20 மார்ச் 2014

வரலாறு என்னை விடுவிக்கும்

     
நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.


     என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

     நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது சகோதரர்களின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல நான்.

நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.
History Will Absolve Me

     நண்பர்களே, கியூபா, மொன்கடா இராணுவ முகாம் மீதானத் தாக்குதலைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள், 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதியின் முன் நின்று முழங்கிய வார்த்தைகள்தான் இவை.

     காஸ்ட்ரோ தனது வாதத்தை முடிக்கும் வரை பொறுமையோடு காத்திருந்த நீதிபதி, பதினைந்து ஆண்டுகால சிறை தண்டனையை விதித்தார்.

    

பைன்ஸ் தீவுச் சிறையில் காஸ்ட்ரோ அடைக்கப் பட்டார். க்யூபாவின் வரலாற்றை மாற்றி எழுதிய சிறைச் சாலை இது. காஸ்ட்ரோவின் குரு ஹொசே மார்த்தி சிறை வைக்கப் பட்டதும் இங்குதான்.

பைன்ஸ் தீவு சிறைச்சாலை
தனிமைச் சிறையில் காஸ்ட்ரோ. ஆனால் புத்தகங்கள் சூழ இருந்தார். தத்துவம், வரலாறு, எனத் தேடித் தேடிப் படித்தார். பரிட்சைக்காகப் படிக்கிறாரா அல்லது புரட்சிக்காகப் படிக்கிறாரா என சிறைக் காவலர்களே குழம்பிப் போகும் வகையில், கட்டுக் கட்டாய் அறையெங்கும் புத்தகங்கள்.

     ஒரு சமயம் ஜேக் லண்டன், ஜுலியஸ் சீசர் எனப் படிப்பார். திடீரென்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் என்று மூழ்கிப் போவார்.

     சிறையில் நாள்தோறும், வானொலிச் செய்திகளைக் கேட்டு வந்த காஸ்ட்ரோவிற்கு ஒரு நாள், ஒரு வானொலிச் செய்தி அதிர்ச்சியை வாரி வழங்கியது.

மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

     மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டாரா? அப்படியானால், இத்தனை காலமும், இந்த அரசாங்கத்திற்காகவா அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்? அதுவும் பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? தன்னையும், தன்னுடைய தோழர்களையும் சிறையில் அடைத்த, பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? தன்னுடைய புரட்சிகரத் தோழர்களைச் சுட்டுப் பொசுக்கிய பாடிஸ்டா அரசாங்கத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாரா? காஸ்ட்ரோ உண்மையாகவே கலங்கித்தான் போனார்.

     நண்பர்களே, மிர்தா யார் என்று தெரிகிறதா? ஃபிடல் காஸ்ட்ரோவின் காதல் மனைவி.

     ஃபிடல் காஸ்ட்ரோ மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர். கல்லூரிக் காலத்திலேயே, புரட்சி, துப்பாக்கி, பாட்டாளி வர்க்கம் என அனல் பறக்கப் பேசக் கூடியவராய் இருந்த போதிலும், இளம் பெண்களைக் கண்டவுடன் வாய் மூடி மௌனியாய் மாறிவிடுவார்.

      ஒரு முறை நண்பர்கள் ஒன்று சேர்ந்து, கல்லூரி மாணவிகளுடன் இணைந்து, கடற்கரைக்குச் செல்ல முடிவு செய்தனர். காஸ்ட்ரோ நானும் வருகிறேன் என்றார். நண்பர்கள் ஒரே ஒரு நிபந்தனை விதித்தனர். காஸ்ட்ரோ, தன்னுடன் வரும், பெண்ணுடன், அரசியல் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசக் கூடாது. காஸ்ட்ரோ சம்மதித்தார்.

     ஆச்சரியம். காஸ்ட்ரோவும் அந்தப் பெண்ணும், கடற்கரையில் தனியாக பிரிந்து சென்று மணிக் கணக்கில் பேசினர். அடுத்த நாள், அந்தப் பெண்ணைச் சந்தித்த நண்பர்கள், அப்படி காஸ்ட்ரோ என்னதான் பேசினார் எனக் கேட்டனர்.

    அடப் போங்கப்பா. புரட்சி, புரட்சி, புரட்சி என்று புரட்சி பற்றி மூன்று மணி நேரம் அறு, அறு என்று அறுத்து விட்டார்.

