06 செப்டம்பர் 2020

நின்ற சொல்லர்



   

 இன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.

     முழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன.

    இம்மொழிகளுள், குறிப்பாகச் சொல்லப்படுகின்ற, ஏழு பழம் மொழிகளிலே, செம்மொழிகளிலே, தமிழ் தனித்து நிற்கின்ற ஒரு மொழி.

     அன்று எப்படி இருந்ததோ, அதே சீரிளமையுடன் இன்றும் இருக்கிறது.

  

   தமிழுக்கென்று குறிக்கோள்கள் இருக்கின்றன.

     தெளிவு இருக்கிறது.

     பொதுமை இருக்கிறது.

     இவையெல்லாம் சேர்ந்து இருப்பதால்தான், தமிழ் மொழி, செம்மொழி என்று போற்றப்படுகிறது.

     நம் தமிழ்,

     சங்கத் தமிழ்.

     சங்கத் தமிழின் குறிக்கோள்கள் இரண்டு.

     ஒன்று அகம்.

     மற்றொன்று புறம்.

     அகம் என்றால் என்ன?

     புறம் என்றால் என்ன?

     அவளும், நானும் மற்றும் என் வீடும்.

     இதுதான் அகம்.

     நானும் இந்த உலகமும்.

     இதுதான் புறம்.

     எவ்வளவு எளிமையாய்ப் பிரித்திருக்கிறார்கள், பாருங்கள்.

     அகம்.

     நானும், அவளும்.

     ஆண், பெண்

     தலைவன், தலைவி

     காதல்.

     இதுதான் அகம்.

     காதல்தான் அகம்.

     இக்காதலை மற்ற செவ்வியல் மொழிகள் எல்லாம், எவ்விதம் எடுத்து உரைத்திருக்கின்றன என, ஒரு பருந்துப் பார்வைப் பார்ப்போம் வாருங்கள்.

     முதலில் ஹுப்ரு.

     அதாவது எபிரேய மொழி.

     யூதர்களுடைய மொழி.

     இவர்களுக்குச் சொந்தமானவை, இரண்டே இரண்டு நூல்கள்.

     ஒன்று தோரா.

     மற்றொன்று சால்முத்.

     ஒன்று அவர்களுடைய வரலாற்றைச் சொல்லுகின்ற நூல்.

     மற்றொன்று, அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்கிற சட்டங்களைச் சொல்லுகின்ற நூல்.

     அவர்களுடைய வரலாறு, இனப் பெருமையில் தொடங்குகிறது.

     ஒரே ஒரு கடவுள்.

     அவர்களுக்கு மட்டுமேயான, ஒரே ஒரு கடவுள்.

     கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.

     தபோரா, தாவீது, சாலமன் என நிறையக் கவிஞர்களும், மில்லியம் என்ற பெண் கவிஞரும் இருந்திருக்கிறார்கள்.

உமது பெயரோ

பரிமணத்திலும் மிகுதியாய்

பரவி உள்ளது – எனவே

இளம் பெண்கள் – உன்மேல்

காதல் கொள்கிறார்கள் – உம்மோடு

என்னைக் கூட்டிக் கொண்டு செல்லும் – நாம்

ஓடிப்போவோம்.


---

அரசியர் 60 பேர்

வைப்பாட்டியர் 80 பேர்

இளம் பெண்கள் எண்ணிறந்தனர்.

என் வென்புற – அழகின் வடிவம்

அவள் ஒருத்தியே.

     சாம்ஸ் என்றப் பாடல்களில் இதுபோன்ற காதல் பாடல்கள் இருக்கினறன.

     சாம்ஸ் என்றால் துதிப் பாடல்கள்.

     இவை தலைவன், தலைவி பாடல்கள் அல்ல.

     நாயகன், நாயக பாவத்திலே, இறைவனைப் பற்றியப் பாடல்களாகவே தோன்றுகின்றன.

     எனவே, காதல் பாடல்கள் அங்கு இல்லை.

     அடுத்து, சமஸ்கிருத இலக்கியம்.

     வேத காலத்தில் இல்லை.

     புராண, இதிகாச காலத்தில்தான் இம்மொழியைப் பேசியிருக்கிறார்கள்.

     இரண்டு இதிகாசங்கள்.

