10 ஜூன் 2016

புதிய மரபுகள்



ஆண்டு 1976.

    அரசர் கல்லூரி, திருவையாறு.

    கல்லூரி மாணவர்களால் அந்தச் சாலையே நிரம்பி வழிகிறது.

    மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கூடிய மாணவர்களின் ஊர்வலம்.

     ஊர்வலத்தில் நடுநாயகமாக, ஒரு மாணவரைப் பல மாணவர்கள், தங்களின் தோளில் சுமந்தபடி, வெற்றி முழக்கங்களை முழங்கியபடி செல்கின்றனர்.

    காரணம் என்ன தெரியுமா?


   கல்லூரி மாணவர்களுக்கானத் தேர்தலில் இம்மாணவர்தான், மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்டிருக்கிறார்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவர் மூன்றாமாண்டு மாணவர்.

   நான்காம் ஆண்டு மாணவர்கள் கூட, தங்களில் இளையவரான, இம்மாணவரைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டதுதான்.

   இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

    இம்மாணவர் முழுத் தகுதியானர். யாராலும் சுட்டு விரல் நீட்டிக் குறை சொல்ல இயலாதவர்.

    ஆர்வத்துடன் முன்னேறிச் சென்ற ஊர்வலம் திடீரென்று அமைதியடைகிறது.

    ஒரே நொடியில், முழு அமைதி

     சாலையின் இருமருங்கிலும் நின்று, ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்த, பொதுமக்களுக்கு வியப்பு தாங்கவில்லை.

     எப்படி இவ்வளவு பெரிய கூட்டம், திடீரென்று அமைதியானது என்று புரியவில்லை.

     ஊர்வலத்தின் முன்னே, மாணவர்களை நோக்கியவாறு,  இருவர் நிற்பதைப் பார்க்கின்றனர்.

    யார் இந்த இருவரும்?

    முதலில் புரியவில்லை

     பிறகு புரிந்தது.

     ஒருவர் கல்லூரி முதல்வர் அல்லவா?

     ஆம், கல்லூரி முதல்வர்தான்.

      பாரதி பித்தன்.

      கல்லூரி முதல்வர் மட்டுமல்ல.

       நவீன இலக்கிய வித்தகர். தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர்களுள் ஒருவர்.

      முதல்வருக்கு அருகில் நிற்பவர், அந்தக் கல்லூரிப் பேராசிரியர்களுள் ஒருவர்.

     முதல்வர் ,அமைதியடைந்த மாணவர் கூட்டத்தைப் பார்த்துக் கூறுகிறார்.

   மணவர் தேர்தல் சட்ட விரோதமானது. இத்தேர்தல் ரத்து செய்யப் படுகிறது.

    அத்துனை மாணவர்களும் திகைத்துத்தான் போகின்றனர்.

    வெற்றிச் செல்வன் என்னும் ஒரு மாணவர் மட்டும், மௌனம் கலைத்து, முதல்வரைப் பார்த்துக் கேட்கிறார்.

     அப்படின்னா, யார்தான் மாணவர் தலைவர்? நீங்களே ஒரு வழி செல்லுங்கள்.

     வேறு வழி? கடந்த ஆண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்தான், இந்த ஆண்டின் மாணவர் தலைவர் என்கிறது அரசு விதி. தேர்தல் எல்லாம் கிடையாது.

     முதல்வர் பாரதிபித்தன் பதில் கூறி முடித்த அடுத்த நொடி, ஓ வென்ற பெருங்கூச்சலுடன், விசில் சத்தம் வின்னைப் பிளக்கிறது.

    மீண்டும் மாணவர்கள், அதே மாணவர் தலைவனையே, தோளில் சுமந்தபடி, பெரும் கூச்சலுடன், தடைபட்டு நின்ற ஊர்வலத்தைத் தொடர்கின்றனர்.

    முதல்வருக்கு ஒன்றும் புரியவில்லை.

    அருகில் இருந்த பேராசிரியரிடம் கேட்கிறார்.

    ஏன் திரும்பவும் அவனையே தூக்கிக்கிட்டு ஊர்வலம் போறாங்க. அவன் தேர்தலில் ஜெயிச்சது செல்லாது, தேர்தல் ரத்துன்னுதான் சொல்லிட்டமே?

    பேராசிரியர் சிரித்தபடி மெதுவாகக் கூறினார்.

  சார், அவன்தானே, போன வருடத் தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கியவன். சுற்றறிக்கைப் பலகையில் போன வாரம்தானே போட்டோம்.

     இப்பொழுது முதல்வர் சிரித்தார்.

    சரி, சரி, அவனை முதல்வர் அறைக்கு வந்து, என்னைப் பார்க்கச் சொல்லுங்கள்.

     நண்பர்களே, இம்மாணவர் யார் தெரியுமா?

      இம்மாணவர் படித்துப் பட்டம் பெற்று, ஆசிரியராய் அரும்பணியாற்றி, ஓய்வும் பெற்று, கவிஞராய், எழுத்தாளராய், உலகு அறிந்த பட்டிமன்றச் பேச்சாளராய் வலம் வருபவர்.

