22 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 2


கொந்தளிக்கும் கடலில்
     

1987, நவம்பர் 25. கோவா துறைமுகம். ஸ்வீடன் நாட்டு துலேலாண்ட் என்னும் கப்பல் கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.

     சாதாரண பயணிகள் கப்பல் அல்ல இது. உறை பனியை உடைத்துக் கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்த கப்பல். விமானப் படையின் ஹெலிகாப்டர்கள், கப்பலின் மேல் தளத்தில் இறங்கி, அண்டார்டிகா பயணத்திற்காகக் காத்திருக்கின்றன.




தமிழகத்தில் இருந்து ஐவர், கேரளத்தில் இருந்து மூவர், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், தில்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் என 15 பேர் அடங்கிய கூட்டனியினர், கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், கோவாவில் இருந்து, தங்கள் கடல் வழிப் பயணத்தைத் தொடங்கினர்.

    ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 12,000 கிமீ தொலைவு, கடலில் பயணித்தாக வேண்டும். முழுவதுமே இடைநில்லா பயணம்தான்.


கோவாவில் இருந்து அண்டார்டிகா செல்லும் வழியில், இரண்டே இரண்டு தீவுகள் மட்டுமே உண்டு. ஒன்று மொரீசியஸ் மற்றொன்று மொரியன் தீவு. மற்றபடி கடல், கடல், கடல் மட்டும்தான்.

     அண்டார்டிகா சென்றடைவதற்குள் ஒன்பது முறை கால மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. கடிகார முள்ளை நாமே திருப்பி, நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

     கப்பலில் தன் அறையில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம், கர்னல், தான் கொண்டு வந்த ஒரு பையினை, ஆசை தீர தொட்டுப் பார்ப்பார்.

    தன் சொந்த ஊரான சன்னா நல்லூரில் இருந்தும், தனது வசிப்பிடமான சென்னை, அண்ணா நகரில் இருந்தும், தான் பணியாற்றிவரும் ஜம்மு காஷ்மீரில் இருந்தும் கொண்டு வந்த மண், இந்தப் பையில் அல்லவா இருக்கிறது.

      தாய் மண்ணைத் தொட்டுப் பார்ப்பதில்தான் எவ்வளவு மகிழ்ச்சி. வழி நெடுக தனக்கு ஊக்கமும், தளரா தன்னம்பிக்கையினையும் அல்லவா, வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தாய் மண்.

   டிசம்பர் 10 ஆம் நாள். பயணத்தின் 15 ஆம் நாள் கப்பல் மெதுவாக, முதலில் மெதுவாகத்தான் ஆடத் தொடங்கியது. காரணம் கடல் கொந்தளிப்பு. நேரம் செல்லச் செல்ல, கடல் கோபத்தின் உச்சிக்கே சென்று கொந்தளிக்கத் தொடங்கியது.

    கப்பலில் இருந்த பொருட்கள் எல்லாம், மேலும் கீழுமாக பறக்கத் தொடங்கின. சரியான பிடிப்பு இல்லாத கட்டில்கள், மேசைகள், நாற்காலிகள் அனைத்தும் தலை கீழாய் புரண்டன்.

    ஆய்வுக் குழுவினர் பலரும், வாந்தி எடுத்து, நிற்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல், ஒவ்வொருவராய் மயங்கி விழத் தொடங்கினர்.

                                                             தொடரும்