     மகாபாரதம், இராமாயணம்

     இவர்கள் எல்லாம் அவதாரங்கள்.

     அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.

     இவர்களுடைய திருமணம் அசுரம்.

     ஒன்று நாண் ஏற்ற வேண்டும் அல்லது வில்லை முறிக்க வேண்டும்.

     எனவே, இங்கு காதலுக்கு இடமில்லை.

     அடுத்ததாக, கிரேக்க இலக்கியம்.

     பழமையான இலக்கியம்.

     இவர்களது இலக்கியங்கள், ஹோமர் படைத்தவை.

     இலியட் மற்றும் ஒடிசி.

    இவை இரண்டும்தான், கிரேக்கர்களின் அடிப்படை இலக்கியம்.

     இதில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளர்கள்.

     பார்க்கும் பெண்களை எல்லாம் புணர்தலும், குழந்தை கொடுத்தலுமே, இவர்களுக்குப் பிடித்தமான செயல்கள்.

     எனவே, இங்கு காதலுக்கு இடமில்லை.

     இருப்பினும், அகேயஸ் என்ற கவிஞனும், சாபோ என்ற ஒரு பெண் கவிஞரும் இருந்திருக்கிறார்கள்.

நிலவு பூத்துவிட்டது

ஏழு நட்சத்திர சகோதரிகள் – தங்கள்

இருப்பிடம் சென்று சேர்ந்துவிட்டனர்.

நள்ளிரவுப் பொழுது

நேரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

நான் மட்டும்

என் படுக்கையில்

தனிமையில் இருக்கிறேன்

தவியாய் தவிக்கிறேன்

     கிடைத்திருக்கும் பாடல்களும், காதல் பாடல்களாகத் தோன்றவில்லை.

     விரகதாபப் பாடல்களாகவே தோன்றுகின்றன.

     கி.பி.பத்தாம் நூற்றாண்டில், அலெக்சாண்ட்ரியா நூலகத்தில் இருந்தக் கவிதைகள் அனைத்தும், கிறித்துவப் பாதிரிமார்களால் அழிக்கப்பட்டு விட்டன.

     இவையெல்லாம், தவறான சிந்தனைகளை உருவாக்குகின்றன என்று கூறி தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டார்கள்.

     அடுத்ததாக ரோம இலக்கியங்கள்.

     இவை கிரேக்க இலக்கியத்தின் மறுபதிப்பு.

     அடுத்ததாக, நம் இலக்கியம்.

     தமிழ் இலக்கியம்.

     முதலில் அகம்.

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்

என்றும் என் தோள் பிரிவு அறியலரே

தாமரைத் தன்தாது ஊதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின்றி அமையா உலகம் போலத்

தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி

நறு நுதல் பசத்தல் அஞ்சி

சிறுமை உறுபவோ செய்வது அறியலரே.

     ஒரு பெண்ணும், ஆணும் காதலிக்கிறார்கள்.

     தொடர்ந்து சந்தித்துப் பேசுகிறார்கள்.

     தோழி கேட்கிறாள்.

     இது சரிதானா?

     அவர் நின் கரம் பிடிப்பாரா?

     பெண் பதில் உரைக்கிறார்.

     அவர் நின்ற சொல்லர். நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். எப்பொழுதும் இனிமையானவர். பிரிவை அறியாதவர். நான் தாமரை மலர் போல் இருந்தாலும், அவர் சந்தண மரம்போல் இருந்தாலும், எங்கள் காதல், தேன் போல் இனியது. அவரின்றி நானில்லை.

     இதுதான் காதல் பிறக்கின்ற இடம்.

     ஒரு பெண், தன் காதலனை எந்தளவிற்கு நம்புகிறாள் என்பதை விளக்க வருகிறது, ஒரு குறுந்தொகைப் பாடல்

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

     நிறமற்ற வானின் நீர், கீழிறங்கி, செம்மண்ணில் கலந்து, நிறம் மாறி, செம்மண்ணின் நிறத்தைப் பெறுகிறதல்லவா, அதுபோல, நாம் இருவரும் ஒன்றாகக் கலந்துவிட்டோம்.

     இனி நீ வேறு, நான் வேறு அல்ல.

     பார்த்தனர், காதலித்தனர், திருமணமும் செய்து கொண்டனர்.

