07 நவம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 13



  உண்மையில் நடந்தது என்ன எனில், நான் கை வைத்திருந்த பெட்டி அசைந்தது, கதவு திறந்ததால் அல்ல, அந்த வண்டியானது, நடைமேடையில் இருந்து நகர்ந்ததால் ஏற்பட்ட அசைவு.

       அவசரத்தில் அதை சரியாக உணராததன் விளைவு, இதோ தண்டவாளத்தில் விழுந்து கிடக்கின்றேன்.


      மெதுவாக எழுந்தேன். நடைமேடையில் ஏற முற்பட்டபோதுதான் தெரிந்தது, நடை மேடையானது எனது தோள் பட்டை அளவிற்கு உயரமாக இருந்தது.

      எப்படி மேலே ஏறுவது என்று யோசிக்கும் பொழுதே, ஒரு இராணுவ வீரர், கீழே குதித்து, என்னைக் குழந்தை போல் மேலே தூக்கி விட்டார்.

       மேலே வந்து, அவ்வீரருக்கு நன்றி கூறினேன். சில சமயங்களில், ஒரு தொடர் வண்டி, புறப்பட்ட, சில வினாடிகளிலேயே, அடுத்த தொடர் வண்டி வந்துவிடும்.

        அதுபோல் இன்றும் வந்திருந்தால், நான் மட்டுமல்ல, என்னைக் காப்பாற்ற வந்தவரும் உயிரிழக்க நேரிட்டிருக்கும்.

        நல்ல வேளை பிழைத்தோம்.

---
    லகுவார்டியா கல்லூரியில் சேர்ந்து முதற் பருவம் முடியும் நிலைக்கு வந்தது.

    எனது சமூகவியல் பாடத்தின் ஒருங்கிணைப்பாளரிடமிருந்து, எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

      பருவத்தின் கடைசி நாளில், என்னுடைய கற்பிக்கும் முறை பற்றி அறிய, என்னுடைய வகுப்பை மேற்பார்வையிட உள்ளதாகவும், வகுப்பு முடிந்தவுடன், தனியாக சந்தித்துப் பேச இருப்பதாகவும் மின்னஞ்சல்  கூறியது.

    அந்நாளும் வந்தது.

      அன்று காலை 9.00 மணிக்கு வகுப்பறைக்குள், ஒரு கோப்பை காபியுடன் நுழைந்தேன். மாணவர்களுடன் கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ஜானத் மிச்சலோ, எனது ஒருங்கிணைப்பாளர் வகுப்பிற்குள் நுழைந்தார்.

      நேராக நான் இருக்கும் இடத்திற்கு வந்து, வணக்கம் கூறியவர், மாணவர்களோடு மாணவராக அமர்ந்தார்.

      வகுப்பு எப்பொழுதும் போல், நன்றாகவும் வேடிக்கையாகவும் சென்றது. வகுப்பின்போது, கை பேசி மற்றும் மடி கணினியுடன் விளையாடிக் கொண்டிருந்த, இரண்டு மாணவர்களை நான் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்தேன்.

       இந்நிகழ்வு தற்செயலாக நடந்தாலும், வகுப்பினை எந்த அளவிற்கு, எனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறேன் என்பதை மதிப்பிட உதவியது.

       வகுப்பு முடிந்ததும், நானும் ஜானத்தும் உணவு விடுதியில் சந்தித்தோம்.

       ஜானத் கை கொடுத்து என்னை வாழ்த்தினார். கல்லூரியில் தொடர்ந்து பணியாற்ற பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்தார்.

       பிறகென்ன மகிழ்ச்சிக் கடலில் மிதந்தேன்.

      இதற்கிடையில் முனைவர் படிப்பிற்காக, இரு தலைப்புகளைத் தேர்வு செய்து, 30 பக்கங்களைக் கொண்ட இரு கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பித்தேன். அப்பொழுதுதான் முனைவர் பட்ட ஆய்விற்குரியப் பணியினைத் துவக்க முடியும்.

      தலைப்புகள் என்ன தெரியுமா?

சென்னையில் உள்ள தமிழ்ப் பார்ப்பனச் சமுதாயத்தில்
பெண்களின் சூழல்கள்.

மற்றொரு தலைப்பு

சமூகவியல் நோக்கில் இந்து மதம் – ஆணாதிக்கத் தத்துவமும் சமூகமும்.

      காலமும், நாட்களும் ஓடிக் கொண்டே இருந்தன.

     ஒரு நாள் என் தோழி வெண்டி தொலைபேசியில் அழைத்தார்.

     இரண்டு டிக்கெட் வாங்கி விட்டேன். தயாராக கிளம்பி இருங்கள், வருகிறேன் என்றார்.

      எதற்கு என்று கேட்டேன்.

    

நியூ ஹார்லியன்ஸ் மற்றும் பிலடெல்பியா அணிகளுக்கு இடையிலான கால் பந்து போட்டியைக் காண, மிகவும் சிரமப்பட்டு, இரண்டு டிக்கெட்டுகள் வாங்கியுள்ளேன், கிளம்பி தயாராக இரு என்றார்.

      நானும் தயாராக காத்திருந்தேன்.

      சிறிது நேரத்தில் வெண்டி வந்தார்.

      இருவரும் கிளம்பி, கால்பந்துப் போட்டியைக் காணச் சென்றோம்.

     நீ எப்படி போட்டியைப் பார்ப்பாய்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

     எப்படி தெரியுமா?

                                              தொடர்ந்து பேசுவேன்