11 செப்டம்பர் 2017

சில விவாதங்கள்




     மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன் மற்றும் நினைவாற்றலைக் கட்டுப் படுத்துகின்ற மூளையின் டெம்பரல் லோப் என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது.

     மூளையின் இந்தப் பகுதி, வலிப்பு நோயால் பாதிக்கப்படும்போதோ, அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ, சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுகின்றன.


     இவையன்றி பட்டினிக் கிடத்தல், இரத்த சர்க்கரையின் அளவு அலை பாய்தல்,  திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவுகளைக் கொண்ட நடனம் ஆகியவையும், அமானுஷ்யமானவை என்று சொல்லப்படும் அனுபத்தைத் தர வல்லவை.

     சாதாரணமாக இளம் வயதில் மதத்தை விட்டு விலகியிருந்து, திருமணமாகி, குழந்தைகள் பெற்று, வயதடைய வயதடைய, கடவுளைத் தேடி சரணடைபவர்கள் ஏராளம்..

     ஆனால் இவர் சற்று வித்தியாசமானர்.

     40 – 43 வயது வரை, இவர் சார்ந்த கிறித்துவ மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், இம்மதக் கடவுளின் மேல் மாறா பற்றும் உடையவராய விளங்கியவர்.

     இளம் வயதில் பூட்டிக் கிடந்த கோவிலின் முன்னால், இரவு நேரத்திலே போய், தனியாக உட்கார்ந்து அழுதவர்தான் இவர்.

     ஆனாலும், பின்னர் மெல்ல மாறினார்.

     ஒரு நாளிலோ, ஒரு சில மாதங்களிலோ ஏற்படட மாற்றமில்லை.

     தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து மெல்ல மெல்ல மாறினார்

     யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ இவர் மாறவில்லை.

     கேள்வியும் நானே, பதிலும் நானே என இவர், இவரையேக் கேள்விகள் கேட்டு, அதற்கானப் பதில்களையும் இவரே கூறி, பலமுறை பதிலுக்காக அலையாய் அலைந்து, பதிலைத் தேடிக் கண்டுபிடித்து, மெல்ல மெல்ல மாறியவர்.

     தன் மதம், பிறர் மதம் என்று பாராமல், உலகின் அத்துனை மதங்களையும் அலசி, நெக்குருகப் படித்து, தீவிராமாய் ஆராய்ந்து, சில விவாதங்களை முன் வைக்கிறார்.

      தேவதூதர், யேசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் கூறியதாகவும், அதே தேவதூதர் முகமதுவிற்கு அல்லாவின் வார்த்தைகளைக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

     இதோ கடவுள் உன்னிடம் குழந்தையாய் பிறக்கப் போகிறார் என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா அல்லது பயப்படாதே, நான் அல்லாவினால் அனுப்பப் பட்டவன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா.

     எது சரி?

     இரண்டில் ஒன்றுதானே சரியாக இருக்க வேண்டும்.

    விவாதத்தை முன் வைக்கிறார்.

    நம் இந்தியக் கடவுளர்கள் எங்கெல்லாம் சஞ்சரித்தார்கள்.

    வடக்கே கைலாயம் என்ற இமயம்.

    தெற்கே குமரி முனை

     இந்த இந்தியக் கண்டத்தைத் விட்டு வெளியே செல்லாத கடவுளர்கள், கொஞ்சம் தாண்டியதாகக் கூறினால், அடுத்த நாடு, இலங்கையைக் கூறலாம்.

      கிரேக்க நாட்டுக் கடவுளர்கள், நமது முருகனைப் போல், மலைகளில் மட்டுமே வசிப்பதான கதை.

     ஆபிரஹாமிய மதங்களில் வரும் சம்பவங்கள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டில் வரும், அனைத்து தீர்க்க தரிசிகளின் செயல்பாடுகளும், அரேபிய நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கி விடுவது ஏன்?

      விவாதத்தை முன் வைக்கிறார்.

      ஏன் கடவுளர்கள், ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கிறார்கள்.

       யோசித்துப் பாருங்கள் என சிந்திக்க நம்மைத் தூண்டுகிறார்.

      ஆற்ற முடியாத சோகங்களைக், காலம் மெல்ல மெல்ல ஆற்றும்.

      ஆனால் அதே சோகங்களை கடவுள் நம்பிக்கை, உடனடியாய் போக்கும்.

       இதனைப் புரிந்து வாழ்ந்து, பட்டுணர்ந்து தெளிவு பட்ட, நம் முன்னோர், நமக்காக ஏற்படுத்திக் கொடுத்த, சுமை தாங்கித் தூண்கள்தான் நமது கடவுளர்கள்.

       அவைகள் வெறும் தூண்கள்தான், வெறும் கற்கள்தான், வெறும் கதைகள்தான். ஆனால் மனதிற்கு இதம் அளிக்க, மனிதனால், மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்.

      சிறு வயதில், மனதை நல்வழிப்படுத்த கடவுள் பயம் தேவை.

     வயதும், மனமும் வளர வளர, கடவுள் நமக்குத் தேவையில்லை.

     செத்தபிறகு மோட்சமாவது, நரகமாவது.

     இருக்கும்போது, உன்னையும், என்னையும், மனிதம் உள்ள மனிதனாக வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும்.

      இந்த வெளிச்சத்தை உணர்ந்தபின், அறிந்தபின், கடவுள் எதற்கு.

     மனிதம் போதுமே.


மதங்களும்
சில விவாதங்களும்

     பேசுவதே இவர் தொழில்.

      ஆம். இவர், 37 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

      ஒரு நைஜீரியப் புதினத்தை மொழி பெயர்த்தமைக்காக, இரு மாநில விருதுகளைப் பெற்றவர்.

      இவரது இரண்டாவது மொழி பெயர்ப்பு நூல் பேரரசன் அசோகன்.


மதங்களும்
சில விவாதங்களும்

     இவரது இயற்பெயர் சாம் ஜார்ஜ்.

     என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல் …… தொடர்ந்த தேடல் ……

     முடிவைத் தொட்டுவிட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை, உங்களையும் அழைத்துச் செல்ல ஆசை.

      ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.

      கடினமானதுதான்.

      உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள் ….

      240 பக்கங்களுக்குத் தொடரும் விவாதங்கள், விளக்கங்கள், வெளிச்சங்கள்.

      பெரு வள்ளலாய், பெரு வெள்ளமாய், விவாதங்களை முன் வைத்து, அலசி ஆராயும் இவரின் புனைப் பெயர்


த ரு மி.


மதங்களும்,சில விவாதங்களும்
எதிர்வெளியீடு,
96,நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி -642 002
தொலைபேசி 04259 . 226012, 9942511302

மின்னஞ்சல்
dharumibook@gmail.com