக்கமில்லையே என்று கூறித் தயங்கினேன்.

     ஆனால் பேராசிரியர் இராமநாதனோ, பாவேந்தர் பற்றி நீங்கள்தான் பேச வேண்டும். அவரை அருகில் இருந்து தந்தையாய், மகாகவியாய் முழுமையாய் அறிந்தவர் நீங்கள்தான். உங்களால்தான், செய்திகளை உள்ளது உள்ள படியே உரைக்க முடியும். உண்மைச் செய்திகளை ஊரறிய முழுங்க முடியும் முழங்குங்கள் என்றார்.

     தஞ்சையில்தான் முதன் முதலில் பேசினேன். பிறகு பாவேந்தரைப் பற்றிய செய்திகளை அறிய பலரும் என்னை நாடி வந்தனர். அதில் பலர் ஆய்வு மாணவர்கள். என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன் என்றார்.

வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுவரன் புகழேஎன் நினைவில் வரும்
                                    வான விரிவைக் காணும்.....
ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன், ஆன்ற அறிவினோன்
                                    வான விரிவைக் காணும்....
பெற்ற அன்னையை அன்னாய் என்று வாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை,
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒரு நாள், ஒரு நொடி இருந்ததே இல்லை,
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண் டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்
                                  வான விரிவைக் காணும்....

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களைப் பற்றிப் பாவேந்தர் இயற்றிய பாடல் இது.

     இப்பாடல் வரிகளைக் குறிப்பிட்டவுடன், ஆம் ஆம் எனக்கு நினைவிருக்கிறது. உமாமகேசுவரனாரிடம் மிகுந்த நட்பு பாராட்டியவர் எந்தையார். தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களைப் பற்றிப் பாவேந்தர் எழுதிய அனைத்துப் பாடல்களும் தொகுக்கப் பட்டு, தேனருவி என்னும் பெயரில் ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது என்றார்.

     நண்பர் துரைபிள்ளை நடராசன் அவர்கள், மன்னர் மன்னன் அவர்களைப் பார்த்து, தாங்கள் வசதியுடன் இருக்கிறீர்களா? நமது அரசுகள் ஏதாவது உதவிகள் செய்திருக்கின்றனவா என்று கேட்டார்.

     நாங்கள் நலமுடன் உள்ளோம். வளத்தைப் பற்றிய கவலை எமக்கில்லை. உங்களை வீட்டிற்குள் அழைக்காமல், வெளியிலேயே அமரவைத்துப் பேசிக் கொண்டிருக்கிறேனல்லவா? இதிலிருந்தே எனது வளமையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உங்கள் அறுவரையும் அமரச் செய்ய, என் வீட்டில் இடம் இல்லை. கொடுத்துத்தான் எங்களுக்குப் பழக்கமே தவிர, யாரிடத்தும், எதையும் இதுவரை யாசித்துப் பழக்கம் இல்லை என்று கூறிச் சிரித்தார்.

     எந்தையார் மறைந்த பிறகு, அவர் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த இல்லத்தை புதுவை அரசிற்கு அன்பளிப்பாய் வழங்கி விட்டேன். எந்தையார் பயன் படுத்திய பொருட்கள், அணிந்திருந்த உடைகள், கண்ணாடி, எழுதிய கடிதங்கள் என அனைத்தையும் வழங்கிவிட்டேன்.

     எந்தையாரின் எழுத்துக்கள், உலகமெல்லாம் வசிக்கும் தமிழர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில், எந்தையாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி, தமிழுக்கேத் தந்துவிட்டேன். ஆண்டுதோறும் பாவேந்தரின் நூல்கள் ஐம்பது இலட்சத்திற்கும் மேல் விற்பனையாகி வருகின்றன. அதன் மூலம் எங்களுக்கு ஒரு பைசா கூட வருமானமில்லை. மக்களைச் சென்றடைகிறதே அதுவே எங்களுக்குப் போதும்.

புகழைக் கொள்ளுக
பொருளைத் தள்ளுக
என்பதுதான் எந்தையார் பாவேந்தர் எனக்கு வழங்கிச் சென்ற அறவுரை, அறிவுரை.

