30 ஏப்ரல் 2015

சரித்திரம் படைக்கும் சன்னா நல்லூர்

     

ஆண்டு 1962. தஞ்சாவூர் மாவட்டம். மெலட்டூர். வெட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த, அணைக் கட்டை, நீர் தேக்கும் கண்மாயாக மாற்றி அமைக்கும் பணி நிறைவுற்ற நிம்மதியில் நிற்கிறார், அந்தப் பொதுப் பணித் துறையின் இளம் பொறியாளர்.

     தமிழக முதல்வர் கர்மவீரர் காமராசரும், பொதுப் பணித் துறை அமைச்சர் ராமையா அவர்களும், விவசாயத் துறை அமைச்சர் கக்கன் அவர்களும், பல முறை நேரில் வந்து பார்வையிட்ட, கண்மாய் பணி நிறைவுற்றிருக்கிறது.

    ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடுகிறது. ஆற்றில் மட்டுமல்ல,அந்த இளம் பொறியாளர் உள்ளத்திலும், ஏதேதோ எண்ணங்கள், கரை புரண்டோடிக் கொண்டிருக்கின்றன. பணி நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை, ஓர் நிறைவு இல்லை.


      பணம் பணம் என ஒவ்வொருவரும் அலையாய் அலைவதையும், வாழ்வென்பதே பணத்திற்காகத்தான் என பாடாய், பாடுபடுவதையும் நேரில் கண்டதால் ஏற்பட்ட சலிப்பு, உள்ளத்தை நெருடிக் கொண்டே இருக்கிறது.

     பணத்தை மட்டுமே தேடி ஓடுவதுதான் வாழ்வின் குறிக்கோளா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. வாழ்வில் சாதிக்கக் கூடிய சாதனைகள் எவ்வளவோ, நமக்காகக் காத்திருக்கின்றன.

     சட்டைப் பையில் இருந்து, பணக் கட்டு ஒன்றினை வெளியே எடுக்கிறார். இரண்டு ரூபாய் கட்டு. நூறு சலவைத் தாள்கள்.

      இன்று இரண்டு ரூபாய் நோட்டுக்களே புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. ஆனால் 43 வருடங்களுக்கு முன், இரண்டு ரூபாய் நோட்டின் மதிப்பே தனி.

     ஒரு நொடி சிந்தித்தவர், அடுத்த நொடி, இரண்டு ரூபாய் கட்டை, ஆற்று வெள்ளத்தில் வீசினார்.

      நூறு வெண் புறாக்களைப் பறக்க விட்டதைப் போல், நோட்டுகள், ஒவ்வொன்றும் காற்றில் படபடத்து, உயரே, உயரே பறந்து, பின் மெதுவாய், மிக மெதுவாய், ஆற்றில் இறங்குகின்றன.

         ஆற்றின் இரு கரைகளிலும் கூடியிருந்த மக்களில் பலர், ஆற்றில் குதித்து, வேகமாய், வெகுவேகமாய் நீந்துகின்றனர், ரூபாய் நோட்டுக்களை எடுக்க.

    ஆற்றில் நீந்தும் மனிதர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த, அந்த இளம் பொறியாளர், அக்கணமே ஓர் முடிவுக்கு வருகிறார்.
இனி வேண்டாம் இந்த வேலை.

     இராணுவத்தில் சேர்ந்தார்

     1965 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் இரு இந்திய, பாகிஸ்தான் போர்களில் பங்கு கொண்டார். விழுப்புண் விருது ( Wound Medal )  உட்பட 13 மெடல்களை இவரை நாடி வந்து பெருமையடைந்தன.

விருதுகளின் உச்சமாய், உன்னதமாய் ஓர் விருது
குடியரசுத் தலைவரின் திருக்கரங்களால்
வசிஷ்ட சேவா விருது.


இவரது சாதனைகளின் உச்சம்
தக்ஷிண் கங்கோத்ரி

     இந்தியத் தென் துருவ ஆய்வுத் தளமான தக்ஷிண் கங்கோத்ரிக்கு தலைமைப் பொறுப்பேற்று, ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்களை, பூமிப் பந்தின் தென் துருவத்தில், உறை பனி உலகில் கழித்தார்.

     தென் துருவத்திற்குச் செல்லும் முன், தன் சொந்த ஊருக்குச் சென்று, தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் இருந்து, மண் எடுத்துச் சென்று, மணல் என்பதே எங்கும் இல்லாத, பனிப் பிரதேசத்தில் தூவினார்.

     தென் துருவத்தில் இன்று இவரது வீட்டு மணலும் இரண்டறக் கலந்து இருக்கிறது.

    உறை பனி உலகில் இருந்து திரும்பும் பொழுது, 50 கோடி வருடங்களாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த ஐந்து பெரும் கற்களைக் கொண்டு வந்தார்.

