09 ஜூன் 2017

கலிலுல்லா




     டவுன் சிண்ட்ரோம்

     Down Syndrome

     தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.

      அணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.


      கருவில் ஏதேனும் ஒன்று குறைந்தால் மட்டுமல்ல, அதிகப்படியாய் ஏதேனும் ஒன்று சேர்ந்தாலும் கூட, வாழ்வு முழுவதும் வேதனைதான்.

     டவுன் சிண்ட்ரோம்

     அதிகப்படியாய், ஒரே ஒரு குரோமசோம், ஓடி வந்து ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் விபரீதம்.

      ஆணிண் 23 குரோமசோம்களும், பெண்ணின் 23 குரோமசோம்களும் இணைவதால் உருவாவதுதான் கரு.

       சில சமயம், இந்த குரோமசோம் சோடிகளில், 21 வது குரோமசோம் சோடியில், இரண்டிற்குப் பதில், மூன்றாவதாய், ஒரே ஒரு குரோமசோம், அழுது, அடம் பிடித்து சேர்ந்து கொள்ளும்.

      தேவைக்கும் அதிகமாய் ஒரு குரோமசோம்

     கூடுதல் குரோமசோமுடன் ஒரு கரு

     ஒரு உயிர்

      பிறக்கும் பொழுதே, தீராப் பிரச்சினையினையும் கைப் பிடித்து, உடன் அழைத்துக் கொண்டு வரும் குழந்தை.

      இரண்டு குரோமசோம்களுக்குப் பதில், மூன்று குரோமசோம்.

      எனவே இதன் பெயர்

      ட்ரைசோமி 21

       Trisomy 21

       இதன் மறுபெயர்தான், இதன் இன்னொரு பெயர்தான் டவுன் சிண்ட்ரோம்.

       சிறிய வாய்

       மேல் நோக்கிச் சாய்ந்த கண்கள்

       கன்னங்கள் நிறைந்த வட்டமான முகம்

       வெளிப்புறம் நீண்டு காணப்படும் பெரிய நாக்கு

       தட்டையான மூக்கு

       தள்ளாடும் அவயங்கள்

       குள்ளமான தோற்றம்

       குண்டான உடல் அமைப்பு

       


தோற்றத்தில் மட்டுமல்ல, இவர்களின் உடன் பிறந்த தோழராய், ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட, நோய்களும், இவர்களுடன் சேர்ந்தே வளரும்.

         இதயக் கோளாறு

         குடலில் அசாதாரணமான நிலைமை

         கண் பிரச்சினை

         காது கேட்டலில் குறைபாடு

         மீண்டும், மீண்டும் ஏற்படும் காதுத் தொற்று நோய்கள்

          இடுப்பு இயல்வு பிறழ்ந்த வளர்ச்சி

          உறக்கத்தின் போது மூச்சுத் திணறல்

         தைராய்டு பிரச்சினை

         வலுவற்ற கழுத்து மூட்டுகள்


         வாழ் நாள் முழுதும் போராட்டம், போராட்டம்

         வாழ்வு முழுவதும் வேதனை, வேதனை

         இவர்களின் இவ்வுலக வாழ்வு கூட குறைந்த காலம்தான்

         இவர்களின் ஆயுள், மருத்துவத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே 50 வயதுதான்.

         டவுன் சிண்ட்ரோம்

         இக்குறைபாட்டின் தன்மையையும், இதன் விளைவுகளையும், முதன் முதலாய் இந்த உலகிற்கு விளக்கிக் கூறியவர், ஒரு ஆங்கிலேய மருத்துவர்.

      ஜான் லாங்டன் டவுன்.

      எனவே இக்குறைபாடு, இவர் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

     டவுன் சிண்ட்ரோம்

      குணப்படுத்த இன்று வரை மருந்துகள் ஏதுமில்லை

      பெரிதும் முயன்றால், இவர்கள் வாழ்வில் சிறிதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்

      வாழக் கற்றுக் கொடுக்கலாம்.

     டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால், முழுமையாய் பாதிக்கப் பட்டு, கடும் முயற்சிக்குப் பின், கடும் பயிற்சிக்குப் பின், வாழக் கற்றுக் கொண்ட அந்தச் சிறுமி, பள்ளி விழா அரங்கில் அமர்ந்திருக்கிறார்.

     கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போல் கேட்கிறது, மேடையில் இருந்து காற்றில் தவழ்ந்து வந்த அழைப்பு.

     தன்னைத்தான் அழைக்கிறார்கள்

     உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் ஆகிவிட்டன.

     அரங்கு முழுதும் கரவொலி

     சிறுமிக்கு மெதுவாய் கேட்கிறது

     இருக்கையில் இருந்து மெல்ல எழுகிறார்

     மேடையை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறார்

     வலது கையில் ஒரு காகிதம்

     கையில் இருந்து விலகிப் பறந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை சிறுமிக்கு.

     வெள்ளைத் தாளினை இறுகப் பற்றியபடி நடக்கிறார்

     மேடையின் படிக்கட்டுகளில் தட்டுத் தடுமாறி ஏறுகிறார்

      நாக்பூர் மாவட்டத்தின், ஜீவோதயா சிறப்புப் பள்ளி, விழா மேடை

     ஆண்டு 2014, ஜுலை மாதம்

     பிறந்த குழந்தை, அடுத்த நொடியே, எழுந்து நடந்து வருவதைப் போல், நடந்து வரும் சிறுமியை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, மேடையில் நிற்கிறார், விழாவின் சிறப்பு அழைப்பாளர்.

      மாணவர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்கிறது

      மெல்ல மேடையேறி, முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையுடன், வெள்ளைத் தாளினை நீட்டுகிறார்.

       சிறப்பு விருந்தினர், குனிந்து, பெற்றுக் கொண்டு, வெள்ளைத் தாளினைப் பார்க்கிறார்.

        தனது உருவம், வெள்ளைத் தாளில்.

       நா…. நா…. நான் வ.. வ… வ….. வரை….. வரைந் ……வரைந்த…. வரைந்தது

       திக்கித் திணறியபடி வார்த்தைகள் வெளிவருகின்றன.

       விருந்தினர் வியந்து போகிறார்

       அச்சு அசலாய், தன் முகம் தாளிள் பளிச்சிடுகிறது.

        விருந்தினர், சிறுமியின் கரம் பற்றி மகிழ்கிறார்

        இந்தப் பிஞ்சுக் கரங்களா, என் உருவத்தினை, இவ்வளவு நேர்த்தியாய் வரைந்திருக்கின்றன.

        நெகிழ்ந்து போகிறார்

        மகளே, உன் பெயர் என்ன?

        க …. லி ….. லு …. ல் ….. லா

        இப்படத்தினை வரைய, இச்சிறுமி எத்துனை சிரமப் பட்டிருப்பார்.

        என் படத்தினை வரைய, எவ்வளவு நேரமாயிற்று?

        அன்பொழுகக் கேட்கிறார்

        பலமுறை வரைந்தேன். படம் சரியாக வரவில்லை, எனவே மீண்டும், மீண்டும் வரைந்தேன். இப் படத்தினை வரைந்து முடிக்க, பல நாட்கள் ஆகிவிட்டன.

        தட்டுத் தடுமாறி, திக்கித் திணறி, பேசி முடிக்கவே பல நிமிடங்கள் ஆகிவிட்டன, அச்சிறுமிக்கு.

        சிறுமியின் அன்பில் தோய்ந்து போகிறார்.

        அன்று மாலையே, கலிலுல்லா வரைந்த படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவேற்றி மகிழ்ந்தார்.



This sketch was gifted 2 me in Nagpur by Khalilullah.
A young girl suffering from Down’s Syndrome.
Thnku my friend.

      


நண்பர்களே, இம்மனிதர், யார் தெரியுமா?

       2015இல் இம்மனிதர், இம் மாமனிதர் மறைந்த போது, இலட்சக் கணக்கான இளைஞர்கள், தங்கள் சமூக வலை தளங்களில், கலிலுல்லா வரைந்த படத்தினைத்தான், புரொஃபைல் படமாக மாற்றினர்.

        இதுவே இம் மகத்தான மனிதருக்கு, இளைஞர்களின் அஞ்சலியாக அமைந்தது.

         இளைஞர்கள்  மீது, இம் மாமனிதர் கொண்டிருந்த, அசைக்க முடியாத நம்பிக்கைக்கு, இளைஞர்களின் வீர வணக்கமாகவும் அமைந்தது.








இம் மனிதர்,
இம் மாமனிதர்
இளைஞர்களின் எழுச்சி நாயகர்

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.