16 ஏப்ரல் 2015

பண்ணாராய்ச்சி வித்தகர்


ஆண்டு 1949. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி, விழா அரங்கு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மேடையைப் பார்த்தவாறு, மேடையில் நடு நாயகமாய் அமர்ந்திருக்கும், அம் மனிதரைப் பார்த்தவாறு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

     கருணை பொங்கும் கண்கள். பரந்து விரிந்த நெற்றி. ஒளி வீசிப் பிரகாசிக்கும் முகம். ஒலிப் பெருக்கியின் முன்வந்து, பாடத் தொடங்குகிறார்.

     தமிழிசைப் பாடல்கள் அரங்கு முழுதும் நிரம்பி வழியத் தொடங்குகிறன. மாணவர்கள் அனைவரும், மெய் மறந்து, இவ்வுலகினையே மறந்து, தமிழிசையில் மூழ்கி, புதியதோர் உலகில், காற்றுடன் கலந்து, காற்றோடு காற்றாய் மிதக்கின்றனர்.

     உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டே சென்றவர், திடீரென்று பாடலை நிறுத்தி, பாடலின் பொருளினை விளக்குகிறார்.

     பாடலின் பொருளினை விளக்கிக் கொண்டே சென்றவர், பொருளினை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறி முடித்த, அடுத்த நொடி, பாடலினை, விட்ட இடத்தில் இருந்து, அதே உச்சஸ்தாயியில் தொடருகிறார்.

     மாணவர்களுக்குத் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. இப்படியும் ஒருவரால் பாட முடியுமா?

      கண்களைக்கூட இமைக்க மறந்து, தமிழிசையில் உருகித்தான் போகின்றனர்.

     நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், கல்லூரி முதல்வர், அப்பாடகருக்கு, ரூபாய் முப்பத்து ஐந்தினை, அன்பளிப்பாய் வழங்கி மகிழ்கிறார்.

     ரூபாய் முப்பத்து ஐந்து என்பது, அக்காலத்தில் மிகப் பெரிய தொகை. உண்மைதான், பெரிய தொகைதான்.

     1949 ஆம் ஆண்டில், ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? வெறும் 60 ரூபாய்தான். அப்படியென்றால், 35 ரூபாயில் அரைப் பவுன் நகை வாங்க முடியும். இப்பொழுது புரிகிறதா, ரூ.35 ன் அன்றைய மதிப்பு என்ன என்று.

     கல்லூரியை விட்டு வெளியே வருகிறார், அந்தத் தமிழிசை வித்தகர். எதிரிலே ஒருவர், உடலெல்லாம் வியர்வையால் வழிய வழிய, வெகு வேகமாக, ஓட்டமும் நடையுமாகச் செல்வதைக் காண்கிறார்.

     பார்த்த முகமாக இருக்கிறதே. உற்று நோக்குகிறார். திருவையாறு இசைக் கல்லூரியில், தன்னிடம் இசை பயின்ற மாணவன் அல்லவா இவன். எதற்காக இத்தனை வேகமாகச் செல்கிறான்.

      அம்மாணவனின் பெயரினைக் கூறி அழைக்கிறார். மாணவர் திரும்பிக் குரல் வந்த திசையைப் பார்க்கிறான். அடுத்த நொடி, ஐயா என்று அழைத்தவாரே, ஆசிரியரை நோக்கி ஓடி வருகிறான்.

     என்ன தம்பி, இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறாய்?

    அம்மாணவனின் கண்கள் கலங்குகின்றன. வார்த்தைகள் வெளி வர மறுக்கின்றன. கண்களைத் துடைத்தவாறே, ஒருவாறு சமாளித்தவாறு, பேசுகிறான்

    திடீரென்று எனது அப்பா இறந்து விட்டார் ஐயா. இறுதிச் சடங்குகளைச் செய்தாக வேண்டும். வீட்டிலோ ஒரு காசு கூட இல்லை. அதனால், இந்த மோதிரத்தை அடகு வைத்துப் பணம் பெறுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன்

    மாணவனின் நிலை கண்டு கலங்கியவர், கொஞ்சம் கூட தாமதிக்காமல், ஒரு நொடி கூட யோசிக்காமல், தன் சட்டைப் பையில் இருந்த ரூ.35 ஐயும் எடுத்து, அம்மாணவனுக்குத் தருகிறார்.

     மோதிரத்தை அடகு வைக்காதே. இந்தா, இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு, ஆக வேண்டிய காரியங்களைப் பார்.