     பாவேந்தர் காட்டிய வழியில் என் பயணம் தொடரும். பாவேந்தரின் இல்லத்தினையும், எழுத்துக்களையும், மக்களுக்கே கொடுத்துவிட்டு, மீதமிருந்த இச்சிறிய வீட்டில், என் வாழ்க்கைத் தொடர்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

     எங்கள் அனைவரின் உள்ளமும் பெருமிதத்தால் விம்மியது. கண்கள் கலங்கின. இதுவல்லவா தமிழுள்ளம், தாயுள்ளம். தமிழ் மொழியானது இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணம் புரிந்தது. கைமாறு கருதாமல், தமிழுக்காகவே வாழும் உள்ளங்கள் இருக்கும் வரை, தமிழும் இருக்கும், தழைக்கும், வளரும் என்பது விளங்கியது.

    தங்களின் குடும்பத்தினைப் பற்றிக் கூறுங்களேன் என்றோம். எனக்கு மூன்று மகன்கள் என்று கூறி, மூன்றாவது மகனை எங்களுக்கு அறிமுகப் படுத்தினார்.

    
காலைமாமணி பாரதி அவர்களுடன்
1964 ஆம் ஆண்டு மூன்றாவது மகன் பிறந்த பொழுது, நானும் எனது மனைவியும், எனது தந்தையின் பெயரையே, எங்களது மகனுக்கு சூட்ட விரும்பினோம். ஒரு நாள் மெதுவாக, எந்தையிடம் கூறினேன். அவரோ பாரதி என்று வை என்றார். அன்று முதல் எங்களின் இளைய மகன் பாரதி ஆனார்.

     பாரதி என்று பெயர் உள்ளவர், தமிழை அறியாமல் இருக்கலாமா? அது பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் மட்டுமல்ல, தமிழுக்கே பெரும் இழுக்கல்லவா? எனவே எனது மகன் பாரதியை, தமிழ் மாணவனாகவே வளர்த்தேன்.

      நண்பர்களே, பாரதி அவர்களை, சிறந்த கவிஞர், எழுத்தாளர், குயில் வெளியீட்டின் உரிமையாளர், பாரதிதாசன் அறக் கட்டளையின் நிறுவுநர், வானொலி நிகழ்ச்சி அமைப்பாளர், குறும்பட ஆவணப்பட அமைப்பாளர், இதழாளர், பேச்சளார் என கூறிக் கொண்டே போகலாம். கலை மாமணி விருது பெற்றவர். இளவயதுதான் என்றாலும் பாரதிதாசனின் பெயரனல்லவா? இதுவரை 20 நூல்களை எழுதியுள்ளார், ஏழு நூல்களைப் பதிப்பித்துள்ளார். நாளிதழ்கள், வார இதழ்கள் என அனைத்திலும் எழுதி வருகிறார்.

     வண்மைச் சுடர் என்னும் நூலொன்றே இவரின் தமிழுள்ளத்தைப் பறைசாற்றும்.

    

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1935 ஆம் ஆண்டில், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் என்னும் பெயரில் இதழ் ஒன்றினைத் தொடங்கினார். முழுக்க முழுக்க கவிதைகளால் மட்டுமே நிரம்பி வழிந்த இதழ் இது. செய்திகள், விடுகதைகள், விகடத் துணுக்குகள், ஏன் விளம்பரங்கள் கூட, கவிதை வடிவிலேயே, இவ்விதழில்  வெளியிடப் பட்டன. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் கவிதை இதழ் என்னும் பெருமை  இவ்விதழுக்கு உண்டு.

    

தமிழின் சாபக்கேடு, இவ்விதழ், ஆறு இதழ்களோடு நின்று போய்விட்டது. இதழ்கள் ஆறுதான், எனினும் நூறு இதழ்களுக்கான செய்திகள் அவற்றில் இருந்தன.

      ஆறு இதழ்களிலும் மொத்தம் 234 பாடல்கள். பாவேந்தர் இயற்றியவை 112. மற்றவர்கள் யாத்தவை 122.

