28 மே 2014

வலை உறவுகள்


கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

எனப் பாடுவார் புரட்சிக் கவி, பாவேந்தர் பாரதிதாசன். இத்தகைய உயிரணையத் தமிழை, உலகெலாம் பரப்ப, இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பேராயுதம்தான் இணையம்.


     நண்பர்களே, உலக அளவில், கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் என மூன்று மொழிகளை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.

     முதலிடத்திலே ஆங்கிலம் இருக்கிறது.  இரண்டாவது இடத்திலே இருப்பது இட்டீஸ் மொழி. இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருக்கிற யூதர்கள், நாங்கள் எங்கள் வாழ்க்கையை இழந்தாலும் இழப்போமோ தவிர, ஒரு நாளும் எங்கள் மொழியை இழக்க மாட்டோம் எனச் சூளுரைத்து, வீட்டு மொழியாக மட்டுமே இருந்த ஹீப்ரூவை, புதுப்பித்து, மெருகேற்றி, அலுவல் மொழியாக, இட்டீஸ் மொழியாக உயிர்ப்பித்திருக்கின்றனர். இம்மொழிதான் இரண்டாம் மொழி.

     நண்பர்களே, நாம் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கலாம். ஆம் நண்பர்களே, உலக அளவிலான கணினிப் பயன்பாட்டில், மூன்றாம் இடத்தில் இருப்பது, நம் மொழி, நண்பர்களே, நம் மொழி, நம் தமிழ் மொழி.

கற்கண்டு மொழியில் கற்கண்டு கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றில் லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
                                - பாவேந்தர்

     கற்கண்டுக் கவிதைகள், வாழ்க்கையை வானில் உயர்த்தும் தன்னம்பிக்கை வரிகள், இயல், இசை , நாடகம் என அனைத்தும் வலைப் பூவின் வழி வானில் கலந்து, தமிழ் மொழியை இன்று உலகமெலாம் பரப்பி வருகின்றது.

     நண்பர்களே, நம் மொழி மூன்றாவது இடத்திலேயே நின்று விட்டால் போதுமா? மேலும் முன்னேற வேண்டாமா? இரண்டாமிடத்தை எட்டிப் பிடிக்க வேண்டாமா? முதலாம் இடத்திற்கு முந்திச் செல்ல வேண்டாமா?

     கணினித் தமிழ் முதலிடத்தைப் பிடிக்க, முதலிடத்திலேயே நிலைக்க, நாம் செய்ய வேண்டியதுதான் என்ன? கணினியில் நாம் மட்டும் எழுதினால் போதுமா? கற்றவர்கள் அனைவரையும் கணினிக்குள் இழுத்து விட வேண்டாமா? ஆம், இத்தகு முயற்சிக்கு முதல் விதை, முதல் வித்து விதைக்கப் பெற்ற இடம்தான் புதுக்கோட்டை.


மனதில் உறுதியோடும், வாக்கினில் இனிமையோடும், புதியன விரும்பும் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள் ஓர் தமிழாசிரியர், சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், இவை அனைத்திற்கும் மேலாக தமிழைத் தன்னுயிரினும் மேலாய் நேசிப்பவர்.

     கவிஞர் முத்து நிலவன் அவர்களின் உள்ளத்தில் ஓர் ஆசை. தான் மட்டும் கணினியில் எழுதினால் போதுமா? கணினி என்றாலே காத தூரம் விலகியோடும், நண்பர்களை, வலை உலகிற்குள் எவ்வாறு இழுப்பது என்று யோசித்தார். விளைவு கணினி பயிற்சிப் பட்டறை.

     கடந்த ஆண்டு 40 தமிழாசிரியர்களை இணைய உலகில் இணைத்தார். இதோ இவ்வாண்டும் ஓர் பயிற்சிப் பட்டறை.

     கடந்த 18.5.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும், தஞ்சைப் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை நோக்கிப் பயணித்தோம்.

     புதுக்கோட்டை அபிராமி உணவு விடுதியில் நுழைந்த சில நிமிடங்களில், வந்து சேர்ந்தனர் திரு கஸ் தூரி ரங்கனும்திரு அ. பாண்டியனும். திரு கஸ்தூரி ரங்கன் ஒரு ஆங்கில ஆசிரியர், ஆனால் தமிழில் தமிழறிஞரைப்போல் எழுதி அசத்துபவர். கடந்த ஆண்டு சந்தித்தது. ஆண்டு ஒன்று கடந்திருந்த போதிலும், நேசமும், பாசமும் முன்னிலும் அதிகரித்தே இருந்தது. சிறிது நேரத்தில் திரு குருநாத சுந்தரமும் வந்து சேரவே, அவ்விடமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

     திரு அ.பாண்டியன் அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம். திருமணம் அடுத்த மாதம்தானே? என்று கேட்கும்போதே, நண்பர் பாண்டியனின் முகத்தில், வெட்கம் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது. திருமணக் களை வந்துவிட்டது. நண்பர் பாண்டியன் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ வாழ்த்துவோமா நண்பர்களே.