     இமயம் சென்று கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை வடித்த சேரன் செங்குட்டுவனைப் போல், அதையும் தாண்டி, பூமிப் பந்தின் ஒரு முனைக்கேச் சென்று வந்த, இந்த நவீன செங்குட்டுவனார், அதில் ஒரு கல் கொண்டு உருவாக்கத் தொடங்கியிருப்பது என்ன தெரியுமா?


அகத் தூண்டுதல் பூங்கா

எங்கு தெரியுமா?

தனது சொந்த ஊரில், தான் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த தன் சொந்த ஊரில்.

சன்னா நல்லூர்

நாகப்பட்டினம் கும்பகோணம் சாலையும், திருவாரூர் மயிலாடுதுறை சாலையும், ஒன்றை ஒன்று சந்திக்கும், நான்கு முனைச் சந்திப்பில் அமைந்திருக்கும் எழில் மிகு சிற்றூர் சன்னா நல்லூர்.

    பிறந்த தாய் நாட்டிற்கு ஆற்ற வேண்டிய, கடமைகளைச் செய்தாகிவிட்டது, தன்னை ஈன்றெடுத்த இனிய நல்லூராம், சென்னா நல்லூருக்கு, தன் மீதி ஆயுளையும் அர்ப்பணிக்கத் தயாராகி இருக்கும், இவர் பொறியியல் மட்டும் படித்தவர் அல்ல.

திருவருட்பாவையும்
திருமந்திரத்தையும்
திருவாசகத்தையும்
தேவாரத் திருமுறைகளையும்
முற்றாய் கற்றுத் தேர்ந்தவர்.

காயத்ரி மந்திரம் சொல்வதனால் ஏற்படும் நன்மைகளை, தேவாரத் திருமுறைகள் மூலமாகவும் அடையலாம் என்னும் உயிரிய கருத்தினை உடையவர்.

உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காள மணி விளக்கே

மனிதனே தெய்வம். தெய்வத்தை வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை என்னும் கருத்துடையவர்.

மரத்திலே விதையும்
அந்த வித்திலே மரமும் போல
மனிதனுக்குள் தெய்வம்
அந்தத் தெய்வத்திற்குள் மனிதன்
என்னும் உயரிய கொள்கையினை உடையவர்.


இவர்தான்
கர்னல் பா.கணேசன்.

சென்னா நல்லூரில், தன் சொந்த நிலத்தில்
அகத் தூண்டுதல் பூங்காவினை
நிறுவியிருக்கிறார்.

    தென் துருவத்தில், உறை பனி உலகில் இருந்து எடுத்து வந்த கல் ஒன்றினை, ஒரு தூணின் மேல் பார்வைக்கு வைத்து, அறுகோண வடிவிலான சுற்றுச் சுவர் ஒன்றினையும் எழுப்பி உள்ளார்.

இது ஒரு தொடக்கம்தான்.

    


கர்னல் கணேசன் அவர்களிடம், ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள ஏராளமான நூல்கள் இருக்கின்றன. இவை தவிர அறிவுத் திறன் பெருக்கும் நூல்கள், சுய முன்னேற்ற சிந்தனையினைத் தூண்டும் நூல்கள், சாதனையாளர்களின் சரித்திரங்கள், சிறு தொழில் விவரங்கள் என ஆயிரக் கணக்கான புது நூல்களையும் வாங்கி இவ்விடத்தில் ஓர் நூலகம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

      வாரம் மூன்று முறை யோகா, தியானம் மற்றும் உடற் பயிற்சி வகுப்புகளுக்கு என்று தனி அரங்கு.

      மாதம் ஒரு முறை சிறந்த தமிழறிஞர்களை, சிந்தனையாளர்களை, அறிவியலாளர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்தல். இச் சொற்பொழிவுகளைத் தொகுத்து, ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிடல்.

     வருடத்திற்கு ஒரு முறை, இளஞ்சிறார்களை ஊக்கப் படுத்த ஓர் நடைப் பயணம்.

    அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளுதவி செய்தல், வழி காட்டுதல்.

    முன்னாள் இராணுவத்தினருக்கான உதவி மையம்.

    இவ்வாறாக ஏகப் பட்ட திட்டங்களுடன், தான் பிறந்த ஊரான சன்னா நல்லூரை, சரித்திரம் படைத்த நல்லூராக்கும் முயற்சியில், தனியொரு நபராக இறங்கியுள்ளார், இந்த 73 வயது இளைஞர்.

கர்னல் பா.கணேசன் அவர்களின்
முயற்சியைப் பாராட்டுவோம்.

சன்னா நல்லூர்
வரலாற்றில் நிரந்தரமாய்
ஓர் இடத்தினைப் பிடித்து
சரித்திரம் படைத்த நல்லூராக
உயர
மனமார வாழ்த்துவோம்.