17 மே 2021

இராசாளியார்

 


     ஆண்டு 1920.

     ஏப்ரல் 6 ஆம் நாள்.

     தமிழறிஞரின், தமிழ்ப் பெருவள்ளலின் மூச்சு மெல்ல, மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிறது.

     மனைவியையும், தன்னைச் சூழ்ந்திருந்த உற்றார், உறவினர்களையும், நண்பர்களையும் கண் திறந்து பார்த்தார்.

     உதடுகள் மெல்லத் துடித்தன.

  

   வார்த்தைகள் மெதுவாய் வெளிவந்தன.

     நான் இவ்வுலகை விட்டுப் பிரியப் போகிறேன்.

     நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறேன்.

     எனக்காக யாரும் கண்ணீர் சிந்தக் கூடாது.

     இறைவனைத் தமிழால் பாடுங்கள் என்றார்.

     சில நிமிடங்களில் இதயம் துடிப்பதைத் துறந்தது.

     மூச்சு ஓய்வெடுக்கத் தொடங்கியது.

     யாரும் அழவில்லை.

     தேவாரம் பாடப் பெற்றது.

     மலர்களால் அர்ச்சனை செய்யப் பெற்றது.

     சங்கொலிகள் முழங்கின.

     உடல் எரியூட்டப்படவில்லை.

     தலையில் முற்றிய தேங்காய்களால் அடிக்கப்பட்டது.

     கபாலம் திறந்ததும், அமர்ந்த நிலையில், பூமிக்குள் இறக்கப்பட்டார்.

     தமிழுக்காக வாழ்ந்தவரை, தமிழுக்காக வாரி, வாரி இறைத்தவரை, தமிழ் மண் வாரி அணைத்தது.

     கபாலம் திறக்கும்போது கூட, யாரும் அழவில்லை.

     மாறாக இறைவனை வணங்கினார்கள்.

     பெரும் அரசர்களும், ஆன்மீகத் தலைவர்களும், இறந்தபின், தலையில்  நன்கு முற்றிய தேங்காய்களால் அடித்து, கபாலம் திறந்தபின், அடக்கம் செய்யும் முறை அந்நாளில் இருந்திருக்கிறது.

     ஒருவர் இறந்தபின், உயிரானது, உடலைவிட்டு வெளியேற, கபாலத்தைத் திறந்து, வழி அமைத்துக் கொடுப்பதற்காக எற்பட்டதே இச்சடங்காகும்.

     இப்பழக்கம், இன்றும் கூட, சில உயர் வகுப்பினரிடைய பின்பற்றப்படுவதாகத் தெரிகிறது.

     தன் முடிவை அறிந்தும், சற்றும் கலங்காது, தமிழில் பாடுங்கள், தமிழில் இறைவனைப் பாடுங்கள் என்று வேண்டியவர், தமிழுக்காகவே வாழ்ந்தவர், யார் தெரியுமா?

--

     ஆண்டு 1910.

     குடந்தை.

     உதவி ஆட்சியர் அலுவலகம்.

     ஒரு பல்லக்கு, மெல்ல மாடிப்படி ஏறிக் கொண்டிருந்தது.

     இக்காட்சியினைக் காண, ஒரு பெரும் கூட்டமே கூடிவிட்டது.

     முன்புறம் இருவர், பின்புறம் இருவர் எனச் சுமக்க, ஒரு சிறு பல்லக்கு, மாடிப் படியேறி, முதல் தளத்திற்குச் செல்லும் காட்சியை மக்கள் வியந்து பார்த்தனர்.

     பல்லக்கில் அமர்ந்திருந்தவர் திரு சிங்காரவேலு உடையார்.

     புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்வின் இறுதி நாட்களுடன் போராடிக் கொண்டிருந்த உடையார், தன் உடல் நிலையினைச் சிறிதும் பொருட்படுத்தாது கிளம்பி வந்துவிட்டார்.

     தன் நண்பருக்கு வாக்களிப்பதற்காக.

     தாலுக்கா போர்டு தலைவருக்கானத் தேர்தல்.

     தாலுக்கா போர்டு உறுப்பினர்கள் வாக்களித்துத் தங்கள் தலைவரைத் தேர்தெடுத்தாக வேண்டும்.