தமிழ், என்றன் கருத்துமணம் தாங்கிவரும் பூந்தென்றல்
தமிழ், என்றன் சுடர்கருத்தைத் தாங்கிவரும் தீப்பிழம்பு
தமிழ், மக்கள் துரோகிகளைத் தாக்கவரும் துப்பாக்கி
தமிழ், என்கைத் துப்பாக்கி தாயல்ல வணங்கி விழ

எனத் தமிழையேத் தன் கைத் துப்பாக்கியாகச் சுமந்து சுழன்று வருபவர் இவர்.

ஏழை பாழை ஜனங்களுக்கு
    எல்லாச்சாமியும் ஒன்னுதாய் – இதுல
ஏற்றத் தாழ்வு சொல்லிக் கெடுத்தது
    எவன்டா? அவன் மண்ணு தான்

என வீறு கொண்டு எழுந்து சாடுபவர் இவர்.

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி எனப் பாடுவார் பாரதி. இந்தத் துப்பாக்கிச் சுமந்த கவியோ,

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
     வளம் கொழிப்பதும் இந்நாடே – தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
     பரம்பரையாவதும் இந்நாடே

என இன்றைய யதார்த்தத்தைக் கண் முன்னே கொண்டு வருகிறார்.

    இராமனின் பெயரால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட கொடுமை கண்டு பொங்கி எழுந்த இவர், உண்மையிலேயே இராமன் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார், எப்படிப் புலம்பி இருப்பார் என்பதையும் கவியாக்கி இருக்கிறார் பாருங்கள்

என்நாட்டை பரதனிடம் –மகிழ்வாய்
     எடுத்துக் கொடுத்தவன் நான்
என்கோயில் கட்டுவதற்கா – ஒன்றை
     இடியென்று நான் சொல்வேன்?

இவர் ஆசிரியராகவே, நல்லாசிரியராகவே வாழ்ந்ததனால், மனிதனாக, அசல் மனிதனாகவே வாழ்ந்து வருவதால், இன்றையக் கல்வி முறையைப் பார்த்துப் பார்த்து, மதிப்பெண்களையே குறிக்கோளாகக் கொண்டு சுற்றிச் சுழலும் கல்வியை, வீறுகொண்டு எழுத்து விளாசித் தள்ளுகிறார்.

பட்டன் போடவும்
தெரியாத பருவத்தில்
சீருடையா அவை
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்.

    ஆசிரியை ஒருவர், மாணவரால் வகுப்பறையிலேயே, கத்தியால் குத்தப்பட்டு இறந்த கொடுமையான நிகழ்வு அறிந்து குமுறுவதைக் கேளுங்கள்.

கைது செய்யுங்கள் அரசே
என்னைக் கைது செய்யுங்கள்

ஆசிரியரை வகுப்பறையில்
குத்திக் கொன்ற வழக்கில்
அரசே, என்னைக் கைது செய்யுங்கள்

நான் என்ன செய்தேன் என்றா
கேட்கிறீர்கள்?
மௌனமாக இருந்தேனே?
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே?

வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க
வழியில்லாமல்
மனப்பாடம் செய்யும்
மதிப்பெண்ணுக்கே மதிப்பு கொடுத்து,
அவன் நெஞ்சை நஞ்சாக மாற்றியதில்
ஆசிரியர்க்குப் பங்கில்லையா?

என்னைக் கைது செய்யுங்கள் அரசே
என்னைக் கைது செய்யுங்கள்.

    நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

    இவர் தமிழாசிரியர், கவிஞர், எழுத்தாளர், பாடகர், பேச்சாளர் மட்டுமல்ல.

   நல் நட்பிற்கோர் இலக்கணமாய் வாழ்ந்து வருபவர்.

   தன் நண்பரின் பெயரையே, தன் மகனுக்கும் சூட்டியவர்.

    இவரது கெழுதகை நண்பர்

   விசயரங்கன்

   விசயரங்கனின் பெயரின் பாதியை, தன் மகனின் பெயரில் பாதியாக்கியவர் இவர்.

     இவரது மகன்

     விஜய் நெருடா.

       சுமார் இருபது மாதங்களுக்கு முன், இவர் வெளியிட்ட, இவர்தம் கவிதைத் தொகுப்பை, இப்பொழுதுதான் படித்தேன்.

     படிக்கப் படிக்க, அந்நூலின் பக்கங்களில் கரைந்து காணாமல் போனேன்.

     இருபது மாத கால தாமதத்தைக் கவிஞர் மன்னிப்பாராக.

    


புதிய மரபுகள்.



இவர்தான்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே
என முழங்கியவர்
கவிஞர் முத்து நிலவன்.

செல்லவந்த தூரமென்ன? சேர்ந்த தடைகளென்ன?
நில்லாமல் முத்து நிலவனிவர் – எல்லைபடி
கண்டுவந்தார் பாட்டுக் களமேற்றி நூல்தந்தார்
அண்ணாந்து பார்த்தோம் அழகு.
-    செந்தலை ந.கவுதமன்