10 நவம்பர் 2015

தாகூரில் தோய்ந்தவர்




     கடவுள் எங்கே? என நான் கேட்ட பொழுது, எங்கும் என பதிலுரைத்தது அறிவு. ஆனால் அன்போ இங்கே எனத் தன்னையே சுட்டிக் காட்டிக் கொண்டது.

     அன்பென்னும் நேரான பரந்த, செழிப்பான பாதை தன் முன்னே விரிந்திருக்க, மதங்களென்னும் குறுகிய, ஒற்றடிப் பாதைகள் வழியே சென்றவாறு, உன்னைக் காண, தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மதங்கள் வழிகளாயினும், அவைகள் மட்டுமே வழிகளென்பதல்ல.


     வெறுமையாய் கூப்பிய கரங்களுக்குள் நுழையாத நீ, விரியும் இதயத்துள் மிக அருமையான உன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறாய்.

    மாசுபடா எண்ணங்களில் ஆடும் பொருட்கள் எல்லாம் தெய்வீகமானவையே.

     வாழ்க்கை உண்மையான நிறைவை எய்தியிருக்குமானால், இறப்பு இனிமையானதே.

     வாழ்க்கை எது எனக் கேள்வி – இசையில் தன் இதழ்களை மலர்த்தும், மொட்டு கண்டு புன்னகை பூத்தவாறு, இவ்வுலக வாழ்க்கை இதுவே என்னும் கீதமிசைத்தவாறு, நேற்றைய மலர் மண்ணில் உதிர்கிறது.

     தான் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, என்னைத் தன்னுடன் சேர்ந்து கொள்ளுமாறு, காலம் எனக்கு அழைப்பு விடுகிறதே யொழிய, என் பொருட்டு, நின்று, என் வருகைக்காகக் காத்திருப்பதில்லை.

     போகிற போக்கில் காலத்தின் வேகம், சில கனவுகளை நினைவுகளாகவும், நினைவுகளை கனவுகளாகவும், மாற்றியமைத்து, விளையாடிக் கொண்டே, திரும்பிப் பாராமல் சென்று கொண்டிருக்கிறது.

     என் முயற்சியின் இடையறாத நம்பிக்கை நீ என்பதை, நான் உணர்கிறேன். நற்செயல்களின் மடியில், என் ஆத்மா, துயிலும் பொழுது, தெய்வீகத்தை உணருகிறது.

     நண்பர்களே, படிக்கப் படிக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது அல்லவா. அறியாத ஒன்றை, புதிதாக அறிந்து கொண்ட, தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட ஓர் உணர்வு, மெல்ல மெல்ல உடலெங்கும் பரவுகிறது அல்லவா.

     இவ்வரிகளை எழுதியவர், தன் மொழியில், கவிதையாய் புனைந்தவர் யார் தெரியுமா?

உலக மகா கவி
பன்மொழிப் புலவர்
நோபல் பரிசு பெற்ற
கவி இரவீந்திரநாத் தாகூர்.

கீதாஞ்சலியின் விளக்க வரிகள் இவை.

நம்
அன்னைத் தமிழுக்கு
இவ்வமுத வரிகளை
அழைத்து வந்தவர் யார் தெரியுமா?

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

ஒரு தாவரவியல் பேராசிரியை
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 32 ஆண்டுகள்
தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர்.

படித்ததும், பணியாற்றியதும்
தாவரவியலாக இருந்போதிலும்,
நேசித்ததும்,
உள்ளம் சுவாசித்ததும்
தமிழைத்தான்.

வாழ்க்கை அழகானது, எளிமையானது
கற்றது கைம்மண் அளவு
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
என்னும்
மந்திரச் சொற்றொடர்களை
அகத்திலும, புறத்திலும்
உதிரத்திலும்
நல் உரமாய்
தூவி
தன்னை வளர்த்துக் கொண்டவர்.

---
     1965 ஆம் ஆண்டு, மண்ணச்ச நல்லூர், மாவட்டக் கழக ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், அறிவியல் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுதுதான், தனக்கு கணவராக வரப் போகிற, அந்த கணித ஆசிரியரை முதன் முதலில் சந்தித்தார்.

     பள்ளி விழா ஒன்றில், மேடையேறி, தமிழாசிரியர்களையும் தாண்டி, சொற்பொழிவாற்றினார் இந்த கணித ஆசிரியர். பாரதி பற்றிய பல செய்திகள், மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடின.

