02 டிசம்பர் 2014

பந்தக்கால்


அன்பு நண்பருக்கு வணக்கம்,

      ரொம்பவும்தான் நாளாகிப் போனது, உங்களுக்குக் கடிதம் எழுதி.

      பெண் குழந்தை பிறந்திருக்கிறதாமே, சந்தோஷம், வாழ்த்துக்கள்.

      தங்களுக்குத் திருமணமாகி, நான்கு வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.

      மனைவி கருவுற்றவுடன், ஸ்கேன் பார்த்து, பெண் குழந்தை என்றவுடன் கலைத்து,... இனியும் கலைத்தால், மனைவியின் உயிருக்கு ஆபத்து, என்ற டாக்டரின் எச்சரிக்கையினால், கலைக்காமல் விட்டு, பிறந்த பெண் குழந்தை.

     உங்கள் கூற்றுப்படி, உங்களைத் தட்டிக் கேட்க, ஒரு ஆண் மகவு வேண்டும் என்கிற எண்ணத்தை, பொய்யாக்கப் பிறந்த பெண் குழந்தை.

     இனி அடுத்ததாய், ஆண் குழந்தை பிறக்கிற காலம் வரை, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரிவீர்கள், அப்படித்தானே?


    

நண்பர் விமலன், இப்படித்தான் தொடங்குகிறார், தனது பந்தக்காலு சிறு கதையை.

     செய்தி கேள்விபட்டு, மறுநாள் உன்னை பார்க்க வந்தபோது, அதே வெள்ளைச் சிரிப்புடன், வேதனை கலந்து, என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாய், முருகபூபதி.

     எங்க மாமாகிட்ட சொல்லுங்க, ஒரு வேள நான் யெறந்துட்டா, என் பொண்டாட்டிக்கு, வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி.

      அஞ்சலி என்னும் சிறுகதையினைப் படிக்கப் படிக்க உடல் சிலிர்க்கிறது.

      குழந்தையைப் பார்க்க வந்திருந்தவர்களில், பாதிக்கு மேல் சொன்னார்கள், மொதல்லயும் பையன், இப்ப இரண்டாவதும் பையன். யோகக்காரன்.

     பொண்ணு பொறக்கும்முன்னு நினைச்சோம், ஆணுல்ல பொறந்திருக்கு.

     பேசிக் கொண்டிருந்தவர்களில் சிலரிடம், இவனும் மனம் ஒட்டாமல், ஒப்புக்கு பேசிவிட்டு, வார்டினுள் நுழைந்தான். இவன் வருகையை எதிர்பார்த்தது போல் மனைவியும்.

      மௌனம் .........

      பரிமாறிக் கொண்ட பார்வைகளில் நிறைய நிறைய

     ஏன் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேசன் வேணாம்னுட்ட

      ஒரு பெண் குழந்தைப் பெத்துக்கனும்.

      குருத்து சிறுகதையினைப் படித்தபோது, மனமெங்கும் ஓர் மகிழ்ச்சி அலை பரவுவதை உணர முடிந்தது.

      மனைவியைப் பார்த்தான். காபி டம்ளரை நீட்டினாள். முகத்தில் கேள்வியை தேக்கி நின்ற இவனைப் பார்த்த நண்பன் .....

       டேய், ஒங்க்கிட்டயெல்லாம் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கல. பஞ்சாப்புக்கு கேம்ப் போயிருந்தப்ப ஏற்பட்ட பழக்கம்.

       கையில் புள்ளயோட, நஞ்சி போயி

       அனாதையா, விதவையா நின்னா

       கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

        அம்மி மிதித்து ...சிறுகதையில் வரும் நண்பனை, கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறதல்லவா.

     ஒங்க தாத்தா யெறப்புக்கு பின்னாடி, அந்த மனுசர நெனச்சு, அப்பிடி உருகிப் போனா, மாத்தைக்கி ஒரு நா, ஒங்க தாத்தாவ நெனச்சு, வெரதம் இருக்குறதோட மட்டும் இல்லாம, அக்கம் பக்கத்து வீட்டுப் புள்ளைங்க ரெண்டு பேருக்காவது, கூழோ, கஞ்சியோ, சாப்பாடோ, அவ வீட்டுல வச்சுப் போடுவா.  அப்பேர்ப்பட்ட சீவன் அது.

     தம்பி, இன்னைக்கு அது மனசு பூரா ஒங்க தாத்தாதாம்பா.

     பக்கத்து வீட்டுப் பாட்டி, பேசிய பேச்சில், சின்னதாய் ஒரு பொறி தட்டல்.

     அம்மா, அந்த மந்த வீட்ட, சுத்தம் பண்ணிக் குடுத்துரு, பாட்டி கொஞ்ச நா, அங்க போயி, யௌப்பாறிட்டு வரட்டும்.

      பாட்டியின் முகத்தில் சந்தோஷ ரேகை.

      பஞ்சாரம் சிறுகதையைப் படிக்கப் படிக்க, உறவின் மேன்மையும் புரிந்தது, வாழ்வின் அர்த்தமும் விளங்கியது.

பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா
    பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
    தாயின் பெயரும் சதியென்ற நாமமும்

என்று பாடுவார் புரட்சிக் கவி பாரதி.
    

நண்பர் விமலன் அவர்கள், தனது தனித்துவமான நடையால், கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கள்ளம், கபடமற்ற வார்த்தைகளால், பெண்ணியச் சிந்தனையோடு, பெண்மையின் பெருமையினைப் பேசும், சிறுகதைகள் ஒவ்வொன்றினையும், திரைப்படம் போலவே, நம் கண் முன்னே ஓட விடுகிறார்.

என்னை சற்றே ஆழமாக
இம்மண்ணில் பதியனிட்ட
எனது பெற்றோர்களுக்கு
என்று கூறி
பந்தக்கால்
என்னும், தனது சிறுகதைத் தொகுப்பினை
தன் பெற்றோர்களுக்குச்
சமர்ப்பித்துள்ளார்
நண்பர் விமலன்.

இவர்தம் பெற்றோர்
சற்றே அல்ல,
மிக ஆழமாகவே
இம்மண்ணில்
இவரைப் பதியனிட்டதும்,

இவரும்
ஆல்போல்
தழைத்து, கிளை விட்டு
பரந்து பரவி, உயர்ந்து நிற்பதும்,
இவரது
ஒவ்வொரு வார்த்தைகளிலும்,
அவ்வார்த்தைகளில் உள்ள
ஒவ்வொரு எழுத்திலும்
தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.


வா ழ் த் து க் க ள்   ந ண் ப ரே.