22 பிப்ரவரி 2014

மொழியும் வாழ்வும்

பெரியார் வீட்டில் பிறக்காத பிள்ளை
அம்பேத்கார் பள்ளியில் படிக்காத பிள்ளை

     நண்பர்களே, யாரைப் பற்றிக் கூறுகிறேன் என்பது புரிகிறதா? நாம் சுபவீ என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களைத்தான் கூறுகிறேன்.
    

நம் வீட்டின் வரவேற்பறைக்கே வந்து, ஒன்றே சொல் நன்றே சொல் என நாள்தோறும் இனிய செய்திகளை, நட்பு கொஞ்சும் குரலில், இனிக்க இனிக்க பேசி வரும் பேராசிரியர் சுபவீ அவர்களின், நட்பினை அன்பினைப் பெற்றவன் என்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


     நண்பர்களே, வலைப் பூவின் வழி உறவு பாராட்டி, நட்புடன் பழகும் நாம், வேறு வேறு கொள்கைகளை, கோட்பாடுகளை உடையவர்களாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாக, பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாக, அனுதாபிகளாக இருப்போம்.

     முதலிலேயே ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நான் எந்தவொரு அரசியல் கட்சியினையும் சார்ந்தவனல்ல.

     சுபவீ என்ற தமிழறிஞரைப் பற்றி, நட்பைப் பெரிதும் நேசிக்கும், நல் உள்ளத்திற்குச் சொந்தக்காரரைப் பற்றி, உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகின்றேன்.

     நண்பர்களே, சுபவீ அவர்களைப் பற்றிய ஒரு செய்தியினைக் கூறப்போகிறேன். நீங்கள் நம்புவீர்களா எனத் தெரியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். உண்மை.

     1967 ஆம் ஆண்டு முதல் 1971 வரை நான்கு ஆண்டுகள், அழகப்பா கல்லூரியில், புதுமுக வகுப்பும், இளம் அறிவியல் பட்ட வகுப்பும் படித்தவர் இவர். ஆம் நண்பர்களே, இவர், இளங்கலையில் இயற்பியல் ( B.Sc., Physics)   பயின்றவர்.

     பட்ட வகுப்பிலே தமிழ் படிக்கத்தான் இவருக்கு ஆசை. எனினும் தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று எல்லோரும் சொன்னதால், இயற்பியல் படித்தார். இயற்பியல் படித்தாலும் வேலை கிடைக்காது என்பதைப் பின்னர்தான் உணர்ந்தார்.

     ஆகையினால் தான் பெரிதும் விரும்பிய, தமிழைப் படிக்க, சென்னை, பச்சையப்பன் மாலை நேரக் கல்லூரியில், எம்.ஏ., தமிழுக்கு விண்ணப்பித்தார். இடம் கிடைத்தது. சேர்ந்தார். மாலையில் கல்லூரிப் படிப்பு, பகலில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தட்டச்சர் பணி. ஆம் நண்பர்களே, சில காலம் தட்டச்சராகப் பணியாற்றியவர்தான் இவர்.

     ஓரிரு மாதங்கள் வகுப்பிற்குச் சென்றார். ஒரு நாள் மாலை நேர வகுப்பின்போது, கல்லூரி முதல்வர் அழைப்பதாக செய்தி வந்தது.

     மாலை நேரக் கல்லூரியில், முதுகலையில் படிப்பதற்கு, 23 வயது நிறைந்திருக்க வேண்டும் என்று விதி சொல்கிறது. உனக்கோ, 21 வயதுதான் முடிந்திருக்கிறது. எனவே உனது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு விட்டது, இனி கல்லூரிக்கு வரவேண்டாம்.

       சுபவீ அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பச்சையப்பன் கல்லூரியின் படிக்கட்டுகளில் அமர்ந்து அழுதார். முடிவில் ஒரு உறுதியோடு எழுந்தார்.

     இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கல்லூரியில், அதே வகுப்பில் சேர்ந்தார். படித்தார் வென்றார். நமக்கு ஒரு தமிழறிஞர் கிடைத்தார்.

