21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்




      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.

      தோளில் ஒரு ஜோல்னா பை.

       பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.

       மனதில் வெறுமை

       வாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.

        ஆனாலும் சூழல் அமையவில்லை.

         வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.


         இதோ சென்னையில்.

         வட இந்தியா முழுவதும் சில ஆண்டுகள் சுற்றித் திரிய வேண்டும் என்ற ஆசை.

         இரவு புதுதில்லிக்குப் புறப்படும் தொடர் வண்டியில், பயணச் சீட்டுக் கூட வாங்கிவிட்டார்.

         அதுவரை பொழுதைப் போக்க வேண்டுமே.

          இதோ அண்ணாசாலையில் அமைந்திருக்கும், ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார்.

          இவர் கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவப் பத்திரிக்கையாளருக்கான நேர் காணலில் கலந்து கொண்டு, அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

ஏன்? எப்போதுமே பத்திரிக்கையாளர்களையே உருவாக்குகிறீர்கள், எழுத்தாளர்களையும் உருவாக்கலாமே.

       இதுநாள் வரை யாரும் கேட்காத கேள்வி.

உங்களுக்கு விருப்பமிருந்தால் எழுதுங்கள். தரமானதாக இருந்தால் நிச்சயம் வெளியிடுவோம்.

       இளைஞர் எழுதினார்.

        ஆனந்த விகடனும் இவரது கதைகளை வெளியிட்டது

        ஆனாலும் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை தொடர்ந்து கொண்டே இருந்தது.

        இதோ ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார் அந்த இளைஞர்.

        ஆனந்த விகடன் அலுவலகம் அமைதியாய் காட்சியளிக்கிறது.

பி.எஸ்.ராமையா, கல்கி, கண்ணதாசன், ஜெயகாந்தன், சுஜாதா, கி.ராஜநாராயணன் துவங்கி எத்தனை எத்தனை பெரிய எழுத்தாளர்கள் இங்கு வந்து போயிருப்பார்கள்.

        உள்ளே போகலாமா, வேண்டாமா என்ற தயக்கம்.

        மெல்ல உள்ளே நுழைகிறார்.

        அலுவலக வரவேற்பறைக்குள் நுழைகிறார்.

மதன் சாரைப் பார்க்கனும்

நீங்கள் யார்?

வாசகன்

மேலே சென்று பாருங்கள்


மெல்லப் படியேறி, மதன் அவர்களின் அறைக்குள் நுழைகிறார்.

       சிரித்த முகத்தோடு வரவேற்றார் மதன்.

ட்காருங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்

        பெயரையும், ஊரையும் இளைஞர் சொன்னார்.

நம்ம பத்திரிக்கையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

        இளைஞர் தலையசைத்தார்

உங்க சிறுகதைகள் எல்லாம், ரொம்ப நல்லா இருக்குன்னு, எம்.டி., அடிக்கடி சொல்வார்.

சொல்லுங்க, என்ன செய்றீங்க?

         இளைஞர் தயங்கித் தயங்கிக் கூறினார்

மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.
வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்
டெல்லிப் பக்கம் போக இருக்கிறேன்

எதற்காக ஓடி வந்தீர்கள்?

இங்கே எழுதுவதற்கான சூழல் எனக்கு இல்லை. என்னிடம் பணமுமில்லை. எங்காவது போய் சம்பளத்திற்கு வேலை பார்க்க மனமுமில்லை.

        மதன் சிரித்தார்.

உங்க பிரச்சினை எனக்குப் புரிகிறது.
நான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன்
எல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது.
ஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது
எதுக்காகவும் நம்ப விருப்பத்தினைக் கை விட்றக் கூடாது
நீங்க என்ன ஆகனும்னு நினைக்கிறீங்களோ, அதை கெட்டியா பிடிச்சுக்கோங்க. விடாதீங்கோ.
நிச்சயமா உங்களாலே ஒரு நல்ல எழுத்தாளரா வர முடியும்னு நான் நம்புறேன்.
உலகமும் ஒரு நாள் நம்பும்.
என்ன சாப்பிடுறீங்க.

     மதன் அவர்களின் குரலில் இருந்த அன்பும், அக்கறையும், இளைஞரின் குழப்பத்தைத் துடைத்து எறிந்தது.

எம்.டி யையும் பார்த்திட்டுப் போங்க என்றார்.
      

  விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், இளைஞரை அன்பொழுக வரவேற்றார்.

          அவரது பேச்சில் இருந்த அன்பும், நேசமும் இளைஞரை நெகிழச் செய்தது.

நீங்க விரும்பினா, உடனே ஒரு தொடர்கதை எழுதலாம்.
விகடன் உங்களது தொடர்கதையினை உடனே வெளியிடும்.
உங்களாலே நல்லா எழுத முடியுது.
வெரி டிபரெண்ட் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்
நிறைய ஊர் சுத்திப் பாருங்க
அப்பத்தான் வாழ்க்கை புரியும்.
ஆனா எழுதுறதை விட்றாதீங்க
உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் கட்டாயம் செய்கிறேன்.

        இளைஞரிடம் ஒரு தெளிவு தோன்றியது

         புத்துணர்ச்சி பிறந்தது

         ஆனந்த விகடன் ஆசிரியரும், மதன் அவர்களும் காட்டிய அக்கறை, அந்த இளைஞரை, சென்னையிலேயே நிறுத்தி வைத்தது.

         புது மனிதராய் ஆனந்த விகடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த இளைஞர், புது  தில்லிக்கு வாங்கியிருந்தப் பயணச் சீட்டை, கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.

         எழுதினார்

         எழுதினார்

          எழுத்தே இவரது வாழ்க்கையாகிப் போனது

நண்பர்களே, இந்த இளைஞர் யார் தெரியுமா?

வாழ்வின் மீதான சகல அரிதாரங்களையும் பூச்சுக்களையும் துடைத்து,
நிஜ முகத்தை நேரடியாக அடையாளம் காட்டுபவர்.
நெருக்கடிக்குள்ளும் மனித மனம்,
தனது சந்தோஷங்களை அடையாளம் கண்டு கொள்ளும்
என்பதையும்,
வாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட வசீகரமானவைதான்
என்பதையும்
தன் எழுத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் இவர்தான்,




எழுத்தாளர்
எஸ் .ரா ம கி ரு ஷ் ண ன்.