16 டிசம்பர் 2020

உண்பது நாழி உடுப்பவை இரண்டு

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

பிறவும் எல்லாம் ஓரோக் கும்மே

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

     இந்த உலகு முழுவதையும் ஆளுகின்ற மன்னனாக இருந்தாலும், கல்வி அறிவில்லாத மூடராக இருந்தாலும், உண்ணப்படும் பொருள் நாழி அளவே ஆகும். உடுத்தும் உடையும், மேலே ஒன்றும், இடையிலே ஒன்றுமாய் இரண்டே ஆகும்.

எனவே செல்வந்தன் ஒருவன்,  தன் செல்வத்தால் பெறும், பயன் என்று, ஒன்று இருக்குமானால், அது மற்றவர்க்குக் கொடுப்பதே ஆகும்.

     அவ்வாறு அன்றி, அனைத்தையும் தானே அனுபவிப்பேன் என்று நினைப்பானேயானால் அது தவறாகும்.

     இதனைத்தான் திருவள்ளுவர்,

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள

என உரைக்கிறார்.

     காக்கைகள், தமக்கு இரை கிடைக்கும்போது ஒளித்து வைக்காமல், தம் இனத்தையே கரைந்து, கரைந்து அழைத்து, தம்மினத்தோடு சேர்ந்து உண்ணுகிறதல்லவா, அதனைப்போல, சுற்றத்தாரோடு சேர்ந்து உண்பவர்க்கே, செல்வம் மேலும் மேலும் பெருகும் என்கிறார்.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்று பாடுவார் கழைதின் யானையார்.

     இப்பாடலில் கொள் எனக் கொடுத்தல் உயர்வாகக் கூறப்படுகிறது. ஆனால் கொள்ளேன் என மறுத்தல், அதனினும் உயர்வாகப் போற்றப் படுகிறது.

     ஒரு பொருள் கொடுக்கப்பட்டால், அதனை யாராவது பெற வேண்டுமல்லவா?

     கொடுப்பதை பெற மறுப்பது உயர்வென்றால் என்ன பொருள்?

     வாங்காதே என்றால் என்ன அர்த்தம்?

     ஈயென இரத்தல் இழிவானது என்று கூறினால், செல்வத்தின் பயனே ஈதல் என்னும் சொற்றொடர், பொருளற்றதாகி விடுகிறதல்லவா?

     ஈயென இரத்தல்

     ஈயேன்

     கொள்

     கொள்ளேன்

     இதற்குள் ஒரு கொடை நெறி புதைந்துள்ளது.

ஈயென இரத்தலோ அரிது நீ அது

நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்

எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்

தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்

தண்பல இழிதரும் அருவிநின்

கொண்பெருங் கானம் பாடல் எனக்கு எளிதே

என்று பாடுவார் மோசிகீரனார்.

     மன்னா, உன்னைப் புகழ்ந்து நான் பாடிக்கொண்டே இருப்பேன், அது எனக்கு எளிது.

     ஆனால், ஈயென இரத்தல் இருக்கிறதல்லவா? அது எனக்கு அரிது என்கிறார்.

நிரப்பாது கொடுக்குஞ் செல்வமும் இலனே

இல்லென மறுக்குஞ் சிறுமையும் இலனே

     கொடுப்பதற்குரிய பெரிய  செல்வம் இல்லாவிட்டாலும், இல்லை என மறுக்கும் சிறுமை என்னிடம் கிடையாது என்கிறார் மதுரைக் குமரனார்.

     உறையூர் முதுகண்ணன் சாத்தனாரோ இன்னும் ஒருபடி மேலே போய்,

வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி.

     பெரியவராக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும், யாராக இருந்தாலும், வருந்தி வந்தவர்களைப் பார்த்து, அவர்களைப் புரிந்து கொண்டு, பொருள் கொடுப்பதற்குத் தகுதியுடையவனாக, உன்னை உயர்த்திக் கொள் என்கிறார்.

     மருங்கு நோக்கி, வாய் விட்டுக் கேட்காதவர்களையும், புரிந்து கொண்டு கேட்பதற்கு முன்பே கொடுக்க வேண்டும், ஏனென்றால், இல் என இரத்தலை இழிவாகக் கருதக் கூடியவர்கள் கேட்க மாட்டார்கள் என்கிறார்.

     உன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்த, நம் தமிழ் இலக்கியங்கள், உன்னால் முடியாத பொழுது, யாசகம் கேட்டுக் கொள் என்று கூறுமா?

