15 பிப்ரவரி 2015

சுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்

     

இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும், சுவரைத் தட்டிக்கொண்டே நடந்தான், ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.

சுவரைத் தட்டுங்கள் கதவு திறக்கும்.


     நண்பர்களே, என்னவொரு கவித்துவமான தலைப்பு, பார்த்தீர்களா.

     நல்லவரை கெட்டவர் என்று கணக்கிட்டோ, கெட்டவரை நல்லவர் என்று மதிப்பிட்டோ, மற்றவர்கள் ஏமாந்து போகலாம். நம்மை மதிப்பிடுவதில் நாம் ஒரு நாளும் ஏமாந்து போகக் கூடாது.

     வாழ்க்கை என்னும் தேர்வில், உங்களுக்குத் தரப்படுகிற, வினாத் தாளில், ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது .....

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

     உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான். வருபவர்கள் எல்லோரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது.

     அவரை மலைபோல் நம்பினேன் கை கழுவி விட்டார். இவரை ஏகத்துக்கும் எதிர்பார்த்தேன், ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் தராது.

      உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவாதவர்கள் பற்றிய சலிப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

     உங்கள் பாதை. உங்கள் பயணம். உங்கள் இலக்கு. உங்கள் திட்டம். உலகம் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி.

     இருக்கும் நேரத்தில், இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே புத்திசாலித்தனம். அதற்கு வேண்டியது, மலையளவு மன உறுதி.

     உங்களை நீங்களே நம்புங்கள், இன்னும் தொடர்ந்து செல்லுங்கள்.

உங்கள் பயணத்தின் ஒரே துணை ............ நீங்கள்தான்.

     உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள், உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள்.

    உங்களைத் தள்ளிவிட, அவர்கள் செய்த அதிரடி வேலைதான், உங்கள் தகுதிக் குறைவை, உங்களுக்கே உணர்த்தி இருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும்.

      உங்கள் பலவீனங்களை அறிந்து, பலங்களை உணர்ந்து, இன்னும் வலிவடைய உதவியவரை, வெறுத்து விடாதீர்கள். அதே நேரம், அவரை உங்கள் நண்பராகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

      உலகமே உங்கள் பலங்களைப் பாராட்டும் போது, உங்கள் பலவீனங்களைச் சுட்டிக் காட்ட, அவர் அதே நிலையில், உங்கள் வாழ்க்கை முழுவதும் வேண்டும்.

காட்டிக் கொடுத்தவரைக் காப்பாற்றுங்கள்.........

     பழகியவர்கள் எதிர்க்கும்போது, பதட்டம் வருவது இயற்கை. ஆனால் அந்தப் பதட்டம்தான் நம்மை வீழ்த்துமே தவிர, அவர்களின் பகைமை நம்மை வீழ்த்தாது.

     நண்பனே பகைவனானால் கூட, நம்மை வீழ்த்தும் வல்லமை அவனுக்கு இல்லை.

     எனவே கும்பிட்ட கைகள், குழி வெட்ட வந்தால், புன்னகையோடு பொறுத்திருங்கள். அவர்கள் வெட்டிய குழியில், உங்கள் அடுத்த வெற்றிக்கான விதைகளைப் போடுங்கள்.

கும்பிட்ட கைகளே, குழி வெட்ட வந்தால் .......

     சாமார்த்தியம் உள்ள மனிதர்கள், சதுரங்க விளையாட்டில் அமரும்போது, பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு.

    வாழ்க்கை கூட, ஒவ்வொரு விடியலிலும், உங்களை விளையாட அழைக்கின்றது.

     அந்த அழைப்பை விளையாட்டாய் எதிர்கொள்ளாமல், விருப்பமுடன் எதிர் கொண்டால், வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர் ஆவீர்கள்.

    களம் எத்தனை கடிதாய் இருந்தாலும், கையில் இருக்கும் கருவியை, கையாளத் தெரிந்தவனுக்கு கவலையில்லை.

    வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை, முன்னைவிட, இன்னும் வலிமையாய் செதுக்கித்தரப் போகிறது.

     பேராட்டங்களை, விரும்பி எதிர் கொள்ளுங்கள். அவை சுகமானவை.

சில யுத்தங்கள் சுகமானவை.
     

நண்பர்களே, தலைப்பு இடது பக்கம். நம்பிக்கை என்னும் புது இரத்தத்தினை உடலினில் பாய்ச்சி, நாடி நரம்புகளை எல்லாம், முறுக்கேறச் செய்யும், வலிமையான வார்த்தைகள் வலது பக்கம் என, நூல் முழுவதும், பக்கத்துக்குப் பக்கம் தன்னம்பிக்கை வித்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

     புத்தகத்தின் பெயரே கூட, ஒரு புத்துணர்வினை, புதுப் பொலிவினை அளிக்கும் வல்லமை வாய்ந்தது.





வாழ்வில் போராடுங்கள், வாழ்க்கையுடன் அல்ல.

ஆசிரியர், யார் தெரியுமா?

வாழ்வின் கவனக் குறைவாக இருப்பவர்களை,
உசுப்பி
அவர்களின் போக்கையும், பார்வையையும் மாற்றும்
சாட்டை சொடுக்குகளுக்குச் சொந்தக்கார்ர்
நமது நம்பிக்கை
இதழின் ஆசிரியர்
மரபின்மைந்தன் முத்தையா.

     நண்பர்களே, யாருடைய வாழ்க்கை முறையையேனும், நீங்கள் மாற்ற நினைப்பீர்களேயானால், அவருக்கு, இந்த நூலை படிக்கக் கொடுக்கலாம் அல்லது பரிசாகவும் கொடுக்கலாம்.


வாழ்வில் போராடுங்கள், வாழ்க்கையுடன் அல்ல
விஜயா பதிப்பகம்,
20, ராஜ வீதி,
கோவை -1
தொலைபேசி 2394614, 2382614


விலை ரூ. 120