     நண்பர்களே, சுபவீ அவர்கள், தனக்குத் தமிழுணர்வு ஊட்டிய, தனது பள்ளி ஆசிரியரை இன்றும் மறந்தாரில்லை. சுபவீ அவர்கள் பத்தாம் வகுப்பு பயின்றபோது, இவருக்குத் தமிழாசிரியராக, மூத்த நண்பராக, வழி காட்டியாக, தத்துவ ஆசிரியராக இவருக்கு அமைந்தவர்தான் திரு நா.மு.நாகலிங்கம் அவர்கள்.

      மாலை பள்ளி விட்டதும், அவருடன் பேசிக்கொண்டே, மரஞ்செடி, கொடி நிறைந்த ஒரு பாதையில் மாணவர் கூட்டம் செல்லும். அதில் சுபவீயும் இருப்பார்.

     அந்த நீண்ட பயணம்தான், சுபவீ அவர்களுக்குப் பல புதிய செய்திகளையும், புதிய பார்வையினையும் கற்றுத் தந்தது.  கடவுள் மறுப்பில், சாதி மறுப்பில் இவரை மேலும், மேலும் ஆழப் படுத்தியது. பல புதிய நூல்களை, புதிய தலைவர்களை எல்லாம் ஆசிரியர் நாகலிங்கம் அவர்கள்தான் இவருக்கு அறிமுகப் படுத்தினார். சுபவீ அவர்களின் கண் திறந்த ஆசான் நாகலிங்கம் அவர்கள்தான்.

     சுபவீ அவர்களின் மூன்று பிள்ளைகளுமே, இவருக்கு நல்ல நண்பர்கள். பிள்ளைகளைப் பொறுத்தவரை, கவனிப்பதற்கும், கண்டிப்பதற்கும் அம்மா. கனிவு காட்டுவதற்கும், கலகலப்பு ஊட்டுவதற்கும் அப்பா. கொடுத்து வைத்த பிள்ளைகள்.

     பலமுறை சிறை சென்றவர்தான் சுபவீ. ஒரு முறை சிறையிலிருந்து, தனது மனைவிக்குக் கடிதம் எழுதினார். சிறை எனக்கு, தண்டனை உனக்கு.

     நண்பர்களே, சுபவீ அவர்களின் தந்தையார் திரு ராமசுப்பு அவர்களைப் பற்றி, கவியரசு கண்ணதாசன் அவர்கள், பாடல் ஒன்றினை இயற்றியுள்ளார்.

ஓரிடம் நில்லான், எந்த
     உணர்விலும் நல்லான், அன்பு
சேரிளம் சொல்லான், தீய
     சேர்க்கையிற் செல்லான், வீரப்
போரிடல் வல்லான், ராம
     சுப்பையன்.
இந்தப் பாடல் சுபவீ அவர்களின் தந்தைக்கு மட்டுமல்ல, சுபவீ அவர்களுக்கும் கச்சிதமாய்ப் பொருந்துவதைப் பாருங்கள்.

     நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு விழா, கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்புடன் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, நானும் நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும் மேற்கொண்டோம்.

      நூற்றாண்டு விழாவிற்காக பேராசிரியர் சுபவீ அவர்களைத் தொடர்பு கொண்டு அழைத்தோம். விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்தார். அன்று ஏற்பட்ட தொடர்பு. எங்களையும் நண்பர்களாய் ஏற்றுக் கொண்ட பாசமிகு மனிதர் அவர்.



நூற்றாண்டு விழா நிறைவு பெற்றபின், ஒரு நாள் நண்பர் சரவணன் அவர்கள், விழாவிற்கு வந்திருந்த சுபவீ அவர்களுக்கு, உங்களது கணித மேதை இராமானுஜன் நூலினைக் கொடுத்திருக்கலாம். விழா வேலையில் மறந்துவிட்டோமே என்றார்.

     அடுத்த நாளே, நூலினை அஞ்சலில் அனுப்பினேன். நான்கு நாட்கள் கடந்த நிலையில், அலைபேசி அழைத்தது. அலைபேசியைப் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, மறு முனைவில் சுபவீ.

