31 மே 2017

வருக வேலு



கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.

கரந்தைத் தமிழ்ச் சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்


என்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

       தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, புதிதாய் ஒரு வித்து, மெல்ல மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மெலெழும்பியிருக்கிறது.

       ஏடெடுத்து எழுதத் தொடங்கியிருக்கிறது.

       வாழ்த்தி வரவேற்க வேண்டியது, என் கடமையல்லவா? என் உரிமையல்லவா?


கே.எஸ்.வேலு

எனது நண்பர்

எனது தம்பியின் வகுப்புத் தோழர்

      கரந்தையில் பிறந்தவர், கரந்தையில் படித்தவர்.

      கோவையில் குடியேறியவர்.

      இயந்திரத்தோடு இயந்திரமாய் வாழ்ந்து வருபவர்.

      இடையில் எட்டாண்டுகள், இலங்கையில், கொழும்புவில் வாழ்வை நகர்த்தியவர்.

      இயந்திரமே வாழ்வாகிப் போன நிலையிலும், எழுத்தின் வாசமும், வாசிப்பின் மோகமும், இவரது கையில் எழுதுகோலைத் திணித்திருக்கிறது.

     எழுதுகோலையே ஊன்று கோலாய் பற்றி, விரைவாய் நடக்கவும் பழகி விடடார்.

     நண்பர்கள் மட்டுமல்ல, மனைவியும், இவரது மாமனாரும் கூட இவரது எழுத்தில் மயங்கித்தான் போய்விட்டார்கள்.

      இவரது மாமனார், ஓய்வு பெற்ற அரசு நூலகர். பழகுதற்கு இனியவர். சிறந்த பண்பாளர்.

      எனது தந்தையின் உற்ற நண்பர்.

      வாழ்வு முழுவதும், நூல்களுடனே கழித்த, இவர்தம் மாமனாருக்குத் தன் மாப்பிள்ளை, எழுத்தில் அதிகமாய் ஆர்வம் கொண்டிருப்பது கண்டு நெகிழ்ந்து போய், இவரின் முதல் வாசகராகவும் மாறித்தான் போனார்.

     மாமனார் மெச்சும் மருமகன்.

      சிறு கதைகள், வாழ்வியல் அனுபவங்கள் என ஏராளமாய் எழுதி வைத்திருக்கிறார்.

       இரவும் பகலும் உரசிக் கொள்ளும், ஒரு பொன் மாலைப் பொழுதில், நண்பர் வேலுவைச் சந்தித்தேன்.

        வேலுவை வாசித்தேன்.

        படிக்கப் படிக்கத் திகட்டாத நடை.

        எளிமையான வார்த்தைகளால், வெகு இயல்பாய், வெகு வேகமாய், நம்மையும், எழுத்தின் போக்கிலேயே, உடன் இழுத்துச் செல்லும், லாவகம் மிகு வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்.



     எனது நண்பரையும், நண்பரின் வலைப் பூவினையும், தங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமகிழ்வும், பெருமிதமும் அடைகின்றேன்.

கே.எஸ்.வேலு
இனி, இவர் நமது நண்பர்.

வாருங்கள், நண்பர்களே,
கே.எஸ்.வேலுவின்
வலையில் நுழைந்து
எழுத்தில் பயணித்து
மனதார வாழ்த்துவோம்

வாருங்கள்,     வாருங்கள்.