     நடுங்கும் கரங்களால், பணத்தைப் பெற்றுக் கொண்ட அம்மாணவன், தனது ஆசிரியரின் பாதம் பணிந்து வணங்கி, தன் வீட்டை நோக்கி  ஓடத் தொடங்குகிறான்.

     மாணவன் ஓடிக் கொண்டிருக்கும் திசையினையே, சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்ற ஆசிரியர், அப்பொழுதுதான் உணருகிறார், தான் திரும்பவும், தன் வீடு செல்வதற்கு, தன்னிடம் ஒரு பைசா கூட இல்லை என்பதை.

     ஆசிரியரின் வீடு எங்கிருக்கிறது தெரியுமா? தஞ்சையில் அல்ல. கும்பகோணத்தில் இருக்கிறது. ஐம்பது கிலோ மீட்டர் தொலைவினைக் கடந்தாக வேண்டும், ஆனால் பேரூந்தில் பயணிக்கத்தான் கையில் காசே இல்லை.

     ஆசிரியர் கலங்கவில்லை. தன் மாணவனுக்குத், தன்னால் இயன்ற உதவியைச் செய்ய முடிந்ததே, என்ற ஓர் மன நிறைவு அவர் முகத்தில் தெரிகிறது.

     நடக்கத் தொடங்குகிறர். நடக்கிறார், நடக்கிறார் 50 கிலோ மீட்டர் தொலைவினையும் நடந்தே கடக்கிறார்.

      நண்பர்களே, இந்த ஆசிரியர் யார் தெரியுமா?


தமிழிசையினையே நேசித்து
சுவாசமாய் சுவாசித்து
தமிழிசைக்காகவே வாழ்ந்து
நாடி, நரம்பு, உதிரம் என
உடலே இசையாய் உருப் பெற்ற, மாமனிதர்

பண்ணாராய்ச்சி வித்தகர்
ஏழிசைத் தலை மகன்
குடந்தை ப.சுந்தரேசனார்.
---

     சங்க இலக்கியப் பாடல்களில் புதைந்து கிடந்த, இசை உண்மைகளை, ஓராண்டு, ஈராண்டு அல்ல, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, ஆராய்ந்து வெளிப் படுத்திய பெருமைக்குரிய, சுந்தரேசனார், 28.5.1914 இல் சீர்காழியில் பிறந்தார்.

     சீர்காழியில் பிறந்த போதும், கும்பகோணத்திலேயே வாழ்ந்ததால், இவர் பெயருக்கு முன்னால், குடந்தையும், தானே வந்து ஒட்டிக் கொண்டது.

     சுந்தரேசனார் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற போதிலும், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, வடமொழி என ஐந்து மொழிகளை முற்றாய் அறிந்தவர்.

     1946 ஆம் ஆண்டு, திருக்கொள்ளம் புதூரில் நடைபெற்ற, யாழ் நூல், அரங்கேற்ற விழாவின்போது, விபுலானந்த அடிகளைச் சந்திக்கும் நல் வாய்ப்பினைப் பெற்றார்.

     இதன் பயனாய், விபுலானந்த அடிகளாருடன், மூன்று மாதங்கள் தங்கி, பாலைத் திரிபியலை தெளிவுறக் கற்றுத் தேர்ந்தார்.

     சுவாமி விபுலானந்தரின் மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக, தன் மூன்றாம் மகனுக்கு, விபுலானந்தன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

    ஆனாலும் இசை தவிர வேறு அறியா இவரிடத்து, இயற்கை தன் திருவிளையாடலைக் காட்டியதுதான் சோகத்திலும் சோகம்.

     ஆம் இவரது பிள்ளைகள் மூவரில் ஒருவர் கூட, நிலைத்து வாழவில்லை. சிறு வயதிலேயே, இயற்கையோடு இரண்டறக் கலந்து, துயரத்தினை மட்டுமே, தங்களது தந்தைக்குப் பரிசாய் வழங்கினர்.
    

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள், தனது அரிய உழைப்பின் காரணமாக சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம் முதலான நூல்களில் பொதிந்துள்ள, இசைக் குறிப்புகளை வெளிக் கொணந்து, இவ்வுலகிற்கு உணர்த்தினார்.

     உலகில் தோன்றிய இசை முறைமைகளுள், முதலில் தோன்றியது, தமிழிசையே எனத் தன் வாழ்நாள் முழுதும் பாடிப் பாடி மெய்ப்பித்தார்.