     வணக்கம் ஐயா. ஜெயக்குமார் பேசுகிறேன் என்றேன்.

     கணிதமேதை இராமானுஜன் நூலினைப் படித்தேன். அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் ஒரு வாரத்தில், உங்கள் நூலினைப் பற்றி, கலைஞர் தொலைக் காட்சியில் பேசுகிறேன்.

     கண்களை மட்டுமல்ல, என்னால் காதுகளையும் நம்ப முடியவில்லை.

     சில நாட்கள் கடந்தன. 16.8.2011  காலை 8.50 மணி. தொலைக் காட்சியின் முன் அமர்ந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல எனது குடும்பம் முழுவதும். சுபவீ அவர்கள் பேசத் தொடங்குகிறார்.

     உலகமே புகழ்ந்த ஒரு மேதை, தன் தாய் நாடான இந்தியாவிற்கு திரும்பி வந்த பொழுது, இந்தியா அவரை எப்படி வரவேற்றிருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்த்தால், அது ஒரு மிகப் பெரிய விழாவாக, கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் யதார்த்தத்தில், நடப்பில் என்ன நடந்தது என்றால், இந்தியா திரும்பிய அந்த மேதை இறந்துபோன பிறகு, அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்குக் கூட மறுத்துவிட்ட சமூகம்தான், நம்முடைய சமூகம் என்பது உண்மை.

     அந்த மாமேதையின் பெயர்தான் கணிதமேதை இராமானுஜன். அந்த கணித மேதை இராமானுஜனுடைய வாழ்க்கை வரலாறு முழுவதையும், மிகத் துல்லியமாகவும், நுட்பமாகவும் தொகுத்து ஒரு நூலாக எழுதியிருக்கிறார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே பணியாற்றுகின்ற ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள்.

      பேராசிரியர் சுபவீ அவர்கள் இராமானுஜன் பற்றி பேசிக் கொண்டேயிருக்கிறார். நானும், எனது குடும்பமும், மெய்மறந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். சுபவீ அவர்களின் பேச்சு நிறைவுற்ற பிறகும், சுய நிலைக்கு வர எங்களுக்குச் சில நிமிடங்கள் ஆனது.

     நண்பர்களே, இப்போது புரிகிறதா? சுபவீ அவர்களின் அன்பு முகம், நட்பு முகம்.

     இதுமட்டுமல்ல நண்பர்களே, சுபவீ அய்யா அவர்களின், அன்பு உள்ளத்தை, வேறொரு நிகழ்விலும் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நான் பணியாற்றுகின்ற பள்ளியிலே, பணியாற்றுகின்ற ஆசிரியர் ஒருவர், நண்பர்களுடன் இணைந்து, ஓர் அமைப்பினை ஏற்படுத்தி, ஆண்டுதோறும், நல்லாசிரியர் விருது பெறும், ஆசிரியர்களுக்குப் பாராட்டுவிழா நடத்தி வருகிறார்.

    அந்த ஆசிரியர், கடந்த ஆண்டில் ஒரு நாள், இன்னும் சில நாட்களில், நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா நடத்த எண்ணியுள்ளோம். இவ்விழாவினைப் பேராசிரியர் சுபவீ அவர்களை அழைத்து. சிறப்புற நடத்த வேண்டும் என எண்ணுகிறோம். எனவே ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று விழா நடைபெறுமாறு, பேராசிரியர் சுபவீ அவர்களிடம் தேதி பெற்றுக் கொடுங்கள் என்றார்.

     பேராசிரியர் சுபவீ அவர்களுடன் அலைபேசியில் பேசினேன். உடனே தேதியும் கொடுத்தார். கட்டாயம் வருகிறேன் என உறுதியும் கொடுத்தார்.

     அதன் பின்னர்தான் எனக்கு சோதனை வந்தது.  தேதி வாங்கித் தருமாறு கேட்ட நண்பரால், விழாவிற்கான அரங்கினை ஏற்பாடு செய்ய இயலவில்லை. ஊர் முழுக்க அலைந்தும், அன்றைய தேதியில், எந்த அரங்கினையும் பெற இயலவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஐயா அவர்களிடம் எப்படி, இச்செய்தியைக் கூறுவது என்ற தயக்கம், என்னை வாட்டி வதைத்தது.