     ஆனாலும் காஸ்ட்ரோ, ஓர் அழகிய பெண்ணின் காதல் வலையில் விழத்தான் செய்தார். அப்பெண்ணின் பெயர் மிர்தா பிலார்ட். இருவரும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். காஸ்ட்ரோவைப் போலவே, அப்பெண்ணும் பெரும் செல்வந்தரின் மகள்.

     1948 இல் இருவருக்கும் திருமணம் நடந்தது. காஸ்ட்ரோவிற்கு வயது 22. மிர்தாவிற்கு 21.

     நண்பர்களே, புதுமணத் தம்பதிகளாய் இருவரும், தேனிலவிற்கு எங்கு சென்றார்கள் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். அமெரிக்காவிற்குச் சென்றார்கள்.

     அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஒரு விடுதியில் அறையெடுத்துத் தங்கினார்கள். மிர்வைப் பொறுத்தவரை, தேனிலவு அத்தனை மகிழ்ச்சியாக இருந்ததென்று கூற முடியாது. காரணம், காஸ்ட்ரோ, மிர்தாவை விடுதியிலேயே விட்டுவிட்டு, தனியாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்.

     பல மணி நேரம் கழித்துக் காஸ்ட்ரோ, அறைக்குத் திரும்பும் பொழுது, கை நிறைய பூக்கள் இருக்காது. புத்தகங்கள் இருக்கும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என கை நிறைய புத்தகங்கள் இருக்கும். காரல் மார்க்ஸ்ஸின் டாஸ் காபிடல் தொகுதிகளை முதன் முறையாக, காஸ்ட்ரோ, இங்குதான், தனது தேனிலவின்போதுதான் வாங்கினார்.

      இவர்களின் காதலின் நினைவுப் பரிசாய் ஓர் மகன். ஃபிடலிட்டா.

      நண்பர்களே, திருமணம் முடிந்து, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில்தான், சிறையில் இருந்த வானொலி அறிவித்தது.

மிர்தா அரசாங்கப் பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

     மிர்தாவின் செயல், காஸ்ட்ரோவை முற்றிலுமாக நிலைகுலையச் செய்தது. ஒரு புரட்சியாளரின் மனைவி எப்படி அராஜக அரசாங்கத்திற்காக பணியாற்ற முடியும்? எப்படி தன் மனைவியால் பணியாற்ற முடிந்தது?.

     நொடிப் பொழுதும் வீடு தங்காமல், கட்சி, கூட்டம், புரட்சி, திட்டம் எனறு சுற்றிக் கொண்டிருந்தாரே தவிர, வீட்டைப் பற்றி நினைக்கவே காஸ்ட்ரோவிற்கு நேரமில்லை.

     மிர்தா விவகாரத்தில், காஸ்ட்ரோவின் மீது சில விமர்சனங்களை முன் வைப்பாரும் உள்ளனர். மிர்தாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, எத்தனை காலம் அவரோடு இணைந்து வாழ்ந்தார்? மிர்தாவின் சுக துக்கங்களில் கலந்து கொண்டிருக்கிறாரா? குடும்பத்தை நடத்த, செலவுகளைச் சமாளிக்க அவர் என்ன செய்தார், என்ன செய்கிறார் என்று என்றேனும், எப்பொழுதேனும் கவலைப் பட்டிருப்பாரா? மகன் ஃபிடலிட்டாவின் அறுவை சிகிச்சையின்போது கூட, தன் கையில் இருந்த காசை, மனைவியிடம் கொடுக்காமல், ஆயுதம் வாங்கத்தானே கொடுத்தார்.

     பொது வாழ்வில் ஈடுபடும் பலர், தங்களது சொந்த வீட்டைப் புறக்கணிப்பது புதிதல்ல. காஸ்ட்ரோவும் இதற்கு விதிவிலக்கல்ல.

     வானொலி செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே, தனது வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டார். மிர்தாவை அந்தக் கணமே விவாகரத்து செய்ய விரும்புவதாக அறித்தார்.

      மிர்தாவை விவாகரத்தும் செய்தார். ஆயினும் தன் மகன் ஃபிடலிட்டாவை மட்டும் அவரால் விட்டுக் கொடுக்க முடியவில்லை.

நண்பர்களே,
இவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.
நாடுதான்
பெரிது, பெரிது
என்று வாழ்ந்தவர்,
இன்றும் வாழ்ந்து வருபவர்.
ஃபிடல் காஸ்ட்ரோ.