25 நவம்பர் 2015

புத்தகத்தைக் காதலித்தவன்


ஆண்டு 1823, ஒடிசலான தேகம். உட்புறம் சுருங்கி ஒட்டிய கண்ணங்கள். குழி விழுந்த கண்கள். அழுக்கடைந்த உடை.

     அச்சிறுவனின் வயது பதினான்குதான். ஓடி ஆடி விளையாடுகின்ற வயது. ஆனாலும் ஆர்வம் என்னவோ படிப்பதில்தான்.

     அச்சிறுவனுக்கு ஓர் ஆசை. தணியாத தாகம். விம்ஸ் என்பவர் எழுதிய புத்தகம் ஒன்றினை, எப்படியாவது படித்துவிட வேண்டும் என்னும் தாகம்.


      விலை கொடுத்து வாங்க வழியில்லை. கடன் வாங்கித்தான் படித்தாக வேண்டும். ஆனால் அந்த புத்தகம் யாரிடம் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

     யோசித்துப் பார்த்தான். ஜோஸய்யா கிராஃபோர்டு மனக் கண்ணில் தோன்றினார். இவர் ஒரு விவசாயி. பணக்காரர், ஆனாலும் படிப்பாளி.

     நிச்சயம் இவரிடம் இந்த புத்தகம் இருக்கும் என்ற நம்பிக்கை, அச்சிறுவனின் மனதில் துளிர் விட்டது.

     மறுநாள் அதிகாலையிலேயே, கிளம்பி நடக்கத் தொடங்கினான்.

     பன்னிரெண்டு மைல் தூரம் நடந்தாக வேண்டும். நடந்தான். அந்த விவசாயியைச் சந்தித்தான். அச்சிறுவன் எதிர்பார்த்தபடியே அப்புத்தகம் அவரிடம் இருந்தது.

     சிறுவனின் புத்தக ஆர்வத்தைக் கண்ட விவசாயி, வியந்துதான் போனார். பணம் கடன் கேட்டு வருபவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். புத்தகம் கடன் கேட்டு வந்த முதல் ஆள் நீதான். அதுவும், இவ்வளவு சிறு வயதில், இவ்வளவு தொலைவு நடந்து வந்திருக்கிறாயே? தருகிறேன் என்றார். தந்தார்.

    ஒரு பெரும் புதையலைக் கண்டெடுத்த உணர்வு அச்சிறுவனுக்கு. இரு கரங்களையும் நீட்டி, பெற்றுக் கொண்டான்.

     வீட்டினை அடைய, திரும்பவும் பன்னிரெண்டு மைல் தொலைவு நடந்தாக வேண்டும். நடந்தான் நடந்தான், படித்துக் கொண்டே நடந்தான்.


வீட்டினை அடையவும், இருள் சூழவும் சரியாயிருந்தது. விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்துக் கொண்டு, அதன் அருகிலேயே அமர்ந்து படிக்கத் தொடங்கினான்.

     நடு இரவு நெருங்க நெருங்க, கண்கள் அவனையும் அறியாமல் மூடி, மூடி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கின.

     வேறு வழியில்லை உறங்கித்தான் ஆக வேண்டும். சிதிலமடைந்திருந்த, தன் மர வீட்டுச் சுவற்றின், ஒரு பொந்தில், புத்தகத்தைச் சொருகி வைத்துவிட்டு உறங்கத் தொடங்கினான்.

      இருபத்து நான்கு மைல் நடந்த களைப்பு. புத்தக ஆர்வத்தில் உணவினைக் கூட உண்ண மறந்ததால் உண்டான அசதி. படுத்தவன், நன்றாக விடிந்த பிறகுதான் எழுந்தான்.


எழுந்தவன் புத்தகம் சொருகி வைத்திருந்த பொந்தைப் பார்த்ததும் அதிர்ந்துதான் போனான். இரவு பெய்த மழை, சுவற்றின் பொந்திற்குள் நுழைந்து, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் நனைத்திருந்தது.

      மெதுவாக கையை விட்டு புத்தகத்தை வெளியே எடுத்தான். படபடக்கும் மனதுடன் வீட்டை விட்டு வெளியே வந்து, சூரிய ஒளியில் காய வைத்தான்.

       படிக்காமல் மீதமிருந்த பக்கங்களை, கடும் வெயிலில் அமர்ந்து, காய வைத்துக் கொண்டே படித்தான்.

     புத்தகம் முழுதாய் காய்ந்த போது, அப்பளம் போல் உப்பி, உருவே மாறியிருந்தது.

     என்ன செய்வது என்று தெரியவில்லை. புத்தகத்தை எடுத்துக் கொண்டு பன்னிரெண்டு மைல் நடந்தான். ஜோஸய்யாவைச் சந்தித்தான்.

ஐயா, மன்னிக்க வேண்டும். நேற்று இரவு பெய்த மழை, புத்தகத்தை பாழ்படுத்தி விட்டது.

இனி இப்புத்தகம் எனக்கு வேண்டும். அதற்குரிய பணத்தை எடு என்றார்.

ஐயா, தங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை, ஆனாலும் உடலில் வலு இருக்கிறது. வேலை கொடுங்கள், கூலியை எடுத்துக் கொள்ளுங்கள்.

     அடுத்த மூன்று நாட்கள், விவசாயியின் வீட்டிலேயே தங்கினான். அவர் வயலில் வேலை பார்த்தான்.

      நான்காம் நாள். அச்சிறுவனின் முகமெங்கும் ஓர் மகிழ்ச்சி. இனி இப்புத்தகம் எனக்குச் சொந்தம், எனக்கே சொந்தம். புத்தகத்தை மார்போடு அணைத்தபடி, மகிழ்வோடு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நண்பர்களே, இச்சிறுவன் படித்த புத்தகம் என்ன தெரியுமா?
விம்ஸ்
என்பவர் எழுதிய
ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாறு.



இச்சிறுவன் யார் தெரியுமா?
பின்னாளில்,
வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் குடியேறிய,
அமெரிக்காவின்
16 வது ஜனாதிபதி
ஆபிரகாம் லிங்கன்.