     தமிழிசையினை மட்டுமே, தன் வாழ்நாள் முழுதும் பாடி மகிழ்ந்த, இவரது குரல் 9.6.1981 இல் காற்றிலே கரைந்து மறைந்தது.

    கடந்த பல நூற்றாண்டுகளாகவே, மறதி என்னும் கொடு நோயின் பிடியில் சிக்கி, உழன்று வரும், தமிழகம், பண்ணாராய்ச்சி வித்தகரை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தே போனது.

     தமிழகம் மறந்த பண்ணாராய்ச்சி வித்தகரை மீண்டும் எழ வைத்து, அவரது ஓங்காரக் குரலினை, இவ்வுலகு முழுவதும், மீண்டும் ஒலிக்க வைத்திருக்கிறார் ஒரு மீட்பர்.


முனைவர் மு.இளங்கோவன்
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி

     புதுச்சேரியில், கல்லூரியில், தமிழ்ப் பேராசிரியர் பணி. கை நிறைய சம்பளம். அன்பார்ந்த மனைவி, பாசமிகு குழந்தைகள்.

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என இவர், தன் வாழ்வு நலனை மட்டுமே எண்ணிக் காலம் கழித்திருக்கலாம். செல்வத்தைச் சேர்த்து சேர்த்து, இன்ப வாழ்வு வாழ்ந்திருக்கலாம்.

     ஆனாலும் இவர் மனதில் ஓர் தேடல். தேடல் என்றால் சாதாரணத் தேடலில்லை. மக்களே மறந்துபோன ஒன்றை, மீண்டும் உருவாக்கி, தமிழிசைக்குப் பெருமை சேர்க்க வேண்டும், தமிழைசையைக் காக்க வேண்டும், தமிழிசையை வளர்த்த, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனாரின், பணியினை, இப்பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற ஓர் உன்னத் தேடல்.

தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ்ம் யெய்திக் கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போல் நானும்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்ற மகாகவியின் வார்த்தைகளுக்கு இணங்க வீறு கொண்டு எழுந்தார்.

     ஓராண்டு, இரண்டாண்டல்ல, இருபத்தைந்து ஆண்டுகள் தேடினார், தேடினார், பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலினைத் தேடினார். வானொலி நிலையம், தமிழறிஞர்களின் இல்லங்கள் எனத் தேடித் தேடி அலைந்தார்.

    ஒலி நாடாக்களில் பதிவு செய்யப் பெற்று, மூலையில் முடங்கிக் கிடந்த, பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலினை முதலில் மீட்டெடுத்தார்.

    அடுத்து பண்ணாராய்ச்சி வித்தகரோடு பழகிய, பண்ணாராய்ச்சி வித்தகரை அறிந்த, வயது முதிர்ந்த தமிழறிஞர்களை, இசை ஆர்வலர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்தார்.

     பண்ணாராய்ச்சி வித்தகரோடு பழகிய, பாசமிகு நேசங்களின், அந்நாள் நினைவுகளை, காணொளியாய் காட்சிப் படுத்தினார்.

      முனைவர் மு.இளங்கோவன் அவர்களின், அயரா உழைப்பு, ஓர் ஆவணப் படமாய், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் காந்தக் குரலினை, மீண்டும் காற்றில் தவழச் செய்யும், உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்யும்  உன்னதப் படைப்பாய் வெளி வந்துள்ளது.

   

மலேசியாவில் வெளியீட்டு விழா


இலண்டனில் வெளியீட்டு விழா

மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் என இப்பூமிப் பந்தின் பல்வேறு இடங்களில் வெளியிடப் பெற்ற
பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை ப.சுந்தரேசனார்
ஆவணப் படம்
கடந்த 10.4.2015 வெள்ளிக் கிழமை மாலை, திருவையாற்றில் திரையிடப் பெற்றது.

நானும்
நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
இருவரும், அன்று மாலை 5.30 மணியளவில், திருவையாறு, திருமஞ்சன வீதி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கட்டிடத்திற்குச் சென்றோம்.

     கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருவையாற்றில், ஆண்டு தோறும், தமிழிசை விழாவினை சிறப்புற நடத்திவரும், தமிழ்நாடு நாட்டுப் புற கலைஞர்கள் மாமன்ற, மாநிலத் தலைவர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்களும்,
தமிழ்ப் பேராசிரியரும்
செம்மொழி இளம் அறிஞர்
விருது பெற்ற
முனைவர் மு.இளங்கோவன் அவர்களும்
முகம் மலர வரவேற்றனர்.
      

