20 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 10


தாய் மண்ணே வணக்கம்


பூமியின் வட துருவமும், தென் துருவமும் காந்தத்தின் இரு முனைகள் போல் இயங்குகின்றன என்பது நமக்குத் தெரியும்.

       சூரியனில் இருந்து வரும் அணுக் கதிர்களால், பூமியின் காந்த வட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடிவதில்லை.

     காரணம் பூமியின் அணுக் கதிர்கள், சூரியஅணுக் கதிர்களை நேருக்கு நேராய் எதிர்கொண்டு, இது எங்கள் ஏரியா, உள்ளே வராதே என நெஞ்சம் நிமிர்த்தி நிற்பதுதான்.


  ஆனாலும் பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இந்தக் காந்த வட்டம் மிகவும் குறைவாக இருக்கும்.

    எனவே சூரியனின் கதிரியக்க அணுக்கள் இவ்விரு பகுதிகளிலும், பூமிக்கு மிக அருகில் வருகின்றன.

      அப்படி பூமிக்கு மிக அருகில் வரும் கதிரியக்க அணுக்களும், வட தென் துருவ கதிரியக்க அணுக்களும், ஒன்றை ஒன்று நேருக்கு நேராய் சந்தித்து, வான வீதியில், ஒரு மாபெரும் மல்யுத்தத்தினையே நடத்தும்.
     





இந்த மின் காந்த மோதல்களால் வானில், வண்ண ஜாலமே உருவாகும். நாம் உலகின் எப்பகுதியிலும் இதுவரை கண்டிராத ஒரு வான வேடிக்கை, தென் துருவத்தில் அன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

      கர்னல் அவர்கள் உறைபனியில் மல்லாந்து படுத்துக் கொண்டு முழுக் காட்சியினையும் கண்டு ரசிக்கத் தொடங்கினார். உறை பனி உலகில் இத்தனை நாள் பட்ட துன்பமெல்லாம், இக் காட்சியினைக் காண்ணாரக் காணத் தானோ என்று எண்ணி எண்ணி வியந்தார்.

       மின் காந்த மோதல்களால் வானமானது. பல வித வண்ணங்களில், பலவித உருவங்களில், நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருந்தது.

      ஐந்தாவது குளிர்காலக் குழுவினருக்கு இயற்கை அளித்த விருந்து இந்த வண்ண ஜாலம்.

        இவ்வாறாக கர்னல் கணேசன் அவர்களின் தலைமையில், இக் குழுவினர், அண்டார்டிகாவில் செலவிட்ட நாட்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 480 நாட்கள்.

      நினைத்துப் பாருஙகள், குடும்பத்தினரை விட்டுவிட்டு, வெளியூர் சென்றால், இரண்டாம் நாளே குடும்பத்தின் நினைவு வந்து, நம்மை வாட்டும். எப்பொழுதடா வீட்டிற்க்குச் செல்வோம் என மனது ஏங்கும்.

        முழுதாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 480 நாட்கள். அதுவும் உறை பனி உலகில். அதுவும் முன் பின் அறிமுகமற்ற 14 பேருடன்.

       தக்ஷின் கங்கோத்ரியில் கால் பதித்த முதல் நாளே, ஆய்வகத்தின் சுவற்றில், அனைவரும் பார்க்கும் வகையில், கர்னல் கணேசன் எழுதினார்.

You are amongst the Brave.

இப்பொழுது நீங்கள் உலகிலேயே, தைரியமானவர்களின் மத்தியில் இருக்கிறீர்கள்.

    தனது குழுவினரைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தியும், அவ்வப்போது குழுவினரிடையே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை, சலசலப்புகளை, விரக்தி எண்ணங்களை எல்லாம், ஒரு தாயின் பரிவோடு உணர்ந்து, பாசமிகு தந்தையாய் அரவணைத்து, பேசிப் பேசி சரிசெய்து, தன் பயணத்தை வெற்றிப் பயணமாக்கினார் கர்னல் கணேசன்.

      தொடக்கம் என்று ஒன்றிருந்தால், முடிவு என்று ஒன்றிருக்க வேண்டுமல்லவா.

      1988 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள், அடுத்த குளிர்காலக் குழுவினர், தக்ஷின் கங்கோத்ரிக்கு வருகிறார்கள் என்னும் செய்தி வந்தது.

                       செய்தி கிடைத்த மறு நொடி, கர்னலின் மனம், தங்களுக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணிப் பார்த்தது. அதுவா வரவேற்பு? நாங்கள் தருகிறோம், வரவேற்பு, உண்மையான வரவேற்பு.

       அடுத்த நொடி செயலில் இறங்கினார்.

      டிசம்பர் 21, காலை 8.00 மணி. அடுத்த குளிர்காலக் குழுவினரைத் தாங்கிய ஹெலிக்காப்டர், கப்பலில் இருந்து புறப்பட்டு, வின்னில் வட்டமிட்டது.

      ஹெலிகாப்டர் இறங்க வேண்டிய இடம், உறைபனியில், நீல வண்ணத்தில் பளிச்சிட்டது. அதன் அருகிலேயே, காற்றின் திசையினைத் தெரிவிக்கும், துணியிலான கூம்பு வடிவிலான (wind socks ) கொடி.

      ஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் இருந்து, ஆய்வுத் தளம் வரை, இரு மருங்கிலும், பல்வேறு ஆய்வுத் துறைகளின் கொடிகள் காற்றில் படபடத்து, புதுக் குழுவினரை வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தன.

      ஆய்வுத் தளத்தின் முன், கைகளை முடிந்த வரையில் உயர்த்திய நிலையில், இரண்டு கிரேன் வண்டிகள். அதில் குழுவினரை வரவேற்கும் வரவேற்புப் பதாகை.