     உலகு முழுவதும் பறந்து, பறந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற, ஒரு மாமனிதரிடம், தேதி பெற்று, வீணடித்து விட்டோமே என்ற எண்ணம், கவலை, மனதை நெருடிக் கொண்டே இருந்தது.

     பேசவோ தைரியமில்லை. ஆனாலும் செய்தியைத் தெரிவித்தாக வேண்டும். எனவே ஐயா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அடுத்த நாளே சுபவீ ஐயா அவர்களிடமிருந்து பதில் மின்னஞ்சல் வந்தது.

அன்புடையீர்,
     வணக்கம். உங்கள் மின்னஞ்சல் கண்டேன். கூட்டம் ஏற்பாடு செய்ய இயலாமல் போன செய்தி அறிந்தேன். அதனால் ஒன்றும் வருத்தமில்லை. இன்னொருமுறை நீங்கள் அழைக்கும் பொழுது கண்டிப்பாக வருகிறேன்.

     எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைக்கலாம். தயங்க வேண்டியதில்லை. நண்பர்களுக்கு இடையில் குறுக்கிட ஏதுமில்லை.
அன்புடன்,
சுபவீ

     இதுதான் நண்பர்களே, சுபவீ அவர்களின் உண்மை முகம். பண்பு முகம், அன்பு முகம், நட்பு முகம்.

     நண்பர்களே, கடந்த 12.2.2014 புதன் கிழமையன்று, பேராசிரியர் சுபவீ அவர்களின், மொழியும் வாழ்வும் என்னும் நூலின் வெளியீட்டு விழா, தஞ்சை பெசண்ட் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

     அன்று காலை பள்ளியில் பேசிக்கொண்டிருந்த பொழுது, நண்பரும் உதவித் தலைமையாசிரியருமான திரு அ.சதாசிவம் அவர்களும், நண்பர்கள் திரு வி.பாலசுப்பிரமணியன், திரு ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் சுபவீ ஐயா அவர்களைப் பார்க்க வேண்டும், ஐயாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
    



அன்று மாலை விழா தொடங்குவதற்கு முன்னர், பி.எல்ஏ., விடுதிக்குச் சென்று, பேராசிரியர் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தோம். நூல் வெளியீட்டு விழாவிற்கும் சென்றோம்.

மொழியும் வாழ்வும், சுபவீ அவர்களின் புது நூல்




இன்றைக்கு உலக அளவில், கணிப்பொறியில் அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்ற மொழிகள் மூன்று என வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். முதலிடத்திலே ஆங்கிலம் இருக்கிறது. இரண்டாவது இடத்திலே, இட்டீஷ் மொழி என இன்று அழைக்கப்படுகின்ற ஹீப்ரு இருக்கிறது. மூன்றாவது இடத்திலே தமிழ் இருக்கிறது, என்று சொல்கிறபோது, இதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சி பெருமை வேறு என்னவாக இருக்க முடியும்.

     மொழியும் சிந்தனையும் என்னும் முதல் கட்டுரையே, நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுகிறது. உலகெங்கும் தமிழ் மொழி பரவி, வேர் விட்டு, கிளை விரித்து ஆல் போல் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது என்பதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு என்ன இருக்க முடியும்.

     நண்பர்களே, நம்மில் பலர் இதுவரை அறியாத செய்தி ஒன்றினையும் இக்கட்டுரையில் முன் வைக்கிறார்.

     பாரதிதாசன் ஒரு முறை ப்ரெஞ்சு அரசாங்கத்திற்கு எழுதினார். புதுவையிலே அவர் ஆசிரியராக இருந்தார். அப்படி இருக்கிறபோது, அங்கே என்ன செய்தார்கள் என்றால், அ என்பதற்கு அணில் என்று படம் போட்டுவிட்டார்கள். அ என்பதற்கு அணில் என்று சொல்வதில் பிழையில்லை. ஆனாலும் கூட அ என்பதற்கு அம்மாவைச் சொல்ல வேண்டாமா என்று கேட்டார்.

