06 மார்ச் 2016

உள்ளம் கவர் பதிவர்கள்

    

புதுகைக் கவிஞர், கணினித் தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளர் அவர்களிடமிருந்து ஓர் உத்தரவு, ஓர் அன்புக் கட்டளை, இணைய வழி பறந்து வந்தது.

மனம் கவர் பதிவர்கள் பற்றி ஓர் பதிவு எழுதுக.

      மீற முடியுமா? கால அவகாசம் மட்டும் கொடுங்கள் ஐயா? என அனுமதி கேட்டிருந்தேன் .தேர்வுக் காலம் அல்லவா.

      இதோ, தங்களின் எழுத்துக்களாலும், சிந்தனைகளாலும், செயற்கரியச் செயல்களாலும், என் உள்ளம் கவர்ந்த பதிவர்ககளில், ஒரு சிலரை மட்டும் இப்பதிவில் சந்திக்கலாம், வாருங்கள்.


      இவர்கள் வலையில் புகுந்து, எழுத்துச் சோலைகளில் அமர்ந்து, தென்றலாய் வருடும், வார்த்தை வரிகளில் நம்மையே மறந்து, மகிழலாம் வாருங்கள்.

      பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் ( C I R U S ) ஆய்வு உலையினை இயக்கியப் பொறியாளர்களுள் ஒருவராய், ஒன்றல்ல இரண்டல்ல முழுதாய் எட்டு ஆண்டுகள் பணியாற்றியவர் இவர்.

     இவ்வுலையில் மட்டுமல்ல, ராஜஸ்தானின் கான்டு அணுமின் நிலையம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம், கனடாவின் கான்டு புரூஸ் அணுமின் நிலையம் என தன் 42 ஆண்டு கால பணிக் காலம் முழுவதையும், அணு உலைகளிலேயே செலவிட்டவர் இவர். இவர் மட்டுமல்ல பொறியியல் படித்த இவரது இரண்டாம் புதல்வி திட்டப் பொறியாளியாகக்  கனடாவில்  பிக்கரிங் அணுமின்  நிலையத்திலும், மருமகன்  டார்லிங்டன் என்னும் வேறோர் அணுமின்  நிலையத்தில்  திட்டப் பொறியாளராய்ப் பணி செய்து வருகிறார்கள்.   

     அணு உலையே கதியென்று கிடந்தவர், தற்பொழுது தமிழ் இலக்கியத்தையே தன் மூச்சாய் சுவாசித்து வருகிறார்.

       தன் சுவாசத்தை, தமிழ் மொழி மீதான தன் நேசத்தை, தன் வாழ்வின் பெரும் பகுதியினை விழுங்கிய அணு உலைகளை, வரிசையாய் தன் வலையில் படைத்து, விருந்தளித்து நம்மை வியக்க வைக்கிறர், இந்த அணு உலைப் பொறியியல் விஞ்ஞானி.

      கூடங்குளம் அணு உலை பற்றிய இவர்தம் பதிவு ஒன்றே போதும் ,நமது வீண் அச்சங்களைப் போக்க.

      அணு உலைகள், வானியல் விந்தைகளைப் பற்றி மட்டுமல்ல, சீதாயாணத்தையும் இவர் வலையில் நாம் காணலாம்.

இவர்தான் அணு சக்திப் பொறியாளர்
திருமிகு சி. ஜெயபாரதன்

இவரது வலை,


தமிழ் மணம்

வலைப் பூவில் நம் அனைவரையும் கவர்ந்த ஒரே சொல்.
நாம் அனைவரும் விரும்பும் ஒரே சொல்.

தமிழ் மணம் நிறுவனக் குழுவில் இவரும் ஒருவர். பொள்ளாச்சி என்று இன்று அழைக்கப்படும், பொழில் வாய்ச்சியில் பிறந்தவர். நாடு விட்டு நாடு பறந்து, இன்று நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றி வருபவர் இவர்.

     விண்வெளி மையத்தில் பணியாற்றினாலும், இவர் மனம் சிறகடித்துப் பறப்பதென்னவோ, தமிழ் இலக்கண, இலக்கிய வானில்தான்.

