21 அக்டோபர் 2020

தமிழே, அமுதே

     கடந்த 2007 ஆம் ஆண்டு, நண்பர் சதாசிவம் அவர்களின் அழைப்பினை ஏற்று, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தது, என் வாழ்வில், ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவர் முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி அவர்கள், என்னைத் தன் மாணவராய் ஏற்றுக் கொண்டதோடு, ஆய்வுத் தலைப்பாய், கணிதமேதை சீனிவாச இராமானுஜனை முன் மொழிந்தார்.

     உடனே, ஓர் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

     இராமானுஜனை நம்மைப் போன்ற ஒரு மனிதராய், எலும்பும், தசையும், இரத்தமும், உணர்வுக் குவியல்களை உள்ளடக்கிய சக மனிதராய், வாழ்வில் சோதனைகளை மட்டுமே சந்தித்த, வாழ்வியல் இன்பங்களை சிறிதும் அறிந்திடாத, கொஞ்சமும் சுவைத்திடாத, மனிதராய் விளங்கிய, அவர்தம் வாழ்வியல் நிகழ்வுகளைத் தொகுத்து, ஆய்வேட்டினை அளித்தேன்.

     படித்துப் பார்த்தார்.

     ஆய்வேடு போல் தெரியவில்லையே, வாழ்க்கை வரலாற்று நூலாக அல்லவா தெரிகிறது என்றவர், ஒவ்வொரு இயலுக்கும், ஒரு முன்னுரை, ஒரு முடிவுரை என எழுதவைத்து, ஆய்வேட்டின் தோற்றத்திற்கு மாற்றினார்.

     நல்லா எழுதியிருக்கீங்க என்றார்.

     அன்று தொடங்கிய ஆர்வம், இன்றுவரை என்னை, ஏதோ எழுத வைத்துக் கொண்டே இருக்கிறது.

     2011 ஆம் ஆண்டில், எனது பெயரில் வலைப் பூ ஒன்றினைத் தொடங்கினேன்.

     தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவுதான் எழுதினேன்.

     சில மாதங்களிலேயே எதை எழுதுவது எனத் தெரியவில்லை.

     கையில் இருந்த சரக்கெல்லாம் தீர்ந்து போய், ஒரு பெரும் எழுத்துப் பஞ்சமே ஏற்பட்டது.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜரைத் தஞ்சம் அடைந்தேன்.

     வலைப் பூவில், கணிதமேதையை இறக்கி விட்டேன்.

     முதல் பதிவில் இருந்தே பெரும் வரவேற்பு கிடைத்தது.

     வலையுலக ஜாம்பவான்கள் எல்லாம் பாராட்டினர், உற்சாகப்படுத்தினர்.

     வலைப் பூவில் இத்தொடர் நிறைவு பெறுவதற்கு முன்னரே, கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், நமது நம்பிக்கை என்னும் தனது மாத இதழில், கணித மேதை தொடருக்கு இடம் கொடுத்து, அச்சு வாகனத்தில் ஏற்றி, உலகு முழுவதும் உலாவ விட்டார்.

     Freetamilebooks.com என்ற கட்டணமில்லா தளத்தில், இணைந்த இந்நூல், இதுநாள்வரை இருபத்து ஐந்தாயிரம் பதிவிறக்கங்களைக் கண்டுள்ளது.

     அமேசான் தளத்திலும் இந்நூலுக்கு நல்ல வரவேற்பு.

     எல்லாம், கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்னும் பெயர் செய்த மாயம்.

     சில நாட்களுக்கு முன், தேன் மதுரத் தமிழ், வலைப் பதிவர், சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களிடமிருந்து, ஒரு செய்தி, வாட்ஸ்அப் வழி வந்தது.

    



அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின், நூல் வாசிப்புக் குழுமம், தமிழே அமுதே வில், ஒரு நண்பர், உங்கள் நூலைப் பகிரப் போகிறார்.

     கணிதமேதை சீனிவாச இராமானுஜன்.

     மகிழ்ந்து போனேன்.

     அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்,

     கடந்த 2007 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 5 ஆம் நாள், தோற்றம் பெற்ற அமைப்பு.

     அமெரிக்காவின், அட்லாண்டா மாநகரில் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்து, ஊக்குவிப்பதற்காகவும், ஜார்ஜியாவில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் நோக்கிலும், தோன்றிய நாள் தொடங்கி, தொய்வின்றிச் செயல்பட்டு வரும் அமைப்பு.

     பாரதி பைந்தமிழ்ப் பள்ளி

     ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி

     லில்பர்ன் தமிழ்ப் பள்ளி

     தமிழ் அறிவுக் கலைக் கூடம்

     மெரிட்டா தமிழ்ப் பள்ளி

     லட்சுமி தமிழ்ப் பள்ளி

     கம்மிங் தமிழ்ப் பள்ளி எனத் தமிழ்ப் பள்ளிகளை இவ்வமைப்பு நடத்தி, அமெரிக்க மண்ணில் தமிழ் வித்துக்களை விதைத்து, வளர்த்து வருகிறது.

     அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ் வாசிப்புக் குழுமத்தின் சார்பில், தமிழ் நூல்களை, அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வுகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த 18.10.2020 ஞாயிறன்று,

தமிழே அமுதே

நிகழ்வில்.

இந்தியத் தென்முனை,

கன்னியாகுமரியில் பிறந்து

அமெரிக்காவில் குடியேறி

பாரதி பைந்தமிழ்ப் பள்ளியில்

தன்னார்வ ஆசிரியராய்

தமிழ்ப் பணியாற்றிவருபவரும்,

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின்

பல குழுக்களில் இடம் பெற்று

அயராத் தமிழ்ப் பணியாற்றி வருபவருமான


திரு சஜ்ஜயன் அவர்கள்,

எனது


கணிதமேதை சீனிவாச இராமானுஜன்

நூலை

அழகுற, எழிலுறப் பகிர்ந்தார்.

     இராமானுஜன் தன் வாழ்வில் பட்ட துயர்களை எல்லாம், அடுக்கிக் கொண்டே சென்று, தன் சொல்லாற்றலால், அனைவரின் மனங்களையும் கனக்கச் செய்துவிட்டார்.

     நன்றி ஐயா.

இந்நிகழ்வு சிறக்க முன்னின்று உதவிய,

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின்

தலைவர்


திருமிகு ஜெயசாரதி அவர்களுக்கும்,

நிர்வாகக் குழு உறுப்பினர்


திரு மகேந்திரன் அவர்களுக்கும்,

இந்நிகழ்வினை

திறம்பட, சுவைபடத் தொகுத்து வழங்கிய


திருமதி ராஜிபெருமாள் அவர்களுக்கும்,

சூம் செயலி வழி நடைபெற்ற இந்நிகழ்வில்,

இந்த எளியேனுக்கும் ஓர் இடம் பெற்றுக் கொடுத்த


சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களுக்கும்

நன்றி, நன்றி.


 

 


 

குரல் வழிப் பதிவு