      அரங்கே அமைதியில் ஆழ்ந்து போனது, கணக்காசிரியரின், தமிழ்ப் பேச்சில் உறைந்துதான் போனது.

       இச்சொற்பொழிவு, தாவரவியல் ஆசிரியையின் உள்ளத்தில், பல மாற்றங்களை நிகழ்த்தியது. புதிய பாதையினைக் காட்டியது. அப்பாதையின் வழியே புதியதோர் உலகு விரிந்து, வருக வருக என இரு கரம் நீட்டி அழைத்தது.

       அன்று முதல் பாரதி, பாரதிதாசன், வ.ரா முதலியோரின் எழுத்துக்களில் மூழ்கிப் போனார்.

       கண்க்கு ஆசிரியரும், தாவரவியல் ஆசிரியையும் நண்பர்கள் ஆனார்கள்.
     

ஒரு நாள் இருவரும் சேர்ந்து, திரு வி.ஆர்.எம். செட்டியார் அவர்களைக் காணச் சென்றார்கள்.

       தங்கள் இருவர் வாழ்வினையும், ஒரே பாதையில், ஒரே நேர்க்கோட்டில், இச் சந்திப்பு, இணைக்கப் போகிறது, என்பதை அறியாமலே, இருவரும் இணைந்து சென்று செட்டியாரைச் சந்தித்தனர்.

      திரு வி.ஆர்.எம்.செட்டியார் அவர்கள், அக்காலத்தில், காரைக்குடியில், ஸ்டார் ப்ப்ளிஷர்ஸ்  மற்றும் புராக்ரசிவ் ப்ப்ளிஷர்ஸ் என்னும் இரு பதிப்பகங்களை நடத்தி வந்தார்.

      இவர் கவி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். தாகூரின் சொற்பொழிவுகளை, கவிதைகளைத் தமிழாக்கம் செய்து மகிழ்ந்தவர்.

     நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த செட்டியார், Crescent  Moon  என்னும் தாகூரின் நூல் ஒன்றினைத் தாவரவியல் ஆசிரியைக்குப் பரிசாகக் கொடுத்தார்.

     வீடு திரும்பிய ஆசிரியை, அன்றிரவு, தாகூரைப் படித்த போது, அவரின் எழுத்துக்களில் கரைந்தே போனார்.

      மனதில் மட்டுமல்ல, கைகளிலும் ஒரு இனம் புரியா பரபரப்பு. வெள்ளைத் தாட்களை எடுத்தார், எழுதுகோலைத் திறந்தார்.

      வார்த்தைகள் அருவியென வெள்ளைத் தாட்களில் விழுந்து தெறித்தன.

      அன்றைய பொழுது விடிந்த பொழுது, தாகூரின் கவிதைகள், தமிழில், வெள்ளைத் தாட்களில், ஆதவன் போல், உதயம் கண்டிருந்தன.

      இரவு முழுவதும் தூங்காது விழித்து, எழுதி எழுதி, சிவந்த விழிகளுடன், பள்ளிக்குச் சென்ற ஆசிரியை, தனது மொழி பெயர்ப்பை, கணித ஆசிரியரிடம் காட்டினார்.

      மொழி பெயர்ப்பினைப் படித்து, மகிழ்ந்து, நெகிழ்ந்து, அந்த அற்புத எழுத்துக்களில் தன்னையே தொலைத்த, கணித ஆசிரியர், அந்த மொழி பெயர்ப்பினை, செட்டியாருக்கு அனுப்பினார்.

      சில வாரங்கள் கடந்த நிலையில், கணித ஆசிரியர் அனுப்பிய மொழிபெயர்ப்பு, வளர் பிறை என்னும் பெயரில், நூலாய் திரும்பி வந்தது.

      தாவரவியல் ஆசிரியை மகிழ்ச்சியில் உறைந்தே போனார். தனது எழுத்துக்கள் அழகிய நூலாய். மலைத்துத்தான் போனார்.

      அடுத்த நாளே, இருவரும் சென்று, செட்டியாரைச் சந்தித்தனர்.

      இருவரையும் சற்று நேரம் அமைதியாய் நோக்கிய செட்டியார் கூறினார், நீங்கள் இருவரும் வாழ்விலும் இணைய வேண்டும், இவ்வாழ்வு முழுவதும் இணைந்தே செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

      இலக்கிய நட்பு, வாழ்வியல் தொடர்பாகி, திருமணத்தில் முடிந்தது.



