05 பிப்ரவரி 2014

பூப்பதெல்லாம் ...


மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்து வருந்து தருதல் வேண்டும்
                                  பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, புதுமைப் பித்தன் அவர்களை வாசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. வழிவழியான நமது நம்பிக்கைகளை, கற்பனைகளை, கனவுகளை, பொய்மைகளை நம் கண் முன்னே போட்டு உடைத்தவர்தான் புதுமைப் பித்தன்.

     உன் சித்தாந்த புனைவுகளுக்குள், புராதண மதிப்பீடுகளுக்குள் இருப்பதல்ல வாழ்க்கை. இதோ என் கதைகளுக்குள் இருப்பதுதான் பச்சையான வாழ்க்கை. இதுதான் உன் யதார்த்தம் என்று நம் முகத்தில் அறைந்தாற்போல், யதார்த்தத்தைப் புனைவதில் புதுமைப் பித்தன், புதுமைப் பித்தன்தான்.

     முடிவில் தர்மத்திற்கு வெற்றி கொடுக்க வேண்டியது கலைத் தொழிலில் ஈடுபடுகிறவனுடைய கடமை என்பதைப் புதுமைப் பித்தன் ஒத்துக் கொண்டவரல்ல. வாழ்வை பலவித கோணங்களில் இருந்து புரிந்து கொள்வதற்கான சாதனமே இலக்கியம் என்பதை உணர்த்தியவர் புதுமைப் பித்தன்.


    நண்பர்களே, உங்களின் எண்ண ஓட்டம் புரிகிறது. என்ன இவன் திடீரென்று புதுமைப் பித்தனைப் பற்றிப் பேசுகிறானே என்று நீங்கள் எண்ணுவதை என்னால் உணர முடிகிறது.

     பூப்பதெல்லாம்... என்னும் ஓர் சிறுகதைத் தொகுப்பினைப் படிக்கப் படிக்க, புதுமைப் பித்தனின் புது நூல் ஒன்றினைக் கண்டெடுத்த மகிழ்ச்சி மனமெங்கும் பரவுகிறது.

     விருது நகரில் ஓர் புதுமைப் பித்தன். கதை மாந்தர்களை நம் கண்முன் விளையாட விடுகிற சாமர்த்தியம் இவருக்கு இருக்கிறது. கதை என்றாலே, ஒரு தொடக்கம், ஒரு பிரச்சனை, ஒரு தீர்வு என்ற பழைய வரையறைகளைத் தகர்த்தெறிந்த சிறு கதைகள் இவருடையது. இவரது எழுத்தில், சொற் கோர்வையில், நடையில் புதுமைப் பித்தனைக் கண்டேன்.

     ஒரு நிகழ்வினை அதன் இயல்பான போக்கில், யதார்த்த நடையில் கூறி, நம்மை நினைவுகளின் பிடியில் சிக்க வைத்துவிட்டு, சாமர்த்தியமாய் அடுத்த கதைக்குச் சென்று விடுகிறார்.

     இவற்றை கதைகள் என்று கூறுவது கூட தவறுதான். தான் வாழ்வில் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, எழுத்தாக்கி, நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் விளையாட விடுகிறார்.

     நண்பர்களே, யாரைச் சொல்கிறேன் என்பது புரிகிறதா? நமது விமலன் அவர்களைத்தான் குறிப்பிடுகிறேன்.


சிட்டுக் குருவி
http://vimalann.blogspot.com/

     விமலனின் இயற்பெயர் எஸ்.கே.வி.மூர்த்தி. பிறகு எப்படி இவர் விமலன் ஆனார் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இவரது மனைவியின் பெயர் விமலா. எனவே இவர் விமலன் ஆனார்.

     வேற்று ஜாதிக்குள்ளும் உறவு வைத்து அழைத்துக் கொள்ளும் பழக்கத்தை, இன்றுவரை பாதுகாக்கும் பாசமிகு கிராமத்தில் பிறந்தவர், தவழ்ந்தவர், வளர்ந்தவர்.

     இதனால்தான், மத்தியான வெயிலில் ஓடை ஓரமாக, வன்னி வேலா மரத்தின் நிழலில் அரைவட்டமாக அமர்ந்து, பசி போக்க, கைக் கஞ்சி வாங்கிக் குடித்த நாட்களின், நினைவும், அன்று குடித்த கம்பங் கஞ்சியின் வாசமும், இன்றும் காயாமலும், மாறாமலும் இவரது எழுத்துக்களில் வெளிப்படுகிறது.

     நிப்புக் கம்பெனித் தொழிலாளர்கள், பட்டையன் செட்டித் தெரு சந்து, தனலட்சுமி ஹோட்டல், சங்கர பாண்டியபுரம் மண், அறிவொளி இயக்கம், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், பிற இயக்கங்கள் என எல்லாவற்றையும், பிசைந்து உருவம் உண்டாக்கி, உயிர் கொடுக்கின்றன இவரது எழுத்துக்கள்.

     காக்காச் சோறு, தட்டாமாலை, வேர்களற்று என்பன இவரின் எழுத்துக்கள் வலம் வரும் சிறுகதைத் தொகுப்புக்களாகும்.




இவற்றுள்,
காக்காச் சோறு
சிவகாசி காந்தகப் பூக்கள் அமைப்பின்
சிறப்பு விருதையும்,

தட்டாமாலை
சேலம் தாரைப் புள்ளிக்கார அறக்கட்டளை
எழுத்துக் களம் இலக்கிய அமைப்பின்
இலக்கிய விருதையும்
பெற்றுள்ளது.


பூப்பதெல்லாம் ...
விமலனின் நான்காவது நூல்.

     நூலின் முகப்பு அட்டையே பூப்போலத்தான் இருக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுத்த உணர்வே வரவில்லை. பூ ஒன்றினை அலுங்காமல், குலுங்காமல், அழுத்தாமல் எடுப்போமல்லவா? அதைப் போலத்தான், இந்நூலும். பக்கங்களை மென்மையாய், மெதுவாய், இதமாய் புரட்டத்தான் தூண்டுகிறது.

     பக்கத்துக்குப் பக்கம் மண் வாசனை. கிராமத்துத் தெருக்களில், மண் தரையில், லேசான தூறல் விழும் பொழுது, மழைத்துளி விழும் வேகம் தாங்காமல், மணல் துகள்கள், எம்பி விழுந்து, ஒருவித மண் வாசனையினை, நம் நாசிக்குள் அனுப்புமல்லவா, அதைப் போன்ற, மண் வாசனையினை, பக்கத்துக்குப் பக்கம், நீங்கள் உச்சி முகந்து அனுபவிக்கலாம்.

     விமலன் நமக்கு அருகில் அமர்ந்தவாறு, கதைச் சொல்லிச் செல்கிறார். நமது கை பிடித்து, தோள் தடவி, ஈரம் படிந்த கண்களைத் துடைத்து, வலி போக்கி, கவலை உண்டாக்கி என வேறு வேறு உணர்ச்சிகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறார்.

     ஒரு காலத்துல காடு, கரைன்று வௌஞ்சு கெடந்தப்ப, பக்கத்து மனுஷன் ஒறவு வேணும்ன்னு நினைச்சோம். பெத்தவுங்க, பெறந்தவுங்க, அண்ணன், தம்பி, ஜாதி, சனம் எல்லாம் தேவையில்லைன்னு இப்ப ஆகிப் போச்சு. அனுசரிச்சு மொகம் பார்த்து பேசுனது, பழகுனது எல்லாம் மாறிப் போச்சு தம்பி.

     நாணல் புல்... என்னும் முதல் கதையே நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிறது.

     போகிற போக்கில் கண்ணில் தட்டுப் படுகிறவைகளைக் கூட, கண்டு கொள்ளாமல் போகிற காலமிது. வேகமும், பெரும் சோகமுமாய் நடமாடிக் கொண்டிருக்கிற சாமானிய மனிதர்களின் கூட்டம் மிகுந்த காலமிது.

