28 நவம்பர் 2014

கடிதத்தில் வந்த பாராட்டு


கரந்தையில் பிறந்தவர் இவர். கரந்தையிலேயே வசித்தும் வருபவர். நான் பயின்ற கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், எனக்கு முன்னரே பயின்றவர். இன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர்.

     400 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்திற்கும் மேற்பட்ட குறு நாவல்கள், பத்திற்கும் மேற்பட்ட சிறு கதைத் தொகுப்புகள், 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ற்கும் மேற்பட்ட நாடகங்கள், ஆங்கிலத்தில் பல கவிதைகள், மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் என இவரது எழுத்துப் பணி, பல தளங்களில் விரிந்து கொண்டே செல்லும்.


     இவரது சிறுகதையொன்று மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் பாடமாக இடம் பெற்றுள்ளது. காலம் தின்றவர்கள் என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில், பாடமாக இடம் பெற்றுள்ளது.

     தமிழ்ப் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், மனோன்மணியம் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பெரியார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் முதலான பலகலைக் கழகங்களில் பயிலும் எண்ணற்ற மாணவர்கள், இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து, எம்.ஃ,பில்., பட்டமும், டாக்டர் பட்டமும் பெற்றுள்ளனர்.

     தமிழ் நாடு கலை இலக்கியப் பெரு மன்றப் பரிசு, கலைஞர் அறக்கட்டளைப் பரிசு, பாரதி தமிழ்ச் சங்க விருது என பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல விருதுகளையும், கணக்கற்ற பரிசில்களையும் பெற்றவர்.

     புரண்டு படுக்கும் வாழ்க்கை என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு நூலினைப் படித்து, அதன் பிடியில் இருந்து மீள முடியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.

     நண்பர்களே, யாரைப் பற்றிச் சொல்லுகின்றேன் என்று தெரிகிறதா? இவர்தான் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறிந்த

கவிஞர் ஹரணி
---
    நண்பர்களே, சில நாட்களுக்கு முன், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது, ஒரு கடிதம் காத்திருந்தது.

     கவிஞர் ஹரணி அவர்களிடமிருந்து ஒரு கடிதம்.

     கடிதம் எழுதுதல் என்னும் ஓர் உயரிய பழக்கம், ஓர் உன்னதக் கலை, முற்றாய் தொலைந்து விட்ட காலம் இது.

      பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிலும், வீட்டின் மேற்கூரையில் இருந்து ஒரு கம்பியைத் தொங்க விட்டு, அதில் வீட்டிற்கு வந்த கடிதங்களை எல்லாம் சொருகி வைத்திருப்பார்கள்.

      என்றாவது ஒரு நாள், அக்கடிதங்களை எல்லாம், மீள் வாசிப்பு செய்யும் பொழுது, கிடைக்கின்ற ஆனந்தம் இருக்கிறதே, அதற்கு இணை ஏது. பல ஆண்டுகளுக்கு முன்னரே, இயற்கையோடு ஒன்றெனக் கலந்தவர்கள் கூட, எழுத்து வடிவத்தில் நம்மோடு பேசுவார்களே,  அதை நாமும், நமது அகச் செவிகளில் கேட்டு இன்புறுவோமே, அந்த சுகம் இருக்கிறதே, அதை அனுபவித்தால்தான் புரியும்.

      உறவினர்களின் எண்ணமும், நட்புகளின் வார்த்தைகளும், இன்று அலைபேசி வழியாக, அடுத்த நொடியே, நம்மை வந்தடைந்து, மறு நொடியே, காற்றில் அல்லவா கரைந்து போய்விடுகின்றன.

     கவிஞர் ஹரணி இன்றும் கடிதத்தை, கடித இலக்கியத்தை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, பின் பற்றி வருகின்றார். பலமுறை அலைபேசி வழி அழைத்துப் பேசியிருக்கிறார், ஆனால் அவ்வார்த்தைகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலந்தல்லவா போய்விட்டன.

     இதோ, காலங்காலமாய் உடனிருக்க, அவ்வப்போது படித்து மகிழ, ஓர் கடிதம். காகிதத்தில் ஓர் விருது.

கரந்தை மாமனிதர்கள்
என்னும் எனது நூலிற்காக எழுதப் பெற்ற, இக் கடிதத்தில், இந்த எளியேன் மீதுள்ள, கவிஞரின் அன்பு, எழுத்தாய் வெளிப்பட்டு நிற்பது கண்டு அகம் மகிழ்ந்தேன்.

     வலை உலகில் எழுத, எனக்கு வழி காட்டியவர் இவர். எனது வலையுலக ஆசான்.

     ஆசானிடமிருந்து, மாணவனுக்கு ஓர் பாராட்டு. இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு. உண்மையிலேயே கொடுத்து வைத்தவன்தான் நான்.


நன்றி ஐயா.