28 ஜூலை 2018

எந்தை மறைந்தார்




     28.6.2018

     வியாழக் கிழமை

     அன்றைய பொழுது, வழக்கம்போல்தான் விடிந்தது.

     எந்தை பணிக்குச் சென்றார்

     நான் பள்ளிக்குச் சென்றேன்.


     எந்தை

     திரு சி.கிருட்டிணமூர்த்தி

     வயது 79

     புள்ளியியல் துறையில், மண்டல துணை இயக்குநராகப் பணியாற்றி, 1998 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், தனது பணியினை நிறைவு செய்தவர்.

     பணி ஓய்விற்குப் பிறகும் பணியாற்ற விரும்பினார்

     நான் பலமுறை தடுத்திருக்கிறேன்

     எனக்கு வேலை கிடைத்துவிட்டது. நான் ஊதியம் ஈட்டுகிறேன். எதற்காக நீங்கள் பணிக்குச் செல்ல வேண்டும். ஓய்வெடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் எனப் பலமுறை தடுத்திருக்கிறேன்.

     எந்தவொரு வேலையும் செய்யாமல், வீட்டில் முடங்கிக் கிடப்பது என்பது என்னால் முடியாத செயல். ஊதியம் பெரிதல்ல. உழைக்க வேண்டும் என்றார்.

     தஞ்சாவூர் பெஸ்ட் மருத்துவமனையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நிர்வாக அலுவலராகப் பணியாற்றினார்.

     அம்மருத்துவமனையின் மருத்துவர் ரவி அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவப் பணியில் இருந்து விலகிய பின், அம்மருத்துவமனையும், தன் சேவையினை நிறுத்திக் கொண்டது.

     அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்., மருத்துவமனையில், நிர்வாக அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார்.

     காலையில் நடைப் பயிற்சி

      அரைநாள் மருத்துவமனைப் பணி

      பிற்பகல் ஓய்வு

      மாலை நேரங்களில், நடைப் பயிற்சி மற்றும் நண்பர்களுடன் பேசி மகிழ்வது என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

       எங்களது வீட்டிற்கு நேரெதிரில்தான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி இருக்கின்றது.

       மாலை நேரங்களில், மருத்துவக் கல்லூரி வளாகத்திலோ, அல்லது சுந்தரம் நகர் பேருந்து நிறுத்தத்திலோ நண்பர்கள் ஒன்று கூடுவர்.

        இரவு ஒன்பது மணி வரை பேசி மகிழ்வர்.

        பின் மெல்ல நடந்து வீடு திரும்புவார்.

        அன்றும் இப்படித்தான் பொழுது நகர்ந்தது.

         காலை, தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றார்.

         மதியம் 1.45 மணி அளவில் வீடு திரும்பினார்

          மதிய உணவு

           பின் தொலைக் காட்சியில், பழைய படம் ஒன்றினைப் பார்த்தார்.

           சிறிது நேரம் படுத்து உறங்கினார்.

           மாலை 5.30 மணியளவில், பள்ளியில் இருந்து நான் வீடு திரும்பினேன்.

          ஓம் சக்தி இதழ் அஞ்சலில் வந்திருந்தது.

         மீண்டும் பெரிய கோவிலில் இராஜராஜன் என்னும் எனது கட்டுரை, இவ்விதழில் அச்சேறியிருந்தது.

       தஞ்சைப் பெரியக் கோவிலில் இருந்து மாயமாய் மறைந்த, இராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள், 76  ஆண்டுகள் கடந்த நிலையில் மீட்டுவரப்பெற்ற வரலாற்று நிகழ்வு பற்றியக் கட்டுரை.




    

மாலை நண்பர்களைச் சந்திக்கப் புறப்பட்ட, என் தந்தையாரிடம், என் கட்டுரை வந்திருக்கிறது, பாருங்கள் என ஓம் சக்தி இதழினைக் கொடுத்தேன்.

       வெளியில் கிளம்பியவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து, மூன்று பக்கக் கட்டுரையினை நிதானமாகப் படித்தார்.

      தஞ்சைப் பெரியக் கோவில், சிலைகள், சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., திரு பொன்.மாணிக்கவேல், தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் முதலியோர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி முப்பது நிமிடங்களுக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

       எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஓரிரு நிமிடங்களுக்கும் மேல், எந்தையார் என்னுடன் பேசியதில்லை.

       அளவாகத்தான் பேசுவார்.       

       ஆனால் அன்று தன் இயல்பினையும் மீறி, முப்பது நிமிடங்களுக்கும் மேல் பேசிக் கொண்டிருந்தவர், சரி நான் வாக்கிங் போயிட்டு வர்றேன் என்று கூறி, எழுந்து சென்றார்.

     இரவு 9.00 மணியளவில் வீடு திரும்பினார்

     இரவு உணவு உண்டார்

      படுத்தார்

      இரவு பத்து மணியளவில், கழிவறைக்குச் சென்றார்

      பத்து நிமிடங்கள் கடந்த பிறகும், எந்தையார் வெளியில் வரவில்லை.

      தண்ணீர் கொட்டும் ஒலி மட்டும் கேட்டது

       என் மனைவிதான் என்னிடம் கூறினார், மாமா சென்று பத்து நிமிடங்களுக்கும் மேலாகிவிட்டது என்றார்.

      அப்பா, அப்பா என்று குரல் கொடுத்து அழைத்தேன்

      பதிலில்லை

       கதவைத் தட்டினேன்

       அப்பொழுதும் பதிலில்லை

       என்ன செய்வது என்று புரியவில்லை

        ஓங்கிக் குரல் கொடுத்தவாரே, கதவை வேகமாகத் தட்ட, தாழ்ப்பாள் உடைந்தது.