     மகிழ்வாக நகர்ந்த வாழ்வில் வறுமை எட்டிப் பார்க்கிறது.

     இவளோ, செல்வந்தர் வீட்டுப் பெண்.

     தன் கணவன் வீட்டு வறுமையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை, அழகாய் விளக்குகிறது, இந்த நற்றினைப் பாடல்.

பிரசம் கலந்து வெண் சுவை தீம் பால்

விரி கதிர் பொன் கலந்து ஒரு கை ஏந்தி

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்

உண் என்று ஒக்குபு பிழைப்ப தெண் நீர்

முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தற்று – உற்று

அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஓழிய பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் – கொல்

கொண்ட கொழுநன் குடி உற்று என

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.

     ஒரு பணக்காரப் பெண், வெள்ளிக் கின்னத்தில், உணவை வைத்துக் கொண்டு, சாப்பிட வா என அழைத்தால், ஓடி ஒளிந்த சிறு பெண், வளர்ந்து, திருமணமாகி சென்ற வீட்டில் வறுமை.

     இந்நிலையிலும், தன் வீட்டில் இருந்து, பொருள் பெற்றால், புகுந்த வீட்டிற்கு இழுக்கு எனக் கருதி, கிடைக்கும் உணவை உண்டு, பல பொழுது பட்டினியும் கிடக்கும், காதலின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது இப்பாடல்.

     காதலித்துக் கரம் பிடித்த கணவன், பின் நாளில், தன் நடத்தையில் மாறி, வேறொரு பெண்ணின் உடல் தொட்டு, சுகம் காணத் தொடங்கினான் எனில், காதலியின் போராட்டம் தொடங்குவதையும், இது தவறு என இடித்துரைப்பதையும் பாங்காங் விளக்குகிறது இந்தப் பாடல்.

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்

புற புலத் துணையோடு உறை புலத்து அல்கி

வந்ததன் செவ்வி நோக்கி, பேடை

நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்

துவலையின் நனைந்த புறத்து அயலது

கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து

ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப

கையற வந்த மையல் மாலை

இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த

தார் தணி புரவி தண் பயிர் துமிப்ப

வந்தன்று, பெருவிறல் தேரே.

உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதழ் கவினே

     இறைதேடச் சென்ற ஆண் சிட்டு, வெகு நேரமாகியும் கூடு திரும்பவில்லை. மழை வருகிறது. ஆண் சிட்டும் வருகிறது. திரும்பி வந்த ஆண் சிட்டு, தன் கூட்டிற்கு எதிரில் உள்ள மரத்தில் அமர்ந்து, தன் கூட்டைப் பார்க்கிறது.

     மழை பொழிகிறதே, தன் கணவனைக் காணவில்லையே என கூட்டை விடடு வெளியே வந்த பெண் சிட்டு, எதிர் மரத்தில், தன் இணைணைப் பார்க்கிறது.

     பார்த்தவுடனே, புரிந்து கொள்கிறது.

     வேறொரு பெண் சிட்டுவிடம் சென்று வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்கிறது.

     உள்ளிருந்த குஞ்சுகளை அழைத்து, வரிசையாய், கூட்டின் வழி மறைத்து நிற்கிறது.

     இனி இங்கு வராதே என ஒரு பார்வைப் பார்க்கிறது.

     மழையில் நனையும் ஆண்சிட்டு,  நடுங்கியபடி, ஒரு ஏக்கப் பார்வை பார்க்கிறது.

     பெண் சிட்டு இரக்கம் கொள்கிறது.

     குற்றத்தை உணர்ந்த ஆண்சிட்டை, கூட்டிற்கு அழைக்கிறது.

     இதனால்தான், வள்ளுவர், ஒரு நல்ல குடும்பத் தலைவன், அனைவரையும் விட மேலானவன் எனப் புகழ்கிறார்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாந் தலை.

     படித்தவன், பெரிய படிப்பாளி என்று பட்டம் வாங்கப் போகிறான்.

     தொழில் செய்கிறவன், பெரிய முதலாளி என்று பெயர் வாங்கப் போகிறான்.

     அரசியல் செய்பவன், நாடாளுகின்றத் தலைவன், என்று பெயர் வாங்கப் போகிறான்.

     துறவு மேற்கொள்பவனோ, பெரிய சாமி என்றுப் புகழ் பெறப் போகிறான்.

