25 மே 2020

சாதனையாளரை வாழ்த்துவோம்




     2014 ஆம் ஆண்டு மே திங்களில், கவிஞர் முத்துநிலவன் அவர்களால், கணினி தமிழ்ச் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பெற்று நடத்தப்பெற்ற, இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில், மாணவராய், பங்கேற்பாளராய் கலந்து கொண்டவர் இவர்.

     இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 2016 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டிலும், அதே கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய, அதே பயிற்சிப் பட்டறையில், ஆசிரியராய் பாடம் நடத்தியவர் இவர்.


     எதைக் கற்றுக் கொண்டார்.

     எதைக் கற்றுக் கொடுத்தார்.

     விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா.

     விக்கிப்பீடியாவில் தமிழில் கட்டுரைகளை எழுதுவது எப்படி? என்று கற்றுக் கொண்டார். பின்னர் கற்றுக் கொடுத்தார்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கு முன்னரே, 2013 ஆம் ஆண்டில், விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையினை எழுதிப் பார்த்தார்.

     இவர் எழுதிய வேகத்திலேயே, அக்கட்டுரை நீக்கப் பட்டுவிட்டது.

     கட்டுரை நீக்கப்பட்டுவிட்டதா? எப்படி?

     இன்று நம்மில் பலரும் வலைப்பூவில் எழுதுகிறோம்.

     நான் கடந்த பத்து வருடங்களாக வலைப்பூவில் எழுதி வருகிறேன்.

     என் வலைப்பூவைப் பொறுத்தவரை, நானே ராஜா, நானே மந்திரி.

     என் கட்டுரையினை கூகுள் ஆண்டவராய்ப் பார்த்து நீக்கினால்தான் உண்டு.

     வேறு யாராலும் கை வைக்க முடியாது.

     ஆனால் விக்கிப்பீடியா அப்படியல்ல.

     விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

     நீங்கள் எழுதினால், நான் உள்ளே புகுந்து, ஒரு குறிப்பிட்டப் பகுதியை நீக்கலாம், திருத்தலாம், எங்கே ஆதாரம், காட்டு, நிரூபி, என்று உங்களைப் பாடாய் படுத்தலாம்.

     தவறான செய்தியினை எவரும் பதிவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, இந்தக் கட்டற்ற சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

     விக்கிப்பீடியா

     இந்தக் கடலில் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார் இவர்.

     நண்பர்களைப் பற்றி எழுதினார்.

     தான் பயின்றப் பள்ளியை எழுதினார்.

     தான் பயின்ற கல்லூரியை எழுதினார்.

     தான் பணிபுரிந்த நிறுவனத்தை எழுதினார்.

     கும்பகோணத்துக் கோயில்களை எல்லாம், விக்கிப்பீடியாவிற்குள் கொண்டு வந்தார்.

     தஞ்சாவூர் கோயில்களையும் விட்டுவிடாமல் சேர்த்தார்.

     தான் ஆற்றியக் களப்பணி விவரங்களை இணைத்தார்.

     தான் படித்த நூல்களையும், தான் சென்ற நூலகங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டினார்.

     ஒவ்வொன்றையும் தகுந்த ஆதாரங்களோடு, அசைக்கமுடியாத சாட்சிகளோடு பதிவிட்டார்.

     கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், ஊதியம் வாங்கியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், இவருக்கு விக்கிப்பீடியாவே, ஊதியமில்லா முழுநேரப் பணியாய் மாறிப்போனது.

     விக்கிப்பீடியா நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது இவருக்குச் சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிடுவது போல் ஆயிற்று.

     விக்கிக் கோப்பைப் போட்டி

     வேங்கைத் திட்டம்

     ஆசிய மாதம் தொடர் தொகுப்புப் போட்டி

     ஒவ்வொன்றிலும் பரிசுகள் இவரைத் தேடி வந்தன.

     விக்கிக் கோப்பைப்  போட்டிக்காக, ஒரே நாளில், ஒரே ஒரு நாளில் 18 கட்டுரைகளை எழுதி அசத்தியிருக்கிறார் இவர்.

     தமிழ் விக்கிப்பீடியாவில், சென்ற ஏப்ரல் மாதம் வரை, ஆயிரம் பதிவுகளை எழுதிக் குவித்திருக்கிறார்.

     தமிழில் மட்டுமல்ல, ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இருநூற்றிற்கும் அதிகமானக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

     இதுமட்டுமல்லாமல், இரண்டு வலைப் பூக்கள், பௌத்த சிலைகளைத் தேடும் களப்பணி, தேவாரத் தலங்கள், வைப்புத் தலங்கள், மங்களாசாசனம் பெற்றத் தலங்கள் என அயராமல் அலைந்து கொண்டே இருக்கிறார் இவர்.

     தளராமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்.

விக்கிப்பீடியா 1000:  பதிவு அனுபவங்கள்

     தனது அனுபவங்களை எல்லாம் தொகுத்து, மின்னூலாய், அமேசான் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

     விக்கிப்பீடியாவில் நுழைவது எப்படி, எழுதுவது எப்படி, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என ஒவ்வொன்றையும், சிறு பிள்ளைக்குச் சொல்வதைப் போல் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இவர்தான்,


முனைவர் பா.ஜம்புலிங்கம்,
மேனாள் உதவிப் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்


விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள்.

வாழ்த்துகள் ஐயா
தங்களின் தேடல் தொடரட்டும்!        
எழுத்துகள் மலை மலையாய் குவியட்டும்!!



                                                                                                                                                                                 


ஒலிப்பேழை