     பிள்ளைகளின் வாழ்க்கை அம்மாவிடமிருந்து தொடங்க வேண்டுமே தவிர, அணிலிடமிருந்து அன்று. எனவே அ என்பதற்கு அம்மா எனப் போட வேண்டும் என்று சொன்னார். ப்ரெஞ்சு அரசங்கம் அதனை ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆண்டு பாடப் புத்தகத்திலே அ என்பதற்கு அம்மா என்று படம் போட்டது.

     நண்பர்களே, படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது அல்லவா? பாரதிதாசனால்தான் இன்று, நம் பிள்ளைகளும் அ என்றால் அம்மா என்று படித்து வருகிறார்கள். பாரதிதாசனுக்கு ஓர் நன்றி சொல்வோமா.

     அறிஞர் சோம்சாம்ஸ்கி சொல்லுகிறார், நீங்கள்தான் மொழியைப் படிக்கிறீர்கள். குழந்தைகள் பார்க்கிறார்கள். சாதாரண வரிகள்தான். ஆனால் அதில் எவ்வளவு நுட்பம் இருக்கிறது. அவர்கள் பார்க்கிறார்கள், நாம் படிக்கிறோம். குழந்தைகளுக்கு நாம் எப்படி பேசக் கற்பிக்கிறோம்?. அம்மா என்றால் அம்மாவைக் காட்டித்தான். நேரடியாகப் பொருள் மூலம் அல்லது மனிதர்கள் மூலம் கற்றுக் கொள்கிற மொழி இதுவே. தாய் மொழி என்பது அடித்தளம் போன்றது. அதன் மீது நீங்கள் எத்தனைக் கட்டடம் வேண்டுமானாலும் கட்டலாம்.

     எத்தனை எளிமையான வார்த்தைகளில், எவ்வளவு பெரிய உண்மை.

    வேறொரு கட்டுரையில் பெண்களின் நிலை குறித்துக் கூறப்படும் செய்திகள் நம்மைக் கண்கலங்க வைக்கின்றன.

     பெண் பார்ப்பது என்று ஒரு சடங்கு இன்றும் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கிறது. ஆண் பார்ப்பது என்று ஏதேனும் சடங்கு உண்டா? ஒரு பெண்ணிக் கையில், தேநீர்க் குவளைகளைக் கொடுத்து, அலங்காரம் செய்து, அனுப்பி வைப்பதை, எப்போது நிறுத்தப் போகிறோம்? அவள் என்ன காட்சிப் பொருளா? கடைகளில் நிறுத்தப்படும் விளம்பரப் பொம்மையா?

   அண்மையில் ஒரு நாட்டுப்புறப் பாடலைக் கேட்டேன். தன் அக்காவைப் பற்றி, ஒரு சிறுமி பாடுவது போல், அந்தப் பாட்டு அமைந்திருந்தது.

எத்தன தடவ வெக்கப்படுவா எங்கக்கா
எத்தன தடவ காப்பிக்குடுப்பா எங்கக்கா
எத்தன தடவ கால்லவிழுவா எங்கக்கா
எத்தனை தடவ கையெடுப்பா எங்கக்கா

சேதி வரும்னு நம்பி நம்பியே அவ
வீதி வாசலப் பார்த்திருப்பா
சேதியும் வராது – ஒரு
நாதியும் வராது.

பட்டுப் புடவைய கட்டிப்பாக்க அக்கா
பத்து வருஷமா ஆசைப்பட்டா – அக்கா
பட்டமரமானா அத பாக்க சகிக்கலயே அக்கா
பட்டமரமானா அத பாக்க சகிக்கலயே

எல்லோரும் சேர்ந்து பாடுபட்டு ஒரு எட்டு
பவுனையும் சேத்து வச்சோம் – பத்து பவுன்
கேட்டு ஒருத்தன் பாதியிலே ஓடிட்டானே
ஒருத்தன் பாதியிலே ஓடிட்டானே