     நிச்சயமாக கூறி இருக்க இயலாது அல்லவா?

     எனவே

     இரத்தல் அரிது

     பாடுதல் எளிது

     கொடுத்தால் பெற்றுக் கொள்வேன். ஆனால் கொடு என்று கேட்க மாட்டேன்.

     ஏனெனில், என் தமிழ் என்னை வாழ வைக்கும்.

     இதனால்தான்,

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

என்று பாடுவார் ஔவையார்.

     எனவே கேட்காமல் கொடுப்பதுதான் சிறப்பு, இதுதான் உயர்ந்த பண்பின் இலக்கணம்.

     இதனைத்தான் இரும்பிடற் தலையாரும் வலியுறுத்துகிறார்.

நின்நசை வேட்கையின் இரவலர் வருவர், அது

முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்

இன்மை தீர்த்தல் வன்மை யானே.

     முன்னம் முகத்தில் உணர்ந்து, முகத்தைப் பார்த்ததுமே, குறிப்பால் உணர்ந்து, கொடுக்க வேண்டும் என்கிறார்.

     புறநானூறு மட்டுமல்ல, அகநானூறு கூட இதனைத்தான் வற்புறுத்துகிறது.

நின்நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்

பன் மாண் கற்பின் கிளை முதலோர்க்கும்

கடும்பின் கடும்பசி தீர யாழிநின்

நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழ வோயே

     உனக்கு விருப்பமானவர்களுக்கும், உன்னை விரும்பியவர்களுக்கும், கற்பில் சிறந்த உன் உறவினர்க்கும், வறுமை காலத்தில் உனக்கு உதவியவர்களுக்கும் மற்றும் எவர்க்கும், இவ்வளவுதான் என வரையறை செய்யாது, இப்பொருளை சேமித்து வைத்து, நாளைக்கு நாம் நலமுற வாழ்வோம், என்று எண்ணாது, எல்லோர்க்கும் வாரி, வாரி வழங்குவாயாக எனப் பாடுகிறார் பெருஞ்சித்திரனார்.

    கேட்காமல் கொடுக்க வேண்டும், முகக் குறிப்பறிந்து கொடுக்க வேண்டும், நாளை வா என்று கூறி, காலந் தாழ்த்தாது, அன்றே அப்பொழுதே கொடுக்க வேண்டும் என்று உரைக்கின்றனர் நம் முன்னோர்

   இதுமட்டுமல்ல, இன்றைக்கு செய்த ஒரு நற்செயல், பின்னொரு காலத்தே, நமக்கு உதவியாக அமையும் என்ற, எதிர்பார்ப்போடு வழங்கக் கூடாது என்று உரைக்கிறார், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

இம்மை செய்தது மறுமைக்கு ஆமெனும்

அறவிலை வாணிகன் ஆய் அலன் . . .

---

     கொடுக்கும் கொடையை, தன் முகம் கூடக் காட்டாமல் கொடுத்தல் மேலும் சிறப்பு என புறநானூற்றுப் பாடல்களின் வழி பயணித்து, அவ்வப்போது, சாலமன் பாப்பையா உருவெடுத்து, குரலெடுத்து, இனிமையானதொரு பொழிவினை வழங்கி, ஞாயிற்றுக் கிழமையின் மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக்கினார்,

கடந்த 13.12.2020

ஞாயிறு மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்,

புறநானூற்றில் கொடை நெறி

எனும் தலைப்பில்

சொற்பெருக்காற்றிய

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக

அரிய கையெழுத்துச் சுவடித் துறை

தலைவர்


பேராசிரியர் முனைவர் த.கண்ணன் அவர்கள்.

தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவைச்

செயலாளர்

குறள் அறச் சுடர்


திரு பழ.மாறவர்மன் அவர்களின்

தலைமையில்

நடைபெற்ற இப்பொழிவிற்கு வந்திருந்தோரை

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி எஸ்.சோலைமுத்து அவர்கள்

வரவேற்றார்.

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி உ.பிரியங்கா அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

விழா நிகழ்வுகளை

ஏடகம், சுவடியியல் மாணவி


திருமதி எம்.மகாலெட்சுமி அவர்கள்

சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

 

புறநானூற்றுக்

கொடைநெறி போல்

ஏடகத்தின் பயனே

ஈதல், ஈதல் என

திங்கள்தோறும்

தமிழமுதை

எல்லோர்க்கும்

வாரி வழங்கும்

ஏடகத்துப் பாரிவேள்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.