      ஹெலிகாப்டர் பனியில் இறங்கியதும், குழுவினர் அலங்கரிக்கப் பட்ட வண்டிகளில் ஏற்றப் பட்டனர்.

       இரண்டு, இருசக்கர பனி வாகனங்கள் (Snow Scooter) வழி காட்டியவாறு முன் செல்ல, வண்டிகள் பின் தொடர்ந்தன.
     



ஆய்வுத் தளத்தை நெருங்கும் பொழுது, ஆய்வுத் தளத்தின் முன் கட்டப் பெற்றிருந்த ஒலிப் பெருக்கிகளில் இருந்து, வரவேற்புப் பாடல்கள் காற்றில் மிதந்து வந்து, திருவிழாச் சூழலை உருவாக்கின.

       இதுமட்டுமல்ல, கர்னல் அவர்கள், குழுவினருக்கு சந்தன மாலைகளை அணிவித்து வரவேற்கும் பொழுது, இதோ நாங்களும் வரவேற்கிறோம் என்று கூறி இணைந்து கொண்டன, தொடர் வெடி முழக்கங்கள். வான வேடிக்கைகள்.

       முதன் முதலில் உறை பனியில் கால் வைத்தக் குழுவினர் மயங்கித்தான் போனார்கள். பூமிப்பந்தின் மூலையில், இப்படி ஒரு வரவேற்பா? நெகிழ்ந்துதான் போனார்கள்.

        தன் பணியினைச் செம்மையாகச் செய்து விட்டோம் என்ற நிறைவு கர்னலுக்கு.

        தாய் மண் வா,வா என்றழைக்கின்றது.

      தாயகம் திரும்புவதற்கான நேரம் வந்து விட்டது.

     உறை பனியில் வாழ்ந்த நாட்களின் நினைவாக, நினைக்கும் பொழுதெல்லாம், நெஞ்சம் இனிக்கும் வகையில், உறை பனி உலகில் இருந்து, எப் பொருளை எடுத்துச் செல்ல்லாம் என்று யோசித்தார்.

        தக்ஷின் கங்கோத்ரியில் குடி புகுந்த முதல் நாளே, கர்னல் கணேசன், சன்னா நல்லூர் மண்ணையும், அண்ணா நகர் மண்ணையும், ஜம்மு காஷ்மீர் மண்ணையும், உறை பனியில் தூவி, விதையாய் வித்திட்டதை அறிவீர்கள்.

       இமயம் வரை படையெடுத்து வென்ற, சேரன் செங்குட்டுவன், இமய மலையில் இருந்து கல் எடுத்து வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த காட்சி, கர்னல் அவர்களின் கண் முன்னே தோன்றி மறைந்தது.

      நவீன சேரன் செங்குட்டுவன், கர்னல் கணேசன் அவர்கள், சுமார் 50 கோடி ஆண்டுகளாக, உறை பனியில் மூழ்கிக் கிடந்த கற்பாறைகள் பலவற்றைப் பெயர்த்தெடுத்தார்.

      கிரேன்களில் உதவியுடன் கப்பலில் ஏற்றி, தாயகம் நோக்கிப் பயணித்தார்.

      1989 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று கோவா கடற்கரையில் கால் பதித்தனர்.

தாய் மண்ணே வணக்கம்.

உறை பனி உலகினல், உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த கற்கள், இன்று


பெங்களூர்,
இந்திய இராணுவத்தின்பொறியாளர் படைப பிரிவின்,
மூத்த பிரிவான
Madras Engineer Group
அலுவலகத்தின் முன்பாகவும்,


கர்னல் கணேசன் அவர்களின்
வீட்டு வரவேற்பறையிலும்,


சன்னா நல்லூர்,
அகத்தூண்டுதல் பூங்காவிலும், 


பேரளம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ள,
மாங்குடி கிராமத்தில்,
வேதாத்ரி மகரிஷியின் சீடர்களுள் முதன்மையானவரான,
டாக்டர் அழகர்மானுஜம் அவர்கள் அமைத்துள்ள
பெரு வெளி ஆலயத்திலும்


சென்னை, அண்ணா நகர் வீட்டு வாசலுக்கு அருகிலும்

தலை நிமிர்ந்து நிற்கின்றன.

---------------


சன்னா நல்லூர் அகத்தூண்டுதல் பூங்காவில்
கர்னல் அவர்களுடன் நானும்
நண்பர்களும்

நண்பர்களே,
கடந்த ஒரு மாத காலமாக,
உறை பனி உலவில்
என்னுடன் இணைந்து பயணித்த
தங்களுக்கும்,
இத்தொடரினை எழுதிட அனுமதி வழங்கிய
குடியரசுத் தலைவரின்,
வசிஸ்ட் சேவா விருது பெற்ற
கர்னல் பா.கணேசன் அவர்களுக்கும்

நன்றி   நன்றி   நன்றி
----------------------------------------------------




நண்பர்களே,
பூமிப் பந்தின் தென் கோடியில்,
முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டு,
இந்தியாவிற்கும், நம் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்த,
வீரத் தமிழரும்,

இரு இந்தியப் போர்களில் பங்கு பெற்று
விழுப்புண் விருது பெற்றவரும்,

குடியரசுத் தலைவரின்
வசிஷ்ட் சேவா விருது பெற்றவருமான

கர்னல் பா.கணேசன் அவர்கள்,
ஒரு வலைப் பதிவரும் ஆவார்.

அக்டோபர் 11 ஆம் நாள்
புதுகையில் நடைபெறவிருக்கும்
பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்கு
வருகை தர இருக்கிறார்.
நம்முடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறார்.

கர்னல் அவர்களின்

மின்னஞ்சல்
pavadai.ganesan@gmail.com

அலைபேசி எண்
94440 63794