14 செப்டம்பர் 2014

விருதா? எனக்கா?

     

நண்பர்களே, வலைப் பூ ஒன்று தொடங்கி, எழுத ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவினை எழுதியவன், இப்பொழுது வாரம் ஒரு பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

     எழுதுவதில் ஏதோ ஓர் இனம் புரியாத நிம்மதி கிடைக்கிறது. இம் மூன்று வருடங்களில், நான் சாதித்ததாக நினைப்பது, ஒன்றுண்டு.


     ஆம் நண்பர்களே, உங்களின் அன்பினைப் பெற்றிருக்கிறேனல்லவா, அதனைத்தான் சாதனை என்கிறேன்.

     தஞ்சையில், கரந்தையில், வகுப்பறையில் முடங்கிக் கிடந்த என்னையும், ஊக்குவித்து, உற்சாகப் படுத்தி, எழுத்துலகச் சகோதரனாய் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் பரந்து விரிந்த, பெரிய மனதின் ஓரத்தில், ஓர் சிறிய இடத்தினை, எனக்காக ஒதுக்கி இருக்கிறீர்கள் அல்லவா, அம்மகிழ்ச்சி ஒன்று போதும் எனக்கு.

என்றும் வேண்டும் இந்த அன்பு.

     கடந்த வருடத்தில் ஓர் நாள், வலைப் பூவில் நண்பர்களின் எழுத்துக்களைச் சுவாசித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாய், ஓர் அன்பு முகத்தைக் கண்டேன்.

     எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு மீண்டும், மீண்டும் பார்த்தேன்.

      உண்மையிலேயே அவர்தானா, என வியந்து நோக்கினேன். ஆம் அவரேதான் என்பதை மனது உறுதி செய்தபொழுது, என் உள்ளம் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை.

தஞ்சையம்பதி
    

நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளிக்கு அருகில், விஷ்னு நெட் கபே என்னும் பெயரில், கணினியகம் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன் நடத்தி வந்தவர்.

      நான், எனது எம்.ஃ.பில்., ஆய்விற்காக, கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப் பற்றிய, தகவல்களைத் திரட்டத் தொடங்கிய பொழுது, எனக்குப் பேருதவி புரிந்தவர் இவர்.

ஆம்மீகத் தொண்டர் திரு துரை.செல்வராஜ்
ஆலயத்தின் தெய்வீக மனம் கமழும் வலை

     தற்சமயம் இவரது வாசம் குவைத். குவைத்தில் இருந்து ஆன்மீகக் கருத்துக்களை, ஆன்மீகச் செய்திகளை, உலகு முழுதும் பரப்பும் உன்னதப் பணியினை நிறைவுடன் செய்து வருபவர்.

     நண்பர்களே, இவரது அன்பைப் பெற்றதையே, பெரும் பேறாக எண்ணி வந்த எனக்கு, இவரின் திருக்கரங்களால், ஓர் விருது கிடைத்திருக்கிறது.

Versatile Blogger


தஞ்சையம்பதிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
    தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் கொண்ட தஞ்சையம்பதிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் மட்டும் போதாது என்பது மட்டும் புரிகிறது. இருப்பினும் என் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

     நண்பர்களே, நான் கடந்து வந்த பாதையினை சற்றே எண்ணிப் பார்க்கின்றேன்.

கரந்தையில் பிறந்தவன்
கரந்தையில் தவழ்ந்தவன்
கரந்தையில் படித்தவன்
கரந்தையில் பணியும் ஆற்றுபவன்
இதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா?

படித்த பள்ளியிலேயே ஆசிரியர் பணி.
எத்துனை பேருக்கு, இப்படி ஓர் வாய்ப்பு கிட்டும்.

      கணித ஆசிரியரான என்னை நம்பி, தமிழ்ப் பொழில் என்னும் தமிழாராய்ச்சி மாத இதழையே ஒப்படைத்தார்கள். என்னே என் பாக்கியம்.

     கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக, பொழிற்றொண்டராய், இதழியல் பணியும் ஆற்றிவருகின்றேன்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள், அதுபோல, தமிழ்ப் பொழில் இதழின், தமிழ் மனத்தினை, முகர்ந்து, முகர்ந்தே, எழுதவும் தொடங்கியவன் நான்.

01.   கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்
02.   விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்
03.   கணித மேதை சீனிவாச இராமானுஜன்
04.   கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள்
எனும் நான்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.

   அடுத்த மாதம், மதுரையில் நடைபெறவிருக்கின்ற, பதிவர் மாநாட்டினில், உங்கள் முன்னிலையில் வெளியிட வேண்டும், என்ற ஆவலில்,
கரந்தை மாமனிதர்கள்
என்னும் சிறு நூலினை அச்சாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

     என்னைப் பற்றிச் சொல்ல, இதற்கும் மேல் ஒன்றும் இல்லை.


நண்பர்களே, அன்பின் மிகுதியால், தஞ்சையம்பதி வழங்கிய விருதினை, வலையுலக உறவுகளோடு, பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

     இவ்விருது எனக்கோ புதிது. ஆனால் இவ்விருதினை நான் பகிர்ந்து கொள்ள நினைக்கும் இவர்களோ, பல்வேறு விருதுகளைப் பெற்ற வித்தகர்கள்.

    வலையுலகச் சொந்தங்களே, இதோ மனமகிழ்வோடு, சிரம் தாழ்த்தி, கரம் நீட்டி, விருதினை வழங்குகின்றேன். பெற்றருள்வீர்களாக.

முனைவர் பா. ஜம்புலிங்கம்,

சகோதரி மனோ சாமிநாதன்

நண்பர் மது

சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன்

நண்பர் ரூபன்

சகோதரி சுவாதி

நண்பர் விமலன்

சகோதரி கீதா

நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்

சகோதரி உஷா அன்பரசு

அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
     அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
     எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
     காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
     புகழேற்றி வருகின்றார் – அறிஞர் வாழ்க.
                               
                                 - பாவேந்தர் பாரதிதாசன்.