     கடுமையானப் போட்டி.

     குடந்தையின் பெரும் வழக்கறிஞர் ஒருவரும், பெரும் தமிழறிஞர் ஒருவரும் போட்டியிட்டனர்.

     தமிழறிஞர் என்றால் தமிழில் மட்டும் அறிஞர் அல்ல.

     தமிழோடு, ஆங்கிலத்தையும், வடமொழியையும் கரைத்துக் குடித்தவர்.

     செல்வச் செழிப்பில் மலையென உயர்ந்து நிற்பவர்.

     வாரி வாரி வழங்கும் வள்ளல்.

     பலமுறை தேர்தலில் வாகை சூடியவர்தான்.

     இருப்பினும், இம்முறை வழக்கறிஞர் போட்டியைக் கடுமையானதாக மாற்றிவிட்டார்.

     தமிழறிஞரும் அசரவில்லை.

     தாலுக்கா போர்டு உறுப்பினர்களில் யார், யார் தனக்கு வாக்களிப்பார்கள் என கணக்குப் போட்டுப் பார்த்தார்.

     ஒரே ஒரு ஓட்டு குறைந்தது.

     எனவே புற்றுநோய் தாக்குதலால் நிலைகுலைந்து, படுக்கைக்குள் முடங்கிக் கிடந்த உடையாரைப் பார்த்தார்.

     எனது ஓட்டு நண்பரானத் தங்களுக்குத்தான்.

     ஆனால் எப்படி வருவேன் என்றார்.

     தமிழறிஞரின் நிலையறிந்த ஆதினம் ஒருவர், என் பல்லக்கினைத் தருகிறேன், உடையாரை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

     உடையார் பல்லக்கில் ஏறி, மாடிவரை சென்று, பல்லக்கில் அமர்ந்தபடியே,வாக்கினைச் செலுத்தினார்.

     அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டன.

     இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

     சிக்கல் உருவானது.

     சி.ஜி.ஆஸ்டின் என்னும் ஆங்கிலேயர்தான் அன்றைய, உதவி ஆட்சியர்.

     இவரது அலுவலகத்தில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது.

     இவருக்கும் ஒரு ஓட்டு உண்டு.

     போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றதால், தானும் வாக்களிக்க முன்வந்து, தன் வாக்கினை, தன் அருமை நண்பரானத் தமிழறிஞருக்குச் செலுத்தினார்.

     தமிழறிஞர் வெற்றி பெற்றார்.

---

     ஆண்டு 1911.

     டிசம்பர் 12.

     ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா.

   




           அதுநாள்வரை இந்தியாவின் தலைநகராக இருந்த கல்கத்தா தன் தகுதியினை இழந்தது.

      முடிசூட்டு விழாவினை முன்னிட்டு, புதுதில்லி, இந்தியத் தலைநகர் என்னும் பெருமையினைப் பெற்றது.

     இம்முடிசூட்டு விழா, இந்தியா முழுமையும் கொண்டாடப் பெற்றது.

     இம்முடிசூட்டு விழாவினைச் சிறப்பிக்க, இந்தியா முழுவதிலும் இருந்த, இந்திய இளவரசர்கள் தில்லியில் குவிந்தனர்.

     தஞ்சை மாவட்டத்தில் இருந்து, ஒரே ஒருவர் மட்டும், தில்லி சென்று, இம்முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.

     தாலுக்கா போர்டுத் தேர்தலில், தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டத் தமிழறிஞர்.

      தில்லி சென்றவர், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரையும், மகாராணி மேரியையும் நேரில் சந்தித்துப் பேசினார்.

     தன் அழகு ஆங்கிலத்தில், ஒரு வேண்டுகோளினையும் முன்வைத்தார்.

     குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்குக.

     தமிழ் நாட்டில் கள்ளர், மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், வலையர், கேப்மாரி என 89 சாதியினர், குற்றப் பரம்பரைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.

     இவ்வகுப்பினைச் சார்ந்த 16 வயதிற்கு மேற்பட்டவர்கள், 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும், காவல் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    நாள்தோறும் காவல் நிலையங்களில் கைரேகையினைப் பதிவு செய்ய வேண்டும்.