     விலாசம் நிரந்தரமற்றது என்பதை கனக்கிற மனதோடு பதிவு செய்கிறார்.

     பையனுக்குப் படிப்பு வரல சார். அங்கிட்டு இங்கிட்டுன்னு, ஆடி ஓய்ஞ்சு போயி, இப்பத்தான் நெலைக்கு வந்துருக்கான். ஒரு வருசமா, குடி கூத்துன்னு ரொம்ப கெட்டு தூந்து போனான் சார். இப்பத்தான் கையக்கால புடிச்சி, ஒங்கள மாதிரி ரெண்டு பேர விட்டு பேசவுட்டு சம்மதிக்க வச்சிருக்கு சார்.  கேரளாவுக்கு வேலைக்கு போறேன்று ஒத்துக்கிட்டான். சாப்பாடு, தங்குறயெடமெல்லாம் அவுங்களே குடுத்துறம்ன்றாங்க. சரின்னு அனுப்பி வச்சிருக்கு. பார்ப்போம், அவன் மூலமாவது குடும்பத்துக்கு ஒரு விடிவு வருமான்னு.

     ஒரு தந்தையின் தவிப்பை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை கத்தரிப்பான்... என்னும் கதையில் உணர்வு பொங்கச் சொல்லுகிறார்.

     இப்ப வந்து போனான் பாருங்க. காலேஜில படிக்கிறான். தலைக்கு எண்ணெய் வைக்காம, தலை சீவாம, சமயத்துல குளிக்காம கூட காலேஜ் போயிருவான். இன்னும் நாலு பேரு கூட பேசத் தெரியல, பழகத் தெரியல. இங்கேயிருந்து சைக்கிள எடுத்துட்டு ஓடுறான் சார், ரெண்டு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற ப்ரெண்டு வீட்டுக்கு. ஆனா பக்கத்து வீட்டுப் பையன்கூட ஒரு வார்த்தைப் பேசிப் பழக மாட்டேங்குறான்.

     வேறொரு தந்தையின் கவலையை, இன்னும் இன்னுமாய் எதை இழந்து கொண்டிருக்கிறோம், எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியாமலேயே ஒரு சமூகம் இருந்து கொண்டிருக்கிறது என்பதை, கிளியாஞ்சட்டி...யில் வேதனையுடன் பதிவு செய்கிறார்.

     இவரது கதை நெடுகிலும், ஊதா கலர் வந்து ஊஞ்சலாடுகிறது.

     நண்பர்களே, இவரது எழுத்துக்களை வாசிக்க, வாசிக்க, ஓர் எண்ணம், நம் மனதில் ஆணி அடித்தாற்போல அமர்ந்து விடுகிறது. பாசமும், நேசமும் வழிந்தோடும் நல் மனதுக்குச் சொந்தக்காரர் விமலன் என்பது புரிகிறது. இருப்பினும் ஒரு சந்தேகம், இவர் உடலில் ஓடுவது உதிரமா அல்லது மாதவன் டீ கடையின் தேநீரா, என்னும் சந்தேகம் வருகிறது.

       சற்றேறக்குறைய அனைத்து சிறு கதைகளிலுமே டீக் கடை வருகிறது. டீகடையினை இவர், விவரிக்கும் விதமே அலாதியானது.

     கலங்கலான ஒரு டீ. ஒரு மாதிரி திவ்யமாய் குடிக்க கிக்காய் இருந்ததாய் ஞாபகம். டீயை வலது கையில் வாங்கியவாரே, தட்டில் மிதந்த வடைகளையும், பஜ்ஜிகளையும், இனிப்பு உருண்டைகளையும் பார்த்தவாறே எச்சில் முழுங்கிவிட்டுக் குடிக்கிறேன் என்கிறார் ஒரு கதையில்.

