29 நவம்பர் 2016

வீர வணக்கம்


நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.

     ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும், அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.



     என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள். மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை. அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.

     நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது சகோதரர்களின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல நான்.

நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.

அச்சம் சிறிதும் இன்றி, நெஞ்சம் நிமிர்த்தி, நிதிமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பிய இவ்வீரர், தன் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த, அரசை அகற்றியவுடன், முதல் பணியாய், தன் தலையாயப் பணியாய் செய்தது என்ன தெரியுமா?

ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்ததுதான்.

எழுத்தறிவு இயக்கம்.

தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
துதான் எழுத்தறிவு இயக்கத்தின் தாரக மந்திரம்.

     சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும், மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர். கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு, புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டார்கள்.

     பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள்.

     ஒரே ஆண்டு நண்பர்களே, சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரே ஆண்டில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும், கட்டணமாக ஒரு பைசாவைக் கூட அரசாங்கம் வசூலிக்கவில்லை. அனைவருக்கும் இலவசக் கல்வி.

இந்நாட்டின் அடித்தளம் பள்ளிக் கூடங்களில் இருக்கிறது

இந்த நாட்டின், இன்றைய முன்னேற்றத்தின் ரகசியமும் இதுதான்

ஒன்றல்ல இரண்டல்ல
முழுதாய் 47 ஆண்டுகள்
நாட்டை வழிநடத்தியவர்

உலகின் முன்னனி நாடுகளுள்
ஒன்றாய் தன் நாட்டை உயர்த்தியவர்.

ஒன்றல்ல, இரண்டல்ல
638 முறை
கொலை முயற்சி தாக்குதல்களை
வெற்றிகரமாய் முறியடித்தவர்.

தன் 90 வது வயதில்
இயற்கையின் கரங்களில் தன்னை ஒப்படைத்திருக்கிறார்.



ஃபிடல் காஸ்ட்ரோ

நிம்மதியாக உறங்கட்டும்

வீர வணக்கம் செலுத்துவோம்