24 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில் 3


அண்டார்டிகா



      உலக உருண்டையை உற்று நோக்கினால், தெற்கே 40 டிகிரிக்கும் 60 டிகிரிக்கும் இடைப்பட்ட தூரத்தில், கடலானது, பூமிப் பரப்பை அணுகாமல், பூமியில் சுற்றுப் பாதையில் சுழன்று வருவதைக் காணலாம்.

      அட்லாண்டிக் மகா சமுத்திரமும், தெற்கு மகா சமுத்திரமும் ஒன்றோடு ஒன்றாய் இணையும் இப்பகுதி, உலகிலேயே மிகவும் ஆபத்தான கடற் பகுதி ஆகும்.

        தென் துருவம் முழுவதுமே கடலால் சூழ்ந்த பகுதி அல்ல, அங்கேயும் பூமி இருக்கிறது, அங்கு நாம் காலூன்றி நிற்கலாம், நடக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்த விஞ்ஞானிகள், கி.பி ஆறாம் நூற்றாண்டு முதலே, தென் துருவத்தை அடையும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

     ஆனாலும் அனைவரின் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.

     கி.பி 1578ஆம் ஆண்டில் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் ட்ரேக்  (Francis Drake) என்ற விஞ்ஞானி, இப்பகுதியைக் கடக்கும் போது, பலத்த சூறாவளியால் தூக்கி எறியப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்தார்.

     உயிர்பிழைத்ததே பெரும் புண்ணியம் என்று எண்ணி, தென் துருவத்தைக் காணாமலேயே ஊர் திரும்பிய, இந்த விஞ்ஞானி பிரான்சிஸ் ட்ரேக் அவர்கள்தான், உலகிற்கு, இப்பகுதி பற்றிய உண்மைகளை அறிவித்து, எச்சரித்தார்.

     எனவே இப்பகுதி இன்றும்  ட்ரேக் பாதை ( Drake Passage) என்றே அழைக்கப் படுகிறது.


      இப்பகுதியைக் கப்பல் கடக்கும் பொழுது, மிகப் பெரிய கடல் கொந்தளிப்பை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

       இரண்டு மகா கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதால், கடல் கொந்தளிப்பானது, இடதும் வலதுமாய், முன்னும் பின்னுமாய் கப்பலை அலைக் கழிக்கும்.

    பொதுவாக கப்பல், இப்பகுதியைக் கடப்பதற்கு நான்கு நாட்களாகும். நான்கு நாட்களுமே, ஒரு நொடி கூட, அமைதியாய் இராத கடலில்தான் பயணித்தாக வேண்டும். தூங்க முடியாது, உட்கார முடியாது, நிற்கக் கூட முடியாது. வேறு வழியில்லை, சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

      அடுத்தடுத்த நாட்களில் நிலைமை சீரடையவே, ஆய்வுக் குழுவினர், ஒவ்வொருவராய் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

   இயற்கையின் எண்ணற்ற வினோதங்களில் கடலும் ஒன்று. நேரில் பார்ப்பதால் மட்டுமே கடலைப் புரிந்து கொள்ள முடியாது. நீரும் அலைகளும் மட்டுமே கடல் அல்ல என்பதை ஆய்வுக் குழுவினர் அனைவரும் உணர்ந்தனர்.

      டிசம்பர் 13 ஆம் நாள், கப்பல் குளிர் பிரதேசத்தை மெதுவாய் நெருங்கியது. குளிர் மெல்ல மெல்ல, உடலின் நாடி நரம்புகளில் எல்லாம் நுழையத் தொடங்கியது.

     பனிப் பாறைகள் ஒன்றிரண்டு கடலில் மிதக்கும் காட்சியைக் கண்டார்கள்.


அண்டார்டிகாவில் இருந்து உடைந்து, பிரிந்து கடலில் மிதந்த, ஒரு பெரும் பனிப் பாறை, பதிவேடுகளில் பதிவாகி உள்ளது.

      அப் பனிப் பாறையின் அளவு என்ன தெரியுமா? 110 கிமீ நீளம், 75 கிமீ அகலம். நாம் வசிக்கும் ஊரினை விட பெரிய பாறை, ஒரே பாறையாய் கடலில் மிதந்தால் எப்படி இருக்கும்.

       இரண்டாம் நாள் நீலக் கடல், வெண் பனிப் பரப்பாக மாறும் அற்புதக் காட்சியைக் கண்டார்கள்.

இப்படமானது, கப்பல் பனிக்கட்டிகளை உடைத்துக் கொணடு  சென்ற வழியே மீண்டும் திரும்பிவரும்  காட்சியாகும்.ஆனால் குளிர்காலங்களில் இவ்வாறு வருவது இயலாது என கர்னல் அவர்கள் தெரிவித்தார். ஆதிக குளிரால் கப்பலின் நாற்புறமும் பனிக் கட்டிகள் சூழ்ந்து கப்பலை முன்னேற விடாமல் தடுத்து விடும்.கோடைக் காலம் வரும் வரையில், கப்பலிலே இருக்க வேண்டியதுதான்







கப்பலானது வெண் பனியைப் பிளந்து கொண்டு மெதுவாய், மிக மெதுவாய் முன்னேறத் தொடங்கியது.

      கப்பலின் தலைவர், ஹெலிகாப்டரில் பறந்து, உறை பனி குறைவாக உள்ள இடங்களைக் கண்டு, அவ்வழியே கப்பலைச் செலுத்தத் தொடங்கினார்.

    டிசம்பர் 20. இரவு 8.30 மணி. கப்பலின் தலைவர் அறிவித்தார். 

   தக்ஷின் கங்கோத்ரியை அடைந்து விட்டோம்.

     ஆய்வுக் குழுவினர் மகிழ்ச்சியோடு, கப்பலின் மேல் தளத்திற்கு ஓடினார்கள்.

     சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்தது.

     மணியோ இரவு 8.30.

   உச்சி வெயிலோ மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது,
                                                             

                                                                                               தொடரும்