இவர்தான்
பொறியாளர் திருமிகு நா.கணேசன்


இவரது வலை
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் ,
மனங் கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைக்க அழைக்கும்

எல்லாப் பிரச்சினைகளைத் தாண்டியும்
எது என்னை மூச்சுவிடச் செய்து கொண்டிருக்கிறது
எந்த சந்தேகமும் வேண்டாம்
வாசிப்பு மட்டுமே என்வை வசிக்க வைத்திருக்கிறது

புத்தகங்கள் பாராத நாள்
துக்க நாள்
வாசிக்க வேண்டும் சக்தி
என்ன வேண்டுமானாலும் வாசி

வாசிப்பு இல்லாமல் சுவாசித்துப் பயனில்லை
முதலில் படி
பின்
தேர்ந்து படி

பள்ளிப் பாடங்களைத்
தாண்டியும் படி
படிப்பொன்றே
காணும் கடவுள்.

இவரது ஒவ்வொரு கடிதமும், கவிதையும் என்னை என்றென்றும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறது.

    அன்பு மகள்களுக்கு ஒரு பாசக்காரத் தந்தையின் கடிதம்.

    ஒரு மகளுக்குக் கவிதை,

    மற்றொரு மகளுக்குக் கடிதம்.

    உள்ளத்து உணர்வுகளை, எழுத்தாய் வடிக்கத் தெரிந்த வித்தகர் இவர்.

     உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்தன் தயக்கத்தை உதறிச் சொல்ல வேண்டும் என்றால், இவரது பதிவினைப் படிக்கப் படிக்க என்னுள், மெல்ல மெல்ல ஒரு பொறாமை உணர்வு, மெதுவாய் தலை நீட்டி, எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாமல் தவிக்கிறேன் என்பதுதான் உண்மை.

     என் தந்தை இவர் போல் இல்லையே எனும் ஓர் ஏக்கம்.

     ஒரு தந்தையாய் நீ எப்படி? எனும் ஒரு சுய பரிசோதனை.

     ஒரு தந்தையாய், நானும் இவர் போல் மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.

     நண்பர்களே, இவர்யார் தெரியுமா?

     உங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான்.

முதல் மதிப்பெண் வேண்டாம் மகளே
என்று, தன் மகளுக்கு அறிவுறுத்திய
ஆசானின் ஊரைச் சார்ந்தவர்,


இவர்தான்
கவிஞர் மீரா.செல்வக்குமார்.


இவரது தளம்

     நீங்கள் திருமணம் ஆவனரா? விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவரா? அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய தளம் ஒன்றுள்ளது.

     நாம் பேசத் தயங்குகின்றச் செய்திகளை, உரத்துச் சொல்லும் ஓர் விழிப்புணர்வுத் தளம்

இவர்
சிறகுகள் வேண்டிக் காத்திருப்பவர் …. ஒரு உற்சாகப் பயணத்திற்காக …

அன்புச் சகோதரி
திருமதி கௌசல்யா ராஜ்


இவரது தளம்

மூலையிலோர் சிறுநூலும் புது நூலாயின்
முடிதனிலே சுமந்து வந்து தருதல் வேண்டும்
எனப் பாடுவார் பாவேந்தர். என்னப் புத்தகம் வேண்டும் உங்களுக்கு, இவரது வலையில், ஏராளமாய், ஏராளமாய், மலையாய், மலை மலையாய் நூல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

   வந்து பாருங்கள், வேண்டியதைத் தயங்காமல் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.


இவரும், இவரது தளமும்

     அன்புறு நேயம், கருணை, இரக்க நல்லின்பம், நிதானம் முதலிய நன்னடத்தைகளை முதன்மையாய் போதிக்கும் பௌத்தத்தின் அடிச் சுவடு தேடி அலையாய் அலைபவரின் வலைப் பூ இது.

     ஒரு களப் பணியாளரின், அயரா உழைப்பின் உன்னதப் பதிவேடு இவர்தம் வலை.

இவர்தான்
வலைக்குள், வலை உலகிற்குள் என்னை இழுத்தவர்
முனைவர் பா.ஜம்புலிங்கம்


இவர்தம் வலை

சருகு
இறகு

இரண்டும்
உதிர்வுகள்

ஒன்று மரத்தின்
வரலாற்றை

இன்னொன்று
பறவையின் வரலாற்றை

ஒன்றில் பூமி
இன்னொன்றில் வானம்

இரண்டும்
வாழ்வின் உண்மையை

வானமும் பூமியும்
என்றும் நிலையானது

மற்றவை யாவும்
சருகு மற்றும இறகு.