      பாவேந்தரின் பெயரன் பாரதி அவர்கள், 234 பாடல்களையும் திரட்டி, தொகுத்து, வகைப்படுத்தி, வரிசைப் படுத்தி, காணக் கிடைக்காதப் புகைப் படங்களையும், அரிதின் முயன்று வண்மைச் சுடர் என்னும், இந்நூலில் சேர்த்துள்ளார். தமிழர்களின் காலப் பெட்டகம் இந்நூல்.

     கவிஞர் பாரதியுடன் சில நிமிடங்கள் பேசி மகிழ்ந்தோம். நீண்ட நேரம் கடந்து விட்டது. விடைபெற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

     பாவேந்தர் பாரதிதாசனின் திருமகனார் மன்னர் மன்னனிடம் கேட்டோம். ஐயா, தங்களின் எதிர்கால இலட்சியம், ஆசை என்ன என்பதை அறிந்து கொள்ளலாமா?

     பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்கள் இன்று, இவ்வுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. பல மாணவர்கள் பாரதிதாசனின் பாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு மாணவர்களுக்கும், பாவேந்தரை அறியத் துடிக்கும் இளைஞர்களுக்கும், அவர்களுக்குத் தேவைப்படும், தகவல்களைத் தருவதற்கு, ஒரு மையம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

     2015 ஆம் ஆண்டானது, பாரதிதாசன் பிறந்த 125 ஆவது ஆண்டாகும். சென்னையில் பாரதிதாசனின் திருஉருவச்சிலை மட்டுமே உள்ளது.

     எனவே, சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனுக்கு ஒரு மணி மண்டபம் கட்டப் பெற வேண்டும். அம்மணிமண்டபத்தில், பாவேந்தரின் எழுத்துக்கள், வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், என அனைத்தும் இடம் பெறும் வகையில், ஒரு ஆய்வு மையமும் ஏற்படுத்தப்பெற வேண்டும் என்பதே எனது ஆசையும், விருப்பமும் ஆகும் என்றார்.

     பாரதிதாசனின் அருந்தவப் புதல்வர், அரசிடமிருந்து தனக்காக, தனது மக்களுக்காக எதையும் எதிர்பார்க்கவில்லை. தமிழ் மக்களுக்காகக் கேட்கிறார். உலகெங்கும் வாழ்கின்ற, கோடிக் கணக்கான தமிழ் உள்ளங்களில், வாழ்ந்து கொண்டிருக்கின்ற, ஒரு மாமனிதருக்கு, பாவேந்தருக்கு, சில இலட்சங்கள் மட்டுமே செலவு செய்து, ஒரு மணி மண்டபம் எழுப்பப்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அம் மணிமண்டபம், பாவேந்தரின் 125 வது பிறந்த நாளின்போது, தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பரே, இவரது ஆசை, எதிர்பார்ப்பு.

     மன்னர் மன்னன் அவர்களின் ஆசை சிறியது. அதன் பலனோ பெரியது. மன்னர் மன்னனின் எண்ணம் ஈடேறுமானால், வருங்காலத்தின் பல தலைமுறையினருக்கும், பாவேந்தரின் எழுத்துக்களை, எண்ணங்களை, சிந்தனைகள், அள்ள அள்ள குறையாமல், வாரி வழங்கும் அட்சய பாத்திரமாக, இம் மணிமண்டபம் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

     நண்பர்களே, நாம் செய்ய வேண்டிய செயல், ஒன்றுள்ளது. நாம் சார்ந்துள்ள இலக்கிய அமைப்புகளின் மூலம் தீர்மானம் நிறைவேற்றியும், இலக்கிய இதழ்களில், மணிமண்டபம் மற்றும் ஆய்வு மையத்தின் அவசியம், தேவை குறித்துக் கட்டுரைகள் எழுதுவதன் மூலமும், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுதான் அது.

பாவேந்தரின் மணிமண்டபம்
தமிழ்த்தாயின் கருவூலம்


           இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
               எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
           தலைமுறைகள் பலகழித்தோம், குறைகறைந்தோ மில்லை
               தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்
-                                    பாவேந்தர் பாரதிதாசன்