21 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 9



           

 பல்கலைக் கழகத்தின் சார்பில் குடிக்கும் கூட்டமா என நீங்கள் வியப்பது புரிகிறது.

     குடிப் பழக்கம் தொடர்பாக, நமக்கும் அமெரிக்கர்களுக்கும் உள்ள, ஒரு சில வேறுபாடுகளை நாம் முதலில் புரிந்து கொள்ளவது அவசியம்.

     குடிக்கும் கூட்டங்களில் குடிப்பவர்கள், குடிக்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைவருமே கலந்து கொள்கிறார்கள்.

     குடிப் பழக்கம் இல்லாதவர்களின் கொள்கையை மதிப்பதோடு, அவர்களை யாரும் குடிக்குமாறு கட்டாயப் படுத்துவது இல்லை.

    மாறாக, அவர்களுக்குத் தேவையான பழச் சாறுகள், பதப் படுத்தப் பட்ட பெஸ்ஸி போன்ற பானங்களுக்கும், இக்கூட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப் படும்.

     இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், இக் கூட்டங்களின் நோக்கமே, போதையினை ஏற்றிக் கொள்வதல்ல. மாறாக, ஒவ்வொருவருடனும் பேசுவது, புரிந்து கொள்வது, புத்தம் புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்வது.

    இந்தியாவில் குடித்தலுக்கானக் கூட்டத்தில் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒருவர் எத்தனை பாட்டில்களை காலி செய்தார் என்பதைத்தான் பார்ப்பார்கள்.

       ஆனால் அமெரிக்காவில் அப்படியல்ல. ஒருவர் ஒரு கோப்பை ஒயின் சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரமாவது ஆகும். ஏனெனில் இக்கூட்டத்தின் நோக்கமே பேசுவதுதான், ஆம் நண்பர்களே, பேசுவதுதான் முதன்மையான நோக்கம்.

        ஒருவர் எத்தனை பேரிடம் பேசினார், என்ன என்ன புதுச் செய்திகளைத் தெரிந்து கொண்டார், எத்தனைப் புதியவர்களின் அறிமுகங்களைப் பெற்றார், தெரிந்து கொண்ட செய்திகளும், ஏற்படுத்திக் கொண்ட புது நட்புகளும், தங்களது இலக்கை அடைய எவ்வாறெல்லாம் உதவும் என்பதே முக்கியம்.

     

எனவே, நானும் இவ்விருந்தில் கலந்து கொண்டேன். என் வகுப்பின் அத்தனை மாணவர்களும் வந்திருந்தனர்.

       என்னை வரவேற்ற என் தோழி வெண்டி, எனக்காக, ஆரஞ்சு ஜுஸ் மற்றும் பீட்சாவையும் கொண்டு வந்து கொடுத்தார்.

      சிறிது நேரத்தில், இன்னொரு முக்கியமான நபரும் வந்து, கலந்து கொண்டார். வியப்பின் உச்சிக்கே சென்றேன். ஏன் தெரியுமா? அவர் யார் தெரியுமா?

      எங்களது பேராசிரியர் வோரவில்.

      சிறிது நேரத்தில் இன்னொரு பேராசிரியரான ஹோஸே அவர்களும் வந்து சேர்ந்து கொண்டார்.

       பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஆசிரியர், மாணவர் என்ற வித்தியாசத்தினை இங்கு யாருமே பார்ப்பதில்லை என்று.

      இது மட்டுமல்ல, பல சமயங்களில் பேராசிரியர்கள், தங்கள் இல்லங்களிலேயே, மது விருந்திற்கு ஏற்பாடு செய்து, மாணவர்களை அழைக்கும் பழக்கமும் உண்டாம்.

      ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல், நட்புணர்வினை வளர்த்துக் கொள்ளுதலே, இதுபோன்ற விருந்துகளின் நோக்கமாக இருக்கிறது.

       பல்கலைக் கழக வாழ்க்கை இவ்வாறாக வேகமாக நகர்ந்து கொண்டே சென்றது.

      கிறிஸ்துமஸ் நாளும் வந்தது.

     

கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாட, எனது நண்பர் ஒருவருடன் இணைந்து கொண்டாட, முதன் முதலாக, நியூயார்க் நகரை விட்டுத், தன்னந்தனியாக கிளம்பினேன்.

      அதுவும் மெட்ரோ தொடர் வண்டியில்.

      முதல் பயணம்.

     அதுவும் பென்சில்வேனியா மாகானத்திற்கு. 

                                                      
                                                 தொடர்ந்து பேசுவேன்