     எத்தனைபேர் கடைக்கு டீக் குடிக்க வந்த போதிலும், ஒவ்வொரு டீயாக ஆற்றிக் கொடுப்பார் சார்லஸ் விக்டர். அவரது நிதானம் அவருக்கே இருக்கட்டும். கூட்டம் வரும்போதாவது, சற்று மொத்தமாக டீப் போட்டுக் கொடுக்கக் கூடாதா என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிற தருணங்களில், கடகடவென சிரித்து வைப்பார். மொத்தமாக டீப் போட்டு, இதுநாள் வரை எனக்குப் பழக்கமில்லை. தவிர ஒவ்வொரு க்ளாஸாக டிப் போட்டால்தான் எனக்கும் திருப்தி. ருசியும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை என்பார் என வேறொரு கதையில் டீக்கடையினை விவரிக்கிறார்.

     இப்படி டீக்கடையினைக் கூட அங்குலம், அங்குலமாக ரசித்து எழுத விமலனால் மட்டுமே முடியும்.

     இத்துப்போன மனுசங்க. இத்துப்போன பொழப்பு அவுங்களது. அவுங்கள என்ன செஞ்சாலும் கேக்க ஆளு கெடையாதுன்னு, நாங்க இங்க பொழப்பு தேடி வந்த புதுசுல, ஒரு சளதாரி நாயி, ஏங் மச்சான் வீட்டுக்குள்ள புகுந்துட்டான். அன்னைக்கு அரிவாள் தூக்கிட்டு, நாந்தான் அவன வெரட்டுனேன். மறு நா விடிஞ்சி, எந்திரிச்சு, வீட்டைவிட்டு வெளியே வரயில, ஏங் மச்சான் வீட்டு வாசல்ல, நாலு பேரோட நிக்கிறாரு. என்னான்னு கேட்டதுதான் தாமதம். படக்குன்னு கண்ணுல தண்ணி வடிச்சிட்டு, ஏங் கைய புடிச்சிக்கிட்டாரு. அப்புறம் பெரியாள்க பேசி முடிச்சாங்க. ஏந் தங்கச்சிய அவரும், அவரு தங்கச்சிய நானுமா கட்டிக்கிட்டோம். குண்டாம்மாத்து சம்பந்தம். நல்லாத்தான் இருக்கோம் ரெண்டு குடும்பமும்.

     பூப்பதெல்லாம் கதையில் நம்மையும் நெகிழ வைக்கிறார்.

     சரி அப்ப கிளம்புறேன் என்ற ஒற்றை பேச்சிற்கும், சொல்லிற்கும், சரி என்ற புன்னகைக் கீற்றை உதிர்த்த மனைவிக்கு, இன்றுதான் பதினெட்டு பிறக்கிறதா? அப்படித்தான் இருக்கிறாள், பார்த்தால் இந்த 42 வயதிலுமாய்.

     சுழியிடம் என்னும் கதையில் இப்படித்தான் எழுதுகிறார். விமலன் என்ற புனைப் பெயரின் ரகசியம் புரிகிறதா நண்பர்களே.

     விமலன் நல்ல சிறுகதையாளர் மட்டுமல்ல. கதை சொல்லியும் கூட. நாம் அன்றாடம் பார்க்கின்ற, சந்திக்கின்ற மனிதர்களைச் சொல்லியுள்ளார்.

     பூப்பதெல்லாம் .....
     நூல் முழுக்க பூக்கள் விரவிக் கிடக்கின்றன. மலர்ந்த பூக்கள், காய்ப்புக்காகக் காத்திருப்பதைப் போல், சில பூக்கள் உதிர்ந்தும், சில பூக்கள் காய்த்தும் என்றில்லாமல், பெரும் தோப்பாய்.

     பூப்பதெல்லாம் ...
     நறுமனம் வீசும் நந்தவனம்.
     வாருங்கள் நண்பர்களே,
     இந்த நந்தவனத்தில்
     காலார நடந்து பாருங்கள்
     பூக்களின் வாசத்தை
     மனமார முகர்ந்து மகிழுங்கள்.