27 ஏப்ரல் 2016

தியாகத்தின் திருஉரு



    ஆண்டு 1919. அன்னியர் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த தேசம் அது. சீர்திருத்தச் சட்டம் ஒன்றினை இயற்றிய அன்னியர்கள், அச் சட்டத்தின்படி, மாகாண, மத்திய சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.

     1920 இல் தேர்தலும் நடைபெற்றது. தேசிய அளவிலான கட்சியும், மாகாண அளவிலான கட்சியும் தேர்தலை எதிர் கொண்டன.

      கல்வியில், வேலை வாய்ப்பில், சமூகத்தில் உரிமை வேண்டும், சமமாய் உரிமை வேண்டும், சம உரிமை வேண்டும் என்று உரத்துக் கூறி, மனித தர்மமே இன்றைய தேவை என முழங்கியது மாகாணக் கட்சி.

      தேர்தல் நடைபெற்றது

      வாக்குகள் எண்ணப் பட்டன.

      மாகாணக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

      மாகாணமே திருவிழாக் கோலம் பூண்டது.

     ஆளுநர் லார்டு வில்லிங்டன், மாகாணக் கட்சித் தலைவருக்கு, அழைப்பு விடுத்தார்.

வாருங்கள்,
வந்து ஆட்சியினை அமையுங்கள்.
அரசுக் கட்டிலில் அமருங்கள்.

    மாகாண மக்கள், தங்களின் தலைவர் அரியணையில் ஏறும் காட்சியைக் கண்ணாரக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.

    தலைவர் அறிவித்தார்.

எனக்குப்  பதவி  வேண்டாம்.

    உலகே திடுக்கிட்டுத்தான் போனது. முதல்வர் பதவியைத் துச்சமாய் மதித்துத் தூக்கி எறிகிறாரே ,என்ன மனிதர் இவர் என உலகே திடுக்கிட்டுத்தான் போனது.

    தேடி வரும், தம்மை நாடிவரும், முதல்வர் பதவியைப் புறக்கணிக்க, தனது கைகளால் புறந்தள்ள, எத்துனை நெஞ்சுரம் வேண்டும். உலகே வியந்துதான் போனது.

     ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரோ, இப்படியும் ஒரு மனிதரா?, மூக்கில் விரலை வைத்து அதிசயித்துப் போனார்.

நமது நாட்டின் வரலாற்றில், முன் எப்போதும் இல்லை என்னும்படி, அரசியல் ஞானமற்ற, பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்துக்காக, என்னையும், அண்மையில் மறைந்த, என்னருமை சகத் தலைவரையும்,

அன்னியருக்கு வால் பிடிப்பவர்கள்,
அன்னியரின் பூட்சு காலை நக்குபவர்கள்
என
நூறு சதவிகித தேச பக்தர்களான, எதிர் கட்சியினர் தூற்றினர்.

எனவே, நான் இப்பதவியினை ஏற்பேனேயானால், எனது புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். எனவே அரியணை ஏறேன்.

     தலைவரின் விளக்கம் கேட்டு, நாடே விக்கித்துப் போனது. இவர் போன்ற மாசற்ற மனிதரல்லவா, நம்மை ஆள வேண்டும்.

     பல்வேறு தலைவர்களும், அனைத்து மக்களும் வேண்டினர். ஆயினும் அவர் மனம் மாறவில்லை.

      வேறொருவரை முதல்வராக்கி விலகி நின்றார்.

      நண்பர்களே, நம்ப முடிகிறதா உங்களால். முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்த மனிதர், மாமனிதர் ஒருவரும், இப்புவியில் வாழ்ந்துள்ளார் என்பதை நம்ப முடிகிறதா?

     ஆனால் உண்மை.

      எந்த நாட்டில் இந்த நிகழ்வு அரங்கேறியது தெரியுமா?

      சொன்னால் நம்பமாட்டீர்கள்

      இந்தியாவில்.

      என்ன இந்தியாவிலா?

      இந்தியாவில் எந்த மாநிலத்தில்?

      சொன்னால் நம்பவே மட்டீர்கள்.

      பெருமூச்சு ஒன்றினை, ஒருமுறை விட்டுக் கொள்ளுங்கள்.

      அம்மாநிலம்,

      தமிழ்நாடு

      அன்றைய, சென்னை மாகாணம்.

     என்ன? என்ன? நமது மண்ணிலா? அதுவும் நமது தமிழ் மண்ணிலா?

     ஆம், உண்மை நண்பர்களே, உண்மை.

தனக்குப் பதவி வேண்டாம் என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதி,
1920 ஆம் ஆண்டு,
திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை,
முதல்வர் ஆக்கினார் இவர்.

இவர்தான்,

நாமிருக்கும் நாடு, நமதென்று அறிய வேண்டும்.
இங்கு நாம் அடிமைகளாய் வாழ்வது அடாது.

திராவிட வீரனே,
விழி,  எழு,   நட

என உணர்வூட்டியவர். திராவிட உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்.

நீதிக் கட்சியின்
தலைவர்,
வெள்ளுடை வேந்தர்
சர் பி.தியாகராயர்.

தியாகராயரின் தியாகத்தைப் போற்றுவோம்

(சென்னையில் டி.நகர் என்றழைக்கப்படும், தியாகராய நகர் இவர் பெயராலேயே வழங்கப் படுகிறது)