     வெளியூர் செல்ல வேண்டுமானால், அனுமதிச் சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.

     இதற்கு ராத்திரிச் சீட்டு என்று பெயர்.

     குற்றப்பரம்பரைச் சட்டம்.

     தமிழறிஞரின் தங்கு தடையற்ற ஆங்கிலமும், நேர்த்தியான வாதங்களும், இவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன.

     குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப் பெற்றது.

     தஞ்சை மகிழ்ந்தது.

---

     தன் தில்லிப் பயண வெற்றியைக் கொண்டாடிடும் வகையில், இத்தமிழறிஞர், தன் சொந்த ஊரில், ஒரு கட்டிடத்தை எழுப்பினார்.

Coronation Building

முடிசூட்டுவிழா கட்டிடம்.

     கும்பகோணம் உதவி ஆட்சியர் திரு சி.ஜி.ஆஸ்டின் அவர்களால் 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள், இக்கட்டிடத்திற்F அடிக்கல் நாட்டப் பட்டது.

     பணிகள் தொடங்கின.

     இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவெனில், இத்தமிழறிஞர், தான் தில்லிக்குப் புறப்படும் முன்னரே, கட்டிடப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

Coronation Building

முடிசூட்டு விழா கட்டிடம்

     1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள், அன்றைய உதவி ஆட்சியாளராக இருந்த ஜெ.ஆர்.கிருஷ்ணம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

---

     குன்னூர்.

     இத்தமிழறிஞருக்கு மிகவும் பிடித்தமான மலைப் பிரதேசம்.

     அந்நாளில் குன்னூருக்குச் செல்வதற்கு சரியான பாதைகள் கூட இல்லாத நிலை.

     கழுதைகளில் பயணித்துத்தான் மலை ஏற வேண்டும்.

     இச்சூழலில், இவர் குன்னூரில் 1903 ஆம் ஆண்டிலேயே ஒரு நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்.

     எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், 1911 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், இந்தக் குன்னூர் நூலகத்திற்கு முன்பாக, தொல்காப்பியருக்கு ஒரு சிலையினையும் நிறுவியிருக்கிறார்.

     தொல்காப்பியருக்காக, இவ்வுலகில் நிறுவப்பட்ட முதல் சிலை இதுதான்.

     குன்னூரில் மட்டுல்ல, தன் வீட்டிலேயே பெரியதொரு நூலகத்தை அமைத்தவர் இவர்.

     திருவாவடுதுறை ஆதினத் தலைவர், இவரது நூல் நிலையத்தைக் கண்டு வியந்து, இந்நூலகத்திற்குச் சரசுவதி மகால் நூலகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

     இவர் தன் நூலகத்தில் இருந்த, வீரசோழியம் இலக்கண ஓலைச்சுவடிகளையும், நற்றினை, புறநானூறு முதலான இலக்கிய நூல் ஓலைச் சுவடிகளையும், தமிழ் உலகிற்குத் தந்து, இந்நூல்கள் அச்சு வாகனம் ஏற அள்ளி அள்ளிக் கொடுத்தவரும் இவர்தான்.

     தொல்காப்பியத்தைக் கூட இவர் வீட்டுச் சொத்து என்றுதான் தமிழ்ச் சான்றோர் கூறுவர்.

     1929 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, தொல்காப்பிய தெய்வச்சிலையார் உரையினைப் பதிப்பிக்கும் முயற்சியில், கரந்தைக் கவியரசு முற்றாய் இறங்கியபோது, பதிப்புச் செம்மையுற, தன் வீட்டில் இருந்த தொல்காப்பியச் சுவடிகளைக் கொடுத்து உதவியவரும் இவர்தான்.

     நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த, பாண்டித்துரை தேவர் அவர்களால் மாப்பிள்ளை எனப் போற்றப்பட்டவர்.

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 9 ஆம் ஆண்டு விழாவினை, தஞ்சையில் தொடர்நது ஏழு நாட்கள் நடத்தியவர் இவர்.

     மதுரையில் தோன்றிய சங்கத்தினை சோழ நாட்டு மக்களும் பேணி வளர்க்கும்படிச் செய்த பொறுப்புடையவர், பாண்டியனின் மாப்பிள்ளை இவர் எனப் பாண்டித்துரை தேவரால் பாராட்டப் பெற்றவர்.