     சிறிது நேரத்தில் திரு அ.பாண்டியனின் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசியவர், திண்டுக்கல் தனபாலன், பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டார். இதோ அழைத்து வருகிறேன் என சிட்டாய் பறந்தார்.


ஐந்தே நிமிடங்கள்தான் கடந்திருக்கும், கணினியில் மட்டுமே இதுவரை பார்த்த முகம், இதோ சிரித்த முகத்துடன் நேரில். வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்.  கரங்களைப் பற்றிக் கொண்டேன். நெடுநாள் நண்பராய் பழகிய ஓர் உணர்வு. வலையுலக உறவல்லவா?

             இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூறுவார்கள், அவர் அங்கு, இங்கு என்று இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்று. அது உண்மையோ, பொய்யோ தெரியாது, ஆனால் வலையுலகில் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் திண்டுக்கல் தனபாலன். எவ்வலைப் பக்கம் சென்றாலும், முதன் கருத்து, முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும்.

        அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், வந்து சேர்ந்தார் கவிஞர் முத்து நிலவன் அவர்கள். அவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கியவரைக் கண்டதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.


மூங்கிலில் நுழைந்து, இசையாய் எழுந்து, அனைவரின் உள்ளம் புகுந்து, மகிழ்ச்சி மனம் பரப்பி வரும், கல்வியாளர் திரு  டி.என்.முரளிதரன் அவர்களைக் கண்டதும் கரம் பற்றி மகிழ்ந்தேன்.


      உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக அயராது பணியாற்றிய போதும், இணைத்திற்கும் நேரம் ஒதுக்கி, இணைய வானில் கொடி கட்டிப் பறப்பவர்.

     இந்த நாள் இனிய நாளாகவே  கரைந்து கொண்டிருந்தது. மனம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.



புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரி. இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நடைபெறும், கணினி மையத்திற்குள் நுழைந்தோம். மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


            ஓய்வு பெற்ற வங்கியாளர், எனது எண்ணங்கள் என்னும் வலைப் பூவில், தனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் அழகுற இறக்கி வைக்கும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள், அகமும், முகமும் மலர வரவேற்றார். முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. முதன் முறையாய் நேரில் காணும் வாய்ப்பு. உண்மையிலேயே இந்த நாள் இனிய நாள்தான்.


     இவர் வங்கியில் கணினியுடனே காலத்தைக் கழித்தவர். வங்கியை விட்டு வெளியில் வந்தும், கணினியுடனே வாழ்பவர். கணினியும், காமிராவும் இவரது இரு கண்கள். எங்கு சென்றாலும் காணும் காட்கிகளை எல்லாம், படம் பிடித்துப் பதிவாக்கி, வலையில் விருந்து வைப்பவர்.

      கவிஞர் கீதா அவர்களையும், கவிஞர் மகாசுந்தர் அவர்களையும் சந்தித்தேன்.
    

வலையுலக ஜாம்பவான்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த நான், கவிஞர் கதிரேசன் ஐயா அவர்களைக் கண்டவுடன் சுய நினைவிற்கு வந்தேன்.

தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு
தமிழ் என்று தோள்தட்டி ஆடு – நல்ல
தமிழ்வெல்க வெல்கஎன் றேதினம் பாடு

எனும் பாவேந்திரின் வரிகளுக்கு ஏற்ப, தமிழ் வெல்க, வெல்க என்றே தினம் பாடிக் களித்து, தமிழுக்கு நாளும் நல்ல தொண்டாற்றிவரும், தாயுள்ளம், தமிழுள்ளம் படைத்தவரன்றோ கவிஞர் கதிரேசன்.

     இவர் வேறு யாருமல்ல, இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை நடைபெற, குளு குளு வசதியுடனும், இணைய வசதியுடனும் கூடிய, மிகப் பெரிய கணிப்பொறி ஆய்வகத்தினையே, தந்தேன் உனக்கு, என வழங்கி மகிழ்ந்த வள்ளல், வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர். இது மட்டுமா,

செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை – கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்
நன்மது ரஞ்செய் கிழங்கு – காணில்
நாவிலி னித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா

என்னும் பாவேந்தரின் வரிகளுக்கு இணங்க, நல் மதிய விருந்தும் தந்தவர் அன்றோ, கவிஞர் கதிரேசன்.
    

