22 நவம்பர் 2019

ஆறாவது முதலாளி




     குமார் செய்து கொண்டிருந்த ஒவ்வொரு செயல்பாடுகளும், அவரின் வளர்ச்சியை உறுதிப்படுத்திக்கொண்டே வந்தன. ஆனால் அவரின் முறையற்ற காமம், படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தில் உள்ள சின்னஞ் சிறுசுகள் வரைக்கும் பதம் பார்த்தது.

     பலப் பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தன.

     நான் வெளியே வந்து, சில வருடங்கள் கழித்து, குமார் குறித்து, அங்கு பணிபுரிந்த டைலரிடம் கேட்டபொழுது, அவர் இப்படிச் சொன்னார்.

     நமது முதலாளி, என்னுடன், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், டைலராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

     இப்படியும் ஒரு முதலாளி

     அவன் யார்? அவன் பதவி என்ன? என்பது போன்ற எதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

     ஆனால் எப்போதும் முதலாளியுடன் ஒட்டிக் கொண்டேயிருந்தான்.

      உள்ளே இருந்தவர்களிடம் இது குறித்துக் கேட்க முடியாது. உடன் பணியாற்றுபவர்களை நம்ப முடியாது.

     நீண்ட காலம் இங்கு இருக்கும் ஒரு ஒப்பந்தக்காரரிடம், வேறுவிதமாக இது குறித்துக் கேட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது.

     அவர் எளிமையாக, மதுரை வட்டார வழக்கில்  பின்வருமாறு சென்னார்.

     அவன் முதலாளியின் கணவன்.

     இப்படியும் ஒரு முதலாளி.

     நீதான் பொறுப்பு உன்னைத்தான் நம்பியுள்ளேன் என்று சொல்லப்பட்ட வார்த்தைக்குப் பின்னால் உள்ள துரோக அரசியலைப் புரிந்து கொள்ளவே இவருக்கு நீண்ட காலம் ஆனது.

     புரிந்தபோது, ஒரு ஜகஜாலக் கில்லாடியிடம் வந்து மாட்டியுள்ளோம் என்பது இவருக்குப் புரிந்தது.

     முழுமையாக ஒரு வருடத்திற்குள், அவரிடம் நான் வித்தியாசமான வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொண்டேன்.

     ஒரு தொழிலை எப்படி நடத்தக் கூடாது என்பதைவிட, ஒரு தொழில் செய்பவர், எந்த அளவுக்குக் கேவலமாக வாழக்கூடாது என்பதனையும் கற்றுக் கொண்டேன்.

     கடன் கொடுத்தவர்களுக்கு எக்காரணம் கொண்டும், உடனே சொன்ன தேதியில் திருப்பிக் கொடுத்துவிடக் கூடாது. எந்தந்த வகையில் இழுத்தடிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லம் இழுத்தடிக்க வேண்டும்.

     ஓரளவிற்கு மேல், பொறுமையிழந்து, அவர்களே, கொடுப்பதைக் கொடுங்கள் என்கிற நிலைக்கு வரும்பொழுது, பாதிக்குப் பாதி கொடுத்து செட்டில் செய்ய வேண்டும்.

     அதாவது லாபம் என்கிற சதவிகிதம் தனி.

     இதுபோன்ற வகையில் வரக் கூடிய உபரி வருமானம் தனி.

     இப்படியும் ஒரு முதலாளி.

     முதலாளி என்பவர் முதலீடு செய்பவர் மட்டுமல்ல, அவர் சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும், முன் முடிவு இன்றி, எதையும் அணுகும் பக்குவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

     தொழிலுக்கு லாபம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, தொழில் நிரந்தர வளர்ச்சியை நோக்கி நகர்தலும் முக்கியம்.

     தன்னுடன் இருப்பவர்களை நம்ப வேண்டும்

     அவர்கள் வளர்வதை அனுமதிக்க வேண்டும்.

     கிளைகளும், இலைகளும் ஆரோக்கியமாக இருந்தால்தான், காயும், கனியும் உருவாகும் என்பது வேருக்குத் தெரிய வேண்டும்.