     தஞ்சையில் வித்தியா நிகேதனம் என்னும் பெயரில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவியவர்.

     ஐந்தாம் தமிழ்ச் சங்கமாம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றக் காரணமாய் இருந்தவரும் இவர்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்காக அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் இவர்.

இவர்தான்,


அரித்துவாரமங்கலம், பெரும் புலவர், புரவலர்

பெருவள்ளல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

---

     கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமையன்று, நானும் நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும், இருசக்கர வாகனத்தில், இரும்புத்தலை எனப்படும் இரும்பிடற்தலை என்னும் எழிலார்ந்த சிற்றூருக்குச் சென்றோம்.

     இரும்புத்தலை ஈன்றெடுத்த இனிய நண்பர், இரும்புத்தலைக்கு மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் அனைத்திற்கும், அனைத்துமாய் விளங்கும், நண்பர் திரு துரை.நடராசனார் அவர்களும், அவரது நண்பர் திரு அண்ணாதுரை அவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தனர்.

     நால்வரும் புறப்பட்டு, இருபுறமும் வயல்கள் சூழ்ந்த பாதையில் பயணித்து, அரித்துவாரமங்கலம் சென்றோம்.

     அரித்துவார மங்கலத்துள் நுழைந்தவுடன், காற்றின் மனம் கூட மாறி, தமிழின் கரங்களாய் எங்களை ஆரத் தழுவியது போன்ற ஓர் உணர்வு.

     அரித்துவாரமங்கலத்தைச் சார்ந்த, இராசாளியார் அவர்களின் உறவினர்கள் திரு ஏ.கே.தனபாலன் அவர்களும், திரு மகாதேவன் அவர்களும் எங்களை வரவேற்றனர்.

    


பத்து ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்ற பெருவள்ளல், பெரும்புலவர் இராசாளியார் அவர்களின் சிலையினைக் கண்டோம்.

     வணங்கி நின்றோம்.

     பின்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா நினைவுக் கட்டிடத்தைக் காணச் சென்றோம்.

    






           கட்டிடம் உருமாறி உருக்குலைந்து, இன்று இரு சிறு கடைகளாகக் காட்சியளித்தது.

     முடிசூட்டு விழா நினைவுக் கட்டிடத்தின் எச்சமாய், இரண்டே இரண்டு கல்வெட்டுகள் மட்டுமே மீதமிருக்கின்றன.

     கடைக்கு ஒன்றாய் இரு கல்வெட்டுகள்.

     ஒரு கடையில் அடிக்கல் நாட்டு விழாக் கல்வெட்டு.

     அடுத்துள்ள கடையில் திறப்பு விழாக் கல்வெட்டு.

     தொடர்ந்து, இராசாளியாரின் நினைவிடம் நோக்கிச் சென்றோம்.

     தேங்காய்களால் அடித்து, கபாலம் திறந்தபின், இராசாளியார், பூமிக்குள் இறங்கிய இடத்தினை நெருங்க நெருங்க, அனைவரிடத்தும் ஓர் அமைதி எங்கிருந்தோ வந்து குடிகொண்டது.

    



ஐம்பதே ஐம்பது ஆண்டுகள் மட்டுமே, இம்மண்ணில் வாழ்ந்து, பல நூற்றாண்டு காலத் தமிழ்ப் பணிகளைச் செய்து, தமிழ் இருக்கும் வரை, தன் பெயரும் நிலைத்து நிற்கும் வகையில் செம்மாந்து செயலாற்றிய,

அரித்துவாரமங்கலம், பெரும் புலவர்

பெருவள்ளல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

நினைவிடத்தில்

கைகூப்பி மெய்மறந்து நின்றோம்

---
நண்பர்களே, வணக்கம்.

     புது மின்னூல் ஒன்று அமேசான் தளத்தில் இணைந்திருக்கிறது. இந்நூலினை நாளை 18.5.2021 செவ்வாய்க் கிழமை பிற்பகல் முதல் வியாழக்கிழமை 21.5.2021 பிற்பகல் வரை கட்டணம் ஏதுமின்றி தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.



வலைச் சித்தருக்கு ஜெ

என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்