நண்பர்களே,
எழுதுகோல் ஏந்திய
இந்த தாவரவியல் ஆசிரியை யார் தெரியுமா?
இவர்தான்
திருமதி டோரதி கிருஷ்ணமூர்த்தி
ஞானாலயா ஆய்வு நூலக இயக்குநர்

அந்த கணித ஆசிரியர்தான்
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.

இவர்கள்தான்
ஞானாலயா தம்பதியினர்.

---

    சில நாட்களுக்கு முன், ஒரு கூரியர் அஞ்சல், எனது பள்ளி முகவரிக்கு வந்து சேர்ந்தது.

    உறையினைக் கண்டபோதே, மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.

    புதுகையில் இருந்து, புதுகைக்குப் பெருமை சேர்க்கும் ஞானாலயாவில் இருந்து ஒரு அஞசல்.

    உறையினைப் பிரித்த போது, மகிழ்வு இரட்டிப்பாகியது. நான்கு நூல்கள்.





தேடலில் தெளியும் திசைகள்
நெஞ்சையள்ளும் ஞானாலயா
சலனம்
மற்றும்
தாகூரின் கவிதை மலர்கள்

    நூல்களைக் கண்ட என் மனமும்., மகிழ்ச்சியில் மலராய் மலர்ந்துதான் போனது.

தாகூரின் கவிதை மலர்கள்

1968
நாற்பத்து ஏழு ஆண்டுகளுக்கு முன் அச்சேறிய புத்தகம்.

ஞானாலயா தம்பதியினர்,
திருமணம் என்னும் உயரிய பந்த்ததில் இணைவதற்கு,
மூன்றாண்டுகளுக்கு முன்னரே
அச்சேறிய புத்தகம்.

     Her Tamil Prose has a distinct style of its own; there is an individual emphasis of the creative pattern, holding infinite riches in a little room. Like Browning, She is very Optimistic in drawing tangible conclusions from human life strongly intermingled with the DIVINE OMNISCIENCE. Her racy idioms are her own, inimitably her own.

     திரு வி.ஆர்.எம் செட்டியார் அவர்களின் வாழ்த்துக்களைச் சுமந்து, அவராலேயே, தனது பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப் பெற்ற காலப் பெட்டகம் இந்நூல்.

     கிடைத்தற்கு அரிய நூல்.

     திரு வி.ஆர்.எம் செட்டியார் அவர்கள் நூலுக்கு முன்னுரையினை மட்டுமல்ல, நூலின் நிறைவில், இறுதிப் பக்கத்தில், ஒரு நிறைவுறையினையும் எழுது நூலுக்கும், நூலின் ஆசிரியருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

1968 இல் இந்நூலின் விலை என்ன தெரியுமா? நண்பர்களே.
ஒரு ரூபாய் 25 காசுகள்.

காலமெல்லாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூல்.

பிரமிப்பு அடைந்ததனால் எனது நெஞ்சில்
   பீடுபெறும் நுட்பத்தைத் தேடித் தேடி
தரமிகுந்த ஆலயத்தை இன்று கண்டு
   தனிப்பெருமை நானடைந்தேன், வெற்றிக்கான
சிறகுகளை உலகுக்கு வழங்கும் தூய
   சிந்தனையின் தூதுவர்கள் என்ப தாலே
உறவுகளாய் நான்நினைத்து வணங்கு கின்றேன்
    உங்களது பொன்னடிக்கு என்வ ணக்கம்.
                                    அ.அரவரசன், தேவகோட்டை.

    தேவகோட்டையாருடன் இணைந்து, எனது வணக்கத்தினையும், நன்றியறிதலையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

---


சமுத்திரத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அச்சமாகவும் இருக்கிறது. அதுபோல இந்த அரிய நூலகத்தைக் காண்கையில், வியப்பினால் மகிழ்ச்சியும், எங்கே இதிலேயே மூழ்கிப் போவோமோ என்கிற அச்சமும் மேலிடுகிறது. இது ஒரு கர்மயோகம். கர்மயோகத்தின் பலனே கர்மா தான்.

இந்த யோகத்தில் தம்மை சமர்ப்பணம் செய்து கொண்டுள்ள திரு கிருஷ்ணமூர்த்தி தம்பதியினரைத் தமிழ் வாழ்த்துகிறது. வாழ்க. வளர்க.
       
                                          த.ஜெயகாந்தன்