காடு கரை எல்லாம் வேலை செஞ்சு
ஒரு கட்டுலு மெத்தையும் வாங்கி வச்சோம்
மோட்டார் வண்டி கேட்டு ஒருத்தன் பாதியிலே ஓடிட்டானே
ஒருத்தன் பதியிலே ஓடிட்டானே

வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வித்தல்லவா
கல்யாணம் செய்யிராங்க – அக்கா என்ன பாவம்
செஞ்சாலோ அக்கா ஏங்கித் தவிக்கிறாளே
அக்கா ஏங்கித் தவிக்கிறாளே

சட்டமும் திட்டமும் போட்டாங்க – நம்ம
வேதனை இன்னும் தீரலையே – மாப்பிள்ளை
எல்லோரும் நல்ல மனசு வைக்கோணும் – வரதட்சனை
இல்லாமே பெண்களை வாழ வைக்கோணும்

    இந்தப் பாடலைப் படிக்கும்போதே நெஞ்சமெல்லாம் இடிந்து நொறுங்குகிறதல்லவா? எப்பொழுது இந்த இழி நிலையை மாற்றப் போகிறோம் என நம்மைக் கேட்கிறார் சுபவீ. நாமாவது இந்நிலையை, நம் குடும்ப அளவிலாவது மாற்றுவோமா நண்பர்களே?.

     கொடுத்து வாழ்வோம் என்னும் கட்டுரையிலும் பெண்கள் முன்னேற்றம் குறித்தே பேசுகிறார்.

     மயூரம் வேதநாயகம் பிள்ளையைத் தமிழ் நாட்டிலே அனைவரும் அறிந்திருப்பார்களா என்றால், விடை வேதனையைத்தான் தரும். தமிழின் முதல் நாவலை எழுதியவர் அவர் என்பது மட்டுமே, அவருக்கானப் பெருமையில்லை. பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் அவர் என்பதுதான் அவருடைய முதல் பெருமை.

     தந்தைப் பெரியார், மகாகவி பாரதியார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழ்த் தென்றல் திரு.வி.க., ஆகியோருக்கு முன்னமே, 1878 ஆம் ஆண்டிலேயே, பெண் விடுதலைக் குறித்த கவிதையை எழுதியவர்தான் வேதநாயகம் பிள்ளை. அவர் காலத்துக் கவிஞர்கள் எல்லாம் வெண்மதி மாலை படிக்கொண்டிருந்த பொழுது, பெண்மதி மாலை படியவர் இவர்.

          திருக்குறளும் சமூக நீதியும் என்றொரு கட்டுரை.

     பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது இன்றைக்குச் சாதாரணமான வரியாக இருக்கலாம். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கூட அது கடினம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னாரென்றால், உண்மையிலேயே உலகத்தின், முதல் புரட்சியாளராக, நான் வள்ளுவரைப் பார்க்கிறேன்.

     அடிமையாய் இருப்பதைவிடக் கொடுமையானது, அடிமை என்று அவனையே நம்ப வைத்த சமூகத்தினுடைய போக்கு இருக்கிறதே அதுதான் என ஆண்டோனியோ கிராம்சி கூறியதையும் இவ்விடம் பதிவு செய்கிறார்.

     ஆப்ரகாம் லிங்கனுடைய வரலாற்றினைப் படிக்கிறபோது, ஒரு நிகழ்ச்சி அப்படியே நெஞ்சினை நெருடும். லிங்கன் பல முறை முயற்சி செய்து, தோற்றுத் தோற்று, கடைசியாக 1861 இல் அமெரிக்க ஜனாதிபதியானார்.

     பதவி ஏற்பதற்காக அவர், நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள்ளே வருகிறபோது, நடந்த நிகழ்வினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

     லிங்கனுடைய தந்தையார் தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். நாற்காலிகளைச் செய்கிறவர். அந்த ஏழ்மைக் குடும்பத்திலே இருந்து வந்தவர்தான் லிங்கன்.