     இவர்கள் யாவரையும் விடப் பெரியவன் யார் தெரியுமா?

      நல்ல குடும்பத் தலைவன் என்று பெயர் எடுக்கிறவன்தான் என்கிறார் வள்ளுவர்.

     காதலை, காதலில் உறுதியை, கணவன் வீட்டு வறுமையை, கணவனின் தவற்றை எதிர் கொள்கிற திறத்தைப் பேசிய சங்க இலக்கியங்கள், பிற்காலத்தில், களவில் ஈடுபட்ட சிலர், அக்களவு வெளிப்பட்ட பின், நான் இவளை அறிந்திலன் எனப் பொய்யுரைத்துக், காதலியைக் கைவிட்ட நிலையில், பலர் அறியத் திருமணம் நடத்தும் நிலையும், பெற்றோரே, பெண் பார்த்துப் பேசி முடிக்கும் திருமண வழக்கமும் வந்ததாகக் கூறுவார் தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப.

     இங்கு ஐயர் என்பது பெற்றோர்களையும், மேன்மை வாய்ந்த குலப் பெரியோர்களையும் குறிக்கும் சொல்லாகும்.

     பெற்றோரும், குலப் பெரியோரும், பார்த்து, பேசி நடத்தி வைத்தத் திருமணங்களின் சடங்குகளை வரிசைப் படுத்தி பாட்டாய் பாடிவைத்துள்ளனர், நம் முன்னோர்.

முதலில் பெண் கேட்டல்

பரிசம் போடுதல்

நாள் நேரம் பார்த்தல்

ஊர் அழைப்பு

வீடு அங்கரித்தல்

வீட்டிற்கு முன் பந்தல் போடுதல்

ஆற்று மணல் பரப்புதல்

பந்தலில் மாவிலை, தோரணம், மாலை கட்டுதல்

மனை விளக்கு ஏற்றுதல்

கனையிருள் அகன்ற கலின்பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுபெண் திங்கள்

     சங்ககாலத் திருமணங்கள், அதிகாலை நேரத்தில், தீமையில்லாத சிறந்த ரோகினி என்னும் நாள் வந்தடைந்த, இனிய காலைப் பொழுதில் நடந்தேறி இருக்கின்றன.

     திருமண நாளில், அந்த அதிகாலைப் பொழுதிலும் முதலில் விருந்து.

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப.

     உழுந்தினை மிகுதியாகச் சேர்த்து, நன்றாக வெந்த உணவுடன் கூடிய சோறு, கூடியிருந்தோருக்கு விருந்தாய் படைக்கப்பட்டது.

     பின்னர்,  மங்கல நீர்க்குடங்களையும், புதிய பாத்திரங்களையும் பெண்கள், தலையில் சுமந்து வந்து கொடுக்க, ஆண் குழந்தைகளைப் பெற்றப் பெண்கள் நால்வர், அதனைப் பெற்று, கற்பில் தவறாமல், நல்ல உதவிகளை மற்றவர்களுக்குச் செய்து, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனை, மிகவும் விரும்புகிறவளாக ஆகுக என வாழ்த்தி, மங்கல நீரை, மணப்பெண்ணின் கூந்தலில் ஊற்றுவர்.

     இதுதான் அன்றைய திருமணம்.

     தமிழ்த் திருமணம்.

     இதுபோன்றப் பதிவுகளை, உலக இலக்கியங்கள் எதிலும் காணவே இயலாது.

     இதுவே நம் சங்கத் தமிழின் சிறப்பு.

     இதுவரை நாம் பார்த்தது எல்லாம் அகம்.

     வீட்டிற்கு உள்ளே.

     புறத்தையும் சிறிது, புரட்டிப் பார்ப்போம் வாருங்கள்.

     புறம் என்றால் வீட்டிற்கு வெளியே.

     வீட்டிற்கு வெளியே, பல உலகங்கள் இருக்கின்றன.

     முதலில் வருவது கல்வி உலகம்.

உற்றுழி உதவியும் உருபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.

     ஆசிரியர்க்குத் தேவையான உதவிகளைச் செய்து, மிகுந்த அளவு பொருள் கொடுத்து, பணிவோடு கற்றலே நன்று என்கின்றன நம் இலக்கியங்கள்.