வேகமாக வளர்ந்து வரும் உலகில், தகவல் தொழில் நுட்பத்தைத் தனது தாய் மொழியில் கற்றுக் கொள்வது அவசியம். மொழி வளர்ச்சிக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும், வலைப்பக்கத்தில் என்ன எழுதலாம் என்பதை சமூக உணர்வோடு சிந்தித்து, எப்படி எழுதலாம் என்னும் தொழில நுட்பத்தைக் கற்றுக் கொள்வது, இன்றைய ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றியமையாததாகிறது என்பதை உணர்ந்து,  தமிழ் காக்கப் புறப்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்களைக் கண்டு, ஆசிரியனாய் அகம் மகிழ்ந்தேன்.

      நண்பர்களே, வலையுலக உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், பேசி  மகிழ்ந்தவாரே, பயிற்சிப் பட்டறை அரங்கில் அமர்ந்தோம்.






முதல் நிகழ்வாக, நட்ட கல்லும் பேசுமே என்னும் தலைப்பில்,  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள், காணொளி காட்சியுடன் உரையாற்றினார்.

     நண்பர்களே, நாம் ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்குச் செல்லும் பொழுதோ, அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதோ, சாலையோரங்களில், அடுத்த ஊரினையும், அதன் தொலைவினையும் சொல்லும் மைல் கற்களைப் பார்த்திருப்போம். ஆனால் அக் கற்களைப் பற்றிப் பெரியதாக சிந்தித்திருக்க மாட்டோம்.

     முதன்மைக் கல்வி அலுவலரோ, தனது அயராதப் பணிகளுக்கு இடையிலும், புதுக்கோட்டையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, பழைய மைல் கற்களை ஆராய்ந்து, அவற்றைப் படங்களாகத் திரையில் காட்டினார்.


ஒரு கல் புதுக்கோட்டையின் தொலையினைவுயும், ஆதனக் கோட்டையின் தொலைவினையும் காட்டுகிறது.

புதுக்கோட்டை
ரூ
Poodoocotay
X

      நண்பர்களே, அக்கல்லைக் கண்டவுடன் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்துக் கல்லில், புதுக்கோட்டையின் தொலைவு பத்து மைல் என, தமிழ் எண்ணில் குறிக்கப்பட்டிருந்தது. தமிழில் எழுதுகிறோம், தமிழில் பேசுகிறோமே, இன்று நம் யாருக்காவது, தமிழ் எண்கள் தெரியுமா?

     ஆனால் ஆங்கிலேயர்களது காலத்து மைல் கல்லில், தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் எண்கள் நடைமுறையில் இருந்தன, படித்தவர்களும், பாமரர்களும், தமிழ் எண்களை அறிந்திருந்தார்கள், அவற்றையே பயன்படுத்தினார்கள் என்றுதானே அர்த்தம்.

     இன்று நம்மில் யாருக்காவது, தமிழ் எண்கள் தெரியுமா? சத்தியமாக எனக்குத் தெரியாது. தமிழனாய் இருந்து கொண்டு, தமிழ் எண்கள் தெரியாது என்று சொல்வதற்கு, கூசுகிறது நண்பர்களே மனம் கூசுகிறது.

     நம்மை வளர்த்தத் தமிழை, நாம் வளர்க்காமல், காக்காமல் விட்டு விட்டோம்.


பிற்பகல் நிகழ்வில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும், திரு டி.என்.முரளிதரன் அவர்களும், வலைப் பூவின் சூட்சுமங்களை அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாய் , காணொளி காட்சியுடன் விளக்கினர்.


      நேரம் சென்றதே தெரியவில்லை. நேரம் மாலை மணி ஐந்தாகிவிட்டது என்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் அறிவித்ததும்தான், வலையுலகில் இருந்து மீண்டு, பூவுலகிற்கு வந்தோம்.

     ஐம்பதிற்கும் மேற்பட்டோரை வலையுலகில் இணைத்தப் பெருமையோடு, பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது. வலையுலக உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், எனது மனமும் நிறைவு பெற்றிருந்தது.

     புதுக்கோட்டையில் விதைக்கப் பெற்ற கணினி வித்து, தமிழ் மரமாய் வளர்ந்து, ஆல் போல் தழைத்து, உலகெங்கும் பல்கிப் பெருகும், தமிழை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்று தமிழ் வளர்க – தமிழ்
நாட்டினில் எங்கனும் பல்குக பல்குக
என்றும் தமிழ் வளர்க – கலை
யாவும் தமிழ் மொழியில் விளைந்தோங்குக
இன்பம் எனப்படுதல் – தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக.
                                    - பாவேந்தர்