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் உருவம், கைதேர்ந்த கலைஞர் ஒருவரால், களிமண் சிற்பமாக உருப் பெறும் காட்சியில் தொடஙகுகிறது ஆவணப் படம்.

தொடுதோல் மரீஇய வடுஆழ நோன்அடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை

பத்துப் பாட்டில், பெரும்பாணாற்றுப் படையில், முல்லை நிலக் கோவலரின் குழலிசையை விளக்கும் பாடல், பண்ணாராய்ச்சி வித்தகரின் காந்தக் குரலில், உரிய பண்ணோடு பாடும் இசைப் பொழிவோடு தொடர்கிறது.

     வித்தகரின் குரல் பின்ன்னியில் ஒலிக்க, மாடுகளை மேய்க்கும் ஆய்ர் குல மகன் ஒருவர், புல்லாங்குழல் இசைக்கும காட்சி, பாடலுடன் ஒன்றிப் பயணிக்கிறது.

     சுந்தரேசனார் படிய இசைப் பாடல்கள், நிழற் படங்கள், அவர் காலத்திய தமிழறிஞர்களின் கருத்துக்கள் என காணொளி விறு விற்றுப்பாய், தொய்வின்றி நகர்கிறது.

      சுந்தரேசனாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற வகையில், பொருத்தமாய், காட்சிகள் தொடந்த வண்ணம் இருக்கின்றன. கரை புரண்டோடும் காவிரி, திமிறிப் பாயும் கல்லணை, கடற் கரைக் காட்சிகள் என சுந்தரேசனாரின் குரலோடு நடனத்தையும் பின்னிப் பிணைத்து, இரண்டறக் கலந்து, நம்மை ஆடாமல் அசையாமல் இருக்கையிலேயே கட்டிப் போடுகிறது இந்த ஆவணப் படம்.

     சீறிப் பாயும் காவிரியின் ஓட்டத்தில், கட்டுமரம் ஒன்றினை மிதக்க விட்டு, அதன் மீது நடன மங்கை ஒருவரை, பாங்குற நடனமாட வைத்து, மழையைப் போற்றும் வரிகளின்போது, காவிரி நீரினை வணங்கி, அம்மங்கை ஆடும் நடனம் கண்களை விட்டு நீங்காது நிலைத்து நிற்கின்றது.
    

பண்ணாராய்ச்சி வித்தகரின் செம்மாந்த தமிழிசைப் பணியினைப் போற்றும் வகையில், திருத்தவத்துறை இராச கோபுரத்தில், சுந்தரேசனாரின் திருஉருவும் இடம் பெற்றிருப்பதை காணும்போது நெஞ்சம் மகிழ்ச்சியால் விம்முகிறது.

     ஆவணப் படத்தின் நிறைவில், பண்ணாராய்ச்சி வித்தகரின் மறைவுச் செய்தியை, அறியும் போது, ஒலிக்கும் பாடல் இருக்கிறதே, அப்பாடலின் தொணி இருக்கிறதே. அது கல் மனதையும் கரைக்கும் வல்லமை வாய்ந்தது.

இசையின் தனித் தமிழை எங்கும் பரப்பி
வசையின்றிக் காத்த வளவன்
திசைதோறும் பண்ணாய்ந்த பாவாணன்
பாடும் வானம்பாடி கண்ணோய்ந்தான்

யார் இனிமேல் காப்பு
யார் இனிமேல் காப்பு

சுந்தரேசன் பாடும் சொக்கும் தமிழிசையால்
மந்திரப் பண்ணும் மலிந்ததே

என் தமிழை யாரே இனி இசைப்பார்
யாரே சிலம் பொலிப்பார்
யாரே பண்ணாய்வார் இனி

    ஆவணப் படம் நிறைவுற்ற பிறகும், பாடலின் கடைசி மூன்று வரிகள், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

என் தமிழை யாரே இனி இசைப்பார்
யாரே சிலம் பொலிப்பார்
யாரே பண்ணாய்வார் இனி


ஆனாலும் ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது. முனைவர் மு.இளங்கோவன் போன்ற தன்னலமற்ற, தமிழிசை போற்றும் தமிழறிஞர்கள் இருக்கும் வரை
யாவரும் நம் தமிழை இனி இசைப்பர்
என்பது புரிகிறது.

------------------------------------------------------------..
தொடர்புக்கு
முனைவர் மு.இளங்கோவன்

அலைபேசி
94420 29053
95009 40482

 மின்னஞ்சல்
muelangovan@gmail.com