01 ஏப்ரல் 2017

வேண்டாம் விருது



      ஆண்டு 1954.

      இயற்பியல் துறைப் பேராசிரியர் அவர்.

      பேராசிரியர் என்றால், சாதாரணப் பேராசிரியரல்ல.

      நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      1930 லேயே நோபல் பரிசு பெற்றப் பேராசிரியர்.

      தனது இருக்கையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்தக் கடிதங்களை எல்லாம், ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்.

      நடுவண் அரசிடமிருந்து ஒரு கடிதம்.

      அரசிடமிருந்து தனக்குக் கடிதமா?

      யோசித்தவாரே, கடிதத்தை மெல்லப் பிரிக்கிறார்.


    ஒரே ஒரு பக்கக் கடிதம்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதிற்குத் தாங்கள் தேர்வு செய்யப் பெற்றுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

       பேராசிரியரின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை படர்கிறது.

       தொடர்ந்து கடிதத்தினைப் படித்தபோது, புன்னகை மறைந்தது.

        மனதில் ஒரு ஆழ்ந்த சிந்தனை குடியேறியிருப்பதைக் கண்கள் காட்டுகின்றன.

       கடிதத்தினை மேசையின் மீது வைத்தவர், கண்களை மூடி, சிறிது நேரம், அமைதியாய் அமர்ந்திருந்தவர், பின்னர் ஒரு முடிவிற்கு வந்தவராகக், கண்களைத் திறந்து, ஒரு வெள்ளைத் தாளினை எடுத்து, அரசிற்கு, பதில் கடிதம் எழுதத் தொடங்குகிறார்.

பாரத ரத்னா விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆயினும் இவ்விருதினைப் பெற இயலாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும்.

       கடிதம் கண்டு அரசு அதிர்ந்து போனது.

        ஆனாலும், அதற்கானக் காரணத்தை அறிந்தபோது, பாரத அரசே வியந்துதான் போனது.

        இப்படியும் ஒரு மனிதரா?

        இப்படியும் ஒரு பேராசிரியரா?

         தாங்கள் பாரத ரத்னா விருதினை எனக்கு வழங்க, தேர்ந்தெடுத்திருக்கும் தேதியில், எனக்கு ஒரு மிக முக்கிய அலுவல் இருக்கிறது.

        அன்றுதான் எனது மாணவருக்கு, எனது ஆய்வு மாணவருக்கு, முனைவர் பட்டப் படிப்பிற்கான ( டாக்டரேட் ) வாய் மொழித் தேர்வு நடைபெற இருக்கிறது.

        அவர், அன்று கற்றறிந்தோர் குழுமியிருக்கும் சபையில், தேர்வாளர்கள் முன்னிலையில், தனது ஆய்வு பற்றியும், ஆய்விற்காகத் தான் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சி பற்றியும், அதன் முடிவு பற்றியும் எடுத்தியம்பியாக வேண்டும்.

        இம்மாணவர், இந்த ஆய்விற்காக, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார். பல்லாண்டு கால உழைப்பின் விளைவினை, ஒரு சில மணித் துளிகளில், கேட்போர் குழப்பமின்றி, உணரும் வண்ணம், தெளிவாய் எடுத்துக் கூறியாக வேண்டும்.

        தேர்வர்களின் சந்தேகங்களுக்கு, தடுமாற்றமின்றி, படபடப்பின்றி, பதில் அளித்தாக வேண்டும்.

        இம்முக்கிய நிமிடங்களில், நான் என் ஆய்வு மாணவரின் அருகில், எதிரில் இருந்தாக வேண்டும். எனது அருகாமை, என் மாணவருக்கு, உற்சாகத்தையும், உள்ளத்தில் உறுதியையும் வழங்கும்.

        என் மாணவரை, இந்நிலையில் நான் கைவிட விரும்பவில்லை.

        விருதினை விட, என் மாணவரே, எனக்கு முக்கியம்.

        என்னை மன்னிக்கவும்.

        இந்திய அரசு, இவ்வாண்டில்தான், பாரத ரத்னா என்னும் பெயரில், விருதினை வழங்கவே முடிவு செய்திருந்தது.

         முதல் விருது வழங்கும் விழா.

         அமைச்சர்கள் ஒன்று கூடி விவாதித்தார்கள்.

         விருது வழங்கும் விழா, வேறொரு தேதிக்கு மாற்றப் பட்டது.

         பேராசிரியர் மகிழ்வோடு விருதினைப் பெற்றார்.

         நண்பர்களே, இப்பேராசிரியர் யார் தெரியுமா?


இந்திய அறிவியல் மேதை
சர் சி.வி.இராமன்