    நாடாளுமன்றக் கூடத்தின் நடுவிலே நடந்து வருகிறபோது, ஒரு எதிர் கட்சித் தலைவர், லிங்கன் ஒரு நிமிடம் எனக் கூப்பிடுகிறார். உடனே என்ன? என்று அவர் கேட்கிறார்.

      நான் உட்கார்ந்திருக்கின்ற நாற்காலியை, உன் அப்பாதான் செய்து கொடுத்தார். ஆடுகிறது. அப்புறமாக வந்து, அதனைச் சரிசெய்யச் சொல் என்றார். என்ன நோக்கம் என்றால், நீ என்னதான் நாட்டுக்கு அதிபராக இருந்தாலும, ஒரு ஏழைத் தச்சன் வீட்டில் பிறந்தவன்தான் நீ, என்பதை உணர்த்துகின்ற ஆணவம் அவரின் பேச்சில் தெரிந்தது.

     ஆப்ரகாம் லிங்கன் நின்று நிதானமாகச் சொன்னார். தேவையில்லை. இதற்கு என் தந்தை வர வேண்டியதில்லை. எனக்கே தச்சுத் தொழில் தெரியும். நாளைக்கு உங்கள் நாற்காலியை நானே சரி செய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு, இரண்டு அடிகளை எடுத்து வைத்தவர், மறுபடியும் திருப்பி வந்து சொன்னாரே, அந்தச் சொற்கள்தான், இன்றைக்கும் அவரை வரலாற்றிலே நிறுத்தியிருக்கின்றன.

     எனக்கு நாற்காலி செய்யவும் தெரியும், நாடாளவும் தெரியும்.

     சொன்னது மட்டுமல்ல, நான்கு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தும் காட்டினார்.

    நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா நண்பர்களே. இங்கே எப்படி சாதியோ? அங்கே அப்படித் தோல். கறுப்புத் தோல், வெள்ளைத் தோல் என்கிறார்.

     தமிழல் ஒன்று படுவோம் என்னும் ஓர் கட்டுரையில், சுபவீ அவர்கள் ஒரு வேண்டுகோளினை முன் வைக்கிறார்.

     மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள். குறைந்தது ஒரு திருக்குறளையாவது, பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால் திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும். புதிய உறவுகள் கிளைக்கும். வாழ்வு செழிக்கும். காரணம் திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல்.

     எந்த மண்ணிலும், எந்தவொரு மொழி பேசும் மக்களோடும், எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள், நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

     சுபவீ என்ற மூன்றெழுத்து மனிதருக்குள்தான் எத்தனை எத்தனை சிந்தனைகள். சுபவீ அவர்களின் எண்ணங்களும், உள்ளத்து ஆசைகளும், பக்கத்துக்குப் பக்கம், நிரம்பி வழியும் நூல் மொழியும் வாழ்வும்.

    வாருங்கள் நண்பர்களே, பேராசிரியர் சுபவீ அவர்களின் நூலில், உங்களின் மனதையும், பார்வையினையும் சிறிது நேரம், இறக்கி வைத்து இளைப்பாருங்கள். ஒவ்வொரு பக்கமும், உங்களை உள்ளே இழுத்து, உங்கள் மனதை ஆரத் தழுவும். இறுதிப் பக்கத்தில் இருந்து, எழுந்து வெளியே வரும்பொழுது, உங்களையே நீங்கள் புதிதாய் உணர்வீர்கள்.

     வாருங்கள் நண்பர்களே.

---------

ஓர் துயரம்

      நண்பர்களே, கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ட பயணம் என்னும் பெயரில், ஒரு பதிவினைக் கடந்த நவம்பர் மாதம் படித்துப் பரவசப் பட்டீர்களே, நினைவிருக்கிறதா?

      கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, நடந்து, ஒரு மாதம் இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்து, மலைமேல் நின்று கண்ணகி தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகி கோயிலையும், கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்த,


பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள்,
கடந்த 21.2.2014 வெள்ளிக் கிழமையன்று, தனது 96 வது வயதில், இயற்கை எய்தினார் என்பதை, ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


     வலையுலக நண்பர்கள் சார்பாக, பேராசிரியர் சி.கோ அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.