28 மார்ச் 2021

தேரா மன்னா


 

உண்மை அறியா மன்னா

     ஒருசொல் கேட்பா யின்று

கண்ணகி என்றன்  பேரே

     காவிரி யாயும் ஊராம்

தண்வள வணிகன் மாசாத்

     துவானின் மகனாம் என்றன்

கண்ணுயர் கணவன் தன்னை

     கள்வனே என்று கொன்றீர்.

      படிக்கப் படிக்கக் காலம் பின்னோக்கிப் பறக்கிறது. நூறு நூறாய் ஆண்டுகளை நொடியில் கடந்து, நம்மை மதுரையில் இறக்கி விடுகின்றது.

   

  காட்சிகள் கண் முன்னே விரிகின்றன.

     இதோ கண்ணகி விரிந்த கூந்தலோடு, கையில் சிலம்பு ஏந்தி, பாண்டியன் முன் கண்கள் சிவக்க முழங்குகிறாள்.

ஊழ்வினை துரத்த யாமும்

     உயர்குடி கணவன் சேர்ந்து

வாழ்வினை புதிதாய் கொள்ள

     வாய்ப்புடன் கூடல் வந்தோம்

தாழ்விலா ஆயர் வீட்டில்

     தனியென வாழ்ந்தோம் நன்றாய்

பாழ்வினை எங்கள் வாழ்வில்

     பதிவினைச் செய்த தின்று.

     கண்ணகி தன் கதையினைக் கூறக் கூற, நம்முள்ளும் சினம், மெல்ல மெல்ல மேலெலுகிறது.

     தேரா மன்னா  செப்புவது உடையேன் எனப் பள்ளியில் படித்த பாடல்தான், அறிந்த நிகழ்வுதான், ஆயினும், புத்தம் புதிதாய் ஓர் உணர்வு உள்ளத்துள் பொங்கி எழுகிறது.

தெறித்தஅம் மணிகள் கண்டான்

    தேகமே நடுங்க லுற்றான்

அறத்தினை அழித்தே னின்று

     அழிவெனக் கொல்லன் சொல்லால்

புறத்திலோர் கருத்தைக் கேட்டு

     புலனதை இழந்தே னின்று

திறத்திலோர் அரசன் யானே

     தீங்குயர் கள்வன் யானே.

     படிக்கும்போதே, நம் உடலும் சேர்ந்தே நடுங்குகிறது. பள்ளியில் படிக்கும் காலத்து, வாராத, ஒரு சிலிர்ப்பு உடலெங்கும் பரவுகிறது.

     எதனால் இந்த எழுச்சி, எதனால் இந்தக் கிளர்ச்சி.

    நினைத்துப் பார்க்கின்றேன்.

     உண்மை புரிகிறது.

     பள்ளி நாட்களில், பாடலைப் படித்ததைவிட, உரையைப் படித்ததுதான் மிகுதி. அதிலும் வழிகாட்டி நூலை வாங்கி வைத்துக் கொண்டு, பொருளறியாது, வார்த்தையை விழுங்கி, எழுதுகோல் வழி இறக்கி வைத்ததுதான் அதிகம்.

     இவர் பாடல்களைப் படிக்கப் படிக்க, இளங்கோவடிகளாரையேப் படித்தது போன்ற ஓர் உணர்வு.

அறவோர் பார்ப்பர் பெண்டிர்

     அகத்துடை பசுவும் மூத்தோர்

கரையிலா குழவி, சான்றோர்

     கனிவுடன தீண்ட வேண்டாம்.

திறமிலா தீயோர் பக்கம்

     தீய்த்திடு அழலே என்றாள்

புறமெலாம் புகையின் வெம்மை

     புகுந்ததே கூடல் மண்ணில்.

     சிலப்பதிகாரத்தைக் கொஞ்சமும் காரம் குறையாமல், வெம்மை தணியாமல், கவியாக்கி, அமுது படைத்திருக்கிறார்.

     சுதந்திரத் திருநாளில் பிறந்த இவருக்குக் கவிதை கைவந்த கலை.

     பாவேந்தர் விருது, பாரதி விருது, பெருங்கவி விருது, வள்ளலார் விருது, கவிமணி விருது, கவிமாமணி விருது, சேவா ரத்ணா விருது, திருவள்ளுவர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது முதலான விருதுகள் இவரது கவிப் புலமையைப் பறைசாற்ற, இவரைத் தேடி வந்த விருதுகளாகும்.

     விருதுகள் மட்டுமா, சன்மார்க்க தலைமைச் சங்கம், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், சங்கரதாஸ் சுவாமிகள் இயலிசை மன்றம், அருணகிரிநாதர் திருப்புகழ் மன்றம், மயிலம் பரிமேழவேள் தமிழ் உயராய்வு மையம் எனப் பலப் பல அமைப்புகளின், உயர் பொறுப்புகளும் இவரை நாடி வந்து பெருமையடைந்தன.

     இவர் ஒரு கரும்பு உற்பத்தித் துறையின் அலுவலர், கவி உற்பத்தியிலும் வல்லவர். கரும்பின் சுவையைத் தன் கவியில் சேர்ப்பதிலும், இரண்டறக் கலப்பதிலும் வித்தகர்.

    ஆறு அரிய நூல்களைப் படைத்தவரின், ஏழாவது படைப்பு இந்நூல்.

    கப்பலோட்டிய தமிழனின், செக்கிழுத்தச் செம்மலின் பெயரனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஏடெடுத்து இறக்கி வைத்த சீர்மிகு கவி நூல் இந்நூல்.

சிலம்பு கூறும் சீரிய அறம்

     ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்தை, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எழுந்த காவியத்தை, இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு,  வாழ்வினையே கணினிக்குள்ளும், அலைபேசிக்குள்ளும் சுருக்கிக் கொண்ட, இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு, எளிமையாக்கி, இனிமையாக்கி, வார்த்தைகளில் நற்கரும்பின் சுவை சேர்த்து, விருந்து படைத்திருக்கிறார்.


கவிமாமணி

வை. இராமதாசு காந்தி

அவர்களின்,


சிலம்பு கூறும் சீரிய அறம். 

கொற்றவை கண்ணகி வாழ்கவே – நல்ல

கோவலன் மாப்புகழ் வாழ்கவே

பற்றிலா இளங்கோவடி வாழ்கவே –

படித்தவர் கேட்டவர் வாழ்கவே

     இச்சிறப்புமிகு நூலினை, படித்தவரையும், கேட்டவரையும் வாழ்த்தி இவர் இப்படித்தான் தன் நூலினை நிறைவு செய்கிறார்.

     நாமல்லவா இவருக்கு நன்றி சொல்ல வேண்டும், நாமல்லவா இவரை வாழ்த்த வேண்டும், நாமல்லவா இவரைப் போற்ற வேண்டும்.

கவிஞரின்

கவிப் பயணம்

தொடர

வாழ்த்துவோம், போற்றுவோம்.