    எத்துனை பெரிய உண்மை, எத்துனைச் சிறிய வரிகளில். இச்சிறு கவிதை ஒன்றே போதும் இவரின் மேன்மையை உணர்த்த.

     இவர் கவிஞரா? ஆம் கவிஞரும்தான்.
     எழுத்தாளரா? ஆம் எழுத்தாளரும்தான்.
     கட்டுரை வரைபவரா? ஆம் கட்டுரையும் வரைபவரும்தான்.
     சிறு கதை எழுத்தாளரா? ஆம் சிறு கதையும் எழுதுபவர்தான்
     நாவலாசிரியரா? ஆம் நாவலாசிரியரும்தான்
     இது மட்டுமல்ல,
     ஆசிரியர், பேராசிரியர், பல்கலைக் கழகப் பேராசிரியர்
     வலையில் எதை எழுதுவது? எப்படி எழுதுவது? என எனக்குப் போதித்தவர்.


இவர்தான்
முனைவர் ஹரணி

இவரது வலை

       நண்பர்களே, இன்னும் இன்னும் என, என் உள்ளம் கவர்ந்த பதிவர்கள் நிறைய்ய்ய்ய்ய பேர் இருக்கிறார்கள். ஆனால் எழுதத்தான் எனக்கு நேரம் இல்லை.

      புதுகைக் கவிஞர் உத்தரவிட்ட பிறகும், எழுத எனக்கு இத்தனை நாட்களாகி விட்டன. பொறுத்தருள வேண்டும் கவிஞரே.

      காரணம், தாங்கள் அறிந்ததுதான்

      பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு நெருங்கி விட்டதல்லா? தேர்வுக்கான நாட்கள் சுருங்கி விட்டன அல்லவா.

      பல மாணவர்கள் தேர்வு பற்றியச் சிந்தனையே இல்லாமல், ஊர் சுற்றிக் கொண்டிருக்க, ஆசிரியர்களாகிய நாங்கள்தான், தேர்வு, தேர்வு, படி, படி எனக் கூறிக் கூறியே நொந்து நொந்து வாடிக் கொண்டிருக்கிறோம்.

     மாணவர்கள் கண் விழித்துப் படிக்கிறார்களோ இல்லையோ? என் போன்ற ஆசிரியர்களின் இரவுகள், உறங்கா இரவுகளாகவே  நீண்டு கொண்டிருக்கின்றன.

     

அதிகாலை நான்கு மணிக்கே, என் வகுப்பின் ஒவ்வொரு மாணவனாய், ஒவ்வொரு மாணவியாய், அலைபேசி வழி அழைத்து,
எழு, எழு
படி, படி
என உறக்கத்தில் இருந்து எழுப்பி, படிக்க உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறேன.

      எனவே, தேர்வுகள் நெருங்க நெருங்க, வலையில் வலம் வரும் நேரம் சுருங்கிச் சுருங்கி ரொம்பவே குறைந்துதான் போய்விட்டது.

       நண்பர்களே, இந்த எளியேனைப் பொறுத்தருளுங்கள்.

      தேர்வு முடிந்தவுடன்,
      விடைத்தாள் திருத்தும் பணி நிறைவுற்றவுடன்,
      சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடி பணி நிறைவுற்றவுடன்
      சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நிறைவுற்றவுடன்

      முழுதாய் வலைக்கு வருவேன். அதுவரை நேரம் கிடைக்கும்போது, அவ்வப்போது வலையில் சந்திப்போம்.

     புதுகைக் கவிஞரே, தாங்கள் இட்ட பணியைச் செய்துவிட்டேன்.

     முதல் மதிப்பெண் வேண்டாம் மகளே? என்றவரே,
     தாங்கள் வைத்தத் தேர்வை எழுதிய, இந்த எளியேனின்,      
     விடைத்தாளினைத் திருத்தி, நான் பெற்ற மதிப்பெண்களைக்      
     கூறுங்கள் ஐயா.

     வெற்றி பெற்றுவிட்டேனா அல்லது உடனடித் தேர்வை மீண்டும்
     எழுத வேண்டுமா என்று அறிந்து கொள்ள
     ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.