02 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 3



முனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

      ஒவ்வொரு கடிதத்தின்போதும், என் இதயம் சற்று நின்று, தட்டுத் தடுமாறிப் பின்னர்தான் துடிக்கத் தொடங்கியது.

     இதயம் மட்டுமா துடித்தது, நானும்தான் துடியாய்த் துடித்தேன்.


     எதனால் தேர்வு செய்யப்பட வில்லை. தேர்வினை நல்ல முறையில்தானே எழுதினேன். ஒன்றுமே புரியவில்லை.

    பிறகுதான் அந்த உண்மை மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியது.

    TOFEL  மற்றும் GRE நுழைவுத் தேர்வுகளை எழுதினேன் அல்லவா. அதன் முடிவுகளை, தேர்வினை நடத்திய அமைப்புகள், அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.

    ஆனால் எனது தேர்வு முடிவுகள், நான் விண்ணப்பித்தப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பப் படவே இல்லை.

    யார் செய்த தவறுக்கு யார் தண்டனை அனுபவிப்பது. கலங்கித்தான் போனேன்.

     இந்நிலையில்தான், செய்தித் தாட்களில் அந்த விளம்பரம் வெளி வந்தது.


வெளி நாட்டில் படிக்க, ஃபோர்டு நிறுவனம் உதவித் தொகை வழங்குகிறது.

     மீண்டும் புது தில்லிப் புறப்பட்டேன். புது தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று விண்ணப்பித்தேன்.

      அவர்களுடைய தேர்வு முறைகளை, ஒவ்வொரு படியாகக் கடந்தேன்.

      நேர்முகத் தேர்வு முடிந்தும், மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. முடிவுதான் தெரியவில்லை.

      பிறகு என்னுடன் விண்ணப்பித்த நண்பர்கள், ஒவ்வொருவருக்கும், ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து, கடிதங்கள் வரத் தொடங்கின.

ஃபோர்டு நிறுவன கல்வி உதவித் தொகைக்குத் தாங்கள் தேர்வு செய்யப்பட வில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

     நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் வருத்தக் கடிதங்கள் வர, வர என் உள்ளம் சற்றே தளர்ந்துதான் போனது. இன்று என் நண்பனுக்கு, நாளை எனக்கு.

    

தபால்காரரை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு யுகமாய் நகரத் தொடங்கியது.

      2002 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள், எனக்கும் கடிதம் வந்தது.

                                                                                                                         தொடர்ந்து பேசுவேன்