        ஆயினும் கதவைத் திறக்க இயலவில்லை

        மெதுவாகக் கதவைத் தள்ளினேன்

         கழிவறையில், கதவின் மேல் சாய்ந்தவாரே, என் தந்தை அமர்ந்திருந்தார்.

      அப்பா, அப்பா எனக் கத்துகிறேன்

       மாமா, மாமா என என் மனைவி பதறுகிறார்

      எங்களது சத்தம் கேட்டு, இரவு தூக்க மாத்திரையின் தயவில், தூங்கிக் கொண்டிருந்த, என் அம்மா, பாதி உறக்கம் கலைந்த நிலையில், ஒன்றும் புரியாமல், எழுந்து வந்து நிற்கிறார்.

       என் மகள் திகைத்து நிற்கிறார்

        என் மகன் ஓடி வந்து, உதவ, மெல்லக் கதவினைத் திறந்து, என் தந்தையைத் தூக்கி, மடியில் வைத்துக் கொண்டு கதறுகிறேன்.

         எந்தை கண் திறக்கவில்லை

         எனக்குத்  தெரிந்த வரையில், மார்புப் பகுதியை, அழுத்தி அழுத்திப் பார்க்கிறேன்.

         பயனில்லை

        பத்தே, பத்து நிமிடங்களில் என் தந்தை, எங்களை எல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு, மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

        என் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ ஏதுமின்றி, சிறு குழந்தைபோல், அமைதியான உறக்கத்தில் என் தந்தை.

        வாழ்வில் எத்துணையோ தடைகளைக் கடந்து வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்து விட்டது.

        

எந்தைக்கு 1995 ஆம் ஆண்டில், குடலில் புற்று நோய் வந்தது.

        தன் குடலில் எழுபத்து ஐந்து சதவீத குடல் அகற்றப்பட்டு, இருபத்து ஐந்து சதவீத குடலுடன், 23 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.

       2004 ஆம் ஆண்டில், இதயத்திற்குச் செல்லும், இரத்த நாளங்களில், பல்வேறு இடங்களில் அடைப்பு.

       ஆஞ்சியோ செய்வதற்குக் கூட, தாக்குப் பிடிக்காத உடல்  நிலை என மருத்துவர்கள், கை விரித்தபோதும், மருத்துவர் தம்பையாவின், உயரிய, சித்த மருந்துகளின் உதவியால், அடைப்புகளை எல்லாம் உடைத்துத் தகர்த்து எறிந்து, 14 ஆண்டுகள் வாழ்ந்தவர் என் தந்தை.

       இரு முறை நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்குச் சென்றபோதும், இரண்டொரு நாட்களிலேயே, புது மனிதராய் இல்லம் திரும்பியவர் என் தந்தை.

      காலை, மாலை உடற் பயிற்சி, கடந்த ஒரு வருட காலமாக காலையில், அரை மணி நேரம் யோகா, முறையான மருத்துவம், எனத் தன் உடலைப் பேணிக் காத்தவர் என் தந்தை.

      உடலில் அவ்வப்போது துன்பங்கள், எட்டிப் பார்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.

      இரண்டே இரண்டு  பிள்ளைகள்

       நான்

       என் தம்பி

       அளவான குடும்பம்

       நான் ஆசிரியர்

       என் தம்பி, சுரேஷ் காந்தி பொறியாளர்

       என்னோடு தாய், தந்தையர்.

       இருவருமே நல் வாழ்வுதான் வாழ்கிறோம்

       எனக்கு ஒரு மகன், ஒரு மகள்

       என் தம்பிக்கு ஒரு மகன், ஒரு மகள்

       பெயரப் பிள்ளைகளைக் கொஞ்சி நிறை வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை.

      ஒரு நாள் கூட, உடல் நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை.

      பத்து நிமிடங்கள்

      பத்தே பத்து  நிமிடங்களில், எழுபத்து ஒன்பது ஆண்டுகால வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது.

      இரவில் நான் வீடு திரும்ப, சிறிது நேரமாகிவிட்டாலும், உடனே அலைபேசியில் அழைத்து, ஏன் இன்னும் வரல? எங்கிருக்கிறாய்? என்று கேட்கும் என் தந்தை, இன்று இல்லை.

      பெயரப் பிள்ளைகளுக்குத் தினம் தினம், ஏதேனும் ஒரு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து மகிழும், என் தந்தை இன்று இல்லை.

      என்னைச் சுற்றிப் பின்னப் பெற்றிருந்த, ஒரு பெரும் பாதுகாப்பு வளையம், தூள் தூளாகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.

       சிந்தனை துறந்து நிற்கின்றேன்.

       இன்றுவரை எத்துணையோ நண்பர்கள் இல்லத் துயரங்கள், உறவினர்கள் இல்லத் துயரங்கள் எனப் பலப்பல துயரங்களுக்குச் சென்று வந்திருக்கின்றேன்.

      ஆனால் இப்பொழுதுதான், முதன் முதலாக, பிரிவின் துயரை, பிரிவின் வலியை, வலிமையை முழுமையாக உணர்கிறேன்.

     இதுதான் பிரிவா

     இதுதான் துயரா.




எளியேனான, என்மீது, பேரன்பு கொண்டு,
எந்தையின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து,
பெரும் ஆறுதலை வழங்கினார்,
தஞ்சாவூர், காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்
.(15.7.2018)