25 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 5


அத்தியாயம் 5 ஹைதர் அலி


புதிய மன்னர் உம்தத்-உல் உம்ரா வாழ்க
தளபதி ஜோசப் சுமித் வாழ்க

முத்து வடுகநாதரைத் தீர்த்துக் கட்டிய
மாவீரத் தளபதி பான் ஜோர் வாழ்க

கைக் கூலிகளின் முழக்கங்கள் சிவகங்கைச் சீமையின் அரண்மனையில் ஓங்கி ஒலித்தன.

     சசிவர்ணத் தேவரும், முத்து வடுகநாதரும் வேலுநாச்சியாரும் உலாவிய அரண்மனை இன்று ஆங்கிலேயர் வசம்.


     சிவகங்கைச் சீமையின் பெயரைக் கூட மாற்றி விட்டார்கள்.

உசைன் நகர்

---

    வேலு நாச்சியார் சிவகங்கைச் சீமையை விட்டு, விருப்பாட்சிக்கு வந்து, ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

     எட்டாண்டுகளில், ஒரு நாள் கூட ஓய்வெடுக்கவில்லை வேலு நாச்சியார். படை திரட்டிக் கொண்டிருந்தார். பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

     1780 ஆம் ஆண்டு. ஐப்பசி மாதம் 5 ஆம் நாள். விருப்பாட்சி வயல் வெளிகளில் எல்லாம், எங்கு பார்த்தாலும் வீரர்கள், வீரர்கள்.

      ஆண்கள் படையை மட்டுமல்ல. பெண்கள் படை ஒன்றினையும் உருவாக்கியிருந்தார் வேலு நாச்சியார்.

       பெண்கள் படையின் பெயர் என்ன தெரியுமா?

உடையாள் பெண்கள் படை

      தன்னைக் காத்த, தன்னைக் காக்கத் தன் இன்னுயுரையும் ஈந்த, உடையாளை, வேலு நாச்சியார் மறக்கவே இல்லை. இன்று உடையாளின் பெயரில் ஒரு படை.

      பெண்களின் படைக்குத் தலைமையேற்றது ஒரு பெண் சிங்கம்.

குயிலி.

     வாட் படை ஒன்றும், வளரிப் படை ஒன்றும் உருவாக்கப் பட்டது. இப்படைகளுக்குத் தலைமை ஏற்றவர்கள் யார் தெரியுமா?


வாட் படைக்குத் தலைமை ஏற்றவர்
பெரிய மருது
வளரிப் படைக்குத் தலைமை ஏற்றவர்
சின்ன மருது

மருது சகோதரர்கள்

     படை வீரர்கள், சிவகங்கைச் சீமையினை மீட்க எழுச்சி கொண்டு, புறப்படத் தயாரான போது, தூரத்தே ஓர் புழுதிப் புயல். பீரங்கிப் படை ஒன்று விருப்பாட்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

---

    


திண்டுக்கல் கோட்டை. அரியாசனத்தில் ஹைதர் அலி. எதிரில் அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையும், வேலு நாச்சியாரும்.

வாருங்கள்

    ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த, ஹைதர் அலி, இருவரையும் வரவேற்றார். வேலு நாச்சியார் ஒரு பெண்தானே என்ற எண்ணம் ஹைதர் அலியின் மனதில்.

     இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள்.

     என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன்.

     வேலு நாச்சியார் பேசத் தொடங்கிய, அந்நொடியே, வியப்பின் உச்சிக்கே சென்றார் ஹைதர் அலி. அவரது காதுகளையே, அவரால் நம்ப முடியவில்லை. தான் காண்பது கனவா, கேட்பது நினைவா என்பது கூட புரியவில்லை.

      ஹைதர் அலியின் வியப்பிற்குக் காரணம் என்ன தெரியுமா? வேலு நாச்சியார் பேசிய மொழி. வேலு நாச்சியார் தமிழில் பேசவில்லை, உருதுவில் பேசினார். ஹைதர் அலியின் தாய்மொழியான உருதுவில் பேசினார்.

