25 அக்டோபர் 2015

இளைஞர் ஆத்திசூடி




அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்

      சிறு வயதில், தொடக்கப் பள்ளியில், அனைத்து மாணவர்களுடனும் இணைந்து, ஒரே குரலாய் ஓங்கி ஒலித்திட்ட தமிழ் மூதாட்டி ஒளவையின் ஆத்திசூடி.

      இளைஞர்களும் ஏன் முதியவர்களும் கூட எந்நாளும் நினைவில் கொண்டு, பின்பற்ற வேண்டிய ஆத்திசூடி, ஏனோ, கீழ்நிலை வகுப்புகளோடு நின்று விடுகிறது.

     மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே, பள்ளிக்குச் செல்லும் இக்கால மாணவர்கள், ஔவையை அறிவார்களா என்பதே சந்தேகம்தான்.

      இதனைக் கருத்தில் கொண்டு, இக்கால இளைஞர்களுக்காவே, ஓர் புதிய ஆத்திசூடியை உருவாக்கி இருக்கிறார் ஒரு ஆசிரியர், தேசிய நல்லாசிரியர்.

     இவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, எழுத்தாளர், கவிஞர், இயற்கை ஆர்வலர். இவற்றோடு உளவியளாளரும் ஆவார்.

     மன நல ஆலோசனைகள் வழங்குவதை ஒரு சேவையாகவே செய்து வருபவர்.

      இன்றைய கால கட்டத்தில், சிறியவர் முதல், முதியவர் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி, சாதி, மதம், மொழி, இனம் என்னும் எல்லைகளைக் கடந்து, அனைவரையும் ஆட்சி செய்வது மன அழுத்தம் அல்லவா.

     எனவே இவரது சேவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

     உளவியலில் இவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு.

     கல்லூரிப் படிப்பை இளங்கலை இயற்பியலில் தொடங்கியவர், திசைமாறி முதுகலையில் தமிழ் படித்து, தமிழிலேயே டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.

     பிறகு காந்தியச் சிந்தனைகளைப் பயின்று, அதிலேயே ஊறியவர், மீண்டும் ஒரு முதுகலைப் படிப்பைப் பயின்றுள்ளார். இம்முறை முதுகலைப் பயின்றது உளவியலில்.

     இவர் தனது டாக்டர் பட்டத்திற்காக, மேற்கொண்ட ஆய்வின் தலைப்பு என்ன தெரியுமா?

தீபம் நா.பார்த்தசாரதியின் நாவல்களில் குடும்பச் சிக்கல்கள்

      நாவல்களில் குடும்பச் சிக்கல்களை ஆராய்ந்தவர், இன்று நிஜக் குடும்பங்களில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பவராக, ஓர் சிறந்த உலவியலாளராக, மன நல ஆலோசகராக விளங்கி வருகிறார்.

     தற்செயலாகத்தான் இவரை வலையில் சந்தித்தேன். நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதா என்று எண்ணி, ஏங்கிக் காத்திருந்த வேளையில், புதுகை வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில், நேரிலேயே சந்திக்கும் ஓர் அற்புத வாய்ப்பு.

     என் எண்ணம் ஈடேறியது.

நண்பர்களே, இவர் யார் தெரியுமா?




தமிழ்ப் பூ
இவரது வலையின் பெயர்.

பழகுதற்கு இனியவர்,
இவரது
 புனைப் பெயர்
கவிஞர் இனியன்.
இயற் பெயர்
முனைவர் அ.கோவிந்தராசு.

      ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் என நீண்ட கால தொடர் கல்விப் பணி இவருடையது.


இராமேசுவரம் ஈன்றெடுத்த தவப் புதல்வர்,
நமது முன்னாள் குடியரசுத் தலைவர்,
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின்
திருக்கரங்களால்,
தேசிய நல்லாசிரியர்
விருதினைப் பெற்றவர்.

மாணவர் நலனுக்காகத் தன்னை முழுமையாய் ஈந்தவர்.

     தனது மணிவிழாவின் போது கூட, இவருக்கு, இன்றைய மாணவர்களின் நினைவுதான், இக்கால இளைஞர்களின் நினைவுதான்.

அதனால்,
தன் காரியம் யாவினும் கைகொடுத்து
காலமெல்லாம் துணை நிற்கும்
தன் இனிய வாழ்க்கைத் துணைவிக்கு
அன்புறையாய்
ஒரு சிறு நூல்
ஒன்றினைப் படைத்திட்டார்.

நூல்
இவர்தம் துணைவியார்க்கு அன்புறை
ஆனால்,
நூலின்
ஒவ்வொரு சொல்லும்,
ஒவ்வொரு எழுத்தும்
இன்றைய இளைஞர்களுக்குக் காப்புறை.


இளைஞர் ஆத்திசூடி.

நூலின் உருவும், அளவும் சிறியது. மூர்த்தி சிறியதுதான், ஆனால் கீர்த்தி பெரியது.

அலைபேசியை அடக்கு.

முதல் வாசகமே திருவாசகமாய் ஒளிர்கிறது.

ஈன்றாளைத் தொழு

ஏன் எனக் கேள்

ஓம்புக உடலை

கீழோரை நினை

குறிக்கோள் மறவேல்

கொடுத்து மகிழ்

சாதிக்க ஆசைப்படு

       நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது. இன்றைய இளைஞர்கள், எதையெல்லாம் புறந் தள்ளுகிறார்களோ, அதையெல்லாம் உணர்ந்து, ஒவ்வொரு சொல்லாய் உரைத்திருக்கிறார்.


இளைஞர்கள் மட்டுமல்ல,
ஏனையோரும்
படிக்க வேண்டிய நூல் – படித்துப்
பின்பற்ற வேண்டிய நூல்.

இளைஞர்களுக்கு அற்புதமாய் ஓர்
இளைஞர் ஆத்திசூடி
தந்த – இந்த
ஆண் ஔவையை
வாழ்த்துவோம், போற்றுவோம்.