     முதலாளி என்பவர் இதனைப் புரிந்தவராக, உணர்ந்தவராக இருக்க வேண்டும்.

     இவர் மெல்ல மெல்லப் புரிந்து கொண்டார்.

     நிலைமையை உணர்ந்து கொண்டார்

     முதல் நாள் இத்தொழிலுக்குள், தொழிலாளியாய் நுழைந்த நாளில் இருந்தே, கவனிக்கத் தொடங்கினார்.

     தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை உற்று நோக்கத் தொடங்கினார்.

     தொடக்கத்தில், குடும்பத்தினர், உறவினர்கள் வார்த்தைகளால் இவரைக் குத்திக் கிழித்துள்ளனர்.

     பிரச்சனைகளைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்காதே.

    கப்பல் கரை சேர்ந்ததா? என ஒவ்வொருவரும் கேட்டுள்ளனர்.

     பலரின் கேலிகளை எதிர்கொண்டுள்ளார்

     ஆனாலும் இவர், ஒவ்வொரு காலகட்டத்திலும், தன்னைத்தானே, மீளாய்வு செய்து கொண்டே இருந்தார்.

     எல்லாவற்றிலும் நேர்மை, எப்போதும் உழைப்பு மட்டுமே உயர்வைத் தரும்  என்ற இவரது நம்பிக்கை, இவருக்குப் பெரியப் பெரிய அவமானங்களையேப் பரிசாகத் தந்தது.

     சோர்ந்துவிடவில்லை.

     கடவுள் நம்பிக்கைகள்,  பிற நம்பிக்கைகள் போன்றவற்றில், கவனம் செலுத்துவதைவிடக் காலத்தின் மீது நம்பிக்கை வைப்பது எளிது என்பதை உணர்ந்தார்.

     காலம் கற்றுக் கொடுக்கும்

     காலம் கவனிக்கும், கண்காணிக்கும்

     காலம் காத்திருக்கச் சொல்லும் என்பதை புரிந்து கொண்டு காத்திருந்தார்.

      உழைத்துக் கொண்டேயிருந்தார்.

     ஓய்வில் கிடைத்த நேரங்களில், தான் அடைந்த அவமானங்களை, தனக்குக் கிடைக்காத அங்கீகாரங்களை மனதுள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

     இவரைக் காலம் கவனித்தது

     கண்காணித்தது

     கனிவாய்ப் பார்த்தது

     புயலும், புழுதிக் காற்றும் சூழ்ந்த வாழ்க்கையினுள் தென்றல் நுழைந்தது.

     வசந்தம் எட்டிப் பார்த்தது

     இனியாவது பிழைத்துக் கொள் என்று சொல்லாமல் சொல்லியது.

     இவர் முதல் தலைமுறையில் பணம் பார்த்தவரல்ல

     ஆனாலும் அளவிடமுடியாத கொள்கைகளைத் தன்னுள்ளே வைத்திருந்தவர்

     இவர் யாரிடமும், எதற்காகவும் வளைந்து கொடுக்காதவர்.

இவர்தான்

ஆறாவது முதலாளி

இவரது நூல்


ஐந்து முதலாளிகளின் கதை

திருப்பூர் ஆயத்த ஆடைத் துறையில் சாதித்த, சறுக்கிய
ஐந்து முதலாளிகளைப் பற்றிப் பேசும், கதைகளின் கதையை எழுதி
திருப்பூரை நம் கண் முன் கொண்டு வந்து காட்டிய
இந்த ஆறாவது முதலாளி, யார் தெரியுமா?

ஆயத்த ஆடைத் துறையில் கடைநிலை ஊழியராய் நுழைந்து,
தன் தளரா உழைப்பால், படிப்படியாய் முன்னேறி,
பொது மேலாளர் பதவி வரையிலும் பார்த்தவர்.

இன்று இவர், தன் சொந்த நிறுவனத்தின் முதலாளி

அதுமட்டுமல்ல,
திருப்பூரின் அடையாளங்களுள் ஒன்றாய் உயர்ந்து நிற்பவர்.



தேவியர் இல்லம்
ஜோதிஜி.