     வேலு நாச்சியார், தனது தாய் மொழியை அல்லவா, இவ்வளவு சரளமாகப் பேசுகிறார். நம்மவே முடியவில்லை ஹைதர் அலிக்கு.

     உங்கள் மாவீரத்தையும், உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம், வெள்ளையர்கள் குலை நடுங்குவதையும் நான் அறிவேன்.

     தங்களின் எதிரிகளான வெள்ளையர்கள்தான் எங்களுக்கும் எதிரிகள்.

     நாங்கள் வெள்ளையரிடம் இழந்த, எங்களது நாட்டை, மீட்டாக வேண்டும். வீரத்திற்கும் விவேகத்திற்கும் எங்களிடம் பஞ்சமில்லை.

     ஆனால் வெற்றியை ருசிக்க இவை மட்டும் போதாது என்பதை அறிவேன். நவீன ஆயுதங்களும், போர் வீரர்களும் எங்களுக்குத் தேவை. இவ்விரண்டையும் கேட்கத்தான் தங்களை நாடி வந்துள்ளேன்.

     உருதுவிலேயே பேசி முடித்தார்.

     ஹைதர் அலியின் கண்களில் இருந்து, கண்ணீர் துளி மெல்ல எட்டிப் பார்த்தது.

     தாயே, முதலில் உங்களிடம், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். ஏற்கனவே உதவிகள் வேண்டி, தாண்டவராயன் பிள்ளை, உங்கள் சார்பில் ஓலை அனுப்பினார்.

     கணவரைப் பறிகொடுத்த, ஒரு பெண்ணைச் சந்திப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விட்டேன். அதற்காக இப்பொழுது வருந்துகின்றேன்.

      உங்கள் வாழ்வின் அத்துணை சோகங்களையும் புறந் தள்ளிவிட்டு, நாட்டை மீட்பதற்காக, நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கண்டு மெய் சிலிர்க்கின்றேன் தாயே, மெய் சிலிர்க்கின்றேன்.

      உங்களைப் போன்ற ஒரு வீரத் தாயை இதுவரை நான் கண்டதில்லை, தாயே. வீரம், விவேகம், நாட்டுப் பற்று, இவற்றோடு, என் மொழியை, எங்களின் தாய் மொழியை, உருதுவை, தங்களின் தாய் மொழிபோல், தாங்கள் உச்சரிக்கும் அழகு கண்டு வியக்கின்றேன் தாயே, வியக்கின்றேன்.

     என்னால் மட்டுமல்ல, எங்கள் மத போதகரால் கூட, உருதுவை, இவ்வளவு இனிமையாகவும், அதே சமயத்தில் ஆவேசமாகவும் உச்சரிக்க இயலாது, தாயே, உச்சரிக்க இயலாது.

     உங்களுக்கு உதவிட, எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பெருமை கொள்கிறேன். உங்களின் தாய் மண்ணை மீட்கும் உரிமைப் போருக்கு, எனது ஆதரவும், எனது உதவியும் என்றும் உண்டு தாயே. என்றும் உண்டு.

      பன்னிரெண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கானத் துப்பாக்கிகள், ஆயிரக் கணக்கானப் படை வீரர்களுடன், ஹைதர் அலியின் படை, இதோ விருப்பாட்சியை நெருங்கி விட்டது.
     

ஹைதர் அலி, இப்படைக்குத் தலைமையேற்று நடத்த, தன் தளபதிகளுள் ஒருவரை அனுப்பியிருக்கலாம். ஆனால் வேலு நாச்சியாரின், நாட்டுப் பற்று கண்டு மெய் சிலிர்த்த ஹைதர் அலி, தனது புதல்வனையே அனுப்பினார்.

திப்பு சுல்தான்.

                                                                                                                         - தொடரும்