     அடுத்து வருவது தொழில் உலகம்.

கொள்வதூ உம் மிகை கொள்ளாது

கொடுப்பதூ உம் குறை படாது

     தொழிலை நேர்மையோடு செய்ய வேண்டும். அதிகப் பெருளைப் பெறக் கூடாது. தொழிலை குறைபடச் செய்யவும் கூடாது.

     அடுத்தது அரசியல் உலகம்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ

அவலா கொன்றே, மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை, வாழிய நிலனே

     நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ, எப்படி இருந்தாலும், ஆள்பவன் நல்லவனாக இருந்தால், நாடு நன்றாக இருக்கும், காடு நன்றாக இருக்கும், இல்லையேல் கெடும்.

     அடுத்தது சமுதாயம்.

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்துப பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பது இரண்டே

     கடல் சூழ்ந்த உலகே எனக்குத்தான் சொந்தம் என்று கூறி, ஆண்டு கொண்டிருக்கிற மன்னனுக்கும், உண்ண உணவிற்கே வழியின்றி, இரவும் பகலும் கண்ணுறங்காமல், விலங்குகளை வேட்டையாடி வாழும், கல்வி அறிவற்றவனுக்கும், உண்ணுகிற உணவு ஒன்றுதான், உடுக்கிற ஆடையோ, மேலாடை, கீழாடை என இரண்டே இரண்டுதான்.

     எனவே ஒருவன் பெற்ற செல்வத்தின் பயனே, பிறருக்குக் கொடுப்பதுதான், கொடு, இல்லையேல், கேடு என்கிறது இப்பாடல்.

     தொடர்ந்து வருவது வீட்டுலகம்.

      ஆம். வீட்டுலகம்

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனைவிழவாயே

     என் மனைவியே, நமது செல்வத்தை, உன்னை விரும்பி வாழ்பவர்க்கும், நீ விரும்பி வாழ்பவர்க்கும், உனது சுற்றத்தாருள் மூத்தேருக்கும், கடன் கொடுத்தோர்க்கும் மற்றும் இன்னவர்களுக்கு என்று எண்ணாமல், என்னையும் கலந்து ஆலோசிக்காமல், அனைவருக்கும் கொடு, கொடு.

     இதுதான் புறம்.

     அகத்திலும் சரி, புறத்திலும் சரி, சிறந்த நிலைகளை எடுத்துக் கொண்டு பயணிக்கக் கூடிய ஒரு ஈடுபாடு, ஒரு செழுமை, ஒரு மேன்மையான சிந்தனைப் போக்கு.

     இதுதான் நம் சங்க இலக்கியம்.

     தமிழ் இலக்கியம்.

---

மொழிகள் எல்லாம் மானுடச் சோலையில் பூத்த பூக்கள்.

மொழியில் உயர்வோ, தாழ்வோ, வேறுபாடோ

பார்க்கக் கூடாது.

எல்லா மொழிகளும் உயர்ந்தவைதான்.

நாம் இங்கு பார்த்தது எல்லாம்,

இது அங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதுதான்.

அவ்வளவுதான்.


பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின்

சங்கத் தமிழ்ச் சிந்தனைகள்

என்னும் தலைப்பிலானப் பொழிவு

கடந்த 11.08.2020 செவ்வாய்க் கிழமை மாலை,

மக்கள் சிந்தனைப் பேரவை

வழங்கிய

சிந்தனை அரங்கம்.

மக்கள் சிந்தனைப் பேரவையின்

தலைவர்


தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின்

பெருமுயற்சியால்

இணைய வழி எழுந்து, தமிழ் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட

அற்புதப் பொழிவு கேட்டு நெகிழ்ந்தேன்.





கேட்டுத்தான் பாருங்களேன்





நண்பர்களே, வணக்கம்.

 

     தங்களின் ஆதரவின் காரணமாக, தங்களின் உற்சாகப்படுத்துதலின் காரணமாக, எனது 23 வது மின்னூல், அமேசான் தளத்தில் இணைந்திருக்கிறது.


     இம்மின்னூலினை, 7.9.2020 திங்கட்கிழமை பிற்பகல் முதல், 9.9.2020 புதன் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

     படித்துத்தான் பாருங்களேன்.

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்.

 வலைச் சித்தருக்கு ஜெ