28 பிப்ரவரி 2017

வித்தகர்கள்



     வலை.

    வலையில் சிக்கியவர்கள் இருப்பார்கள்.

    ஆனால் வலையால் மீட்கப் பட்டவன் நான்.

    சில வருடங்களுக்கு முன், திடீரென, பணி ஓய்வு பெற்றுவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு.

    என்ன செய்வது என்று புரியாத நிலை.


    யோசித்தேன்.

    கரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.

    கரந்தை மண், போதி மரமாகி எனக்குப் போதித்தது.

    வாழ்வென்றால் என்னவென்று உணர்த்தியது.

    கரந்தை மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்து, நெற்றியில் பூச, உள்ளத்தில் ஒரு தெளிவு, உள்ளே வந்து அமர்ந்தது.

     கரந்தை என்னை மீட்டது.

     வலைப் பூவின் திசைநோக்கி வழிகாட்டி, வாழ்த்தி அனுப்பியது.

     தன் பெயருடன், என் பெயரினையும் இணைத்து, ஒரு வலைப் பூவை உருவாக்கிக் கொடுத்தது.

கரந்தை ஜெயக்குமார்

      2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 23 ஆம் நாள், என் முதல் பதிவு அரங்கேற்றம் கண்டது.

     பதிவின் தலைப்பு உமாமகேசன்.

     தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்த, கரந்தையின், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர் உமாமகேசனுக்கு வணக்கம் கூறி, முதல் வணக்கம் கூறி, வலையுலகில் மெல்ல நுழைந்தேன்.

முதல் பதிவு

உமாமகேசன்

உமாமகேசனே
தமிழ் முனியே
என் இறையே
முதல் வணக்கம்.

உனை எழுதும்
பித்தன் எனக்கு
சொல்லெடுத்துத் தருவாய்
தனித் தமிழ் அருள்வாய்.

     நண்பர்களே, இதுதான் என் முதல் பதிவு.

     இன்று வரை, என்னைத் தவிர வேறு யாருமே பார்த்திடாத என் முதல் பதிவு.

     பின்னர், மெல்ல, மெல்ல, வலையுலகு என்னை ஆரத் தழுவி வரவேற்றது.

     இன்று வலையே என் நேசமாய், என் சுவாசமாய் மாறித்தான் போய்விட்டது.

    ஐந்து வருடங்கள்

    290 பதிவுகள்

   இரண்டு இலட்சத்தைத் தாண்டிவிட்ட நண்பர்களின் வருகை.

   எட்டு புத்தகங்கள்.

   நான் தானா? நானே தானா?

   எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.

வித்தகர்கள்

எனது எட்டு நூல்களுள் ஒன்று
மின்னூலாய்
உருமாற்றம் பெற்றிருக்கிறது.

---


ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர்,
சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், கல்வியாளர்
இவர் ஓய்வு பெற்றதே
அதிகமாய்
முன்னிலும் அதிகமாய்
உழைக்கத்தானோ,
கணினி தமிழ்ச் சங்கத்தைப்
போற்றிப் புரக்கத்தானோ
எனக் காண்போர் வியக்கும் வகையில், தளராது, ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், அயராது பாடுபட்டு வரும்
கவிஞர் நா. முத்து நிலவன் ஐயா அவர்களின்
முயற்சியால்,


புஸ்தகா நிறுவனத்தின் சார்பில்
மின்னூலாய் வெளி வந்திருக்கிறது.



    தங்களின் கணினிக்குள், தங்களின் அலை பேசிக்குள், வேகமாய், வெகு வேகமாய் வந்திறங்கி, தங்களின் அன்பு முகம் காண காத்திருக்கிறது.