08 டிசம்பர் 2015

எல்லைப் புறத்தில் 3




சிற்றில் நாற்றூன் பற்றி, நின் மகன்
     யாண்டுள னோ?என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
     புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
     தோன்றுவன் மாதோ, போர்களத்தானே
                                புறநானூறு 86

       1965 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.

       1962 ஆம் ஆண்டு சீனாவின் ஆக்கிரமிப்பால் படு தோல்வி அடைந்த இந்திய இராணுவம், தன்னிலை உணர்ந்து தன்னைப் பலப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது.

     ஏராளமான படைப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அதிகாரிகளும், அதிகாரிகள் அல்லாதவர்களும், பெருமளவில் இராணுவத்தில் சேர்க்கப் பட்டனர்.

     இம்மாற்றங்களை அறியாத பாகிஸ்தான், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் குஜராத், கட்ச் பகுதியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.


     பின்னர் செப்டம்பர் முதல் நாள் பெரும் போரைத் தொடங்கியது.
    

பாகிஸ்தானின் போர் விமானங்கள் இந்திய, முன்னிலை வான் தளங்களைத் தாக்கத் தொடங்கின.

      அன்று மாலையே திரு கணேசன் அவர்களுக்குப் புது உத்தரவு வந்தது.

தங்களது படை பிரிவு, பதான் கோட்டிற்கும் ஜம்முவிற்கும் இடைப் பட்டப் பகுதியில் இருந்தாக வேண்டும். உடனே புறப்படுங்கள்.

     மறு நோடியே, புல்டோசர், மோட்டார் கிரேடர் போன்ற எண்ணற்ற இயந்திரங்களோடும், வாகனங்களோடும் கணேசன் அவர்களின் படைப் பிரிவு புறப்பட்டது.

    

திரு கணேசனின் படைப் பிரிவு பதான்கோட் சென்றடைந்த போது, உக்கிரமான வான் வழித் தாக்குதல், குண்டுகள் பெரும் மழையாய் பொழிந்த வண்ணம் இருந்தன.

     வண்டிகளை நிறுத்தி விட்டு பதுங்கு குழிகளை நாடி தப்பித்தனர்.

     தொடர்ந்து மெல்ல மெல்ல, குண்டு மழைக்கு நடுவே முன்னேறிய போது, ஒரு குண்டு பாய்ந்து வந்து, திரு கணேசனின் காலை பதம் பார்த்தது. இரத்தம் பாய்தோடத் தொடங்கியது.


கடிதங்கள் தொடரும்