01 ஜனவரி 2020

விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி



தொட்டியில் நீந்துகிறது
மீன்
மனசுக்குள்ளிருக்கு கடல்.

     படிக்கும்போதே மனது வலிக்கிறதல்லவா. மனித மனங்களை மட்டுமல்ல, விலங்குகளின் மனங்களையும், உணர்வுகளையும், உணர்ந்தவராய் இவர் இருப்பதை, இவரது கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.


     மனிதர்கள் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் குலதெய்வக் கோயிலில், ஆடுகளைப் பலியிடுவதை, உயிர் வதைச் செய்வதை, வேதனையோடு இவர் வெளிப்படுத்தும் பாங்கைப் பாருங்கள்.

குலதெய்வ வேண்டுதல்
ஐந்தாடுகள்
பிஞ்சாட்டுக் கறி ருசி

     அமாவாசை மற்றும் விரத நாட்களில், காக்கைக்கு மட்டுமே சோறு படைக்கப்படும் பழக்கத்தை இவர் சாடும் அழகே அழகு.

விரதச்சோறு
அணிலை விரட்டுங்கள்
முதலில் காக்கை.

     நாம் பலமுறைப் பார்த்த காட்சிதான். பேருந்தில் நாம் பயணிக்கும் பொழுது, பேருந்தானது சில கோயில்களைக் கடக்கும் பொழுது, பயணிகள் பலரும், சன்னல் வழியாகக் காசுகளை வீசி எறிந்துவிட்டு, கடவுளின் அருளைப் பெற்றுவிட்ட உணர்வோடு பயணிப்பதைப் பார்த்திருப்போம்.

     இக்காட்சியினை, இக்கவிஞரும் கண்டு மனம் நொந்து போயிருக்கிறார்.

பேருந்திலிருந்து
வீசப்படும் காசுகள்
கோபமாய் கருப்புசாமி.

     கோயிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம், கோயில் வாசலில் பிச்சைக் காரர்களைப் பார்த்திருப்போம். இவரும் பார்த்திருக்கிறார்.

கோயில் மணியோசை
பிச்சைத் தட்டில் காசோசை
இரண்டும் ஒன்றுதான்.

     மரங்களிலிருந்து இலைகள் உதிர்வதையும், உதிர்ந்த இலைகள் காய்ந்து சருகுகள் ஆவதையும் பார்ததிருக்கிறோம். இதோ இவரும் தன் கவிக் கண்களால் பார்த்திருக்கிறார்.

விடைபெறுகிறது சருகு
வழியனுப்புகிறது மரம்
அழுகிறது காற்று

     துளிப் பா எனப்படும் ஹைக்கூ. மூன்றே மூன்று  வரிகளில், இலக்கிய ஈடுபாடு அற்றவரையும் எளிதில் முழுவதுமாய் தன்வசப்படுத்தும், எளிமையான வார்த்தைகளால், வலிமையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் இவர்.

யாரும் வரலாம்
மௌனம் சம்மதம்
ஆலமர நிழல்.

     தொகுப்பு முழுவதுமே, மனித உணர்வுகளும், மனிதநேயமும், சூழ்நிலைச் சிதைவுகளும், அதனால் ஆன இழப்புகளுமே ததும்பி வழிகின்றன.

     எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நூலிலை கூட இடை வெளி இல்லாதப் படைப்பாளி இவர்.

     தினமும் இருநூறு கிலோ மீட்டர் பயணம். தினமும் இருநூறு பக்கங்களாவதுப் படிப்பது. தினமும் குறைந்தது ஐம்பது பக்கங்களாவது எழுதுவது எனத் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர் இவர்.

     இவர் இதுவரை ஐம்பது நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். மேலும் ஐம்பது நூல்களுக்கானக் கையெழுத்துப் பிரதிகள், அச்சகம் நோக்கியத் தங்களின் பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றன.

      இவரது ஐம்பது நூல்களும் வெளியீட்டு விழா, காணாமலேயே, வெளிவந்த வேகத்தில் தீர்ந்து போனவை என்பதுதான் இவரது தனிப் பெருமை.

     கடந்த 22.12.2019 ஞாயிற்றுக் கிழமை காலை இவரது ஐம்பத்து ஒன்றாவது நூல், வெளியீட்டு விழா கண்டது.

     மிக மிக எளிமையாய்.

     தஞ்சாவூர், சரபோசி நகர், அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில், இறைவியின் திருமுன் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பல்கலைக் கழக
அகராதியியல் துறை
மேனாள் தலைவர்
முனைவர் எச்.சித்திர புத்திரன் அவர்கள்
வெளியிட

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரி
தமிழ்த் துறைப் பேராசிரியர்
முனைவர் கண்ணம்மாள் அவர்கள்
முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.




இவர்தான்
பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர்
ஹரணி

இவரது
ஐம்பத்தி ஒன்றாவது நூல்


விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி