29 ஜனவரி 2015

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

     ஆண்டு 1963. சென்னை. பத்திரிக்கை அலுவலகம். தனது அறையில் அடுத்த நாள் வெளிவர வேண்டிய கட்டுரையினை அவர் எழுதிக் கொண்டிருந்தார். அவரது இயற்பெயர் மூக்காண்டி.

     பதினேழு வயதுடைய இரு பெண்கள், அவரது அறைக்குள் நுழைந்தனர். ஆழ்ந்த சிந்தனையோடு, உலகையே மறந்து, எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூக்காண்டி, பல நிமிடங்கள் கடந்த நிலையில், நிமிர்ந்து பார்க்கிறார். எதிரில் இரு பெண்கள்.

வாருங்கள், நீங்கள் யாரம்மா? என்ன வேண்டும்?


     இரு பெண்களில் ஒருவர், ஏதோ கூற முற்படுகிறார். அப் பெண்ணின் கண்கள் பாசத்தைப் பொழிகின்றன, ஆனாலும் வாயில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுக்கின்றன.

     தயங்கித் தயங்கி ஏதோ கூற முற்பட்டவர், வார்த்தைகள் வெளிவராத காரணத்தால், மேசை மேலிருந்து, ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து, இரண்டே இரண்டு வரிகளை, வேகமாக எழுதி, மூக்காண்டியின் முன் நீட்டினார்.

     ஒன்றும் புரியாமல், கை நீட்டி, அந்த துண்டுக் காகிதத்தை வாங்கிப் படித்தவர், அடுத்த நொடி அதிர்ந்து போனார்.

என் தாத்தாவின் பெயர் குலசேகர தாஸ்
என் அம்மாவின் பெயர் கண்ணம்மா.

     மூக்காண்டியின் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின. பலமுறை வார்த்தைகளை உச்சரிக்க முயன்றும், தோற்றுப் போகிறார். உதடுகள் அசைகின்றனவே தவிர, வார்த்தைகள் வெளிவராமல் வாய்க்குள்ளேயே முடங்கிப் போகின்றன.

     என்ன செய்வதென்று அறியாமல் தவித்தவர், அந்த சீட்டிலேயே, மேலும் இரண்டே இரண்டு வார்த்தைகளை எழுதி, அப்பெண்ணிடம் நீட்டினார்.

என் மகளா?

     ஆமாம் என அப்பெண், தலையசைக்க, இருக்கையில் இருந்து வேகமாய் எழுந்து, தன் மகளை கட்டி அணைத்து நெகிழ்ந்து போகிறார் அம் மனிதர்.

     நண்பர்களே, இது கற்பனையல்ல, கலப்படமற்ற உண்மை. இந்த மூக்காண்டி யார் தெரியுமா? இவர்தான்,


தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம்.

     அந்த பத்திரிக்கை அலுவலகம்தான் ஜனசக்தி பத்திரிக்கை அலுவலகம்.

     தந்தையைக் காண வந்த பெண்ணின் பெயர் குமுதா. இவரது தாய்தான் ஜீவாவின் முதல் மனைவி கண்ணம்மா. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே, கண்ணம்மா இறந்துவிடவே, தாய் மாமனிடம் வளர்ந்தவர் குமுதா.

      பெற்ற மகளைக் கூட மறந்து, பொது வாழ்வினுக்குத் தன்னையே முழுமையாய் ஈந்த மாமனிதர் தோழர் ஜுவா அவர்களைப் போற்றுவோம்