30 ஜனவரி 2014

இளமை எழுதும் கவிதை நீ


    

நண்பர்களே, நாம் தினமும், நமது வாழ்க்கையில், பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துதான் வருகிறோம். நாம் வசிக்கும் தெருவில், பேரூந்தில், உணவகங்களில், தேநீர் கடைகளில், திரையரங்குகளில் என தினமும் புத்தம் புது முகங்களைப் பார்த்து வருகிறோம்.

     சிலரைப் பார்த்தவுடன், நாமே வலிய சென்று பேசி, நட்பை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் சிலரைப் பார்த்தவுடன், காரணமின்றி விலகிச் செல்வோம். பேசுவதற்கு மனம் இடம் தராது.


     இதில் முதலாம் பிரிவைச் சார்ந்தவர்தான் இவர். தான் பிறந்த மண்ணை மறக்காதவர். தனது பெயருக்கு முன்னால், குடந்தையையும் இணைத்துக் கொண்டவர்.

     இவர் இணையத்தில் விரித்து வைத்திருக்கும் வலைக்குள் சென்றோமானால், இவரது முகம் மட்டுமல்ல, இவரது மனமும் தெரியும்.
வாழும் மட்டும், நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்

     ஆம் நண்பர்களே, நீங்கள் நினைப்பது சரிதான். குடந்தை ஆர்.வி.சரவணன் அவர்களைப் பற்றித்தான் சொல்லுகின்றேன்.


திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கு வந்தார். சந்தித்தோம். நண்பர்களானோம்.

     கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவரது பொழுது போக்கு இரண்டே இரண்டுதான். ஒன்று புத்தகம். இரண்டாவது சினிமா.

     நாம் சினிமா பார்ப்பதற்கும், இவர் சினிமா பார்ப்பதற்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. நாம் நடிகர், நடிகைகளை ரசிப்போம். நடிப்பை ரசிப்போம். இவரோ சினிமாவையே ரசிப்பவர். இவருக்கு கட்டுக்கு அடங்காத ஆசை ஒன்று, கல்லூரி காலத்தில் இருந்தே, இவரது மனதை கொள்ளை கொண்டு வருகிறது. திரைப்படம் இயக்க வேண்டும் என்ற தணியாத ஆசை.

     நண்பர்களே, இவர் கல்லூரிக் காலத்தில் எந்தப் பெண்ணையும் காதலித்ததாகத் தெரியவில்லை. ஆனால் காதலித்தால் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும், என்பதை  திரைப்படம் போலவே, மனதிற்குள்ளாகவே ஓட்டிப் பார்த்தே, பல வருடங்களைச் செலவிட்டிருக்கிறார். மெல்ல, மெல்ல காதலுக்கு உரு கொடுத்து, அதில் லயித்து, கண்மூடி, காதல் காட்சிகளை மனதிற்குள்ளாகவே இயக்கியும் பார்த்திருக்கிறார்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, பதினைந்து ஆண்டுகளாய், உள்ளுக்குள் சேமித்து வைத்திருந்த, காதல் கதையை, ஒரு நாள், தொடர் கதையாக, தனது குடந்தையூர்  தளத்தில், மெல்ல, மெல்ல, ஒவ்வொரு அத்தியாயமாக, பூப் போல் இறக்கி வைத்தார்.

     வலையுலக உறவுகள் தந்த உற்சாகத்தால், ஊக்கத்தால், இணையத்தில் இருந்த எழுத்துக்களை, இடம் மாற்றி, அழகியதொரு நூலாய் உருவாக்கியிருக்கிறார்.

இளமை எழுதும் கவிதை நீ...

     நூலைப் படிக்கப் படிக்க, புத்தகத்தைப் படிக்கின்றோம் என்ற நினைப்பே வரவில்லை. திரையரங்கிற்குள் நுழைந்த உணர்வே மேலோங்கி நின்றது.



    

திரைப்படம் என்றால் பாடல் காட்சி வேண்டுமல்லவா? ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும், அருமையாய் கவிதையாய், சில வரிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

பார்க்கும் வரை ....
பொழுதே போகவில்லை.
பார்த்த பின்
பொழுதே போதவில்லை.
    ---

தென்றலாய்தான்
கடந்து சென்றாய்
இருந்தும்
புயல் கடந்த
பூமியாகிறேன்.

   ---

நீ பேசாத
பொழுதுகளில்
உன் கொலுசுடன்
உரையாடிக்
கொண்டிருக்கிறேன்

   இந்த இயக்குநருக்குள், ஒரு கவிஞனும் ஒளிந்து இருக்கிறார்.

     நண்பர்களே, நான் எனது கல்லூரிக் காலங்களில், ஒரு புறம் சுஜாதாவையும், மறுபுறம் பட்டுக்கோட்டை பிரபாகரையும் தேடி அலைந்திருக்கிறேன். ஒரு முறை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை, பட்டுக்கோட்டையில், ஒரு மருந்து கடையில் சந்தித்தது, இன்றும் பசுமையாய் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

     குடந்தை சரவணன் அவர்களின் நூலைப் பற்றி, நான் சொல்வதைவிட, பட்டுக்கோட்டை பிரபாகர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்போமா?

     என்னால் இந்தக் கதையை முழுமையாகப் படிக்க முடிந்தது என்பதையே முதல் பாராட்டாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     ஒரு சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ ... முதலில் வாசகரைப் படிக்க வைக்க வேண்டும். அந்தத் தன்மைக்கு ரீடபிளிட்டி என்று பெயர். அது உங்கள் எழுத்தில் இருக்கிறது.

     அடுத்து ...... ஒரு படைப்பு ஒரு எளிமையான வாசகனுக்கும் புரிய வேண்டும்.

     உங்கள் படைப்பில் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. ஒன்று ... உங்கள் படைப்பை வாசித்து முடிக்கலாம். இரண்டு .... உங்கள் படைப்பு புரிகிறது. பாராட்டுக்கள்.

    என்ன நண்பர்களே, புரிகிறதா? பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்களே, படித்துப் பாராட்டி விட்டார்.

நாமும் படிப்போமா,

நாமும் பாராட்டுவோமா.