01 ஜனவரி 2017

திருமயம் பாறை ஓவியங்கள்




கரூர் மாவட்டம். பொம்மனத்துப் பட்டி.

     சிறு, குறு மலைகள் சூழ்ந்த சிற்றூர்.

     ஊருக்கு வெளியே ஆங்காங்கே பெருங்கற்படை நடுகற்கள்.

     மலைகளும், பெருங்கற்படை நடு கற்களும் சுற்றி வளைத்திருந்த, கிராமத்தில் பிறந்ததாலும், அங்கேயே வளந்ததாலும், மலைகள் என்றாலே ஒரு தனி மகிழ்ச்சி இவருக்கு.


     இதனால் இவர் வாழ்வில் மலைகள், ஒரு பிரிக்க முடியதாக அங்கமாகவே மாறிப் போயின.

     பள்ளிக் கல்வி முடிந்ததும், ஆசிரியர் பயிற்சியில் இவர் சேர்ந்த ஊர், கரூர் நகரின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வேலாயுதம் பாளையம்.

      அருகிலேயே புகழிமலை.

      கற்குகைகளும், பழங்காலத்து எழுத்து வடிவங்களை, வீரத் தழும்புகளாய், தன் உடலெங்கும் பெற்று பொலிவுடன் காட்சியளிக்கும் புகழ் பெற்ற மலை.

     
புகழி மலை


புகழி பார்வை

வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் புகழி மலையின் குகைகள், இவர் ரசனைக்குரிய வசந்த மாளிகைகளாகவே மாறிப் போயின.

     ஆசிரியர் பயிற்சி முடிந்து, அலுவலராய் பதவி உயர்வும் பெற்று, வாழ்வில் உயர்ந்த போதும், இவர் தேடித் தேடிச் சென்று, கண்ணாரக் கண்டு மகிழ்ந்தது என்னவோ மலைகளைத்தான்.

       மலைப் பயணம் இவரது வாழ்க்கைப் பயணமாகவே மாறிப் போனது. பிறந்த குழந்தை, தன் தாயின் மடியில், தோளில் தவழ்வது போன்ற ஒரு சுகத்தை, மலைகள் இவருக்கு வழங்கின.

      இவர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றது, சமண நூலாகிய நீலகேசியில்.

      முனைவர் பட்டம் பெற்றதோ இலக்கண நூலாகிய நேமிநாதத்தில்.

       இப்பட்டங்களை பெறுவதற்காக இவர் மேற்கொணட அயரா ஆய்வு, மலைகளில் அமைந்துள்ள சமணர் தங்குமிடங்களுக்குத் தான் இவரை அழைத்துச் சென்றது.

     தமிழ் நாட்டில் இருக்கின்ற 42 சமணச் சின்னங்களில், மிகப் பழமையான 30 சமணச் சின்னங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பதை அறிந்து பெருமூச்சு விட்டார்.

     தான் இருப்பதோ கிருட்டினகிரியில், சமணச் சின்னங்களோ புதுகையில், என்ன செய்வது என்று எண்ணி சிந்தனையில் ஆழ்ந்தவருக்கு, ஓர் உத்தரவு வந்தது, பணி இடமாறுதல் உத்தரவு,

    புதுகைக்குச் செல்லுங்கள்.

     ஆகா, இதற்குத்தானே இத்தனை நாளாய் கத்திருந்தேன் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டார்.

    புதுகை வரவேற்று மகிழ்ந்தது.

    புதுகையில் இலட்சக் கணக்கான பழம் பெரும் பதிப்பு நூல்களை கருவூலமாய், போற்றிப் பாதுகாத்து வரும் ஞானாலயா கிருட்டினமூர்த்தி, தமிழ் பேச்சால், தமழாற்றலால், அள்ள அள்ளக் குறையாத தமிழ் உணர்வால், நம் நெஞ்சை அள்ளும் கவிஞர் முத்து நிலவன் ஆகியோரின், தொடர்பால், நட்பால், புதுகை மாவட்டத்தின் தொன்மை, வரலாறு, சிற்பங்கள், ஓவியங்கள் பற்றிய ஓர் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.

     புதுகை மாவட்டத்தின் ஒவ்வொரு மலையாக ஏறத் தொடங்கினார். ஏற முடிந்த எந்த மலையையும் விட்டு வைக்கவில்லை.

      குடுமியான் மலையில் தொடங்கி ஒவ்வொரு மலையாக ஏறினார்.

     

திருமயம் கோட்டை இவரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

      வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், திருமயம் மலையே இவரின் இருப்பிடமாய் மாறிப்போனது.

     திருமயம் கோட்டையின் உச்சியில் ஏறி, மலையில் மல்லாந்து படுத்து, வானத்தை பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

    

உலகே ஒரு சிறு உருண்டையாய் சுருங்கி, சிறு பொறி உருண்டை போல், கண்ணுக்கு முன்னால் கவிந்து நிற்பதைப் போல் தெரியும் காட்சியை மெய்மறந்து ரசிப்பார்.

    எப்பொழுது எந்த மலையில் ஏறினாலும், புதிய காட்சி ஏதேனும் தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டே ஏறுவார்.

   


குகைகள் நிறைந்த மலையாக இருப்பின், ஒவ்வொரு குகையாய் உள்ளே நுழைந்து படமெடுத்துக் கொள்வதிலும், குண்டுப் பாறையாக இருந்தால், கீழே நின்று கொண்டு, தன் இரண்டு கைகளாலும் அல்லது தலையால் பாறையைத் தாங்கிப் பிடிப்பது போல், அதாவது, பாறை கீழே விழுந்து விடாமல், தாங்கிப் பிடித்திருப்பதைப் போல், கண்களை உருட்டியவாறு, புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் பெரு விருப்பம் உடையவர்.

     திருமயம் கோட்டையில், அப்படி ஒரு முறை படுத்துக் கொண்டு, ஒரு பாறையை தாங்கிப் பிடிப்பது போல் பாவனை செய்தபோதுதான், செந்நிறமான ஒரு தோற்றத்தைக் கண்டார்.

     உடலெங்கும் இனம் புரியா ஒரு இன்ப உணர்ச்சி அலை அலையாய் பரவ, எழுந்து நின்று, உற்றுப் பார்த்தார்.

     செந்நிற வண்ணம் பரவியிருந்தது. தெளிவாகப் புரியாத நிலை.

     குடிக்கக் கொண்டு போயிருந்த தண்ணீரைத் தெளித்துப் பார்த்தார், பலனில்லை.

     மறு நாள், முடி திருத்தகங்களில் பயன்படுத்தப் படும், தண்ணீர் தெளிப்பானை வாங்கிக் கொண்டு போய், பாறை மீது பீய்ச்சி அடித்து, பாறை மீது இருந்த அழுக்குகளைச் சுத்தம் செய்து பார்த்த போது, முழுமையாய் அதிர்ந்துதான் போனார்.
  

பாறை ஓவியங்கள்.

    கி.மு. 5000 ற்கும் முற்பட்ட பாறை ஓவியங்கள்.

    இது நாள் வரை, வெளி உலகு அறிந்திராத பாறை ஓவியங்கள்.

    கூட்டமாக மனித உருவங்கள், ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து வேட்டை அல்லது சண்டைக்கு இடம் பெயர்வது போலவும், நிற்பது போலவும் ஓவியங்கள்.

     எதிர் எதிரே நின்றபடி, இருவர் சண்டை இடுவது போன்ற ஓவியம்.

   




அம்பு எய்தும் வேடன், மான் அல்லது பன்றியை வீழ்த்துவது போன்ற ஓவியம்.

    கை விரல்களைப் போன்ற ஓவியங்கள்.

    இரு மனித உருவங்கள். கீழே ஆண், மேலே பெண். இருவரும் கை கோர்த்தபடி படுத்திருப்பது போன்ற ஓவியம்.

    அடுத்த நாள் திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள் என்னும் செய்தியறிந்து, புதுக்கோட்டையே சிங்கம் போல் பிடரியைச் சிலிர்த்து எழுந்தது.

   ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய், யார் கண்ணிலும் படாமல், ஒளிந்து, கண்ணாமூச்சு விளையாடிய ஓவியங்களை, கண்டு பிடித்து, வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இவர் யார் தெரியுமா?


முனைவர் நா.அருள் முருகன்,
முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை

     வியப்பாக இருக்கிறது அல்லவா.

     பள்ளி ஆசிரியர்களுக்கே, ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் போதாமல், பரிதவிக்கும், இக்கால கட்டத்தில், ஒரு கல்வி அதிகாரி, அதுவும் ஒரு மாவட்டத்தையே, கவனிக்க வேண்டிய, வழி நடத்த வேண்டிய, உயர் பொறுப்பில் உள்ள, முதன்மைக் கல்வி அலுவலர், ஒவ்வொரு நாளும், பள்ளி பள்ளியாய் நுழைந்து ஆய்ந்தும், தன் மேசையில் ஒவ்வொரு நாளும் மலை மலையாய் குவியும் கோப்புகளை கூர்ந்து கவனித்து, கையொப்பமிட்டு, கையொப்பமிட்டுக் களைத்துப் போய், உடலும் மனமும் சோர்ந்து போய், இரவு வீடு திரும்ப வேண்டிய, முதன்மைக் கல்வி அலுவலர், மலை மலையாய் ஏறி இறங்குகிறார் என்றால், இவருக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது என்ற வியப்பு மேலிடுகிறது அல்லவா.

     எந்தச் சிரமமும் எனக்கு இல்லை, ஏனென்றால், எனது வேலைகளை நான் இலகுவாக்கிக் கொண்டேன். www.pudhukaischools.com என்னும் பெயரில் ஒரு இணைய தளத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறேன்.

    மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்ந்த, எல்லா தகவல்களையும், அதில் இருந்து எடுக்கவும், சேர்க்கவும் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறேன்.

    என்னைப் பார்ப்பதற்கு என்று, எந்தத் தலைமையாசிரியரும், அல்லது எந்தவொரு ஆசிரியரும், என்னைத் தேடி அலுவலகத்திற்கு வர வேண்டியதே இல்லை.

   கணினி வழியாகவே எல்லா வழிகாட்டுதல்களையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன்.

    எனவே கிடைக்கும் ஓய்வு நேரத்தை, இத்தகைய ஆய்வுகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

கரம் கூப்பி வணங்கத் தோன்றுகிறதல்லவா,
பலமாய் கரவொலி எழுப்பி வாழ்த்தத் தோன்றுகிறதல்லவா


முனைவர் நா.அருள் முருகன்,
தற்பொழுது
கோவை மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்

போற்றுவோம்,
தேடல் தொடர வாழ்த்துவோம்